புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 29, 2014

ஊர்ப் பேச்சு # 14 ( Oor Pechu # 14)




பொட்டா மண் கட்டிகள இடிச்சி சல்லடையால் சலிச்சிக்கிட்டு இருந்தார் இரத்தினம்,

"ஆனா" குருத்தொடிக்க போன கனகசபை பார்த்துட்டு என்னய்யா மண்ண சலிச்சிக்கிட்டு இருக்கே, எதுக்கு இந்த மண்ணுன்னு கேட்டுகிட்டே புளிய மரத்து வேர்ல அழுக்கு வேட்டிய எறக்கி வுட்டுட்டு அழுக்குப் படாம உக்காந்தார்.

நிமுந்து பாத்துட்டு வெத்தல எச்சிய துப்பிகிட்டே சொன்னார், எந்த வருசமும் இல்லாம இந்த வருசம் தொவர வெளைச்சல் கொஞ்சம் அதிகம். யேவாரிகிட்ட கொடுத்தது போவ மீதிய மண்ணு சேத்து வைச்சா பூச்சி புடிக்காதுல்ல அதான் மண்ணு சலிச்சிக்கிட்டு இருக்கேன் கனகசப ...

உனக்கு தெரிஞ்ச துவரையில மண்ணு சேக்குற சேதிய மக்களுக்கும் சேத்து சொல்லு ..

ஆமாய்யா கனகசபை தெரிஞ்சத சொல்லி வைப்போம், நாளைக்கு வரும் நம்ம ஆளுவோளுக்கு வசதியா இருக்கும்.

இனிமே எவன் வெவசாயம் பண்ண போறான் இரத்தினம், எல்லாம் நம்ம காலத்தோட போச்சி ... இருக்குற பூமிய வித்துப் புட்டு, எவனுக்கு அனுப்பிகிட்டு இருந்தமோ அவங்கிட்டையே கை நீட்டுற அளவுக்கு வந்துட்டோம்..

ஆமாய்யா, "வைக்க" போரா குமிஞ்சி கெடந்த எடத்துல எல்லாம் சுண்ணாம்பு மலையா , பூமிய நோண்டி குமிச்சி வைச்சிருக்கனுவோ? ராவுல படுத்தா நெறஞ்ச உறக்கமில்ல ...




இப்ப நீயும் , நானும் வெசனப் பட்டு என்ன ஆவப் போவுது இரத்தினம், ஊரு மக்களும் நெனச்சி பாக்கணும்ல ... சரி சரி பேச்சு வாக்குல தொவரைய மறந்துட்டோம், மண்ணு கட்டுறத பத்தி கொஞ்சம் சொல்லுய்யா ...

செடில இருந்து தனியா எடுத்தப்புறம் நல்லா காய வைக்கணும், காஞ்சதுக்கப்புறம் பெரிய பானையிலையோ, இல்ல பித்தள அணடாவுளையோ தொவரைய கொட்டி ஒரு பகல் முழுக்க ஊற வைக்கணும்...

காலையில இருந்து சாயந்திரம் வரைக்குமா யா ...?

ஆமா, பொழுது சாஞ்சதுக்கப்புறம் தண்ணிய வடி கட்டி ஊறிப் போன தொவரைய தனியா பிரிச்செடுக்கணும், பிரிச்செடுத்து நுணுக்கி வைச்சிருக்கும் பொட்டா மண்ண (செம்மண்) ஊறி இருக்கும் தொவரையில சேத்து நல்லா கலக்கணும்....

மண்ணு எம்புட்டு வேணும்னாலும் போடலாமா ? இரத்தினம்...ஒன்னும் ஆவாதா ?

இம்புட்டுதான் போடணும்னு அளவு ஒண்ணுமில்ல, அதிகமா இருந்தா கூட காயவைக்கும் போது உதுந்து போவும்... மரக்கா தொவரைக்கு காப்புடி மண்ணு கணக்கு வைச்சிக்கியேன், 

செம்மண்ண கலந்து குமிச்சி ஈர நூல் சாக்கால இராத்திரி பூரா மூடி வைச்சிருந்து காலையில தொறந்து பார்த்தா சூட்டுல, தொவரை எல்லாம் மொள கட்டிருக்கும்...

என்னது மொள கட்டிடுமா ?

