புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 30, 2013

சிறு துளை நீராய்...


பெருத்த சண்டையில்லை,
வெறுக்கும் வார்த்தைகளுமில்லை,
சின்ன கருத்து முறிவு தான் 
சிதைந்தது கூடு ... 

நிரம்பிய பாத்திரத்தின் 
சிறு துளை நீராய் 
வெளியேறிக்கொண்டிருக்கிறது 
அவனும், அவனின் நினைவுகளும்!

அவனுக்கு நான் 
எப்படியோ ?

பால்யத்திலிருந்து நண்பனவன்,
என் வளர்ச்சி கண்டு 
அவனுக்கு மன வெதுமை,
உறுதியானது 
நிகழ்வொன்றில்!

தெரிந்து தான் விலகுகிறேன் 
இனி தேவையில்லை அவன்,
அவன் 
அவனாகவே இருக்கட்டும்,
நான் 
அவனுக்கு எதிரியாகி கொள்கிறேன்!

சின்ன சின்னதாய் 
உடைவதை விட ,
ஒரே முறை உடைத்துவிடுவதில் 
பெரு விருப்பமாயிருக்கிறேன்!

உடைபட்ட கூடுகள் ஒன்றிணைந்து 
"பிழைக்கத் தெரியாதவனென்று"
ஏளனம் செய்தாலும், 

நடிக்கத் தெரியாதவனென்று 
ஆறுதல் படுத்திக் கொள்கிறேன் 
"என்னை"

Post Comment

டிசம்பர் 29, 2013

ஊர்ப்பேச்சு # 12 ( Oor Pechu # 12)


நாலஞ்சி மாசமா காஞ்ச சருக தின்னு நாக்கு வறண்டு கெடந்த மாடுகளுக்கு இனி கும்மாளம் தான். இன்னும் அஞ்சாறு மாசத்துக்கு வெசனமின்றி பசும்புல்லா தின்னு கொழுக்கும். அதிலயும் இந்த கம்மம் புல்லுக்கு இருக்குற மவுசே தனிதான்!

தீனி பாப்பது ஒரு கலை, எல்லாத்துக்கும் அவ்வளவு லேசுல பில்லு சேராது. சேக்குற வெதத்துல சேத்தா தான் பில்லு சேரும். இதுல நம்ம ஆளு கில்லாடி, போறது தெரியாது, வாறது தெரியாது . நெஞ்சு கனக்க ஒரு கட்டு வூட்டு முன்னாடி கெடக்கும்.

இரத்தினம் தான் புல்லு அறுத்ததுன்னு, அறுத்த எடத்த வைச்சே சொல்லிபுடலாம் அம்புட்டு சுத்தமா இருக்கும். ஒன்ன விட்டு வைக்க மாட்டார். முள்ளு பூண்டா இருந்தாலும் அறுத்து கறம்புல தனியா போட்டு வைச்சிடுவார். நூலு புடிச்சி அறுத்த மாதிரி அளவா அறுத்து எடுப்பதில் இவரை அடிச்சிக்க ஆளில்ல!

அருவா தவுத்து உழவாரம் போட்டு செத்துனாலும் சாணம் மொழுவுன தரையாட்டும் பளிச்சுன்னு கண்ண பறிக்கும். புல்லு சேக்குறது எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம் அதை கட்டுவது, எத்தனை மைலு நடந்தாலும் தல உள்ள வாங்காது ரத்தினம் கட்டின புல்லு கட்டு.

பச்ச புல்லு திங்குறதுல ஒரு செரமம் இருக்கு என்னன்னா காலயில , கட்டுத்தறிய அம்புட்டு லேசுல சுத்தம் பண்ண முடியாது. தொள தொளன்னு கழிய ஆரம்பிச்சிடுங்க, அதுலயும் இந்த பசுங்க பாடு தான் பெரும்பாடு, காளைக கூட இதுக அளவுக்கு பண்ணாது! பாவம் அதுங்க என்னா பண்ணும் எல்லாம், அதுகளோட உடல் வாகு அப்படி. பத்து நாள் கழிஞ்சி தான் பொறவு சரியாவும்.

