புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 27, 2015

இளமதி அத்தை...






எல்லோரிடமும் ப்ரியம் காட்டினாலும்
என்மேல் கூடுதல் பாசம்
என்னைவிட
பதினைந்து வயது மூத்தவளாகிய
உனக்கு!

கண்ணாமூச்சியிலிருந்து,
களவு வரை எல்லாம்
நீ
சொல்லித்தந்த வித்தை!

குறி தவறாமல்
அடித்த மாங்காய்க்கு
பரிசாக,
முத்தச்சுவை ஊட்டியவள்!

தேனடையென்று
குளவி கூட்டினுள் விரலிட்டு
எனக்கு முகம் வீங்க,
உனக்கு
அழுதே கண் வீங்கியதாம்!

கம்மங்கதிரொடிக்க,
கன்றுக்கு புல்லறுக்க,
முனியப்பருக்கு விளக்கேற்ற,
இப்படி எங்கு சென்றாலும்
உன்துணை நான்தான்!

மருதாணி விரல் பிடித்து
மரிக்கொழுந்து கிறக்கத்துல
மயங்கி நடந்த நாட்களெல்லாம்
மனசெல்லாம் நிறைந்து கிடக்க,

ஐப்பசி அதிகாலையொன்றில்
தூக்கிட்டு கொண்டதாய்
உன்னை கிடத்தியிருந்தார்கள்
கால் நொடிக்கும்
அந்த மரப்பெஞ்சில்!

சாணம் கரைத்த கையோடு
மார்பிலடித்துக் கொண்டு
அழுத அம்மாவோடு சேர்ந்து நானும்
கதறியதாய் அடிக்கடி,
நினைவுறுத்துவாள் உன் அம்மா!

இன்றுவரை,
நானறிந்த இரகசியம்
ஊரறியாது.

இன்னும் எத்தனை
இரவுகளின் உறக்கங்களை
விழுங்கப் போகிறதோ,
அந்த அந்தியின்
கண்ணீர்பேச்சும்
அதனுள் கரைந்த போன
உன் ஒருதலைக்காதலும்!


Post Comment

பிப்ரவரி 20, 2015

நடன நடிகை - "கதை"


வழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது.

இரண்டு நாளைக்கு முந்திய நிதானம் தவறிய போதையில், எட்டி உதைத்தும் கடிக்காமல் விலகி ஓடியது இதே நாயகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

நானிருப்பது மக்களடர்த்தி கொண்ட குறுகிய தெரு, திரையில் சிரிக்கும் நடிகர்களுக்கு நாங்கள் தான் எல்லாம், சிகை அலங்காரத்திலிருந்து, பவுடர் பூசுவது வரை எல்லாம். இந்த எல்லாத்துக்குள் எல்லாத்தையும் அடக்கி கொள்ளுவது உங்களின் கற்பனை சாமர்த்தியம். 

பூர்வீகம் ஆந்திரா என்று அம்மா ஒருமுறை போதையில் சொன்னாள், அப்பா யாரென்று சொல்லவில்லை. எனக்கு அது தேவையாவும் இல்லை.

அம்மா, தன் சிநேகதனோடு வாழ்கிறாள். அப்படியொன்றும் நெருக்கமான சிநேகிதன் இல்லை, இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு "சீரியல்" நடிகையின் முன்னாள் கணவன். நடிகை, வேறொருவனோடு கட்டிலில் படுத்திருக்கையில் கண்டு சீறியவனை, போடாவென்று துரத்திவிட்டதாகவும், அவனுக்கு அடைக்கலம் தந்திருப்பதாகவும் யாரோ சொல்லி கேட்டதாக நினைவு. மனைவியினால் கைவிடப்பட்டவனுக்கு வாழ்க்கை தந்திருக்கும் கர்வம் அம்மாவிற்கு இருக்கலாம்.

பணம் தேவைப்படுகையில் என் மொபைலுக்கு அழைப்பாள், பணத்தோடு, லா மார்ட்டின் புல் ஒன்றையும் வாங்கி கொடுத்து வருவேன், வாய் நிறைய பல்லோடு வாங்கிகொ"ல்"வாள். எப்பவாது சாப்பிட்டியா என்று கேட்பதோடு சரி.