ஆமய்யா ஈர தொவரை, செம்மண்ணு, மூடி வைச்ச சூடு எல்லாம் சேந்தா மொள கட்டாம என்னா ஆவும் ... நல்லா காய வைச்சி அள்ளி வைச்சா போதும் ரெண்டு மூணு வருசத்துக்கு ஒரு வண்டும் ஒன்னும் பண்ணாது .... அப்படி ஒரு பாதுகாப்பா இருக்கும் ...

எப்படில்லாம் பாருய்யா நம்ம ஆளுவோ மூளைய செலுத்தி யோசிச்சிருக்காங்க ... 

இப்பவும் மூளை இல்லாம இல்ல, அத சரியான செலுத்த முடியாமத்தான் செதறி கெடக்குதுக ...... ஆமா எதுக்கு நீ "ஆனா" குறுத்து கிள்ள போறேன் கனகசபை?

ஊர்ல இருந்து மொவ வூட்டு பேத்தி வந்திருக்கு, அரைச்சி கொடுத்தோம்னா வயிறு சுத்தமாகுமில்ல .. அதான் ..

சரி நல்ல விசயம்தான், எதுக்கும் கேட்டுட்டு கொடு, நகரத்துல வளர்ந்த புள்ள, நம்ம வைத்தியம் ஒத்துக்குமா ? 

ஆமாய்யா எதுக்கும் கேட்டுக்குறது நல்லது தானே .... சரி நான் வரேன் இரத்தினம் அப்புறம் பாக்கலாம் ...


Post Comment

மார்ச் 27, 2014

பைத்தியப் பேச்சுக்கள் ...


னசு ஒரு குரங்கு மாதிரி என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன், ஆனால் என்னோட மனசை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் ஒரு நிலையில் இருந்ததில்லை. ஏதாவது ஒன்று ரொம்ப பிடிக்கும், கொஞ்ச நேரத்தில் நேரெதிராக வெறுக்கவும் செய்வேன். கிட்டத்தட்ட நீங்க நெனைக்கிற அதே தான் என்று நினைக்கிறேன் நானும்.

பயணங்களில் பாடல் கேட்கப் பிடிக்குமென்று சொல்ல முடியாது, பழக்கி கொண்டேன். எனது இசை பெட்டகத்தில் நிறைய பாடல்களை சேமித்து வைத்திருக்கிறேன். வகை தொகை கிடையாது, பல்வேறு இரசனைகளில் வகைப்படுத்தி இருக்கும். ஒப்பாரி பாடல்களும் வைத்திருந்தேன். எந்த பாடலை கேட்கிறேனோ அந்த மன நிலைக்கு மாறுவேன், சில நேரங்களில் எதிர் மன நிலையில் கூட இருந்திருக்கிறேன். இன்னும் சில நேரங்களில் பாடல் மட்டும் கத்திக் கொண்டிருக்கும், நானோ விகடன் டைம் பாஸின் அந்நிய தேசத்து முரட்டு அழகிகளை கண்டு வாய் வேர்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்நியப் புறாக்கள் போரடித்துவிட்டால் தெருவோர கழுதைகள் காகிதம் உண்பதை கண்டு இரசித்திருக்கிறேன். என் இரசனை கடிவாளமற்ற குதிரை போன்றது, கட்டுப்பாடு ஒன்றுமில்லை. அதுவாக நிற்கும், அதுவாக ஓடும். 

இரயில் பயணங்களில் எதிர் எதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும் பெரும்பாலும் தமிழக அழகிகளை நான் கண்டு கொள்வதில்லை, (அதற்காக அவர்கள் அழகில்லை என்று அர்த்தமில்லை) காரணம் வெட்கமாக இருக்கலாம், இல்லை நம்மளை எப்படி எடுத்துக் கொள்வாள் என்ற தயக்கமாக இருக்கலாம், இல்லை இவளிடம் பேச என்ன இருக்கிறது என்று கூட இருக்கலாம். இப்படி என்ன கருமத்தை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம், ஆனால் "பிடிக்காது" என்று பச்சையாக பொய் சொல்ல விரும்பவில்லை. இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன் இரயில் பயணமென்றால் எனது பெட்டியில் ஏறுவதற்கு முன் பயணிகளின் அட்டவணையில் இருக்கும் கன்னிகளின் பெயர்களை மனதிலேற்றிக் கொண்டு, "........தா" வாக இருப்பாளோ, "....லை"யாக இருப்பாளோ? ".....சி" யாக இருப்பாளோ? என்று, ஒவ்வொரு அழகியையும் இரகசியமாய் "சைட்டும்" சைக்கோ என்று கூட பெருமையாக சொல்லலாம்.

