புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 23, 2014

வதங்கிய செம்பருத்தி...
சன்னல் பக்கம் அமர்ந்திருந்தவனின்,
தோளில்
தலை சாய்த்து உறங்குகிறது 
வதங்கிய செம்பருத்தியுடன் 
நீல நிற தாவணியொன்று!

கனத்த மல்லிகை  
கரம் பற்றி 
கதை  அளந்த காட்சிகள் நிழலாட,
ஏறியவுடன் இறங்கிவிட்டேன்.

நடத்துனர் முறைக்க,
நகர்கிறது பேருந்து.

சுமை ஏற்றியவள்
ஏனோ விலகிவிட்டாள்,
ஏறிய பாரத்தை இறக்க முடிவதில்லை 
எட்டுவருடங்களாகியும்!....

Post Comment

ஜனவரி 11, 2014

ஊர்ப் பொங்கல் ( Oor Pechu # 13)
குட்டைல ஊரப் போட்டிருந்த புளிச்சக் கழிவோல வெளிய இழுத்துப் போட்டு நார் உறிச்சிட்டு இருந்தார் இரத்தினம்.

அவசரத்துக்கு ஒதுங்குற ஆளுவோ கொஞ்சம் உள்ள எறங்கி னாத்தான் என்ன ? ரோட்டிலையே இப்படியான்னு முணுமுணுத்தப் படி வந்த கனகசபை, இரத்தினத்தை பார்த்ததும், வா, கொள்ளா சிரிப்புடன் என்னய்யா பாத்து ரொம்ப நாளாச்சி, எப்படி இருக்கே? ன்னு கேட்டுகிட்டே குட்டைகிட்ட போனார்.

நல்லா நீண்டு வளந்த கழிக, "மொத்தமும்" நாலு கட்ட வெரலு மொத்தம், நாருக நல்ல பாலை பாலையா உறிச்சிட்டு, கழிவோள குட்டைக்கு வடக்கால பக்கம் போட்டுட்டு, கொண்டைய அள்ளி முடியுற மாதிரி நாருகள முடிஞ்சி சாஞ்சி கெடக்கும் வாக மரத்துல போட்டவர் தலைய தூக்கிப் பாத்துட்டு பல்லு தெரியாம சிரிச்சிட்டு வாய்யா கனகசபைன்னார்.

கோவணத்த மறைக்க கட்டியிருந்த வேட்டிய தார் பாச்சி கட்டிட்டு குட்டையில ஏறங்குனதுனால தப்பிச்சது செம்மண் பருத்தி வேட்டி. சேறு முழங்கா வரைக்கும் இருந்தாலும், அந்த காலு தெம்புல இந்த கால புடுங்கி, இந்த காலு தெம்புல அந்த கால மாத்தி வைச்சி ஊற வைச்சிருந்த இன்னொரு கட்டையும் தூக்கியாந்து கரையில போட்டார்!

ஏற்கனவே உறிச்ச கழிகளோட நெடியும், தூக்கியாந்து போட்ட நெடியும் சேர்ந்து மூக்க சொறிய, மடியில சுருட்டி வைச்சிருக்கும் பொடி டப்பாவ தேடி கை போனது கனகசபைக்கு!

என்ன கனகசபை வூட்ல ஏதும் விசேசமா? ஊருக்கு போயிருக்கிறதா தங்கச்சி சொல்லுச்சி, அடிக்கடி வெளியூரு பயணம் போற!

இல்லைய்யா மச்சினன் ஒருத்தன் கரும்பு கட தொறந்திருக்கான் அவனுக்கு கொஞ்சம் பொருளு வாங்கணும் வா, அப்படின்னான்,  அதாம் ரெண்டு மூணு தடவை போயிட்டு வந்தேன்.

அதுவா சங்கதி, என்ன ஊரு கரும்பு ? சரி சரி பொங்க வரிசையெல்லாம்  வைச்சிட்டியா? வெலவாசில்லாம் எப்படிய்யா இருக்கு ?