பணம் இல்லாத நாட்களில், என் குரல் தடுமாறுவதை வைத்தே நீயெல்லாம் எங்க உருப்பட போறே ன்னு சொல்லிட்டு போனை வைத்துவிடுவாள். கனிவான குரலில்லை கொஞ்சம் கரகர குரல்தான், நிதானித்து கேட்டால் மட்டுமே பெண் குரல் போன்றிருக்கும்.

அம்மா ஒருமுன்னாள் நடன நடிகை, உங்களுக்கு தேவையில்லை இருந்தாலும், இப்போதைய என் மன நிலையில் சொல்ல வேண்டும் போலிருக்கிறது, நேரமிருந்தால் கேளுங்கள், இல்லையெனில் கடந்துவிடுங்கள்.

நீக்கு, போக்கு தெரிந்திருந்தால் பெரிய நடிகையாக கூட வந்திருக்கலாம்.
எங்கோ வழுக்கியிருக்கிறாள் அதனால் தான் நடனத்தோடு நின்று போனது அவளது சினிமா வாழ்க்கை.

நடனத்தோடு நின்றுபோனாலும், சினிமாவின் முக்கிய புள்ளிகளுக்கு இவள் தான், பல நாள் இரவுத் துணை. இன்று, அப்பா வேடத்தில் வந்து புள்ளைகளுக்கு படத்திற்கு படம் ஒழுக்கம் சொல்லி கொடுக்கும், அந்த வழுக்கை தலை நடிகன் இவளின் மடியில் தவமாய் கிடந்தவனாம்.

அஞ்சு நாள் காத்துக்கெடந்து, ஆறாம் நாள் தான் போயிட்டு வந்தேன் தெரியுமா? அந்த அளவுக்கு உங்கம்மாவுக்கு அப்ப, டிமாண்டு ன்னு சொல்லிவிட்டு, ஒரே மடக்காய் பாதி குவாட்டரை உள்ளே தள்ளிவிட்டு மீசையை முறுக்கும் அந்த "ஸ்டைல் விக்" கடை பெருசை, பக்கத்திலிருக்கும் பீர் பாட்டிலை உடைத்து ஒரே சொருகலா சொருகத்தோணும். இப்படி கேட்டு கேட்டு மனது மரத்து விட்டமையால் ஒரு சிரிப்போடு விலகி வந்துடுவேன். இவராது இதோடு நிறுத்திகொள்வார், இன்னும் சிலர் வேறொரு எல்லைக்கும் சென்று வருவர், அவர்களுக்கும் சிரிப்பு மட்டுமே பதில்.

நடனத்திலிருந்த, நளினம் அவள் வாழ்க்கையில் இல்லாமல் போனதால், பழைய டெண்டு கொட்டா போல கேட்பாரற்று போய்விட்டாள் அம்மா.

பள்ளியில் சேர்த்தாள், படித்தேன், என்ன படித்தேன் என்று நினைவில்லை. பள்ளிக்கு போனது சரியாக நான்கு வருடம், அதில் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

ஆங்கிலம் பேசுவேன், படிக்க தெரியாது, ஆனால் கையெழுத்து ஆங்கிலத்தில் தான். ஆங்கிலம் கற்றுக்கொண்டது பெரிய கதை, அதை சொன்னால் நிச்சயம் உங்களுக்கு போரடிக்கும் ஆகையால் இப்போதைக்கு அதற்கு தடா.

பெரிதாய் திட்டமிட்டு எதையும் செய்ய மாட்டேன். கடப்பவைகளையும், நடப்பவைகளையும் பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளாத மனிதப் பிறவியென்று வைத்துக் கொள்ளுங்கள்.

நிறைய நேரங்களில் சோறில்லாமல் பட்டினி கிடந்தமையால் இப்போதெல்லாம், சாப்பாட்டுக்கு செலவு பண்ணுவதில் கணக்கு கிடையாது. 
குடி வாரம் நான்குமுறை, சில நேரங்களில் வாரமுழுக்க வும் தொடர்ந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் தொடர்கிறது. 