பள்ளிக்கூடத்திலிருந்து இந்த நோய் என்னை தொடர்கிறது என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கும் அழகிகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். ஒரு வகையில் நல்லது என்று எண்ணினாலும் தனிமையின் கொடுமைக்கு, அழகிகளின் கொடுமை எவ்வளவோ மேல் என்று அடிக்கடி தோன்றுகிறது. பார்ப்போம் எந்த அழகிக்கு நேரம் சரியில்லையென்று.

என்னோட ஞானத்தின் உச்ச நிலையை நீங்கள் கண் குளிர இரசிக்க வேண்டுமெனில் என்னோடு ஒரு அரைமணி நேரம் டிவி பாருங்கள், அப்புறம் நீங்களே உணர்வீர்கள் எந்த நிலையில் இருக்கிறேன் என்று. முன்பு போலில்லை இப்பொழுது டிவி காண்பது குறைந்து விட்டது என்றாலும் ஒரு நாளைக்கு சுமாராக மூன்று மணி நேரம் பார்க்கிறேன். மூன்று மணி நேரத்தில் கையிலிருக்கும் "ரிமோட்" கதறும் கதறலை காதிருந்தால் கரண்ட்டும் கண்ணீர் வடிக்கலாம், யாருக்கும் தெரியும்? தொடர்ந்து டிவி பார்ப்பதினால் ஒரு நன்மை ஏற்பட்டிருக்கிறது, அது என்னவெனில், என்னைவிடவும் "முற்றிய" பைத்தியங்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு இனிமை. காரணம், சொல்ல நிறைய இருக்கிறது, இருந்தும் இங்கு சொல்லும் அளவுக்கு முக்கியமில்லை என்பதினால் கடந்து விடுவது உசிதம். கிராமம், நகரங்களில் பயணித்துப் பாருங்கள் புரியும் வாழ்வின் சொர்க்கம். எங்கள் ஊரில் ஒருவர் இருக்கிறார் நித்தம் ஐந்து கிலோ மீட்டராவது பேருந்தில் பயணிக்காமல் அவருக்கு உறக்கம் வராது. இத்தனைக்கும் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. அடிக்கடி பார்த்து புன்னகைப்பேன் ஆனால் பேசியதில்லை, பேசியிருந்தால் காரணத்தை கேட்டிருப்பேன், உங்களுக்கும் சொல்லி இருப்பேன்.

மாநகரத்து "ஸ்மால் பஸ்களை" போல் இலை வரையவில்லை என்றாலும் அதை மினி பஸ் என்றோ , சிற்றுந்து என்றோ அழைக்கிறார்கள் எங்கள் பகுதி வாசிகள், டீசல் இல்லாமல் நகர்ந்தாலும் நகரலாம் இளையராசா இசை இல்லாமல் நகராது என்பது என்னோட ஒரு குருட்டு நம்பிக்கை. இங்கு பயணிக்கும் "கிளிகள்" ரொம்ப அழகாக இருக்குமென்று "சீனு" அண்ணனும், ஆவி அண்ணனும் அன்றொரு நாள் பேசிக்கொண்டிருந்ததை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அவர்களுக்கு கிளிகள் என்றால், என்னைப் போன்ற பாலகனுக்கு குயிலாவது கிட்டுமென்ற நம்பிக்கையில் தொடர்கிறது இந்த நம்பிக்கையற்ற பயணம்....



Post Comment

மார்ச் 22, 2014

பருவத்தே பயிர் செய்யணுமாம்....




ற்றை வார்த்தையில் ஒருவரை குளிரவும், கோபமும் அடையச் செய்யுமானால் அந்த வார்த்தை "வயதாகத்தான்" இருக்கும். மற்ற எந்த உயிரினமும் அதிகம் கவலை படாத ஒன்றின் மீது மனிதப் பதறுகள் மட்டுமே பெரிதும் கவலை கொள்வது வினோதம்! 

வயது பெருகப் பெருக வலிமையும், மதிப்பும் கூடும் மரம் போலில்லாமல், மனிதருக்கு மட்டும்  வயதை கண்டு அஞ்சும் நிலை கொடுத்த இறைவன் படைப்பை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

இன்றைய இந்தியப் பெரு தேசத்தில் வயதை வைத்தே பெரும்பாலும் மதிப்பிடப் படுகின்றன. வயது மனிதனின் ஆயுட்காலத்தை குறிக்கும் அளவீடே தவிர மனித வளர்ச்சியின் வரையறை அல்ல. இதை பெரும்பாலானோர் அறிந்து, புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை! 

