புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 13, 2014

ஊர்ப் பேச்சு # 18 ( Oor Pechu # 18)


வயசுக்கு வந்த புள்ள மாதிரியா இருக்கா, "இந்தாடி, செல்வி எந்திருடி பைப்புல தண்ணி வருது, மொத கொடம் நாம தாம் வைச்சிருக்கோம், சீக்கிரம் போனா தான் நாலு கொடம் புடிக்க முடியும், இல்லன்னா அடி பைப்புக்கு போய் தான் அடிச்சியாரனும்" னு சொல்லிக்கொண்டே சாணி சட்டிக்குள் துணியை முங்கியெடுத்து தரையை மொழுகி கொண்டிருந்தாள் பிச்சை!

 மாசத்தின் அதிகாலைத் தூறலோடு சாணி மொழுகும் வாசனையும் சேந்து கெறங்கடிக்க துணி வெலகுவது கூட தெரியாம பொறண்டு படுத்த செல்வியை பாத்துட்டு கோயில் ரேடியாவையும் தாண்டி கேக்க ஆரம்பித்தது பிச்சையின் சிம்மக் குரல் திருவாசகம்...


ஏனக்கா ,காலங்காத்தால ஒரு வயசுக்கு வந்த புள்ளைய இப்படியா திட்டுறதுன்னு வாசலில் நின்னபடி கேட்டாள் மல்லிகா...


நீயே பாரேன் மல்லிகா, இவ தூங்குற இலட்சணத்த னு சொல்லிக்கொண்டே, தர வெடிப்புகளில் கொழைச்ச பொட்ட மண்ணை வழித்து ஈசினாள் பிச்சை...


பதறியடிச்சி எழுந்து கோட்டுவா கழுவ போனா செல்வி ...


யெக்கா, தெக்கத்தி மணியாரன் காட்டுல கம்புக்கு கள வெட்ட ஆளு சொல்லி அனுப்பிருக்கானாம், தோது இருந்தா வாயேன் என்றாள் மல்லிகா ...


நான் எங்கடி வாறது, இருக்குற கா காணி மணக்கொல்லையே கோர மண்டி கெடக்குது, அதுவுமில்லாம இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்குற சென மாட்ட வைச்சிகிட்டு எங்க கூலிக்கு வாறது... நீங்க போயிட்டு வாங்க நாலஞ்சி நா கழிச்சி பாப்போம் ....


 சரிக்கா, நீ வந்தியின்னா ரெண்டு மென முன்ன போவுமுன்னு பாத்தேன், கூலியையும் பொட்டுல அறஞ்ச மாதிரி கேட்டு வாங்குவ, அதான் வந்தேன்...


ஏண்டி உங்களுக்குல்லாம் இந்த அறுத்துப் போனவ வாய கிண்டுலைன்னா தூக்கம் வாராதா? நீங்க அலுங்காம கூலிய வாங்க நாந்தான் கெடைச்சேனா?


அப்படில்லாம் இல்லக்கா, செஞ்ச வேலைக்கு கறாரா காசு வாங்குறதுல உம்போல கில்லாடி யாரு இருக்கா ?


இப்பிடியே பேசி பேசி , எல்லாம் ஏம் துணி மறப்புல சொகங்காணுங்கடி ன்னு சொல்லிகிட்டே பாயி கெடந்த எடத்தையும் தேச்சி முடிச்சி சாணி கிண்ணத்த வாச தாண்டி வைச்சா பிச்சை....


பிச்சைகிட்ட வாய் கொடுத்து எவ மீண்டிருக்கா ன்னு யோசிச்சபடி, யெக்கா ஓன் எல களகெட்ட கொடேன், என்னோடத வடிச்சி கொடுன்னு அந்த மனுசங்கிட்ட தலப்பால அடிச்சிகிட்டேன், குடிக்கிறதல குறியா இருக்கானே தவிர இதுல எங்க நாட்டம் போவுது மனுசனுக்கு....


