புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 29, 2014

ஊர்ப் பேச்சு # 14 ( Oor Pechu # 14)
பொட்டா மண் கட்டிகள இடிச்சி சல்லடையால் சலிச்சிக்கிட்டு இருந்தார் இரத்தினம்,

"ஆனா" குருத்தொடிக்க போன கனகசபை பார்த்துட்டு என்னய்யா மண்ண சலிச்சிக்கிட்டு இருக்கே, எதுக்கு இந்த மண்ணுன்னு கேட்டுகிட்டே புளிய மரத்து வேர்ல அழுக்கு வேட்டிய எறக்கி வுட்டுட்டு அழுக்குப் படாம உக்காந்தார்.

நிமுந்து பாத்துட்டு வெத்தல எச்சிய துப்பிகிட்டே சொன்னார், எந்த வருசமும் இல்லாம இந்த வருசம் தொவர வெளைச்சல் கொஞ்சம் அதிகம். யேவாரிகிட்ட கொடுத்தது போவ மீதிய மண்ணு சேத்து வைச்சா பூச்சி புடிக்காதுல்ல அதான் மண்ணு சலிச்சிக்கிட்டு இருக்கேன் கனகசப ...

உனக்கு தெரிஞ்ச துவரையில மண்ணு சேக்குற சேதிய மக்களுக்கும் சேத்து சொல்லு ..

ஆமாய்யா கனகசபை தெரிஞ்சத சொல்லி வைப்போம், நாளைக்கு வரும் நம்ம ஆளுவோளுக்கு வசதியா இருக்கும்.

இனிமே எவன் வெவசாயம் பண்ண போறான் இரத்தினம், எல்லாம் நம்ம காலத்தோட போச்சி ... இருக்குற பூமிய வித்துப் புட்டு, எவனுக்கு அனுப்பிகிட்டு இருந்தமோ அவங்கிட்டையே கை நீட்டுற அளவுக்கு வந்துட்டோம்..

ஆமாய்யா, "வைக்க" போரா குமிஞ்சி கெடந்த எடத்துல எல்லாம் சுண்ணாம்பு மலையா , பூமிய நோண்டி குமிச்சி வைச்சிருக்கனுவோ? ராவுல படுத்தா நெறஞ்ச உறக்கமில்ல ...
இப்ப நீயும் , நானும் வெசனப் பட்டு என்ன ஆவப் போவுது இரத்தினம், ஊரு மக்களும் நெனச்சி பாக்கணும்ல ... சரி சரி பேச்சு வாக்குல தொவரைய மறந்துட்டோம், மண்ணு கட்டுறத பத்தி கொஞ்சம் சொல்லுய்யா ...

செடில இருந்து தனியா எடுத்தப்புறம் நல்லா காய வைக்கணும், காஞ்சதுக்கப்புறம் பெரிய பானையிலையோ, இல்ல பித்தள அணடாவுளையோ தொவரைய கொட்டி ஒரு பகல் முழுக்க ஊற வைக்கணும்...

காலையில இருந்து சாயந்திரம் வரைக்குமா யா ...?

ஆமா, பொழுது சாஞ்சதுக்கப்புறம் தண்ணிய வடி கட்டி ஊறிப் போன தொவரைய தனியா பிரிச்செடுக்கணும், பிரிச்செடுத்து நுணுக்கி வைச்சிருக்கும் பொட்டா மண்ண (செம்மண்) ஊறி இருக்கும் தொவரையில சேத்து நல்லா கலக்கணும்....

மண்ணு எம்புட்டு வேணும்னாலும் போடலாமா ? இரத்தினம்...ஒன்னும் ஆவாதா ?

இம்புட்டுதான் போடணும்னு அளவு ஒண்ணுமில்ல, அதிகமா இருந்தா கூட காயவைக்கும் போது உதுந்து போவும்... மரக்கா தொவரைக்கு காப்புடி மண்ணு கணக்கு வைச்சிக்கியேன், 

செம்மண்ண கலந்து குமிச்சி ஈர நூல் சாக்கால இராத்திரி பூரா மூடி வைச்சிருந்து காலையில தொறந்து பார்த்தா சூட்டுல, தொவரை எல்லாம் மொள கட்டிருக்கும்...