இன்றளவிலும் நாம் வயது என்ற மந்திரத்தை மிகச்சரியான நேரத்தில் உச்சரித்ததே இல்லை! பருவம் எய்தும் முன்னரே திருமணம் செய்து குடும்பம் நடத்தி, இன்னபிற இத்யாதிகளை கண்ட  முன்னோர்களுக்கு தெரிந்திருக்கவில்லை வயதின் மகத்துவம்! 

அதேபோல் முப்பதைக் கடந்து திருமணம் , நாற்பதில் குழந்தை என்று சமகாலத்திய மனிதர்களாகிய நமக்கும், வயதின் மேல் தெளிவான அக்கறை இல்லை என்று தான் சொல்லணும், இருப்பினும் இதன் பின் புலத்தில் இருக்கும் பல்வேறு சூழல்களையும் நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது.

படிப்பை முடித்து, வேலைக்காக பல வருடங்கள் காத்திருக்கும் ஒருவனுக்கு, சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள எண்ணம் வருமா ? அப்படியே அவனுக்கு அந்த ஆசை இருப்பின், அவனுக்கு யார் தான் பெண் கொடுப்பார், இல்லை அதை அவன் குடும்பம் தான் ஆதரிக்குமா ? என்பது சந்தேகம் தான்.

இப்படியாக இருக்கும் பட்சத்தில் வேலை கிடைத்தாலும், கிடைக்கும் வருமானத்தில் வாங்கிய கல்வி கடன், குடும்ப சூழல், வேலை நிரந்தரம் இப்படி ஏகப்பட்ட கடமைகளை சுமக்க நேரிடுகிறது. அப்புறம் எப்படி பருவத்தே பயிர் செய்வது ?




ஒருவழியாக சுமைகள் ஒவ்வொன்றையும் இறக்கி வைப்பதற்குள் முப்பதைக் கடந்து மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கும் வயதுக் குதிரை. கடந்த பத்தாண்டு காலமாக ஆண்களைப்போலவே பெண்களும் இப்படித்தான், முப்பதை நெருங்கும் தருவாயில் தான் திருமணம் பற்றிய பேச்சையே எடுக்கிறார்கள். அவசரகதியில் பொருத்தம் தேடுவதினால் திருமண வியாபாரிகளின் கல்லா நிரம்பி வழிகிறது, சரியான பொருத்தம் அமையாததால் நீதி மன்றங்களில் நிரம்பி வழிகின்றன ஏகப்பட்ட விவாகரத்து வழக்குகள்.

இந்த நீண்ட (கொ) (நெ)டிய விசயத்தில் யார் செய்த தவறு என்று யாரையும் குறிப்பிட்டு விரல் நீட்ட முடியாது என்பது தான் இங்கு வேடிக்கையாக இருக்கிறது. 

தகுதி உள்ள நபருக்கு சரியான நேரத்தில் வேலை வழங்காத அரசுகளையா? சரியான அரசை தேர்ந்தெடுக்க தெரியாத மக்களாகிய நம்மை குறை சொல்வதா ? இங்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது, பணம் இருந்தால் போதும் பக்கோடா திங்கலாம், பல் இருந்தாலும், இல்லாவிட்டாலும்.

உலகிலேயே ஐம்பது சதவிகதம் இளைஞர்களால் நிரம்பிய தேசம் இந்த இந்தியப் பெருதேசம் தான். ஆனால் ஒரு தரமான, தெளிவான அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க தெரியாத அறிவீன கூட்டமாகவே இன்றளவிலும் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. 

இப்படியான ஒழுங்கற்ற ஒரு தேசத்தில் "காலத்தே பயிர் செய்" என்பதை எதை மனதில் வைத்து சொல்லியிருப்பர் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் பிடிபடவில்லை, உங்களுக்கு ஏதும் வழி தெரிந்தால் சொல்லுங்கள்...      


Post Comment

மார்ச் 21, 2014

அழகில் அவளொரு அரக்கி ...


நொறுங்கிய கண்ணாடி கடையாகிறேன்,
யானை போல் 
அவன் 
வந்துச் சென்ற பின்பு....