கோட்டுவா கூட கழுவாம கட்டுத்தறிய சுத்தம் பண்றது தான் ரத்தினத்தோட மொவன் பண்ற மொத வேலை.ரெண்டு நிமிசத்துல கட்டுத்தறிய சுத்தம் பண்ணிடுவான், இன்னைக்கு அரை மணி நேரமா வழிச்சிக்கிட்டு கெடக்கான். சுத்தம் பண்ணிட்டு தான் பள்ளிக்கூடம் கெளம்புவான், வேலை அதிகம் வைக்குறது ன்னு மூஞ்சிய தூக்கி கிட்டே சாணக்கூடைய தூக்கி விட அம்மாவ கூப்புடுறான்.

வாய் நடுங்கும், இந்த  குளிர்லயும் ரெண்டு நாளா ஊறிட்டிருக்கும் கம்மஞ்சோத்து உருண்டையில ரெண்ட எடுத்து போட்டு கரைச்சி குடிச்சிட்டு கெளம்பிட்டார் அறுத்துபோட்ட சோள தட்டைவோள கத்தையா கட்டி குத்தி வைக்க ....

டீத்தண்ணி குடிச்சிட்டு போலாம், கொல்லை போயி ரெண்டு கன்னாம்பு கட்டி குத்துறத்துக்குள்ளே பசி குடல இழுக்கும் அதான் இப்படி. கம்மஞ்சோறு குடிச்சிட்டு போனா அரைக்காணி தட்டையை அனாமத்தா கட்டி குத்திட்டு கண்ணு குட்டிகளுக்கு கம்மம் புல்லு பார்த்துட்டு வந்துடலாம் என்பது ரத்தினத்தோட நெனைப்பு ....

இன்னைக்காவது என்னை சீண்டமாட்டாளா ன்னு ஒட்டுமேல பல்ல இளிச்சிட்டு கெடக்கு போன வாரம் பொறுக்கியாந்த பூவம் வெளக்குமாறு சீவு... சீக்கிரம் பபயலுக்கு சோறு கொடுத்து அனுப்பனுமேன்னு சக்கரமா சொழலுரா நாலு தப்படி வூட்டுக்குள்ள ...

Post Comment

டிசம்பர் 20, 2013

பெரும்பசி கொண்டு... (Semman Devathai # 14)


கருவாட்டுப்  பொட்டலத்தை
சுற்றிவரும்  
கடும்பசி கொண்ட  பூனை போல்,
பெரும்பசி கொண்டு 
திரிகிறேன் அவளின் மேல்!




கொதி மணல் புழு போல 
துடிக்கிறாள் அவள்,
சேற்றிடை மீனாக 
தவிக்கிறேன் நான்!
இடையில் 
மௌனமாய் சிரிக்கிறது 
"காதல்"

Post Comment

டிசம்பர் 07, 2013

வாழக் கற்றுக் கொடுங்கள் ....

ரு புள்ளியில் துவங்கி அதே புள்ளியில் வந்து முடிந்துவிடுகின்றன பெரும்பாலான சிக்கல்கள், வேடிக்கையாக சிலதுகள் மட்டும் வளைவு நெளிவுகளோடு ஒழுங்கற்ற வேதாளமாய் பயணித்து வேதனையில் முடித்து வைக்கும். தாய் திட்டியதால் மகள் தற்கொலை, மனைவியுடன் சண்டை கணவர் கால்வாயில் குதித்து தற்கொலை இப்படி எண்ணற்ற கொலைகளை ஒவ்வொரு நாளும் சர்வசாதரணமாக நாம் கடக்க வேண்டி இருக்கிறது. மறுபக்கத்தில் தற்கொலைக்கு முயன்று மரணத்தின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு சாராரையும் பார்த்துவிட்டு நகர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்! சொற்ப எண்ணிக்கையிலான நிகழ்வுகளும் அதன் பின்னணிகளும் தான்  நம்மை உலுக்கி சில இரவுகளை தூக்க மிழக்கவும்  செய்யும்!