சினிமா பார்ப்பது மிக அரிது, அதிலே கிடப்பதினால் அதன் மேல் நாட்டம் கிடையாது. 

வேலைகளற்ற பொழுதுகளில் அவளைத்தேடுவேன், அவளுக்கும் வேலையில்லை என்றால் என்னை தேடி வந்துவிடுவாள். அவளுக்கும் என்னை மாதிரி தான் குடும்ப அமைப்பென்று, எல்லாம் முடிந்த பிறகு பாதி மார்பகத்தை என் நெஞ்சில் அழுத்திக்கொண்டு சொன்னாள். என்னை அம்மா உதறிவிட்டாள் , அவள், கணவனை உதறிவிட்டாள். 

அவளை சந்தித்ததை பற்றி சொல்ல வேண்டுமானால், ரமேஷை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டி வரும், அவனைப்பற்றி நினைத்தாலே மண்டை வெடிக்குமளவிற்கு கோபம் சூடேறும். ஆகவே அவளை, கையாலாகாத கணவனின் மனைவியென்று வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் கணவனை உதறிவிட்டு தனியாளாக வாழும் பெண்ணென்று வைத்துக்கொள்ளுங்கள். சினிமாவில் தான் இதுபோன்று சாத்தியம், நிஜவாழ்க்கையில் இருக்காது என்று எண்ணினால் அது உங்கள் அறிவீனமென்று சொல்வதை தவிர வேறு வழியில்லை எனக்கு.


அவளை திருமணம் செய்ய பல நேரங்களில் யோசித்திருக்கிறேன், என் எண்ணங்களை அவளிடம் சொல்ல முற்படுகையில் பேச முடியாதபடி வாய் முத்தம் கொடுத்து வாயடைத்து விடுவாள். 

அவள் பெயர் அவசியமில்லை. பெரும்பாலும் அவள் பகலில் தான் வருவாள், இரவில் ஓரிருமுறை தான் சந்திருக்கிறோம். அதுவும் வந்த அரை மணிநேரத்தில் அவசரமாக சென்று விடுவாள். காரணம் கேட்டதில்லை. அவளுக்கு முரட்டு அழகு. அந்த அழகுதான் அவளுக்கு பலமும், பலவீனமும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அவளை பார்க்க முடியவில்லை, மொபைலில் தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பதில். ஒரு கன்னட பட வேலையாக மைசூருக்கு போகிறேன் வர பதினைந்து நாட்களாகும் என்று சொல்லிவிட்டு சென்றது தான் கடைசி என்று நினைக்கிறேன்.

அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அரசு மருத்துவமனையில் சேர்த்து இன்றோடு 17 வது நாள். அதிக குடி கூடவே காமாலையும் இருப்பதினால் உடம்பு ரொம்பவே பாழ்பட்டிருக்கிறது. சரியாக இன்னும் ரெண்டு மாசமாகவது ஆகும் என சொல்லி இருக்கிறார் டாக்டர். கூடவே இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவளின் தத்துக் கணவனுக்கும், வார்ட் தொழிலாளிக்கும் பணத்தை கொடுத்து கவனிக்க சொல்லி விட்டு வருகிறேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை பார்த்துவிட்டு வருவதோடு சரி.

"டங்காலி" டீக்கடையில் பேப்பரை புரட்டிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக தான் அந்த எட்டாம் பக்க கடைசி கால செய்தியை பார்த்தேன். உதவி இயக்குனர் ஒருவரோடு, மேக்கப் வுமன் தற்கொலை என்ற வரிகளை படித்ததும் தூக்கி வாரிப்போட்டது. அவளே தான், போட்டோ சற்று மங்கலாக தெரிந்தாலும், நன்றாக தெரிந்தது அவளின் முகம்.