மதயானை பலங்கொண்ட 
சிணுங்கல் 
தேவதையவள் 


Post Comment

மார்ச் 14, 2014

நினைவுப் பாசிகள் # 03.14. 2014




பாசி # 1:

எப்படி இலாவகமாக நடந்தாலும் "கிளுக்", "கிளுக்" என்று சத்தம் போட்டு காட்டி கொடுத்துவிடும் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளில் கனத்து தொங்கும் கோலிக்குண்டுகள்! சின்னது ஒரு பக்கமும், பெரியது இன்னொரு பக்கமுமாய் வகைப்படுத்தி தனித்திருக்கும். 

பூ வைத்தக் கோலியின் மீது தீராக்காதல், கிறங்கடிக்கும் அதன் அளவும், அழகும்! எத்தனை வேளை என் உணவுகளை மறக்கடித்திருக்கும் இந்த பூக்கோலி! காணும் எல்லாப் பெண்களின் மீதும் ஈர்ப்பு வராதல்லவா ? அது போலத்தான் எல்லாக் கோலிகளையும் பிடிக்காது. எனக்கு பூ கோலியின் மீது கொள்ளைக் காதல்!

என் வருகையை இதன் சத்தம் வைத்தே கண்டு பிடித்துவிடுவாள் முத்தம்மாள் பாட்டி! கையை கழுவிட்டு வாடான்னு சொல்லி திட்டிக்கொண்டே "உரி" யிலிருக்கும் சோத்துப் பானைகளை இறக்குவாள்! பாதி பசி அடங்குமுன்னே மீண்டும் வேதாளம் வரும் நண்பன் உருவில்!

டேய் ராசா, கண்ணன் நிறைய பூக் குண்டு வைச்சிருக்கான் விளையாட கூப்பிடுறான். வருவியான்னு கேட்பதற்குள் கெழவி ரெண்டு "கீர்த்தனைகளை" முடித்து மூன்றாம் கீர்த்தனையை தொடங்கியிருப்பாள்! சொல்ல வந்தவன் இருக்க மாட்டான்னு திரும்பாமலே தெரியும்!



தெளிவான ஊதா வண்ணத்தினுள் சிறிய தேங்காய் துணுக்கை திணித்து செய்தது போல் செய்யப்பட்ட, சிறிய வகை கோலியின் மீது ஏற்பட்ட ப்ரியம் இன்னும் குறைந்த பாடில்லை! (பின்னே முதல் காதல் அல்லவா ?) எங்காவது காண நேரிட்டால் சில நொடிகள் என்னை மறந்து விடுகிறேன்! 

இப்படி சேமித்து வைத்திருந்த "காதலிகளை" ஒரு நாள் அப்பாவுக்கு பயந்து, வீட்டை சுற்றி குழி பறித்து அதனுள் போட்டு மூடி வைச்சிட்டு, விடுதிக்கு படிக்க போயி ஆறு மாசம் கழிச்சி வந்து பார்த்தா புதைத்த இடமும் புரியல, காதலிகள் போன தடமும் தெரியல ......

பாசி # 2:

காந்த விளைவுகளை பற்றி படிக்கும் முன்பே காந்தத்தின் மீதான சிநேகம் மிக அதிகம். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் வைத்திருந்த, சிறு வளைய வடிவக் காந்தம் ஒன்றை கண்டு முகம் மலர்ந்த நான் நமக்கொன்று அது மாதிரி கிடைக்காதா என்று ஏங்குமளவிற்கு செய்த வஸ்து அது!

எங்கண்ணே, இது கிடைச்சது என கேட்டு, அந்த புத்திசாலி அண்ணன் ஓடிக்கொண்டிருக்கும் இரயில் சக்கரத்தை கல்லால் அடித்தால் காந்தம் கொட்டும் அப்படித்தான் நான் எடுத்து வந்தேன் என்று சொல்ல, ரயில் சக்கரத்தை கல்லால் அடிக்க, என் முதுகில் அப்பா கம்பால் அடிக்க பெரும் கலவரம் நடந்தது தான் மிச்சம். காந்தம் கிடைத்த பாடில்லை! 

சிறு துணுக்கு காந்தம் ஒன்றை நண்பன் ஒரு ரூபாய் சொல்ல நான் அம்பது காசு, சின்ன வெள்ளக் கட்டி ஒன்றுக்கும் பேசி முடித்தேன், அப்படித்தான் காந்தம் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியது!

