புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 22, 2014

பருவத்தே பயிர் செய்யணுமாம்....




ற்றை வார்த்தையில் ஒருவரை குளிரவும், கோபமும் அடையச் செய்யுமானால் அந்த வார்த்தை "வயதாகத்தான்" இருக்கும். மற்ற எந்த உயிரினமும் அதிகம் கவலை படாத ஒன்றின் மீது மனிதப் பதறுகள் மட்டுமே பெரிதும் கவலை கொள்வது வினோதம்! 

வயது பெருகப் பெருக வலிமையும், மதிப்பும் கூடும் மரம் போலில்லாமல், மனிதருக்கு மட்டும்  வயதை கண்டு அஞ்சும் நிலை கொடுத்த இறைவன் படைப்பை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

இன்றைய இந்தியப் பெரு தேசத்தில் வயதை வைத்தே பெரும்பாலும் மதிப்பிடப் படுகின்றன. வயது மனிதனின் ஆயுட்காலத்தை குறிக்கும் அளவீடே தவிர மனித வளர்ச்சியின் வரையறை அல்ல. இதை பெரும்பாலானோர் அறிந்து, புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை! 

இன்றளவிலும் நாம் வயது என்ற மந்திரத்தை மிகச்சரியான நேரத்தில் உச்சரித்ததே இல்லை! பருவம் எய்தும் முன்னரே திருமணம் செய்து குடும்பம் நடத்தி, இன்னபிற இத்யாதிகளை கண்ட  முன்னோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை வயதின் மகத்துவம்! 

அதேபோல் முப்பதைக் கடந்து திருமணம் , நாற்பதில் குழந்தை என்று சமகாலத்திய மனிதர்களாகிய நமக்கும், வயதின் மேல் தெளிவான அக்கறை இல்லை என்று தான் சொல்லணும், இருப்பினும் இதன் பின் புலத்தில் இருக்கும் பல்வேறு சூழல்களையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது.

படிப்பை முடித்து, வேலைக்காக பல வருடங்கள் காத்திருக்கும் ஒருவனுக்கு, சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள எண்ணம் வருமா ? அப்படியே அவனுக்கு அந்த ஆசை இருப்பின், அவனுக்கு யார் தான் பெண் கொடுப்பார், இல்லை அதை அவன் குடும்பம் தான் ஆதரிக்குமா ? என்பது சந்தேகம் தான்.

இப்படியாக இருக்கும் பட்சத்தில் வேலை கிடைத்தாலும், கிடைக்கும் வருமானத்தில் வாங்கிய கல்வி கடன், குடும்ப சூழல், வேலை நிரந்தரம் இப்படி ஏகப்பட்ட கடமைகளை சுமக்க நேரிடுகிறது. அப்புறம் எப்படி பருவத்தே பயிர் செய்வது ?




ஒருவழியாக சுமைகள் ஒவ்வொன்றையும் இறக்கி வைப்பதற்குள் முப்பதைக் கடந்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும் வயதுக் குதிரை. கடந்த பத்தாண்டு காலமாக ஆண்களைப்போலவே பெண்களும் இப்படித்தான், முப்பதை நெருங்கும் தருவாயில் தான் திருமணம் பற்றிய பேச்சையே எடுக்கிறார்கள். அவசரகதியில் பொருத்தம் தேடுவதினால் திருமண வியாபாரிகளின் கல்லா நிரம்பி வழிகிறது, சரியான பொருத்தம் அமையாததால் நீதி மன்றங்களில் நிரம்பி வழிகின்றன ஏகப்பட்ட விவாகரத்து வழக்குகள்.

இந்த நீண்ட (கொ) (நெ)டிய விசயத்தில் யார் செய்த தவறு என்று யாரையும் குறிப்பிட்டு விரல் நீட்ட முடியாது என்பது தான் இங்கு வேடிக்கையாக இருக்கிறது. 

