புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 23, 2015

சொர்க்க பூமி சென்னை ...


சென்னை வந்த புதிதில் ஊர்க்கார அண்ணன் ஒருவரோடு மெரீனா கடற்கரைக்கு சென்று வந்தேன், அதன்பிறகு சென்னையில் பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்த இடங்களெல்லாம் என் நினைவிலிருந்து அழிய துவங்கி ஒரு கட்டத்தில் சுத்தமாய் நினைவிலையே இல்லாமல் போனது. வெறும் இரண்டே இரண்டு மணிநேரத்தில் என்னுள் பிரமாண்ட பிம்பத்தை தோற்றுவித்திருந்த ஒட்டு மொத்த சென்னையையும், அதனுள் வாழும் மனிதர்களையும் கிட்டத்தட்ட வெறுக்கத் துவங்கியிருந்தேன். நமக்கான இடமில்லை இதுவல்ல, எவ்வளவு சீக்கிரம் இதைவிட்டு வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியேறிவிட வேண்டும், வெளியேறுவதற்கான காரணிகள் என்னவென்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து இன்றோடு மிகச்சரியாக ஒன்பது வருடங்கள், ஐந்து மாதங்களாகின்றன. ஆம், இத்தனை வருடங்களும் சென்னையில் தான் இருக்கிறேன், இனிமேலும் சென்னையில் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்.

மெரினாவில் அன்று கண்ட காட்சிகளும், ஏற்படுத்திய தாக்கங்களும் என்னை அவ்வாறு யோசிக்க வைத்தது, இப்போது எந்த சூழலிலும் என்னால் வாழ முடியுமென்ற நம்பிக்கையை விதைத்திருப்பதும் அதே சென்னை தான். சென்னை போன்ற கேடு கெட்ட மாநகரத்தையும், அதே நேரத்தில் சென்னை போன்ற ஆகச்சிறந்த மாநகரத்தையும் உங்களால் பார்க்க இயலாது. ஆம் கண்ணாடி போன்றது தான், நீங்கள் என்னவாக காண ஆசைப் படுகிறீர்களோ அவ்வாறே தான் அதன் பிம்பமிருக்கும். வளர்ச்சி என்ற ஒன்று இல்லாத எதையும் நாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள், குறிப்பிட வயதுக்கு மேல் வளாராமல், அப்படியே இருந்தால் அதை குழந்தை என்றா சொல்கிறோம்? ஆகவே பெரு நகரங்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கின்றன. மக்களும் அதற்கு தகுந்தாற் தங்களை அடுத்த நிலைக்கு மாற்றிக் கொண்டிருக்கினறனர், முடியாதவர்கள் தான் அமர்ந்து கொண்டு பழமை பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை வழங்கும் இந்த சென்னை மாநகரத்தை, சிறந்த ஆசான் என்று கூட சொல்லலாம். பலவித கற்பிதங்களை வழங்கிய பூமி இது. ஊரிலிருந்திருந்தால் கூட இத்தனை விதமான மனிதர்களை சந்தித்திருப்பேனா என்பது சந்தேகம் தான். பொய், புரட்டு, களவு, கொலை இப்படியான கரை படிந்த மண்ணில் தான் உண்மை, மனதுக்கு நெருக்கமான நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். சென்னையின் இரவுகள் அவ்வளவு அலாதியானது,  அனுபவித்தர்களுக்கு மட்டுமே அதன் சுகானுபவம் தெரியும். பாதியிலையே ஓடியிருந்தால் இத்தனை அனுபவங்களை சேகரித்திருக்க முடியுமா என்பது ரொம்ப சந்தேகம் தான்.

