புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 13, 2014

அஞ்சப்பரில் ஆவியும் நானும் ....


நீண்ட சிந்தனைகளுக்குப் பிறகு, அஞ்சப்பர் செல்வதாக முடிவெடுத்தோம் நானும் ஆவியும்! (அந்த நீண்ட சிந்தனைகளுக்கு  சென்சாரில் கத்தரி விழுந்துவிட்டதாக நினைத்து கொள்ளுங்கள்). நான் அஞ்சப்பர் என்று சொன்னதும், "ஆவிப்பா" ரிலீசன்று இங்கு தான் வந்தோம், கேட்ட எதுவுமே இல்லையென்றதும் சிறு கலவரம் நடந்தது என்று ஆவி சொல்ல, சிறு தயக்கத்துக்கு பின் வாங்க போகலாம் என்று இருவரும் வெற்றி குறி போட்டுக் கொண்டோம்!

எங்களை கதவைக் கூட திறக்கவிடாமல் வாயிற்காவலரே திறந்து உள்ளனுப்ப, செவ்வக வடிவில் இருக்கும் மேசையின் பின்னே இருந்த சோபாவில் அமர்ந்தோம். சட்டையை பேண்டுக்குள் சொருகி பெல்ட் அணிந்திருந்த குறுந்தாடி இளைஞன் மின்னணு கருவியுடன் அருகில் வர, ஆவி அவர்கள் கேட்டதில் சிலது இல்லையென்றும், கேட்காத சிலவற்றை இன்றைய ஸ்பெஷல் என்றும் சொன்னார். 

இருவரும் கலந்தாலோசித்து பதார்த்தங்களை சொல்ல, கையில் வைத்திருந்த கருவியில் ஆர்டரை பதிந்து கொண்டு சென்ற சில மணித்துளிகளில் வெள்ளையுடை ஆசாமி பவ்யமாக, உணவுகளினால் எங்களின் டேபிளை நிறைத்தார்.  பரோட்டா வட்டமாகவும், இன்னொரு வகை முக்கோணமாக நறுக்கப்பட்டிருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன். அதையும் மீறி அந்த அந்த பதார்த்தங்கள் அதனதன் வண்ணத்தில் இருந்தது தான் பெருத்த ஆச்சர்யம்! 

உணவில் சிறு துண்டை எடுத்து வாயில் வைத்து நிமிர்ந்து பார்க்கிறேன், வரிசையாய் ஆறேழு நபர்கள் கையை கட்டிக்கொண்டு, விறைப்பாக நின்றபடி நாங்கள் உண்ணும் அழகை கண்கொட்டாமல் இரசித்து கொண்டிருந்தார்கள்! அவர்கள் எங்கள் அழகை இரசிப்பதில் தவறில்லை. என்ன, எங்களுக்குத் தான் கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது. கொஞ்சம் மறைவாக இருந்து இரசித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! 

கஸ்டமர்களை திருப்தி படுத்த, அவர்களின் மேசையருகே நின்று கவனித்துக் கொள்ளும்படி நிர்வாகம் அப்படி செய்திருக்கும் என்று நினைக்கிறேன். கஸ்டமர்களை கவரலாம், ஆனால் அவர்களை ஒருவித சங்கடத்திற்கு உட்படுத்துவதை தவிர்க்கலாம் என்பது என்னோட கருத்து! அவர்களும் என்ன மன நிலையில் இருந்திருப்பார்கள்! எந்த வேலையும் எளிதல்ல என்பதை மறுக்கா மனசில் நினைத்துக் கொண்டேன்! 

ஒரு மனிதன் உணவுன்னுவதை, இன்னொரு மனிதன் குறு குறுவென்று பார்ப்பது சற்று கொடுமையாகத்தான் இருக்கிறது. நாற்பது ஐம்பது வருடங்கள் பாரம்பரியம் கொண்ட உணவகம் சற்று கவனத்தில் கொண்டால் சரி... 

(குறிப்பு: மற்ற பெரிய உணவகங்களுக்குள் அடியேன் சென்றதில்லை அதனால் மற்றவைகளை எனக்கு தெரியாது )        

Post Comment

5 கருத்துரைகள்..:

பால கணேஷ் சொன்னது…

இது உனக்கு அரசா.. எனக்கு கல்யாண வீட்டில் பந்தியில் சாப்பிடும் போது ‘எப்படா இவன் தின்னுட்டு நகர்வான், நாம உக்காந்துக்கலாம்’னு பின்னால சிலர் நின்னுட்டு இருக்கையில சாப்பாடே எறங்காது. அதே மாதிரி சாப்பிடறவங்களை படம் எடுக்க போட்டோ கிராபரோ, வீடியோ கிராபரோ வந்தா கடுப்பா வரும். முறைப்பேன் நான்...

Unknown சொன்னது…

நீங்கள் சொன்னதும் ,பாலகணேஷ் ஜி சொன்னதும் உண்மையிலும் உண்மை !ரசித்து சாப்பிட முடியாத நிலை !
த ம 1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நம்ம சாப்பிடும்போது அப்படி என்ன பார்வை! :)

இது பல உணவகங்களில் இருக்கும் பிரச்சனை - நமக்கு உபசரிப்பதாக அவர்கள் நினைத்தாலும் தொல்லை என்றே நமக்குத் தெரியும்....

மகேந்திரன் சொன்னது…

இதுக்குத்தான் நான் அங்க எல்லா போறதில்லை...
ஹா ஹா ஹா...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தாங்கள் அரசன்....அடுத்து... ஆவி...அதனாலதான் அவங்க அப்படிஉங்களப் பாத்துருப்பாங்கப்பா.....
ஆனா வாத்தியார் சொல்லியிருப்பது போல் சாப்பிடும் போது ஃபோட்டோ எடுப்பது..(நண்பர்கள் அல்ல) பொது இடங்களில்....பார்த்துக்கிட்டெ இருப்பது எல்லாம் கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம்தான்....