உள்ளூர ஒரு கலக்கத்துடன் தான் முதன் முதலாக சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னை சேர்ந்து பல இன்னல்களுக்குப் பின்பு ஒருவழியாய் சீராக பயணிக்க துவங்குகையில் இணையப் பரிச்சயம் கிட்டியது. 2010ல் இணையப் பக்கத்தை துவங்கினாலும் இரண்டு மூன்று வருடங்கள் கவிதை என்கிற பெயரில் மொக்கைப் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் தான் முதல் வலைப்பதிவர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு தான் நண்பர்களின் வட்டம் கொஞ்சம் விரிவடைந்து அவர்களின் எழுத்தை தீவிரமாக பின்தொடர்ந்து எனது தவறுகளை களைய முற்பட்டேன். அதன்பிறகு கவிதை எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டு கதைகளின் பக்கமும் கட்டுரைகளின் பக்கமும் கவனத்தை திருப்ப முயன்றேன்.
2014 இறுதியில் தான் 'இண்ட முள்ளு'க்கான துவக்கப் புள்ளியை விதைத்து அதற்கான வேலைகளில் இறங்கினாலும் உள்ளூர எழும்பிய தயக்கத்தினால், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு எனது வழக்கமான வேலைகளில் கவனத்தைச் செலுத்தினேன். எனது மாமா கருணாகரசு, கோவை ஆவி, சீனு, தம்பி வெற்றிவேல் போன்றோர் புத்தக வேலை என்ன ஆச்சி, எந்த நிலைமையில் இருக்கிறது என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்க, அவர்களிடம் தயங்கி தயங்கி புத்தகம் வெளியிடுமளவிற்கு எனது எழுத்து முதிர்ச்சி அடையவில்லை என்று நினைக்கிறேன், இன்னும் சில வருடங்கள் போகட்டும் என்று கூறினேன். 'உனது எண்ணம் தவறானது, நன்றாகத்தான் எழுதி இருக்கிறாய், தொடர்ந்து எழுதி புத்தகத்தை முடி' என்று ஊக்கப் படுத்தியமையால் மீண்டும் புத்தகப் பணியை உயிர்ப்பித்தேன்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக இக்கதைகளை எழுதினேன், குறிப்பாக இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் எனது மண்ணில் நிகழ்ந்த நிகழ்வுகளே! அந்த நிகழ்வுகளையும், அதன் சார் மாந்தர்களையும் காயப் படுத்தாமல், நிகழ்வுகளை திரித்துக் கூறாமலும் கதையாக்க பெரும் சிரமமாக இருந்தது. இப்போது புத்தகமாக அதை வாசிக்கையில் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.
தமிழ் இலக்கிய உலகுக்கு நானொரு திசை மாறிய பறவை. 2010 முன்புவரை எனக்கும் தமிழ் எழுத்துலகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இலக்கிய ஆளுமைகள் என்று நம்பப் படும் எவர் பெயரையும் அறிந்தது கூட கிடையாது. எங்கோ வெல்டிங் பட்டறையில் இரும்புகளோடு இரும்பாக கிடக்க வேண்டியவன் பாதை விலகி இப்படியொரு நிலையில் இருக்கிறேன். காலம்தான் எத்தனை வித்தியாசமானது.
எனது முயற்சிக்கு பக்கபலமாக இருந்து ஆதரவுக் கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளங்களை அன்போடு நினைவு கூர்ந்து எனது ஒருவருட கனவும் கடின உழைப்பும், 'இண்ட முள்ளு' எனும் கதை தொகுதியை வாங்கி வாசித்துவிட்டு அதன் நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
பேரன்புடன்
அரசன்
புத்தக தொடர்புக்கு : 9943437899
for online: Click here
Tweet |
5 கருத்துரைகள்..:
வாழ்த்துகள் அண்ணா...
இண்டமுள்ளு வெறும் தொடக்கம் மட்டும் தான், இண்டமுள்ளுவைத் தொடர்ந்து நிறைய நம் மண் சார்ந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன் அண்ணா... இலக்கியப் பணியில் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு நம் மண்ணின் பெருமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது விருப்பம்...
வாழ்த்துகள் அரசன்.
தங்களது முதல் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மென்மேலும் சாதிப்பீர்கள் என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது.
வாழ்த்துக்கள் அரசன்...
கவிதை என்பது எழுத்தார்வத்தின் தொடக்கம். பதின்ம வயதில் அனைவரிடமும் ஒருகவிதை உணர்வு எட்டிப் பார்க்கும். பெரும்பாலும் காதலோடு தொடர்புடையதான அந்த உணர்வை அந்த வயதோடு மறந்து போன இளைஞர்கள் ஏராளம். ஆனால் அதை மறக்காமல் அதன் அடுத்த கட்டமாக சமுதாயத்தின்பால் அந்த உணர்வை திருப்புபவன் நல்ல எழுத்தாளனாக பரிமளிக்கிறான். மிக சிலருக்கே அது வாய்க்கிறது.தக்க முறையில் தன்னை மெருகேற்றிக் கொள்பவன் வெற்றி பெறுகிறான். அந்த வெற்றியை நீயும் உன் எழுத்தாற்றலால் எட்டி இருக்கிறாய். மனமார்ந்த வாழ்த்துகள் அரசன்.நிச்சயம் இண்டமுள்ளை படித்து என் கருத்தை பதிவு செய்வேன்.
கருத்துரையிடுக