முன்பெல்லாம் பாடல் வெளியிட்ட மறுதினமே தரவிறக்கம் செய்து கேட்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்த என்னை, தமிழ் இசையமைப்பாளர்கள் பெரிதும் சோதிக்க ஆரம்பித்ததும், "வேண்டாம் டா சாமீ, இந்த விபரீத விளையாட்டு" என்று நானாக ஒதுங்கி கொண்டேன். அவ்வப்போது சில ஆதர்ச இசையாளர்களின் படங்களை மட்டும் தரவிறக்கி கேட்டு வருகிறேன். அவர்களும் தற்பொழுது அடித்த மத்தளத்தையே திருப்பி போட்டு அடிக்க ஆரம்பித்திருப்பது தான் சோகத்திலும் சோகம். அளவுக்கு மீறி நிறைய படங்களில் ஒப்புக் கொண்டுவிட்டால் இப்படித்தான் அரைத்த மாவையே அரைக்க வேண்டும் போல, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள் போலும். துட்டுக்களின் உலகத்தில் இயங்கிகொண்டு, தொழில் தர்மம், பயபக்தி பற்றி பேசும் என்னை, இளம் பெண்ணொருத்தி, முச்சந்தியில் வைத்து முத்த தண்டனை கொடுக்க உரக்க சபியுங்கள்.
மைனா, கும்கி கொடுத்த உந்து சக்தியால், "கயலை" தரவிறக்கம் செய்து கொண்டிருந்த என் கண்ணில் சிக்கினாள் அந்த "அன்புடன் அன்பரசி". ஆம் அது ஒரு தமிழ் சினிமாவின் பெயர். பெயரில் சொக்கிவிழுந்து அன்பரசியையும் தரவிறக்கி எனது மியூசிக் பிளேயரில் சேமித்த நான் அத்தோடு அன்பரசியை மறந்து விட்டு, கயலை ஓடவிட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். கும்கி அளவிற்கு கயல் என்னை ஈர்க்கவில்லை. பெரிதும் நம்பிய யுகபாரதியும் என்னை ஏமாற்றி விட்டார். யுகபாரதியின் வரிகளில் இருக்கும் இளமை துள்ளல் ஏனோ "கயலில் மிஸ்ஸிங்", ஒருவேளை திரையில் காட்சியாக மிரட்டுவாளா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கேட்டவரை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது
ஒரத்தநாடு கோபு என்பவரின் குரலில், "அவ மேல ஆசைவைச்சான்" கானா வகை பாடல் கேட்க புடிக்கிறது.
அடுத்து, பால்ராம் குரலில் "உன்னை இப்போ பாக்கணும்" வரிகளுக்காகவே கேட்கவேண்டும் போலிருக்கிறது.
என் நெஞ்சுக்குள் குடியிருக்கும் குரலழகி ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் "என் ஆளை பாக்க போறேன்" பாடல் தான் அடிக்கடி காதை சிலிர்ப்பூட்டுகிறது. இதை எப்படி காட்சிப் படுத்தியிருப்பார் பிரபு சாலமன் என்று இப்பவே மனம் ஒரு தவிப்பிலிருக்கிறது.
மற்ற பாடல்களில் மைனா, கும்கி சாயலிருந்தாலும் மோசமில்லை, கேட்கலாம் இரகம்.
சரி வாங்க அன்பரசியை பார்ப்போம்.
அன்புடன் அன்பரசியை கொஞ்ச நாள் கழிச்சி தான் கேட்டேன். பல தமிழ் சினிமாவில் கேட்ட இசையை இவர்கள் சற்று வேறு வித்தியாசமாக? போட்டிருந்தார்கள். அதில் ஒன்றிரண்டு ஓகே இரகம். "உன்னை மட்டும் தான்டா, நான் கண்ணா நெனச்சேன்டா, ஓகே சொல்லு போதும் விளையாடலாம்" என்றொரு பாடாவதி பாடலொன்றை ஒரு பெண் பாடியிருக்கிறாள். பாடல் சுத்த மோசம், ஆனால் அதை பாடிய பெண்ணின் குரல் கிறுக்க புடிக்க வைக்கிறது, ஏதோ ஈர்ப்பு இருக்கிறது, அதற்காகவே அந்த பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பெண்ணின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில் கூகுளை ஆராய்கையில், அப்படத்தின் ட்ரைலரை பார்த்து பீதியில் உறைந்துள்ளேன்.
(தலைவர் டூயட்டின் போது)
இசை சத்ய தேவ் என்று போட்டிருந்தார்கள், இதற்கு முன் கேள்வி படாத பெயர். வேறு எவரையும் இம்சிக்காமல் இயக்குநர் ஆல்வின் அமல பிரசன்னாவே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பதோடு மட்டுமில்லாமல் நடித்தும் இருக்கிறார். இதுவரை எவரும் சொல்லாத காதலை இவர்கள் காட்டப்போவதாய் சொல்லியிருக்கிறார்கள். ஏதோ ஒரு உன்னத இலட்சியத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் அக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தவிர சொல்ல வேறொன்றுமில்லை!
(தலைவர் காதல் கொள்ளும் அழகே தனி தான்)
வாலிபன் சுற்றும் உலகம், திருமதி தமிழ் போன்ற திரைகாவியங்கள் வரிசையில் இப்படமும் மிகப்பெரிய வெற்றியடையட்டும்...
Tweet |
4 கருத்துரைகள்..:
அந்த இறுதி பஞ்ச் அற்புதம்
நல்ல விமர்சனம்
இப்படி கலாய்க்கிறீங்க?
த ம இரண்டு
உங்களுடைய கவிதையோ அல்லது பள்ளிக்கூட அனுபவமோ என்று படிக்க வந்தால் இசைவிமர்சனம் செய்து ஏமாற்றிவிட்டீர்களே! இருந்தாலும் சுவையாக உங்கள் பாணியில் விமர்சனம் நன்றாகவே இருந்தது! நன்றி!
கருத்துரையிடுக