என்னது மொள கட்டிடுமா ?

ஆமய்யா ஈர தொவரை, செம்மண்ணு, மூடி வைச்ச சூடு எல்லாம் சேந்தா மொள கட்டாம என்னா ஆவும் ... நல்லா காய வைச்சி அள்ளி வைச்சா போதும் ரெண்டு மூணு வருசத்துக்கு ஒரு வண்டும் ஒன்னும் பண்ணாது .... அப்படி ஒரு பாதுகாப்பா இருக்கும் ...

எப்படில்லாம் பாருய்யா நம்ம ஆளுவோ மூளைய செலுத்தி யோசிச்சிருக்காங்க ... 

இப்பவும் மூளை இல்லாம இல்ல, அத சரியான செலுத்த முடியாமத்தான் செதறி கெடக்குதுக ...... ஆமா எதுக்கு நீ "ஆனா" குறுத்து கிள்ள போறேன் கனகசபை?

ஊர்ல இருந்து மொவ வூட்டு பேத்தி வந்திருக்கு, அரைச்சி கொடுத்தோம்னா வயிறு சுத்தமாகுமில்ல .. அதான் ..

சரி நல்ல விசயம்தான், எதுக்கும் கேட்டுட்டு கொடு, நகரத்துல வளர்ந்த புள்ள, நம்ம வைத்தியம் ஒத்துக்குமா ? 

ஆமாய்யா எதுக்கும் கேட்டுக்குறது நல்லது தானே .... சரி நான் வரேன் இரத்தினம் அப்புறம் பாக்கலாம் ...


Post Comment

11 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொவரய மண்ணு கட்டு வைக்கிறத தெரிஞ்சுகிட்டேன்...

r.v.saravanan சொன்னது…

தொவர மண்ணு கட்டு வைப்பதை
வழக்கு தமிழில் புட்டு புட்டு வைத்திருகிறீர்கள் அரசன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

புதிய விஷயம் தெரிந்து கொண்டேன் அரசன். நன்றி.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

பேச்சுவாக்குல நல்ல தகவல் சொல்லிட்டீங்க அரசன்..மிக்க நன்றி.
//அழுக்கு வெட்டிய...அழுக்குப்படாம..// அருமை :)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தொவரையை மண்ணு கட்டு வைக்கிறதை அருமையான கிராமீயத் தமிழில் சொல்லியிருக்கின்றீர்கள்1 தகவலும் தெரிந்தது! நடையும் அருமை! கிராமத்திற்கே பொய் வந்தது போன்ற ஒரு உணர்வு!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

துவரை பக்குவப்படுத்தும் விதம் சிறப்பாய் ஊர்ப்பேச்சில் பகிர்ந்தமை நன்று! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

துவரையைப் பாதுகாப்பது குறித்த பதிவு அருமை! புதிய விவரம் அறிந்தேன்! விவசாயத்தின் இன்றைய நிலையை உரையாடல் வாயிலாக உணர்த்தினீர்கள்! என்னுடைய சமீபத்திய பதிவில் "விளை(லை) நிலம்!" இந்தக் கருத்தை எழுதியுள்ளேன்! வருகை தாருங்கள் என் வலைப்பூவிற்கு! நன்றி!
காரஞ்சன்(சேஷ்)

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புதிய செய்தி
அறிந்து கொண்டேன்
நன்றி நண்பரே

srinivasan சொன்னது…

ஆறடி உயரம் உள்ள துவரைச்செடிகளை சிறு வயதில் எங்கள் தோட்டத்தில் பார்த்தது !

aavee சொன்னது…

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய ராஜா பேசுகிறேன் ன்னு டைட்டில் கார்டு போடுங்க.. எழுத்தில் அவ்வளவு மண் வாசம்.. அருமை..!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

துவரம்பருப்பு தெரியும், சாப்பிட்டுமுள்ளேன். துவரஞ்செடியை தங்கள் பதிவிலேயே பார்த்தேன். இது ஆறடி வளருமென்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சுவையான அறியாத் தகவல் நன்றி!
கிராமத் தமிழ் அருமை.