புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 19, 2015

சுடு சோறு!


எப்போது அந்தப் பழக்கம் அவனை தொற்றிக் கொண்டது என்று இதுநாள் வரை யாருக்கும் தெரியவில்லை. எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தும் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி மழுப்பி விடுவான். அவனுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் "சுடு சோறு". நாங்கள் என்றால் நான், ரூபக், மெக்னேஷ், சீனு, மற்றும் ஆவி. நான் மட்டும் அவனுடன் எட்டாம் வகுப்பிலிருந்து கூட படித்து வருபவன், மற்றவர்கள் கல்லூரி சேர்ந்த பின்பு கூட்டணியானவர்கள். அவனை முதன் முதலில் சுடு சோறு என்று அழைத்தது ரூபக் என்று தான் நினைக்கிறேன்.



முன்பெல்லாம் சுடு சோறு என்று அழைத்துவிட்டால் போதும் முசு முசுவென்று கோபம் பொத்துக் கொண்டு வரும், இப்போதெல்லாம் அப்படி அழைத்தால் வெறும் சிரிப்போடு கடந்து விடுவதினால் அவ்வாறு அழைப்பதில் இருந்த அலாதி வெகுவாக குறைந்துவிட்டது. அவனுக்கு முப்பதை தொட இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. நல்ல நெடு நெடு வென வளர்ச்சி, மெலிந்த தேகம் என்றாலும் சற்று தொப்பை வெளித்தள்ளியிருக்கிறது. மேல் வரிசை பற்களில் ஒன்று வெளித்தள்ளி இருக்கும், அது தான் அவனுக்கு அழகே, ஆனால் தனது மொத்த அழகையும் இந்த ஒற்றைப் பல் கெடுப்பதாய் அடிக்கடி நொந்து கொள்வான். இதுதான் உனக்கு அழகு என்று எவ்வளவோ சொல்லியும், கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

லொட லொடவென்று பேசிக்கொண்டு இருந்தவன் தான், ஒருமுறை பனிரெண்டாம் வகுப்பில் தோழியொருத்தியை கிண்டல் பண்ண முற்பட்டு, அவள், எல்லோர் முன்னிலையில் வைத்து இவனை சராமாரியாக கலாய்த்து விட, அன்றிலிருந்து என்னிடம் கூட அளவோடு பேசிவருகிறான். பெண்களென்றால் சுத்தமாக பேசுவது கூட இல்லை. பிறகொரு பொழுதில் அந்த தோழி வந்து வருத்தம் தெரிவித்தும் அவளிடம் கூட பேசாமல் தவிர்த்து விட்டான். கல்லூரி சேர்ந்த இரண்டாம் வருடத்திலிருந்து எங்கள் வட்டத்துடன் மட்டும் கொஞ்சம் கல கலப்பாக பேச ஆரம்பித்திருக்கிறான், ஆனால் வகுப்புத் தோழிகளுடன் பேசுவதை இன்றுவரை தவிர்த்து வருவது பெருத்த ஆச்சர்யம் தான்.

ஒருமுறை, யார் யாருக்கு என்ன பிடிக்குமென்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெரைட்டியை சொல்லிக் கொண்டிருக்க, சுடு சோறு பிடிக்குமென்று சொன்ன அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாலும் நக்கலடிக்கிறான் என்று பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை கல்லூரி கேண்டினில் அப்போது தான், வடித்துக் கொண்டு வந்து பரிமாறிய ஆவி பறக்கும் சுடு சாதத்தை, நாங்கள் ஆற வைத்துக் கொண்டிருக்க, அவன் உண்டு முடித்து இன்னொருமுறை, சாதம் கொண்டு வாருங்கள் என்று கடை ஊழியனிடம் சொன்ன போது தான் அவன் உண்மையிலையே சுடு சோறுதான் என்று விளங்கியது!

இவனிடம் இருந்து எப்படியாவது சுடு சோற்றின் ரகசியத்தை கறந்து விட வேண்டுமென்று, ஆவி, திட்டமிட்டு நாங்கள் அனைவரும் உற்சாக பானம் அருந்த கடைக்குச் சென்றோம். ரெண்டாவது சுற்று முடிந்து மூன்றாவது சுற்றின் இறுதியில் மெல்ல சீனு ஆரம்பித்தான். முதலில் சொல்ல தயங்கியவனை மெல்ல தேற்றி சொல்ல வைத்தோம், அவன் சொன்னது என்னவெனில்...

டேய் மச்சி,.. உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியலை, எனக்கு சுடு சோறென்றால் அவ்வளவு பிரியம், சுடு சோறு மட்டும் இருந்துவிட்டால் போதும், சாம்பார், ரசம், கூட்டு பொரியல் கூட தேவையில்லை, வெறும் வடிச்ச கஞ்சியை வைத்தே சாப்புட்டு முடித்துவிடுவேன் அந்த அளவிற்கு சோற்றின் மீது பித்து. சுடு சாதத்தின் ருசியை அறிய இலையில் சாப்பிட வேண்டும் மாப்ளைகளா ...



"என்னடா சொல்றே" என்று வினவிய ரூபக்கை கை காட்டி அமர்த்திவிட்டு தொடர்ந்தான்.