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் ஏமாற்றத்தை பரிசளிக்கையில், ஏற்படும் வெறுமையை விரட்ட  பலரும் தற்கொலை என்கிற நிவாரணியை கையில் எடுக்கின்றனர். அதிலும் சமகால தலைமுறைகள் இப்பட்டியலில் முதலிடம் வகிக்கின்றனர்கள்! ஆசிரியர் கண்டித்ததினால் மாணவி தீக்குளிப்பு என்கிற தகவலுக்கு பின் ஒளிந்திருக்கிறது இந்தக் கால சந்ததிகளின் மன தைரியமும், அவர்களின் தன்னம்பிக்கையும். 

நான் பட்ட அவமானத்தை, துன்பத்தை என் பிள்ளைகள் படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பெற்றோர்கள் தான்  இப்படி ஒரு பலவீனமான விதைகளை நாளைய சமுதாயத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்! கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பக்குவப் படுத்தி பிள்ளை வளர்ப்பதை தவிர்த்து பலகீனப் படுத்தி வளர்ப்பதினால் யாருக்கு என்ன பலன்? பாவம் பிள்ளைகளின் வாழ்க்கை தான். 

புத்தகப் பொதியேற்றி அனுப்பி வைக்கும் நமக்கு, அவர்களுக்கு வாழ்க்கைப் பொதியையும் சுமக்க கற்று தர வேண்டிய கடமை இருக்கிறது. அதை கவனத்தில் கொண்டு இயங்கும் பெற்றோர்கள் நம்முள் எத்தனை பேர் இருக்கிறோம் என்பது தான் நம்முன் எழுப்பபடும் வினா? நமக்கு பிரச்சினைகள் வராத வரை அதை ஒரு செய்தியாக கூட மதிக்காத சமூகத்தில் இருந்துகொண்டு நாளைய  சமுதாயம் நன்றாக இருக்கும் என்று எண்ணுவது வெறும் பகல் கனவு போலத்தான், ஒரு நாளும் நனவாகாது!

நாங்கள் அந்த காலத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டோம் தெரியுமா ? என்று என் முன் சந்ததியினர் யாராவது ஆரம்பித்தால் அவரை பாவமாய் பார்த்திருக்கிறேன். காது கொடுத்து கேட்டதுகூட இல்லை . இப்போது அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க தோன்றுகிறது. எந்த மாதிரியான கட்டுப்பாடுகளையும், எவ்வளவு சிரமங்களையும் கடந்து வந்திருப்பார்கள் என்று நினைக்கையில் மதிப்பு சற்று உயரவே செய்கிறது. எட்டணாவுக்கும், ஒரு ரூபாய்க்கும் நாள் முழுக்க வரப்பில் முள் பொருக்கி இருக்கியிருக்கிறேன் என்று எனது மாமா கருணாகரசு சொல்லும்போதெல்லாம் பட்டறிவின் வீரியத்தை உணர முடிகிறது!

உங்களைப் பின்தொடரும் சந்ததிகளுக்கு வாழ்க்கையை சுகமாக்கி கொடுங்கள் அது உங்களது உரிமை, கடமை கூடவே வாழ்க்கையை வாழவும் கற்று கொடுங்கள்! ஒரு தலைமுறை சொத்தையானால் மீள்வது மிகக் கடினம்! போடும் பாதை உறுதியாக இருப்பின் வண்டிகளின் பயணம் பாதுகாப்பாக இருக்கும்! 


Post Comment

டிசம்பர் 04, 2013

மதம் பிடிக்க துவங்குகிறது ...




ஒற்றை வரிசை பிடிக்காது 
என 
எப்படியும் வாங்கிவிடுகிறான், 
என்னிடமிருந்து 
இரட்டை வரிசையில் 
முத்தங்களை !

அடம் பிடிக்கும் அவனழகை 
இரசிக்க காத்திருக்கையில், 
"மதம்" பிடிக்க துவங்குகிறது 
காதலுக்கு !!!
.

Post Comment