அதற்கு மேல் பேப்பரை புரட்ட முடியாமல் மூடி வைக்க எத்தனிக்கையில் தான் அம்மாவின் தத்து கணவன் செல்போனில் அழைத்து சற்று முன்னர் உன் அம்மா இறந்துவிட்டதாக சொல்லி போனை துண்டித்தான்.
     

Post Comment

பிப்ரவரி 11, 2015

சாமியாடிகளும் - நானும்.


முன்குறிப்பு : இது கிண்டலுக்காக எழுதப்பட்டது அல்ல.



எங்கள் பகுதி கிராமங்களின் தீமிதி திருவிழாக்களுக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்பது நிம்மதியை தந்தாலும், தாவணிக் குமரிகள் சுடிதாருக்கு மாறிவிட்டமையால், திருவிழாக் கூட்டத்தில் கிடைக்கும் தாவணிக்குறும்புகள் மட்டும் கிடைப்பதில்லை என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இல்லாத அழகை இருக்கும்படி காட்டும் தாவணியை புறந்தள்ளி, இருக்கும் கொஞ்ச அழகையும் கெடுக்கும் சுடியை மாட்டிக்கொண்டு திரியும் யுவதிகளிடம் எப்படி சொல்வது உங்களுக்கு தாவணி தான் அழகென்று, மீறி அவர்களிடம் சொன்னால், முகத்தை திருப்பிக்கொண்டு செல்லும் திருக்கோலத்தை காண சகிக்காது.

உறவினர்களுக்கும் செய்திகளுனுப்பி, அவர்களும் குடும்பமாய் வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து திருவிழாவை பார்த்துச் செல்வார்கள். சாமி அருள் கிடைக்கிறதோ இல்லையோ, உறவுகளின் பிணைப்பு வலுபெற இம்மாதிரியான விழாக்கள் முக்கிய ஆதாரமாக விளங்கியது. உறவுகள் கூடுகையில் மண்டை உடைப்பு சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது, அது வேறுமாதிரியான பாசமது. இப்போவெல்லாம் குடும்ப விழாக்களுக்கே அழைப்பு வருவதில்லை, பிறகு கோவில் திருவிழாவிற்கு அழைப்பில்லையே என்று வருந்துவது. சரி வாங்க நம்ம கதைக்கு போவோம்.

சின்ன சின்ன கோவில் நிகழ்வுகளுக்கெல்லாம் ஊரில் சிலருக்கு சாமி வருவது வாடிக்கை. நான் விவரம் அறிந்த நாளிலிருந்து ஒருவரை பார்த்து வருகிறேன், பூசையோ?, சமியெடுப்போ? எந்த நிகழ்வாக இருந்தாலும் மூர்க்கத்தனமாக சாமியாடி, பின் ஓய்ந்து போய் கிடப்பார். ஆரம்பத்தில் அவர் ஆடுகையில் பயந்தாலும், போக போக மிக சாதரணமாக எடுத்துக் கொள்ள பழகிக்கொண்டனர். சின்ன சின்ன கோயில் மணிக்கும், உடுக்கை சத்தத்திற்கும் சாமிவந்து ஆட்டம் பட்டையை கிளப்புவார்கள்.

ஊரில் எங்களின் நட்பு வட்டத்தில் இப்படியொரு (ஆ)சாமி இருக்கான், அவன் குடும்பமே சாமியாடிகள் தான், அதனால் அவனும் சாமியாடி என்பதில் ஆச்சர்யமும் இல்லை. எங்காவது கோவில் நிகழ்வுகளுக்கு அவனோடு செல்ல நேரிட்டால், எங்களுக்கு அடி நெஞ்சில் பக்கென்று ஒரு அனல் உருவாகும், அவனை தனியா விட்டுடாதிங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க என்று அவர்கள் வீட்டில் மேலும் அச்சத்தை மூட்டி அழகு பார்ப்பார்கள். பயல் பார்க்க பரம சாது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அஞ்சாறு யானை பலம் கொண்டு திமிருவான். விபூதியள்ளி முகத்தில் பூசி, எரியும் சூடத்தை அப்படியே விழுங்கியதும் பேக் டு நார்மல் மோடுக்கு வந்து ,வாங்கடா பொறி வாங்க போகலாம் என்பான்.

