புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 17, 2015

வன்மத்"தீ"...


பல ஆட்களிடம் வாங்கி நிறைய சேமித்துக் கொண்ட அனுபவங்கள் அதிகமிருப்பதால் பெரும்பாலும் பயணங்களில் பக்கத்து இருக்கை ஆசாமிகளிடம் பேசுவது கிடையாது, மீறி பேசினால் பொதுவான சம்பிரதாய பேச்சுக்களோடு நிறுத்திக் கொள்வேன். சில நேரங்களில் அவர்களை பேசவிட்டு நான் கேட்டுக்கொண்டு வருவதிலொரு  சுகானுபவம் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் தங்களின் வீர தீரங்களையும், ஆதங்கங்களையும் புலம்பித் தள்ளுவர். வெகு சிலரே நடப்பு விசயங்களைப் பேசி பல தகவல்களையும் நினைவுகளையும் விட்டுச் செல்வர். அப்படியொரு பயணச் சிநேகிதர் விலங்குகளைப் பற்றியும், அதன் குரூரங்களைப் பற்றியும் வகுப்பெடுத்ததினால் வந்த விளைவு இந்தப் பதிவு.

வன்மமற்ற உயிரிகளை காண்பது வெகு அரிது, ஏதோ ஒரு வகையில் வன்மத்தின் வெளிப்பாடு நடந்து கொண்டுதானிருக்கிறது. அதுவும் இந்த மனிதப் பாலூட்டிகளிடமிருந்து வெளிப்படும் வன்மம் கடும் மூர்க்கத்தனமாக இருக்கிறது. ஆழ்மனத்தின் அடியில் வன்மத்தை சுமந்து கொண்டு திரிகிறார்களோ? என்ற எண்ணம் அடிக்கடி எழும்பி மறைகிறது. நான் வன்மமில்லாதவன், தூயவன் என்று சொல்பவனை நான் மனிதனாகவே கருதுவதில்லை. ஒட்டு மொத்த வன்மங்களின் தொகுப்பாக மனிதனைத்தான் காண்கிறேன், இதில் நீ, நான் என்ற பாகுபாடு இல்லையென்பது என்னோட அழுத்தமான நம்பிக்கை. 

ஒவ்வொருவரிடமிருந்து வெளிப்படும் வன்மத்தின் அளவு வெவ்வேறானதாக இருக்கிறது என்றும், ஆறறிவை விட ஐந்தறிவு வெளிக்கொணரும் கோபம் தாங்கொணாத் தன்மையுடையது என்று முன்வைக்கும் பொதுக் கருத்தை முற்றிலும் மறுதலிக்கிறேன். வன்மத்தின் கோர முகம் அப்படியே தானிருக்கிறது அதை தூக்கி சுமக்கும் மனிதன் தான் மாறுபடுகிறான். என்னதான் தன்னை அறிவார்ந்தவனாக காட்டிக்கொள்ள முயன்றாலும், ஏதேனும் ஒரு சூழலில் தன்னிலை மறந்து சுயத்தினை வெளிப்படுத்தி விடுவது மனிதனின் பலவீனம். அங்குதான் வன்மம் தலைவிரித்து ஆடத் துவங்குகிறது.    

பெரும்பாலும் ஐந்தறிவு உயிரினங்களின் வாழ்க்கை முறைகளில் திட்டமிடுதலிருக்காது. இரை , இனப்பெருக்கம், ஓய்வு, மீண்டும் இரை இப்படித்தான் அதன் வாழ்க்கை சுழற்சி இருக்கிறதே தவிர அதிலிருந்து மாறுபடுவதில்லை. இந்த சுழற்சிகளில் இன்னொரு உயிரினத்தின் குறுக்கீடு இல்லாதவரை அதனிடமிருந்து வன்மம் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு தான். அப்படி ஏதேனும் இடர்பாடுகள் வருகையில் தான் தனது வன்மத்தை மிக உக்கிரமாக வெளிப்படுத்துகிறது, அதுவும் தற்காப்புக்காக மட்டுமே தான். சில உயிர்கள் தன்னை விட வலு குறைந்த இன்னொரு உயிரினத்தை கர்ண கொடூரமாக கொன்று உணவாக்கி கொள்வது வன்மமில்லை அது இயற்கை நிர்ணயித்த வரையறை. அதுவும் தன் தேவைக்கு மீறி வேட்டையாடுவதுமில்லை. 

