இப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்தேன். இடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் படம் வெளியான உடனே பார்க்க இயலாமல் போக, நேற்று தான் பார்க்க முடிந்தது. இப்படத்தை பற்றி சொல்வதை விட இப்படம் பேசும் சில விசயங்களை பார்க்கலாம்.
எப்போதெல்லாம் வாக்கு வங்கி சரிகிறதோ அப்போது தான் பாவப்பட்ட விவசாயிகளின் நினைப்பு வரும், அவ்வாறு நினைவு வந்தவுடன் சரிந்து கிடக்கும் தனது செல்வாக்கை மீட்டெடுக்க அவர்களை நோக்கி அவசர அவசரமாக ஓடும் அரசியல்வாதிகளை கண்டு சலித்து போன மனிதர்கள் வாழும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று முன்பொரு காலத்தில் சொல்லப்பட்ட தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மனிதர்களின் வாழ்வியலை இரண்டு மணி நேரம் திரையில் காணும் படி செய்திருக்கிறார் கத்துக்குட்டி இயக்குனர் சரவணன்.
விவசாயி எனும் ஒரு இனம் இருந்ததாகவும், அவர்கள் விவசாயம் எனும் அதி முக்கியமான தொழில் செய்து ஊருக்கெல்லாம் சோறு போட்டதாகவும் என்று வரலாற்றுப் புத்தகத்தில் ஏற்றாத குறைதான், மத்தபடி அவர்களின் வாழ்க்கை அதள பாதாளத்தில் தான் கிடக்கிறது. கிடந்து அல்லல் பட்டது போதும் நம்ம பிள்ளைகளாவது படித்து பெரியாளாகட்டும் என்ற நப்பாசையில் இருக்கிற நிலத்தை விற்று படிக்க வைத்து, வீட்டுக்கொரு இஞ்சினியர் உருவாக்கி விட்டு தன்னை சிதைத்து, மண்ணை தொலைத்து, எதிர்காலம் சூனியமாய் போய் எவ்வித ஆதரவு இல்லாமல் தனித்து நிற்கும் விவசாய குடிகளின் வலிகளை பதிவு செய்ய முனைந்திருக்கிறது இந்த கத்துக்குட்டி.
அடி மேல் அடி வாங்கி நசிந்து கிடக்கும் மக்களின் மீது, மீத்தேன் திட்டம் என்ற ஒன்றை இடியாய் இறக்கி வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் இது. அரசாங்கத்தை எதிர்ப்பது போல் காட்சியமைத்தால் படம் வெளிவராது என்றறிந்து மீத்தேன் திட்டத்தினால் வரும் விளைவுகளை சொல்ல முயன்றிருக்கிறார்.
விவசாயம், அதன் மீதான மக்களின் அலட்சிய போக்கு, மீத்தேன் திட்ட விளைவு, அரசாங்க கெடுபிடி, வடிக்கட்டிய அரசியல், குடி, பட்டினிச்சாவு, இயற்கை விவசாயம், கதிர்வீச்சு பாதிப்பு, இப்படி படம் நெடுக தொலைத்து கொண்டிருக்கும் வாழ்வியலை பற்றியே பேசிக்கொண்டிருந்தாலும் பாடமெடுக்கும் உணர்வு வராமல் பார்த்துக் கொள்கிறார். பன்ச் வசனங்களாய் கேட்டு கேட்டு புளித்துப் போன காதுகளுக்கு கொஞ்சம் இனிமையாய் இருக்கிறது மக்களின் கிராமத்து மொழி.
இந்தப் படத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை, இதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பட்டியல் வெகு நீளமாய் நீளும், இருந்தும் முதல் முயற்சி, மக்களின் அவசிய பிரச்சினைகளைப் பற்றி பேசும் படமென்பதால் குறைகளை புறந்தள்ளி நிறைகளை மட்டும் சொல்கிறேன். இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தந்தால் மட்டுமே தொடர்ந்து இம்மாதிரியான படைப்புகள் வெளிவரும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதுகிறேன்.
படம் நெடுக பாடமெடுக்க முனைந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்றறிந்து சந்தியாவை வைத்து ஒரு குத்து பாடல்? அரசியல் கலாட்டா என்று கொஞ்சம் கமர்சியல் மாசலா பூசி கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். இவரை நம்பி முதலீடு செய்தவரும் பிழைக்க வேண்டுமல்லவா?
இயற்கையோடு தவழ்ந்திருக்கிறது கேமரா, பிண்ணனி இசையில் நிறைய மெனக்கெட வேண்டும் என்பதை படம் நெடுக உணர வைக்கிறது அயர்ச்சியான இசை. பாடல் ஒருமுறை கேட்கவைக்கும் ரகம்.
ரியல் எஸ்டேட் க்கு விளம்பரம் செய்ய வந்த தேவி ப்ரியாவை கடத்திக் கொண்டு சென்று பேசும் வசனங்களும், முதல் பத்து நிமிடங்களின் படத்தொகுப்பு பட்டாசாக இருக்கிறது. வசனங்களில் தொய்வில்லை என்றாலும் இயக்குனர் அதிகம் மெனக்கெட வேண்டுமென்று பலக்காட்சியமைப்புகள் உணர்த்துகின்றன. உதாரணம் பட்டினிச்சாவு பற்றி பேசி மீத்தேன் திட்டத்திற்காக நாயகியின் அப்பா தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் போது பார்வையாளனாய் மட்டுமே இருக்க முடிந்ததே தவிர பங்காளனாய் பங்கெடுக்க முடியவில்லை.
தனிக் கவனம் எடுத்து நடித்திருக்கும் சூரி, நரேன், சிருஷ்டி மற்றும் மற்ற நடிகர்களுக்கும் ஒரு பெரிய பூங்கொத்து. திரையில் காண வேண்டிய படமிது!
Tweet |
1 கருத்துரைகள்..:
நல்ல படம் என்று நானும் கேள்விப்பட்டேன்! பகிர்வுக்கு நன்றி!
கருத்துரையிடுக