புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 23, 2014

நட்பு ...


இன்றைய நவீன யுகத்தில் நட்பு மிக எளிதாய் அமைந்துவிடுகிறது, என்ன அதை தொடர்வதுதான் வெகு சிரமமாக இருக்கிறது. சின்ன சின்ன கருத்து முரண்களினால், பல ஆழ்ந்த நட்புக்கள் முறிந்திருக்கின்றன. பள்ளிகளில், கல்லூரிகளில் துவங்கிய பல தோழமைகள் இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என்று தூசு தட்ட கூட நேரம் கிட்டாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவசர யுகமிது!

ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் பேசினால் அதை நட்பாகவும், இதே, ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் பேசினால் அதை காதல் என்றும் திட்டவட்டமாக நம்பிய ஒரு கேடுகெட்ட காலத்தில் படித்தேன்! பள்ளி படிப்பை முடிக்கும் வரை ஆண் - பெண் நட்பை  அந்த அரசுப் பள்ளிக்குள் நான் கண்டதில்லை. அதிசயமாய் பேசினாலும் கூட பாட சம்பந்தமான விசயங்களை தாண்டி அவர்களின் பேச்சு நீண்டதில்லை. இதிலொரு வேடிக்கை என்னவென்றால் இப்போது சில பள்ளிகளில் இருக்கும் மாணவனும், மாணவியரும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதிமுறைகள் எல்லாம் அப்போது கிடையாது! 

பத்திலிருந்து பனிரெண்டு வகுப்புகளுக்கு மட்டும் அந்த நட்பு விரோத போக்கு இருந்து வந்தது! அப்படியிருந்தும் இரகசிய சைட்டுகளுக்கு மட்டும் பஞ்சமிருக்காது! வாழ்க்கையை அனுபவிக்க துவங்கிய துளிர் காலங்கள் அவை. பருவம் அடைந்த பெண் பக்கத்து வீட்டுப் பையன் கூட பேசுவது கூட பாதகச் செயலாய் பார்த்த காலங்களிருந்து, போர்வைக்குள்ளிருந்து மொபைலில் காதல் பேசுவது வரை காலம் தன் சிறகை இராட்சசத்தனமாய் விரித்திருக்கிறது! வேடிக்கை என்னவெனில் இன்னும் நட்புக்குள் கட்டுப்பாடு இருக்கிறது என்பது தான்.

ஒரு படத்தில் "குத்தியது நண்பனாக இருந்தால், அதை வெளிய சொல்லக் கூடாது" என்பார் ஒரு நடிகர். திரையரங்கில் கைத்தட்டல் நிற்க வெகு நேரமாகியது  அந்த அளவுக்கு வலுவான வசனம் தான். நிதர்சன வாழ்க்கைக்கு பொருந்திப் போகா வசனமது. சின்ன கருத்து முறிவுக்கெலாம் கத்துக்குத்து விழுந்து கொண்டிருக்கும் காலத்தில், அப்படியொரு நண்பர்களிருந்தால் அவர்கள் தான் வாழ்க்கையின் உத்தமர்கள்! 

வழக்கமான சினிமாக்களில் நட்பு காட்சியமைப்பு என்றால், அதுவும் கிராமம் சார்ந்த நண்பர்கள் என்றால் உயிரைக் கொடுப்பதாக வலிந்து திணித்திருப்பார்கள். நகரத்தில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் சுயநல வாதிகள் போலவே சித்தரிப்பது கொடுமையிலும் கொடுமை! உயிரைக் கொடுத்து நட்பை தாங்கும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு அடியேனின் ஆயிரம் நமஸ்காரங்கள்!