நன்றாகத்தான் வருவான், பேசுவான், எங்களோடு இணைந்து கொண்டு சைட்டும் அடிப்பான். திடிரென ஆவேசமாக உடம்பை போட்டு முறித்துக் கொள்வான். அருகிலிருந்து சரியான நேரத்தில் அவனை பிடித்துக் கொள்ளவில்லையெனில் கீழே விழுந்து புரண்டு தன் விரல்களை கடித்துக் கொள்ளவும் செய்திருக்கிறான். கோவில் கும்பாபிசேகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம், தலைவர் ஆடவும் அருகிலிருந்த பூசாரி சூடத்தோடு எலுமிச்சை பழமொன்றையும் வாய்க்குள் திணிக்க சரியாகி இயல்பு நிலையில் நின்று கொண்டிருந்தான். கூட வந்த ஒருத்தனை இவனோடு நிறுத்திவிட்டு, பூசை சாமான்கள் வாங்கிகொண்டு வந்து பார்த்தால் வாயெல்லாம் இரத்தத்தோடு இவன் நிற்க, கூட இருந்தவன் விரல்களை பிடித்துக்கொண்டு நிற்கிறான், இரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டு இருக்கிறது. பாவம் அவனின் இரண்டு விரல்கள். அன்றிலிருந்து யாரும் அவனோடு கோவில் நிகழ்வுகளுக்கு செல்வதில்லை, அவனும் இம்மாதிரியான நிகழ்வுகளில் பங்குபெறாமல் தள்ளியே இருந்தான். பின்பு வேலை நிமித்தமாய் அரபு நாடொன்றிற்கு சென்றுவிட்டான்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆடிமாத அம்மன் பால் குட திருவிழாவொன்றில் நண்பனுக்கு(இது வேறொருவன்) துணையாக என்னையும் கூப்பிட, நானும் அவனோடு இணைந்து கொண்டேன். அவன் தலையிலிருக்கும் பால் குடம் சரிந்து விடாமல் சப்போர்ட் செய்வது தான் என்னோட வேலை. ஊரை சுற்றி வர நான்கிலிருந்து ஐந்து மணிநேரம் ஆகுமென்பதால் ஒவ்வொரு வேண்டுதல் காரருக்கும் ஒரு உதவியாள் இருந்தனர். இரண்டு தெருவை தாண்டி மூன்றாவது தெருவில் அடியெடுத்து வைக்கையில் என் வலது பின்னங்காலில் ஊசி இறங்கிய வலி, அடுத்த கணமே இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. என்னவென்று நிதானித்து பார்த்தால் முறைக்கார பெண்ணொருத்தி சாமியின் அருள் வந்து ஆடிய உற்சாகத்தில் அவளின் முன்னங்காலை கொண்டு என் பின்னங்காலை பதம் பார்த்துவிட்டாள். நண்பனிடம் இன்னொரு உதவியாளை வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற, மறுநாள் தண்ணியெடுக்க வந்தவள் என்னிடம் மன்னிப்பு கேட்க அது ஒரு மாதிரியாக முடிந்தது.