மதுர பக்கம் மேலூர் கரும்பு, பெருசா சொல்ல முடியாது, கை மொத்தம் தான் கழி, வெறும் உரத்தையே போட்டு போட்டு கரும்போட ருசியே போய்டுச்சி, சல்லுன்னு இருக்கு. எதையும் லேசுல வாங்க முடியாதுய்யா. காது கொள்ளா வெல சொன்னா எப்படித்தான் வாங்குறது! நூறு ரூவாய்க்கு வித்த கட்டு கரும்பு முன்னூறு, நானூறு ங்குறான்.

இல்ல கனகசபை நாம எல்லாத்தையும் கணக்கு பாக்கணுமில்ல, கரும்பு விவசாயி செலவு, மதுர போன்ற ஊர்ல இருந்து ஏத்தி வரும் லாரி செலவு, டீசல், ஆள் கூலி எல்லாத்தையும் கணக்கு பண்ணணும்ல. எல்லாருக்கும் வாய் வவுறு இருக்குதுல்லப்பா!

அந்த இத்துப்போன வியாக்கியானத்தை பதவி பவுசுல திரியும் அவனுங்களும் நெனச்சா நல்லா இருக்கும், கிள்ளி கூட கொடுக்க மனசில்லா மல முழுங்கிகளா திரியுறாருனுவோ, என்னத்த பண்ண ?

அவனுங்கள பத்தி பேசி ஏன் உன் சீவனை குறைச்சிக்குற இரத்தினம், மலடி ன்னு தெரிஞ்சும் மொலப்பால் தாடி ன்னு கேக்குற மாதிரி தான்யா!

அது சரி எதுக்கய்யா இந்த நாரு ... ?

கண்ணு குட்டிவோ ரெண்டு நிக்குதுக, புடி கயிறு திரிக்கலாம்னு தான் இந்த நாரு உரிக்கிறேன், கடையில நைலான் கயிறு தான் கெடைக்குது, அதெல்லாம் நமக்கு சரியா வராது!

சனமெல்லாம் எது நெளுவான வேலையோ, அதை பண்ணுதுக, நீ மட்டும்தான்யா இன்னும் பழச புடிச்சி தொங்கிட்டு கெடக்க....

இதெல்லாம் இன்னைக்கு வந்த வசதிக, பழச மறக்க கூடாதுல்ல. செந்துறைக்கு வரியா ? மம்பானை (மண் பானை) ஒன்னு வாங்கணும், இந்த வருசத்திலிருந்து பானையில பொங்க வைக்கலாமுன்னு இருக்கேன்!

நானும் வரேன் கனகசபை, மண் பானையில பொங்கி மாடுவோலுக்கு படைச்சிட்டு சாப்புடுற சொகம் இருக்கே ... அதல்லாம் சொல்லி மாளாது! 
கட்டாயம் போவோம்! 

சும்மா வந்தா எப்படி நம்ம சொந்தங்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லிட்டு வா....

மறந்துட்டேன் பாரு, சொந்தங்கள் அனைவருக்கும் மனதினிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  

Post Comment

ஜனவரி 07, 2014

இடுப்புக்கு சற்றும் கீழே...
இடுப்புக்கு சற்றும் கீழே தொடும் 
கருங்கூந்தல் அவளுக்கு!

அவசரமோ, அழகியலோ?
பின்ணாமல், 
முடிந்தே இருப்பாள்!

நெருங்கி நிற்கும்,
பேருந்து பயணங்களில்,  
வரும் கனவுகளை 
நீர் தெளித்து கலைத்திருக்கின்றன 
இரக்கமற்ற ஈரக்கூந்தல்!

அவளும் பேசியதில்லை,
என்னையும் 
பேச அனுமதிப்பதில்லை  
அவளின் புதை குழி கண்கள்!

அவள் வெட்கம் தொலைக்க, 
நான் அச்சம் துறக்க, 
காத்திருக்கிறது 
"காதல்"Post Comment