சுட சுட சாதத்தை வாழையிலையில் அள்ளி வைத்தால், சூட்டினை தாக்கு பிடிக்க முடியாமல் இலையும் சற்று வெந்து கறுத்துப் போகும், அதோடு சாம்பார் கலந்து பிசைந்து சாப்பிட்டால் தேவலோக சுவையை தரும் டா என்றான், கண்களை அகல விரித்தபடி.

நம்ம முன்னவர்கள் வைத்தியத்திற்காக இலைகளில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், எனக்கு அது தரும் மணத்திற்காகவே இலைகளில் சாப்பிட பிடிக்கும். தாமரை, தேக்கு இலைகளில் சாதத்தை சாப்பிட்டர்வகளுக்கு மட்டுமே தெரியும் சோற்றின் சுவை. உங்களில் எத்தனை பேர் இலைகளில் சாப்பிட்டிருப்பீர்கள் என்று தெரியவில்லை, அப்படியே சாப்பிட்டிருந்தாலும் இப்படி ரசித்து ருசித்திருப்பீர்களா என்பது சந்தேகமே என்று எங்களை நோக்கியவனை, பேச்சை திசை மாற்ற முயற்சித்தோம், இருந்தும் விடாமல் தொடர்ந்தான். அப்படி இலைகளின் மீது பிரியமுள்ள எனக்கு சுடு சோறென்று பெயரே வைத்து விட்டார்கள் என்று சுடு சோற்றின் ரகசியத்தை அந்த மதுக் கூடத்தில் வைத்து உடைத்தான். ஆவி, ஏதோ சொல்ல அப்படியே பேச்சு திசை மாறி கிளம்பி வந்தோம்.

கல்லூரி முடிந்ததும், இலை விரும்பியான அவனுக்கு, வட இந்தியாவில் வேலை கிடைக்க, அங்கு இடம் பெயர்ந்துவிட்டான். இடையிடையே நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொள்கையில் சுடு சோறும், இலையும் இல்லாமல் முடியாது எங்களது பேச்சு.

சுடு சோறுக்கு நாளை கல்யாணம், வட இந்திய பெண்ணை காதலித்து மணக்கப் போகிறான். முதல் நாள் கல்யாண வரவேற்பில், வட மற்றும் தென்னிந்திய உணவுகளை கலந்து கட்டி பிரமாதமான விருந்து வழங்கினார்கள், என்ன, இலைக்குப் பதிலாக, காகித இலையில் விருந்து படைத்தார்கள்....

  

Post Comment

7 கருத்துரைகள்..:

சத்ரியன் சொன்னது…

காகித இலையென்றாலாவது பரவாயில்லை. மெல்லிய நெகிழியுறை ஒட்டிய காகிதம். ஹ்ம்ம்.

KILLERGEE Devakottai சொன்னது…


இலையில் சாப்பிடுவதில் ஒரு அலாதியான இன்பம் உண்டு நானும் அறிவேன் தங்களின் நண்பருக்கு எமது வாழ்த்துகளை சொல்லவும்
நண்பரே சென்னை சந்திப்பு பதிவு போட்டு இருக்கிறேன்.
தமிழ் மணம் 1

சதீஷ் செல்லதுரை சொன்னது…

சுடு சோறுக்கு ஒரு அழுத்தமான சோக வலி இருக்கும்னு தொடர்ந்து வந்தா ப்ளாஸ் பேக்குக்கு பதிலா ப்யூச்சர் நிகழ்வா அமைந்திடுச்சு...ஓகே.நண்பர்கள் பேரெல்லாம் நோட்டட் நோட்டட்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம் இப்பல்லாம் காகித இலை...மட்டுமல்ல முன்பு வாழைஇலையை நன்றாக வழித்து உண்டால் கேலி செய்வார்கள்...மாடு மாதிரி இலையையும் சாப்பிட்டுருவ போல இருக்கே என்று..இப்போ பேப்பர் இலை..வழித்து சாப்பிட்டால் இலை இருக்கட்டும் என்கின்றார்கள்...மாடு இப்போது பேப்பரும் சாப்பிடுகிறது என்பது தெரியலை..சொல்றவங்களுக்கு

தாமரை, தேக்கு இலைகளில் சாதத்தை சாப்பிட்டர்வகளுக்கு மட்டுமே தெரியும் சோற்றின் சுவை. உங்களில் எத்தனை பேர் இலைகளில் சாப்பிட்டிருப்பீர்கள் என்று தெரியவில்லை, அப்படியே சாப்பிட்டிருந்தாலும் இப்படி ரசித்து ருசித்திருப்பீர்களா என்பது சந்தேகமே// அவருக்கு பதில்...சாப்பிட்டுருக்கோம்ல...அதுவும் ரசித்து ருசித்து...ரொம்பப் பிடிக்கும்..பழைய நினைவுகள்...

சேக்காளி சொன்னது…

//சுடுசோறு//
யூ மீன் பாயில்ட் ஒயிட் ரைஸ்?

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்! தாமரை, வாழை, மந்தார இலைகளில் சூடான சாதம் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது! அதன் ருசி தனிதான்! இப்போதுதான் இலைகளுக்கு மனிதர்களால் பஞ்சம் வந்துவிட்டது! ஒரு மரத்தையாவவது விட்டு வைத்தால்தானே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சுவையான...
சுடுசோறு!


.