எல்லாம் நீ கொடுத்த எடந்தாண்டி, தலமுனைப்பிலே கிள்ளிருக்கணும், இன்னிக்கி வந்து ஒப்பாரி வச்சா யாரு காதுல ஏறும், கெழக்கால படப்புல இருக்கும் எடுத்துட்டு போ ... பொழுதோட கொண்டாந்துடனும்...


சரிக்கா, நான் வாறன் .


உக்காந்து மொழுவுனதுல இடுப்பு அசந்து போக, எழுந்தவ தலைக்கு மேல மாட்டியிருக்கும் இராசுவின் கருப்பு வெள்ளை போட்டோவ பார்த்துகிட்டே பொறங்கையால நரைச்சிப் போன முடியை ஒதுக்கி விட்டா.... 


பிச்சை, அஞ்சடிக்கு துளி கம்மி, கல்யாணம் முடிச்சி வாறயில இந்த வூடு பதுங்கு குழியாட்டம் கெடந்தது, எல்லாம் பிச்சையும், இராசுவும் வேர்வ சிந்தி மோட்டுக்கு கொண்டாந்தது. 


"கள்ளு" மரம் ஏறும்போது கதண்டு கடிச்சி கீழ விழுந்த இராசு, நாலு மாசம் படுக்கையில கெடந்து, "காடு" போயி சேரும்போது செல்விக்கு வயசு எட்டு, அதிலிருந்து ஒத்த மாடா பாரம் சொமந்து பேரு சொல்லும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கா குடும்பத்தை... இப்ப செல்விக்கு வயசு இருவத்தி ஒன்னு... 


வாழ்க்கையின் எல்லா தெசையையும் அறிஞ்சவ, சொல்லடிகள கடந்து வந்தவ, அதனால கடு கடுன்னு இருப்பாளே தவிர, கள்ளி செடியில்ல. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நெனப்பவ ....

தண்ணி புடிச்சி, பாத்திரம் தொலக்கி முடிச்சிட்டு சாணம் அள்ள போன செல்விய, வெளக்காமாத்த போட்டுட்டு நீ போயி ஒல வையிடி, நாலு நெல சாணத்த, என்னாள அள்ள முடியாதா? ன்னா பிச்சை....


திடிர்னு வாசல்ல ரெண்டு மோட்டார் சைக்கிள் வந்து நிக்கவும், யம்மா கொளஞ்சி மாமா வந்திருக்காங்க, வாம்மா ன்னுட்டே உள்ளே போனா செல்வி...


சாணமள்ளிய இருப்பு மொறத்தை ஓரமா போட்டுட்டு எட்டி பாத்தா பிச்சை... 


என்னக்கா சவுக்கியந்தானா ன்னு கேட்டார் சிறுகடம்பூர் கொளஞ்சி, வாயிலிருந்த வெத்தலைய பன மறப்பு ஓரத்துல துப்பியபடி...


வாங்க, வாங்க ன்னு வந்தவங்கள கூப்பிட்டபடி, வா கொளஞ்சி இன்னைக்குத்தான் எங்க நெனப்பு வந்ததோ ன்னாள் பிச்சை...


நெனப்புல்லாம் இல்லாமலா அக்கா, இம்புட்டு தூரம் தேடி வந்திருப்போம்
என்றார் செல்வி நீட்டிய நீர் சொம்பை வாங்கியபடி...

அப்பன் பேச்சு அப்படியே இருக்கு உனக்கும், செரி இவுங்கள்ளாம் யாரு என்றாள் மெல்லிய குரலில்!


எல்லாம் நம்ம சொந்தம் தான், பையன் பால்யேவாரம் பண்றார், பொண்ணு இருந்தா சொல்லுங்க ன்னு கேட்டாங்க, எனக்கு சட்டுன்னு நம்ம செல்வி ஞாபகம் வந்துச்சி, அதான் விடிஞ்சதும் கையோட கூட்டியாந்துட்டேன்...


