புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 06, 2014

களவாடிய பொழுதுகள்...

எந்தவொரு திரைப்படத்திற்காகவும் இந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்திருந்ததில்லை, திரு. தங்கர் பச்சானின் "களவாடிய பொழுதுகளுக்காக" நீண்டதொரு காத்திருப்பிலிருக்கிறேன். தங்கரின் கருத்துக்கள் சிலதோடு முரண்பட்டாலும், அவரின் படைப்புகளை பெரிதும் நேசிப்பவன் நான். எழுத்தானாலும் சரி, சினிமா என்றாலும் சரி அவரின் படைப்பில் ஒரு ஜீவனிருக்கும். மண்ணின் மணம் நிறைந்திருக்கும். என் போன்ற கிராமத்தானின் உணர்வுகளை சுமந்திருக்கும் என்பதும் ஒரு காரணம் என்று கூறலாம். 

நன்றாக நினைவிருக்கிறது, நான்கு வருடங்களுக்கு முந்தி ஒரு பனிக்கால அதிகாலையில் திரு. தங்கர் பச்சானின் "அம்மாவின் கைப்பேசி" நாவலை வாசித்தேன். அந்த நூலில் மேலும் சில கதைகள் இருந்தது. ஆனால் அம்மாவின் கைப்பேசி தந்த பாரத்தை மனதின் ஓரத்தில் இன்னும் சுமந்து கொண்டுதானிருக்கிறேன். அதையே படமாகவும் எடுத்தார், நாவல் தந்த உந்துதலினால் முதல் நாளே சென்று பார்த்தேன். எழுத்தில் இருந்த நேர்த்தி, காட்சியாக திரையில் காணும் போது இல்லை. நடித்திருந்த நாயக, நாயகிகளின் குறை, திரைக்கதையில் தெளிவின்மை இப்படி நிறைய குறைகள் இருந்தாலும், ஒரு பிரேமுக்குள் என்ன என்ன இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக காட்டியிருந்தது கொஞ்சம் ஆறுதல்.
இப்போதும் அவரின் நாவலொன்றை தான் களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போ வரும் அப்போ வருமென்று காத்திருந்த எனக்கு சமீபத்தில் சில விளம்பரங்களை வெளியிட்டு இந்த வருடத்திற்குள் வருமென்று சொல்லியிருந்தார், மீண்டும் உற்சாகமானேன். ஆனால்  இப்போ அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவுதான் போலிருக்கிறது. பெரிய முதலைகளோடு மோதுவது மிகக் கடினம். 

முகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை. 

களவாடிய பொழுதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல் காலம் கனிந்து வரும் அதுவரை காத்திரு, உன் காத்திருப்பு வீண் போகாது என்று சொன்னது ஆறுதலாக இருந்தாலும், தன் படைப்புக்காக, ஒரு படைப்பாளி இவ்வளவு நாள் காத்திருப்பது கொடுமைதான். 

திரைக்கு வருவதற்கு முன் ஒரு திரைப்படம் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்குமென்று ஓரளவு அறிந்திருந்தாலும் இப்படியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் சில திரைப்படங்கள் முடங்கி கிடப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் சினிமாவின் சக்கரம் பின்னோக்கி சுழலாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 
களவாடிய பொழுதுகளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன் திரு. தங்கர் அவர்களே ...
    

Post Comment

8 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


தங்கர் பச்சான் ஒரு சிறந்த சமூக நலன் கொண்டவர்,,,

சதீஷ் செல்லதுரை சொன்னது…

மாங்கு மாங்குன்ன் கொடி பிடிக்கிற கூட்டம் இருக்குற வரை சின்ன படங்கள் இப்படித்தான் பாடுபடும் ...முதல்ல நாம மாஸ் ஹீரோ மாயையை ஒடைக்கனும் ...அல்லாம ஒன்னும் நடக்காது

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

உங்களைப்போலவே நானும் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் . இவருடைய படைப்புகள் வெறும் பொழுதுபோக்காய் இல்லாமல் நாம் வாழ்க்கையில் இழந்த, மறந்த பொக்கிஷநாட்களை நினைவுபடுத்துவதாய் இருக்கும் . அப்படிபட்ட கலைஞரின் படம் இத்ததனை சோதனைக்குள்ளாகும் என்று எதிர்பார்க்கவில்லை .

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஒரு அருமையான படம் திரையைத் தொட இயலாத நிலை
வருந்துதற்கு உரியது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆவலுடன் காண காத்திருக்கிறேன்...

ezhil சொன்னது…

அவருடைய படங்களில் அம்மாவின் கைபேசி மட்டும்தான் தோற்றுப்போனதுன்னு நினைக்கிறேன்... பெயரே படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது...

அனுஷ்யா சொன்னது…

எழுத்து வடிவம் என்பது முற்றிலும் வேறு.. பிரிவோம் சந்திப்போம் வரி மாறாமல் ஆனந்த தாண்டவம் ஆனது.. படத்தைப் பார்த்தப்பின் அந்த நாவலை வாசித்தவர்கள் துர்பாக்கியசாலிகள்.. அத்தனை மோசம் அதன் திரைவடிவம்.. இன்று அந்த நாவலை வாசிப்பவர்களுக்கு மதுமிதா பாத்திரத்தில் தொப்புள் காட்டும் தமன்னாவே தெரிவார்.. காவல் கோட்டத்தின் சிறு பகுதி அரவான் ஆனது.. வசந்தபாலனின் நேர்த்தியான படைப்புதான்.. ஆனால் அவராலும் சு.வெங்கடேசனுக்கு உண்மை செய்யமுடியவில்லை.. எழுத்து வேறு.. திரைவடிவம் வேறு..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

முகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை.// உண்மைதான் அரசன்! நாங்களும் காத்திருக்கின்றோம்.களவாடிய பொழுதுகள் களவாடப்படாமல் வருவதற்கு!