நானறிந்தவரை மனிதன் மட்டுமே வன்மத்தை திட்டமிட்டு செய்து முடிக்கிறான் அல்லது செய்ய துடிக்கிறான். இதிலொரு வேடிக்கை என்னவெனில் மனிதன் சக மனிதன் மீதுதான் ஒட்டுமொத்த வன்மங்களையும் இறக்க முயலுகிறான். தன் வழியில் வருபவனை கொன்றுகொண்டே இன்னொருவனின் வழியிலும் இன்னலை ஏற்படுத்துவது தான் ஆறறிவின் அசாத்திய சாதனையாக இருக்கிறது. ஐந்தறிவு சக ஐந்தறிவின் மீது வன்மம் கொண்டு திரிவதில்லை, அவற்றை எப்படியேனும் முடக்க முயலுவதுமில்லை. அதனதன் வழியில் அமைதியாய் பயணித்துக் கொண்டிருக்கிறது, ஆறறிவு என்று பெருமையடித்துக் கொள்ளும் மனிதனின் மன ஓரங்களில் தான் வன்மக்கரை கொஞ்சமேனும் படிந்திருக்கிறது.

தன்னுடைய வலிமைகளை நிலைநிறுத்திக்கொள்ள படு மோசமாக களமிறங்கிவிட்ட மனிதன் அதற்காக எவ்வளவு பெரிய விலையையும் கொடுக்க தயாராகி விட்டான் என்றே உணர்த்துகின்றன பல நிகழ்வுகள். உணர்ச்சியின் மிகுதியினால் செய்துவிட்டேன் என்ற காலம் மறைந்து,  எந்த அவசரமுமின்றி  மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்ததாக செய்தவர்களே ஒப்புக்கொள்வதை காண்கையில், தினசரி கைகுலுக்கும் ஒவ்வொரு மனிதனையும் பார்த்தால் மெல்ல அச்சரேகை உள்ளுக்குள் படரத் துவங்குவதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை. 

வன்மத்"தீ", கொழுந்துவிட்டு எரியத் துவங்குவதற்கு முன் கட்டுக்குள் வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க, ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து அதற்கான சூழலில் வாழப் பழகுவது மட்டுமே அறிவார்ந்தவர்களின் செயல், இல்லையேல் அந்த பெருந்தீ பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 


Post Comment

மார்ச் 15, 2015

இராஜதந்திரம் - வெற்றி முயற்சி







இந்த படத்தின் டீசரிலிருந்து ட்ரைலர் வரைக்கும் ஒரு  மர்மத்தை கடைபிடித்து வந்தார்கள். வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி சற்று மாறுபட்டே இருந்தது இவர்களின் விளம்பர யுக்தி. வெறும் டீசரை வைத்தே இதுதான் கதையென யூகித்துவிடும் இன்றைய சினிமா இரசிகர்களுக்கு சற்று சவாலாகத்தான் இருந்தது இந்த இராஜதந்திரம். ட்ரைலரில் மிரட்டிய பல சினிமாக்கள், திரையில் பப்படமாகிய அனுபவம் நிறைய இருப்பதினால் சற்று மிரட்சியாகத்தான் இருக்கையை ஆக்கிரமித்தேன். 

துவக்க சில காட்சிகளிலேயே படம் திரில்லர் வகையறா என்பதை சொல்லிவிட்டு அடுத்த காட்சி நகர்வுகளுக்கு சென்றது சிறப்பு. நாயகனாக வீரா அவர் நண்பர்களாக வரும் இருவர் கச்சிதமான தேர்வு. குறிப்பாக சிவா வின் தேர்வும் அவரின் வசனங்களும் அட்டகாசம். படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்வதில் இவரின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. அப்புறம் ரெஜினா அறிமுகத்திலையே நெஞ்சை கொள்ளையடித்து விடுகிறார். 

இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் கதை துவங்குகிறது. அதன்பிறகு விறுவிறுவென நகர்த்திச் செல்வதில் தெரிகிறது அறிமுக இயக்குநரான அமித்தின் உழைப்பு. தொய்வில்லாத திரைக்கதை இருந்தாலும் இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்து மீண்டும் வேகமெடுக்கிற உணர்வை தருகிறது. 