சென்ற வாரத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில், பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது, மெல்ல நானும் கூட்டத்தோடு கூட்டமாய் இணைந்து கொண்டேன். எங்கள் பக்கங்களில் திருவிழா கச்சேரியாக இருந்தாலும் கூட துவக்கத்திற்கு மட்டும் இரண்டொரு சாமி பாடல்களாக இருக்கும், மீதி எப்படியிருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்று நம்புகிறேன். இங்கு அப்படியில்லை நான் கேட்டவரை அனைத்து பாடல்களும் இறைப்பாடல்களே. ஒரு அம்மன் பாடலொன்றை துவங்கியது தான் தாமதம், அதுவரை அமைதியாய் இருந்த கூட்டம் பொங்கியெழுந்து ஆட ஆரம்பித்துவிட்டது. ஆம் அமர்ந்திருந்த கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கினர் சாமியாட ஆரம்பித்துவிட்டனர். இசை வலுக்க வலுக்க, இவர்களின் ஆட்டமும் சூடு பிடிக்க துவங்கி, சுமார் ஏழு நிமிடங்களுக்கும் மேலாக ஆட்டம் நீடித்தது. சின்ன குழந்தையிலிருந்து, இளம்பெண்கள், வயதான குமரிகள் வரைக்கும் எல்லோரும் சாமியாடினார்கள். குறிப்பாக இளம் பெண்ணொருத்தி தன்வயம் மறந்து ஆடிக்கொண்டிருந்தாள், திருமணம் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். நமது பக்த பதர்களும் அவர்களின் ஆட்டங்களை தங்களது மொபைல்களில் பதிவு செய்து தங்களது கடமையை ஆற்றினர். கிராமத்திலாடும் சாமியாடிகள் கொஞ்சம் மூர்க்கத்தனமாக ஆடுகிறார்கள் நகரத்தில் கொஞ்சம் நளினமாக ஆடுகிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம் இங்குமங்கும்.

சின்ன வயதிலிருந்தே, சாமியாடிகள் மீதும் அவர்கள் பேசும் மொழிகள் மீதும் எனக்கு பயம் இருந்ததே தவிர, அவர்களை நம்பியதில்லை. அவர்களின் மீதான பயமும் நான் வளர வளர கரைந்துவிட்டது. அவர்களை நான் பழிக்கவோ, அல்லது அவர்களின் மத ரீதியான நம்பிக்கையை குலைக்கவோ இதை இங்கு நான் பகிரவில்லை. ஏதோ ஒன்றுக்கு எளிதில் வசியப்பட்டுவிடுவதின் விளைவுகள் தான் இம்மாதிரியான சாமியாடிகள் நிலை என்று பலதரப்பட்ட அறிவியல் உண்மைகள் இருக்கிறது, இது ஒரு உளவியல் ரீதியான வியாதியாக இருக்க கூடும் என்று நம்ப படுகிறது. மாவட்ட மன நல திட்டத்தின் மூலம் பயிற்சி அளிப்பதாக செய்தியும் வருகிறது, பயன்படுத்தி பலனடைவது புத்திசாலித்தனம். வடபழனியில் ஆடிய இளம்பெண் ஒரு சாமியாடி என்று தெரிந்தால் திருமணம் செய்துகொள்ள எவரும் ஒரு கணம் யோசிப்பர், பிறகு திருமணம், குழந்தை என்று நீளுகையில் இன்னும் சிக்கலின் தன்மை கூடுமே தவிர குறைய வாய்ப்பிருக்காது. ஆகவே கடவுள், இறைநம்பிக்கை என்று பலதையும் போட்டு குழப்பிக்கொண்டு இராமல் சீக்கிரம் விழித்தெழுவது நலம்.


பட உதவி: இணையம்
      

Post Comment

பிப்ரவரி 06, 2015

கள்ள உறவு...







திரும்பும் திசையெங்கும்
நீர்த் தொட்டி புழுவாய்
நெளிந்து கொண்டிருக்கிறது
மீட்சியற்ற 
உன் நினைவுகள்!

இருள் கவிழ்ந்த மரத்தடியில்
உதடு சுழித்து
நீ உளறிய 
சொற்களனைத்தும்
புழுதிப் படிந்து கிடக்கிறது.

கொதித்துக் கொண்டிருக்கும்
மணல் பெருவெளியில்
நம் 
முயங்கல் தடத்தினை
தேடித்தேடி 
அழித்துக் கொண்டிருக்கிறேன்!

பிணைச்சல் முடிந்து
வீடு திரும்புகையில்
பாம்புத் தீண்டி இறந்த
உன்னின்,  
"கொட்டுச்சத்தம்"
எனக்கும் சேர்த்துதான்
இரைந்து கொண்டிருக்கிறது!
  
நாளை, 
எப்படி இறந்தான் 
உன் அப்பனென்று 
யாராவது கேட்டால், 

என் பிள்ளை 
என்ன, சொல்லி சமாளிப்பானோ?

Post Comment