அதன் பின் அதை ஒரு நைலான் கயிற்றில் கட்டி தெருவெல்லாம் இழுத்து வந்து, என் சோதனைக் கூடத்தில் செய்த ஆராய்ச்சிகளை, பின்னர் நிறைய பத்திரிக்கைகள் போட்டிப் போட்டுக்கொண்டு எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ! 

Post Comment

மார்ச் 12, 2014

உதிரச் சுவை (Semman Devathai # 15)



மூச்சிறைக்க 
உரல் குத்தி உமி புடைக்கும் 
அவளழகைக் கண்டு 
பசியாறிக் கொள்கிறது 
மனசு!!!





கோழிப் பேனாய் உறுத்தும் 
அவனிடம் 
எப்படிச் சொல்வது?

ஒட்டுண்ணியாய் ஒரு முறை 
உதிரம் சுவையென்று! 


Post Comment

மார்ச் 10, 2014

ஒன்பது ரூபாய் நோட்டு - சினிமா அல்ல வாழ்க்கை ....


தமிழ் மக்களின் வாழ்வியலை, அவர்களின் வாழ்வியல் சூழலோடு துளி கூட மாறுபடாமல், பவுடர் பூசாத வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியல் நெறியை ஒளிப் பிம்பமாய் வழங்கும் வெகு சில திரைப் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் திரு. தங்கர் பச்சான்.



சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, சமூகம் சார்ந்த, அவர்களின் தொழில் சார்ந்த பார்வையோடு நுணுக்கமாய் திரைப்படமாய் சேகரித்து வருபவர். ஆடம்பரமற்ற சினிமாவையே பெரிதும் நேசிப்பவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் மண் சார்ந்த மக்களின் சினிமாவாகத்தான் இருக்கிறது. 

தான் வாழ்ந்த, இரசித்த கிராமத்து வாழ்வியலை பதிவு செய்வதில் பெரும் ஆர்வம் உள்ளவர் என்றாலும் சில நேரங்களில் அதுவே அவருக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. சம விகிதத்தில் கொடுக்க முடியாமல் சொதப்பிய கதையும் இவரிடம் நிறைய இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தன் பெயரை சற்று அழுத்தமாக பதிவு செய்துவிட்டார் திரு, தங்கர். அனைவரையும் திருப்தி படுத்துகிற மாதிரி சினிமா எடுக்கத் தெரியாதவர் அல்ல, எடுக்க விரும்பாதவர் என்று சொல்லலாம். நிச்சயம் இவர் தயாரிப்பாளரின் இயக்குனர் அல்ல. கதைக்கான இயக்குனர். அதனால் தான் வணிக ரீதியான மாபெரும் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறார். 

சொல்ல மறந்த கதை, அழகி , ஒன்பது ரூபாய் நோட்டு இம்மூன்றும் வெவ்வேறு கிளைக்கதை என்றாலும் இணைத்திருப்பது என்னவோ மண்வாசம் நிறைந்த மக்களின் மொழிதான். பலரும் சொல்லத் துணியாத கதைகளையே சொல்லுவார்.



இதில் நான் பெரிதும் இரசித்தது ஒன்பது ரூபாய் நோட்டு தான். சாதாரண விவசாயக் குடும்பத்தையும், அக்குடும்பம் சார்ந்த விவசாயத் தொழிலையும், அக்குடும்பம் பின்னர் எந்த நிலைக்கு சென்று திரும்பியது என்பதை  இவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்த தமிழ் சினிமாவை நான் பார்த்ததில்லை.

 இசையும், பாடல் வரிகளும் கதையோடு தான் பயணிக்கும். சின்ன சின்ன விசயங்களை கூட முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக வசனங்கள் ஒவ்வொன்றும் மிக எளிமையான சொற்களை  அடங்கிய வலிமையான ஆயுதங்கள்.

இன்று உலக சினிமா உலக சினிமா என்று கொண்டாடும் பெரும்பாலான சினிமாக்கள் அந்தந்த சூழல் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை நெறி முறைகளை சார்ந்தே வெளி வருகின்றன! உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பதிவு செய்யப்படும் எந்த மொழி சினிமாவும் அது எனக்கு உலக சினிமா தான்.

ஒன்பது ரூபாய் நோட்டில் சில குறைகள் இருந்தாலும் அதை பின்னுக்கு தள்ளுவது எளிய மனிதனின் உணர்வின் வெளிப்பாடு. ஆகவே இந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்னைப் பொறுத்தவரை அது சினிமா அல்ல வாழ்க்கை தான் .....  

Post Comment