சின்ன சின்ன தில்லுமுள்ளு செய்து பிழைப்பை நகர்த்தும் மூன்று நண்பர்கள், இவர்கள் தான் பிரதானமான பாத்திரங்கள். இவர்களை சுற்றி நிகழும் பல கிளைக்கதைகள்.   பத்து லட்சமென நம்பி ஒரு பையை திருடுவதும், ஆடுகளம் நரேனின் சிட்பண்ட் ஏமாற்றம், ரெஜினாவின் தந்தை தற்கொலை, பிறகு நரேனை ஏமாற்றி பணத்தை அபகரித்துக் கொண்ட நகைக்கடை அதிபரிடமே பிளானை சொல்லிவிட்டு நகையை கொள்ளையடிக்கும் தந்திரம் தான் "இராஜ தந்திரம்".

ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. வசனங்களிலிருந்து, காட்சிப்படுத்தும் முறைகளும் புதிதாக இருக்கிறது. போலீஸ் காட்சிகள் தான் சற்று நாடகத்தனமாக இருக்கிறது. மற்றபடி சின்ன சின்ன அசைவுகளில் நிறைய செய்திகளை உணர்த்தி இருக்கிறார்கள்.

ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இல்லாத படமென்றாலும் வரும் சில காட்சிகளிலே மனதை வசீகரித்து விடுகிறார் ரெஜினா. அதுபோல்தான் இளவரசும். இராஜ தந்திரம் "வீரா" என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது அவரின் நடிப்பு. வழக்கமான அடிதடி, குத்து பாடல் இல்லாமல் ரசிக்க கூடிய அளவிற்கு படமெடுத்த இயக்குனருக்கும் அதன் குழுவிற்கும் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். ஒரே ஒரு பாடலை காட்சிப் படுத்திய விதமும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.   

நகைக்கடை அதிபரின் துணிச்சல், சினிமா போலீஸ், வீரா மற்றும் நண்பர்கள் திருந்தி ஜெயிலுக்கு போவது இப்படியான சிலதுகளை தள்ளிவிட்டு பார்த்தால் இந்த இராஜதந்திரம் தரமான சினிமா தான். அறிமுக இயக்குனர் அமித் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் பெரிய வாழ்த்துக்கள்.     
  

Post Comment

மார்ச் 11, 2015

இன்றைய திருமணங்களும் அதன் வடிவங்களும்...


மற்ற நிகழ்வுகளைப் போல திருமணத்தை அவ்வளவு எளிதில் கடந்து வர இயலவில்லை, மனமும் அதற்கு ஒப்பவில்லை. ஏகப்பட்ட சங்கடங்கலிருந்தாலும் திருமணம் என்ற சொல் தரும் அலாதியே தனி தான். பாரம்பரியத்தின் துவக்கப்புள்ளியாக பார்க்கப் பட்டதை, அதன் வடிவத்தை மாற்றி பல்வேறு முகமூடிகளை வலுக்கட்டாயமாக அணிவித்து அழகு பார்த்துக் கொண்டு வரும் பெருமை நம்மவர்களை மட்டுமே சாரும். இந்த "நம்மவர்களில்" நானும் முதல் வரிசையில் வருகிறேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.  

ஒரு திருமணத்தை வைத்து அவர்களின் வழக்கத்திலிருந்து, பழக்கங்கள் வரை விலாவாரியாக சொல்லிவிடலாம், ஆனால் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் திருமணங்களை வைத்து எதையும் சொல்ல முடியாது. பல சுக்கல்களாக உடைந்து/உடைத்துக் கொண்டு வரும் கட்டமைப்புகளில் இதுவும் ஒன்றாக கடந்து விடுவதை தவிற வேறுவழியில்லை. அதுதான் புத்திசாலித்தனம் என்று இன்றைய மொழியில் பதிந்திருக்கிறார்கள். 

மூட நம்பிக்கைகளை களைகிறோம் என்கிற பேர்வழியில் பல கோமாளித்தனங்களை செய்வதற்கு பெயர் தான் பகுத்தறிவா? சென்னையின் மிகப்பெரிய சொகுசு திருமண மண்டபம் என்றழைக்கப்படும் ஒன்றின் அருகில் அமைந்திருக்கிறது எனது அலுவலகம். மாதம் குறைந்தது 20 நிகழ்வுகள் நடைபெறும். திருமண வரவேற்புக்கு வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கும், ஆடம்பர விளம்பரங்களுக்கும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு வெடிக்கும் வண்ண வெடிகளுக்கும் செய்யும் செலவில் ஊர்ப்புறங்களில் நான்கைந்து திருமணங்களை நடத்திவிடலாம். அவரவர் பணம், அவரவர் செலவு செய்கிறார்கள். அளவிற்கதிகமான பணமிருப்பவர்களின் பிரச்சினை என்பதினால் தவிர்த்து விடுகிறேன்.