தகுதி உள்ள நபருக்கு சரியான நேரத்தில் வேலை வழங்காத அரசுகளையா? சரியான அரசை தேர்ந்தெடுக்க தெரியாத மக்களாகிய நம்மை குறை சொல்வதா ? இங்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது, பணம் இருந்தால் போதும் பக்கோடா திங்கலாம், பல் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.

உலகிலேயே ஐம்பது சதவிகதம் இளைஞர்களால் நிரம்பிய தேசம் இந்த இந்தியப் பெருதேசம் தான். ஆனால் ஒரு தரமான, தெளிவான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க தெரியாத அறிவீன கூட்டமாகவே இன்றளவிலும் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. 

இப்படியான ஒழுங்கற்ற ஒரு தேசத்தில் "காலத்தே பயிர் செய்" என்பதை எதை மனதில் வைத்து சொல்லியிருப்பர் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் பிடிபடவில்லை, உங்களுக்கு ஏதும் வழி தெரிந்தால் சொல்லுங்கள்...      


Post Comment

14 கருத்துரைகள்..:

ராஜி சொன்னது…

ஒழுங்கற்ற ஒரு தேசத்தில் "காலத்தே பயிர் செய்" என்பதை எதை மனதில் வைத்து சொல்லியிருப்பர் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
>>
இதை சொல்லும்போது இந்த தேசம் ஒழுங்காய்தான் இருந்தது அரசா! அப்ப, இருந்த மக்கள், தெய்வத்துக்கும், மனசாட்சிக்கும் பயந்து ஒழுக்கமா நடந்தாங்க. நமக்குதான் எதுக்குமே பயமில்லாமப் போய் தப்புகள் செய்ய ஆரம்பிச்சுடோம்.

சீனு சொன்னது…

யோவ் தலைவரே என்னய்யா அரசியல் பிரவேசம் எதுவும் நடக்கப் போகுதா :-))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதானே...!? "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" காற்றேயில்லை... இதிலே காலத்தே போய் என்னத்த பயிர் செய்வது...?

(என்ன செய்தாலும் வீட்டிலே தெரிந்து கொள்ள மாட்டார்களே... காதல் அரசன் சீனு : நீங்களாவது அரசன் வீட்டில் சொல்லக் கூடாதா...? ஹிஹி...)

ஜீவன் சுப்பு சொன்னது…

//யோவ் தலைவரே என்னய்யா அரசியல் பிரவேசம் எதுவும் நடக்கப் போகுதா :-))//

அ.பி. இல்லைவோய் , அம்பிக்கு வயசாயிண்டே போகுதுல்ல அதேன் சலம்பியிருக்காப்புல ...!

நீரெல்லாம் அவுங்க வீட்டுக்கு போனீரே .. எதுனா எடுத்து சொல்லிருக்காலமுல்ல ...? என்ன நண்பேண்டா ...?


@ அரசர்

கவலையை விடுங்கள் அரசே விரைவில் சந்நியாசம் போய்விடுவோம் ....!

மாதேவி சொன்னது…

விரைவில்சுபசெய்தியைதாருங்கள் :)

முற்காலம்போல அளவானபடிப்பு போதுமென்ற வாழ்க்கைக்கு "பருவத்தே பயிர் செய்யணுமாம்...." பொருத்தமாக இருந்தது. இப்போது சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

"கடந்த பத்தாண்டு காலமாக ஆண்களைப் போலவே பெண்களும் இப்படித்தான், முப்பதை நெருங்கும் தருவாயில் தான் திருமணம் பற்றிய பேச்சையே எடுக்கிறார்கள்". கால்தெறிக்க பணத்துக்காக ஓடும் வாழ்க்கைதான் ....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கட்டுரை அரசன்.....