ஒரு வார்த்தை காதுல போட்டிருந்தா, அதுக்கு தகுந்த மாதிரி இருந்திருப்போம்ல, இப்படி பொசுக்குன்னு வந்து நிக்குறியே கொளஞ்சி ...

இல்லக்கா, இலைக்கடம்பூர்ல சோலியொன்னு இருந்துச்சி அப்படியே நம்ம விசயத்தையும் பேசிடலாமென்னு கூட்டியாந்தேன்.... 

பண்ணையில வாங்கி வைச்சிருந்த எறநூறு பாலுல முன்னூறு தண்ணிய கலந்து வைச்ச டீத்தண்ணிய எல்லார்ட்டயும் நீட்டிட்டு உள்ள போனா செல்வி .

இருப்புக்கு தகுந்தத மாதிரி பண்ணிடுறோமுன்னு உடைச்ச தேங்கா மாதிரி பேசின பிச்சையோட மனசு புடிச்சிப்போக, சரி ஒரு நல்ல நாளா பாத்து சொல்றோம்ன்னு கெளம்பினாக, பையனும், கூட வந்திருந்த பெருசுகளும்... 

வண்டிகிட்ட போன கொளஞ்சி, ரெண்டு நாளு கழிச்சி வூட்டுக்கு வாறன், மத்தத பேசுவோமுன்னான்...   

பையனை பத்தியும் குடும்பத்தை பத்தியும், சிறுகடம்பூர்ல இருந்து வடக்குத்தெரு மணி க்கு வாக்கப்பட்டிருக்கும் சரசு சொன்னதும், கொளஞ்சி சொன்ன சேதியும் தித்திப்பை தர, யப்பா முனிப்பாரே, எம்புள்ளைய கூட இருந்து காப்பாத்துன்னு மனசுக்குள் வேண்டினாள் பிச்சை... 

மையிருட்ட கடந்து வந்தவளுக்கு இந்த மேககூட்டமொன்னும் பெருசில்ல, இருந்தும் பங்காளிவோ இல்லாம பாக்கு வெத்தல மாத்துறதுக்கு மனசு எடம் கொடுக்கல.... ஒப்புக்கு கூப்புட்டாலும் பங்காளிவோ வந்ததுல மனசு நெறஞ்சி போனார்கள் தாயும், புள்ளையும்.

ஆவணி 27, செந்துறை பெருமா கோயிலில் கல்யாணமுன்னு சொல்லி பாக்கு மாத்தி வந்ததிலிருந்தே, எனக்கு நீ துணை, உனக்கு நாந்துணை இருந்திட்டு, தாய பிரியுறத நெனச்சி ,தொவண்ட கம்பு பூவாட்டம் கெடக்குறா செல்வி..

சோத்துப்பானைய உருட்ட வந்த பூனைய வெறட்டிவிட்டு, ஏம்புள்ள இப்படி மொடங்கி கெடக்குறே, இந்தா பக்கத்துல இருக்கு ஊரு, நெனச்ச நேரத்துக்கு வந்துட்டு போவலாங்குற தூரத்துல வைச்சிகிட்டு இப்படி தொவண்டு கெடக்குறே ன்னுட்டு, வாயில நுரை தள்ள பால் குடிச்சிக்கிட்டு இருந்த கன்னுகுட்டிய புடிச்சி கட்டப் போனா பிச்சை....

ஊருக்கு, பேருக்கு பங்கமில்லாம கல்யாணத்த முடிச்சி, மறு வீட்டுக்கு மாப்பிள்ள, பொண்ண அனுப்பி வைச்சிட்டு, விரிச்சோடி கடந்த வீட்டுக்குள் படுத்தாள் பிச்சை....

ஆவேசமாய் கொட்ட துவங்கிய பெரு மழையின் தூவாணம் வாசப்படியை நனைத்துக் கொண்டிருக்கிறது......     

Post Comment

1 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

தோழர் அப்படியே கிராமத்து வாசம்..

ஆனா ஒண்ணு (i will call you ) :-)