என்னோட ஆதங்கம் என்னவெனில் இந்த நடுத்தரங்கள் பண்ற சேட்டைகள் தான் தாங்க முடியவில்லை.  நிச்சயம் பண்ணி, தாலி செய்ய சொல்கிறார்களோ இல்லையோ, பிளக்ஸ் பேனருக்கு போட்டோ புடிக்க கிளம்பி விடுகிறார்கள். பத்திரிக்கை வைக்குமுன்னே பகட்டான கேக்கிற்கு ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் ஒரு சடங்காகவே இணைத்துவிட்ட பெருமை இளைய தலைமுறையினரையேச்  சாரும். திருமணங்களின் அதி முக்கியமான செலவுகளில் இந்த வகையறா செலவீனங்களைத் தான் முதல் வரிசையில் எழுதுவார்களோ என்னவோ?

தேவையற்ற சம்பிரதாய சடங்குகளை களைந்தால் கை தட்டி வரவேற்கலாம், அதை விட்டுவிட்டு இன்னொருத்தவனின் சடங்குகளை மாய்ந்து மாய்ந்து உங்கள் இல்லத் திருமண நிகழ்வுகளில் செய்து கொண்டிருப்பதை பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு. மேலும், ஏதும் கேட்க முற்பட்டால், வந்தமா, தொந்திய நிரப்பிட்டு போனமான்னு இருக்கணும் என்கிற தோரணையில் இருக்கிறது அவர்களின் பேச்சுக்கள்.

உங்களது ஒவ்வொரு செய்கைகளையும் பின்வரும் வாரிசுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள், இன்று மாற்றம் என்கிற பெயரில்  நீங்கள் செய்யும் புரட்சியை? அவர்கள் அதை நாளை, சடங்காக கொண்டாடக் கூடிய அபாயம் இருக்கிறது என்பதை புரிந்து செயல்படுங்கள். நம்முடைய பாரம்பரியத்தை அழித்து அதன் தடயங்களை கூட இல்லாமல் செய்யுங்கள், ஆனால் ஒருபோதும் மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டு நம்முடைய தொடர் "சம்பிரதாயங்களை" நிரப்பாதீர்கள்.

      
     

Post Comment

மார்ச் 06, 2015

துணிக்கடை நினைவுகள்


உடைகளின் மீது பெரு விருப்பம் இருந்ததில்லை. துணிக்கடையிலும் அதிக நேரம் செலவழித்ததில்லை. நீ, மொத்தமாய் பத்து நிமிஷம் கடைக்குள் இருந்தாலே அது ஆச்சர்யம் என்று அடிக்கடி நண்பர்கள் சொல்வார்கள். இந்த ஜென் நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், அது என்னோட "வெட்கம்" தான், அட, நீங்க நம்பித்தான் ஆகணும் வேறுவழியில்லை. இப்போ அப்படியில்லை ரொம்ப மாறிட்டேன், இதையும் நீங்க நம்பித்தான் ஆகணும்.

நான் பத்து படித்துக் கொண்டிருக்கையில் உள்ளாடைகள் எடுக்க வேண்டி எங்கள் பகுதியின் பெரியக் கடைக்கு? சென்றிருந்தேன். ஆண்கள் பகுதியில் ஒரு அண்ணன் தான் நிற்பார், சுருட்டை முடி, மாநிறத்தில் இருப்பார். குரல்மட்டும் ஏதோ ஒரு பழைய பாடகரை நினைவுபடுத்தும்.  அவரைப் போன்ற தோற்றமுடைய சினிமா நடிகன் எவருமில்லை இருந்திருந்தால் உங்களுக்கு உ.ம் சொல்லியிருப்பேன்.