இப்போதும் வட இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் வேலை இருக்கிறதோ இல்லையோ சரியான வயதில் திருமணம் நடத்தி விடுகிறார்கள். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று நம்புகிறார்கள் போல!

aavee சொன்னது…

//யோவ் தலைவரே என்னய்யா அரசியல் பிரவேசம் எதுவும் நடக்கப் போகுதா :-))//

2022 இன் பிரதமரை பார்த்து கேக்குற கேள்வியா இது?

aavee சொன்னது…

//கவலையை விடுங்கள் அரசே விரைவில் சந்நியாசம் போய்விடுவோம் ....!//

@ஜீவன் - என்னப்பா கம்பெனிக்கு ஆள் சேர்க்கறீரா? பாவம், அந்த தம்பிக்கு இன்னும் டேஷ் டேஷ் கூட நடக்கல.. ஏன் அவசர படுதீரு?

உழவன் சொன்னது…

//தகுதி உள்ள நபருக்கு சரியான நேரத்தில் வேலை வழங்காத அரசுகளையா? சரியான அரசை தேர்ந்தெடுக்க தெரியாத மக்களாகிய நம்மை குறை சொல்வதா ? இங்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது, பணம் இருந்தால் போதும் பக்கோடா திங்கலாம், பல் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.//

இதுதான் உண்மை..
இப்போது இருக்கும் காலச் சூழ்நிலையும், அதற்கேற்றார் போல் நம்மை மாற்றிக் கொள்ளாததும், அரசாங்கத்தின் செயல்பாடுகளும் ஒரு காரணம் தான்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

காலத்தே பயிர்செய் நல்ல தலைப்பு! நல்ல கருத்துடைய ஒரு கட்டுரைப் பகிர்வு! சிந்தனையும் அபாரம்!

நீங்கள் சொல்லியிருப்பது போல இப்போதெல்லாம் காலம் தாழ்ந்த திருமணம்தான்! அதனால் வரும் பிரச்சினகளும் அதிகம்தான்!

மிக அருமையான கருத்துக்கள் னிறைந்த கட்டுரை! பாராட்டுக்கள்,

துளசிதரன், கீதா

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உலகிலேயே ஐம்பது சதவிகதம் இளைஞர்களால் நிரம்பிய தேசம் இந்த இந்தியப் பெருதேசம் தான். ஆனால் ஒரு தரமான, தெளிவான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க தெரியாத அறிவீன கூட்டமாகவே இன்றளவிலும் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. // 100 % உண்மையான வரிகள்! அருமையான பதிவு! நன்றி!

அம்பாளடியாள் சொன்னது…

இன்றைய இந்தியப் பெரு தேசத்தில் வயதை வைத்தே பெரும்பாலும் மதிப்பிடப் படுகின்றன. வயது மனிதனின் ஆயுட்காலத்தை குறிக்கும் அளவீடே தவிர மனித வளர்ச்சியின் வரையறை அல்ல. இதை பெரும்பாலானோர் அறிந்து, புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை!

நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை ! நாளைய எதிர்காலம் இளைஞர்கள்
கையில் என்று சொல்வதோடு சரி இவர்கள் வயதிற்குக் கொடுக்கும் அளவு மதிப்பைத் திறமைக்குக் கொடுக்க மறந்து விடுகிறார்கள் .திருமணம் மட்டும் எப்போதும் அந்தந்தக் காலப் பகுதியில் செய்து முடிப்பதே நன்று .சிறப்பான
படைப்பிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .த .ம 5

r.v.saravanan சொன்னது…

பணத்தை நோக்கி ஓடி கொண்டிருக்கும் உலகதிற்கு பருவத்தே பயிர் செய் என்பதெல்லாம் வேடிக்கை வார்த்தையாகி விட்டது அரசன்

Unknown சொன்னது…

பெண்ணுக்கு திருமண வயது 18,ஆணுக்கு 21என்று அரசு விளம்பரம் வேறு ...அந்த வயதை அடைந்தவர்களுக்கு அரசே இலவசத் திருமணம் நடத்தி வைக்குமா ?
+1