இலக்கண நட்புகள் போய், இலக்குகள் கொண்ட நட்புகள் வந்து விட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்ல நட்புக்களை தெரிவு செய்வதும் ஒரு கலை என்றுதான் சொல்வேன். அரைவேக்காட்டு தனமாக நட்பு கொண்டாடி பின் ஒரு சூழ்நிலையில் உண்மை புரிகையில் புலம்புவது எல்லாம் மூளையுள்ளவர்களின் செயலல்ல! நட்பு போர்த்திய புலிகளும், பசுக்களும் திரியும் சமகால சூழலியலில், தனக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுத்து களித்து மகிழுங்கள் தோழமைகளே .....


Post Comment

7 கருத்துரைகள்..:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நட்பு என்றால் என்ன?
அதுபற்றிய தங்கள் எண்ணவோட்டங்கள்,
கருத்தோட்டங்களாய் வெளிப்பட்டன!
நன்றி நட்பே!

vimalanperali சொன்னது…

நட்பு பற்றிய கண்ணோட்டம் மிகவும் சரியே/இதையெல்லாம் இன்றைய தாண்டி சினிமாக்கள் சித்தரிக்கிற நட்பு வலிய திணிக்கப்பட்ட மிகைதான்/ இருந்த போதிலும் நட்புக்கு இருக்கிற ஆழம் ஒரு மிகச்சிறந்த எப்பொழுதுமே மாசு கொள்ளாததுதான்/

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நட்பின் பெருந்தக்க யாவுள

மகேந்திரன் சொன்னது…

நட்புகளில் ஆயிரம் வகை...
நீங்கள் கூறியது சில வகை

ezhil சொன்னது…

நட்பு பற்றி நல்லா சொல்லியிருக்கீங்க....ஆமா திடீர்னு அதைச் சொல்ற அளவிற்கு என்ன ஆச்சுங்க

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இதே, ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் பேசினால் அதை காதல் என்றும் திட்டவட்டமாக நம்பிய ஒரு கேடுகெட்ட காலத்தில் படித்தேன்!//
உண்மை உண்மை! நாங்களும் உங்களுக்கு இன்னும் முந்தைய காலகட்டத்தில்!!ஹ்ஹஹாஹ்...கீதா அப்போதே மிகவும் இயல்பாக ஆண்களிடம் பழகக் கூடியவர்! அவருக்கு நட்பில் ஆண் பெண் பேதம் கிடையாது! துளசியோ பெண்களிடம் பேசியதே இல்லை...கீதாவிடம் தான் முதலில் ஆனால் தயக்கமோ தயக்கம்...ஹாஹாஹஹ.... கீதாவை அவரது பேராசிரியர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக எல்லோர் முன்னும் திட்டியதால் ஒரு இறுக்கமான சூழல் நட்பு வட்டங்களுக்குள்!
//வேடிக்கை என்னவெனில் இன்னும் நட்புக்குள் கட்டுப்பாடு இருக்கிறது என்பது தான்.// இதுவும் உண்மையே! இதோ இந்தக் காலகட்டத்தில் கூட எங்கள் (அரைகிழங்கள்) நட்பு தொடர மிகவும் கடினமாக கத்தி மேல் நடப்பது போல் தான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது! என்ன செய்ய நம் சமூகம் அப்படியாகிவிட்டது! ஆனால் இப்போதுள்ள இளைஞர்களுக்கு எங்கள் கால கட்டம் போல் வலி உள்ளதாகத் தெரிய வில்லை அரசா......
அன்பான நட்பு உண்மையாக இருந்தால் அதற்கு கிராமம், நகரம் என்ற பூச்சு இருக்குமா அரசா? அப்படித் தோன்றவில்லை! அதற்கு இலக்கணம் எதுவும் கிடையாது. எத்தனை வருடங்களானாலும் அழியாது, மறையாது, அது அப்படியே புத்துணர்வுடன் இருக்கும் அரசா!
இறுதிப் பத்தி அசத்தல்! நிதர்சனமானதும்! அருமையான பதிவு!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நட்பு பற்றிய உங்கள் கண்ணோட்டம் நன்று.....