ஆடிமாத தள்ளுபடி விலையை சொல்லியபடி ஒவ்வொரு கிராமமாக வலம்வரும் அந்தக் கடையின் விளம்பர ஆட்டோவில் முதன்மை ஆலோசகர் போன்று அமர்ந்து கொண்டு   பிட் நோட்டிஸ்களை விசிறியபடி மைக்கில் கரகரத்துச் செல்வார். வீதியில் ஏதேனும் தாவணியோ, சுடியோ கண்ணில் பட்டுவிட்டால் நான்கைந்து நோட்டிஸ்கள் கூடுதலாக விழும்.

திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு துணியெடுக்க வந்து தடுமாறும் பலருக்கு இவர்தான் ஆபத்பாந்தவன். எல்லோருக்கும் முகம் சுளிக்காமல் பதில் சொல்வார். பெண்களென்றால் கூடுதல் நளினமிருக்கும் இவரது பேச்சில். விற்காத ரொம்ப காலத்திய சேலைகளையும், சுடிகளையும், அப்போதைய வெற்றிப் படத்தின் பெயரை சொல்லி அந்த நடிகை, ஒரு காட்சியில் இந்த மாதிரி புடவையை கட்டியிருந்தார் என்று கதையளக்க வந்த சனங்களும் உண்மையென நம்பி, இரண்டுக்கு மூன்றாய் வாங்கிப் போவதினால் முதலாளியிடம் தனி செல்வாக்கு. ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுவதைக் கண்டு முதலாளியே சற்று மிரளுவார்.

நான் கடைக்கு சென்றிருந்த நேரம் அந்த அண்ணனை காணோம், அவருக்கு பதிலாக ஒரு தாவணி நின்றுகொண்டிருந்தது. என்ன வேணுமென்று அந்த தாவணி கேட்க, @#$#@! அண்ணன் இல்லையா என்று கேட்டுக்கொண்டே திரும்புகையில் தான் கவனித்தேன், நம்மாளு மும்முரமாய் ஜாக்கெட் பிட்டொன்றை நறுக்கி கொண்டிருந்தார்.

அவர் இப்போதைக்கு வர மாட்டார் என புன்முறுவலோடு சொல்லிவிட்டு, உங்களுக்கு என்ன வேணும் னு சொல்லுங்க நான் எடுத்து காட்டுறேன் என்று சொல்ல, தயங்கி தயங்கி நிற்கும் என் முகக் குறிப்பறிந்து அதுவாகவே, கேட்க, நான் தலையை ஆட்ட,  எடுத்துப் போட்டதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். அன்றைக்கு அர்த்தம் விளங்காத அந்த தாவணியின் சிரிப்புக்கு அடுத்த மூன்று வருடத்தில் அர்த்தம் விளங்கிற்று,

இன்றைய இளசுகள், 'காண்டத்தையே' ஜாலியாக வாங்கிச் செல்வதை பார்த்தால் அன்றைக்கு வெறும் உள்ளாடைக்கு நான் பண்ணிய கோமாளித்தனத்தை என்ன வகையில் சேர்ப்பது என தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்!

ஊர்ப்பகுதியில் பத்துக்கு பத்து அளவிலான கடைகளையே கண்டு வந்தவனுக்கு, சரவணா போன்ற பெரு வணிக கடைகளை கண்டதும் ஏற்பட்ட பிரமிப்பை எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை வந்திருந்த புதிதில் ஏதும் வாங்கவில்லை என்றாலும் கூட வெறுமனே சென்று  சரவணா மற்றும் அதை சுற்றியிருக்கும் சில கடைகளுக்குள் புகுந்து நோட்டமிடுவதை வழக்கமாய் வைத்திருந்தேன். அதன் பிரமிப்பை இப்போதைய மால்கள் உடைத்துக் கொண்டுவருகிறது. மாலின் பிரமிப்பை உடைக்க என்ன வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சொல்ல மறந்துட்டேன், சென்ற வாரம் ஊருக்கு சென்றிருக்கையில் தான் கவனித்தேன், அந்த ஜவுளிக் கடைக்கு பக்கத்திலேயே டைலர் கடை வைத்திருக்கிறார்  அந்த அண்ணன். கடையின் பிரமாண்ட போர்டில் பாவாடை தாவணியில் புற முதுகை காட்டியபடி ஸ்ரீதிவ்யா சிரித்துக் கொண்டிருக்க, லேடிஸ் ஸ்பெசல் என்று அடைப்புக்குறியில் எழுதியிருந்தது.    

Post Comment