சென்னை வாசிகள் மிக மோசமானவர்கள் என்பது பெரும்பாலான அறிவு ஜீவிகள் வைக்கும் குற்றச்சாட்டு.  நான் கேட்டவரை, சென்னையின் பூர்வீக குடிகள் வெகு குறைவு, என்னைப்போல் கிராமத்திலிருந்து  பிழைக்க வந்தவர்கள் தான் இங்கு அதிகம் வசிக்கின்றனர், அதனால் தான் வருடா வருடம் சென்னையின் பெயர் தாங்கிய விரிவாக்கம் செங்கல்பட்டை கடந்து அசுரத்தனமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இந்த மோசமானவர்கள் வரிசையில் முதலில் வருபவர்கள் யார்? அப்போ, சென்னையின் பூர்வீக குடிகள் எல்லோரும் ஒழுக்க சீலர்களா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது, அதே கேள்வியை உங்களிடமும் முன் வைக்கிறேன், மனசாட்சிக்கு விரோதமின்றி பதில் கூறவும், உங்கள் ஊரிலிருக்கும் அனைவரும் நியாயஸ்தர்கள் தானா ?  எல்லா ஊரிலும் சில விதிவிலக்குகள் இருக்கும், அவர்களை புறந்தள்ளி விட்டு பிழைப்பை பார்ப்பது தான் அறிவார்ந்தவர்கள் செய்யும் வேலை.

எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை சென்னை ஒரு சொர்க்க பூமி தான், அதை நாம் அணுகும் விதத்திலிருக்கிறது சொர்க்கமும், நரகமும் ....
 


    

Post Comment

10 கருத்துரைகள்..:

'பரிவை' சே.குமார் சொன்னது…

சென்னை எனக்கும் ரொம்பப் பிடிக்கும்... ஐந்து ஆண்டுகள் அங்கு வாழ்ந்து விட்டு இங்கு வந்துவிட்டேன் என்றாலும் சென்னை எனக்குப் பிடித்த ஊர்....

KILLERGEE Devakottai சொன்னது…

Sinkara(m) Chennai.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அங்கிருந்த 15 வருடங்கள் போனதே தெரியவில்லை... இனிய வருடங்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சென்னையில் வாழ்பவர்கள் சென்னையை விட்டுபோக மனம் வராது. அதனை குறை கூறிக் கொண்டே இருப்பார்கள், ஆனால் சொந்த ஊருக்கு சென்றாலும் இரண்டு நாட்களுக்கு மேல் இருப்பு கொள்ள முடியாமல் வந்து விடுவார்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சென்னையின் பால் எல்லோருக்கும் ஓர் ஈர்ப்பு இருக்கவே செய்கிறது!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சென்னையின் பால் எல்லோருக்கும் ஓர் ஈர்ப்பு இருக்கவே செய்கிறது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கடைசி வரி உண்மையான வாக்கியம்!!!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தலைநகர் தில்லி வந்த புதிதில் இப்படித்தான் எனக்கும் பிடிக்காமல் இருந்தது. “மனுஷன் இருப்பானா தில்லியில்! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊருக்கு போயிடணும்”னு யோசிப்பேன்..... சில முயற்சிகளும் செய்தேன்.... ஆனாலும் காலம் ஓடி விட்டது. தலைநகர் வந்து இது இருபத்தி ஐந்தாம் ஆண்டு.......

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சென்னை சிங்காரச் சென்னை! எல்லா இடங்களிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்தானே..அப்படித்தான் சென்னையும்...வந்த புதிதில் எனக்கும் பிடிக்கவில்லைதான்...இப்போதும் பிடிக்கவில்லைதான்...ஆனாலும் வளர்ச்சியும் வேண்டியிருக்கிறதே வாழ்க்கையில் முண்டியடித்து முன்னேற... அதன் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு குற்றமும் சொல்லிக் கொண்டு நகர்கின்றன ஒவ்வொரு நொடித்துளிகளும்...இக்கரைக்கு அக்கரைப் பச்சை போல...

கீதா

ஸ்ரீராம். சொன்னது…

25 வருடங்களுக்கு முன்னால் எனக்குத் தோன்றிய அதே எண்ணங்கள்.! முரளிதரன் கருத்தையும் வழி மொழிகிறேன்.