புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 09, 2016

ஐந்து நூலும் - மனம் நிறைந்த தருணங்களும்.



நிகழ்வு நடந்த மறுநாளே எழுதியிருக்க வேண்டும் அடுத்த நாளே எனது கிராமத்திற்கு சென்று விட்டதினால் உடனடியாக எழுத முடியவில்லை. மனதிற்கு நெருக்கமான நிகழ்வினைப் பற்றி உடனடியாக எழுத முயடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. ஆகுதி பதிப்பகம் மற்றும் நண்பன் கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் முயற்சியால் சாத்தியாமானது இந்த நிகழ்வு. நான்கு கதைத் தொகுதிகள், ஒரு கவிதை நூல் ஆக ஐந்து நூல்களுக்கான அறிமுக நிகழ்வு, அதுவும் ஐந்து நூல்களைப் பற்றி பேசப் போகும் அனைவரும் பெண்கள் என்பதினால் கூடுதல் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. 

வழமையான இலக்கிய நிகழ்வுகள் போலில்லாமல் இது தனித்துவமாக இருந்தது. இதுமாதிரியான நிகழ்வில் முதல் முறையாக கலந்து கொள்கிறேன் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி என்றால் பேசவிருக்கும் ஐந்து நூல்களில் எனது கதை தொகுப்பான "இண்ட  முள்ளு" வும் இருக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி. 



தொடக்கத்தில் சிறு வட்டம் போன்று அமர்ந்திருந்த நண்பர்கள் நேரம் செல்ல சற்று பெரிதாகி பெரிதாகி கடைசியில் கிட்டத்தட்ட ஐம்பது நண்பர்கள் கொண்ட வளையமாக மாறியிருந்தது. நட்பின் அடர்த்தியை அங்கே காண முடிந்தது. நண்பன் அகரமுதல்வன் நிகழ்வினை தொடங்கி வைக்க, முதல் புத்தகமாக தோழி நந்தினி வெள்ளைச்சாமி, பொன் முத்துவின் "நினைவுக்கு வரும் சாவுகள்"குறித்து திறம்பட பேசினார். பொன் முத்து நிகழ்வுக்கு வராத குறையை நந்தினியின் பேச்சு போக்கியது.






அடுத்ததாக கார்த்திக் புகழேந்தியின் "ஆரஞ்சு முட்டாய்" நூலைப் பற்றி தோழி பா. விஜயலட்சுமி பேசினார். இவரின் குரல் வளத்திற்காகவே பேசவிட்டு கேட்கலாம். கம்பீரமான குரல். 

அடுத்தப்  புத்தகமாக எனது நூலான இண்ட முள்ளு குறித்து தோழி மனுஷி பாரதி பேசினார். நேர்த்தியான பேச்சு. கதைகளை பற்றிய அவரின் மதிப்பீடு அவ்வளவு உண்மையாக இருந்தது. அவரின் வாசிப்பு திறன் பற்றியும், நினைவு கூறும் தன்மை பற்றியும் கண்டு வியந்து போனேன். நன்றி தோழி.

அடுத்து நண்பன் மாதவன் நூலான "சிமோனிலா கிரஸ்த்ரா" பற்றி தோழி சுபா அவர்களின் உரை மிகக்  குறுகியதாக இருந்தது, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். பேசியவரைக்கும் நறுக்கு தெறித்த பேச்சு தான். மாதவனும் குறைவாகவே பேசினார், நிறைய எதிர்பார்த்திருந்தேன். அடுத்த அவருடனான சந்திப்பில் அந்தக் குறையினை போக்கி கொள்ளவேண்டும்.   

முடிவாக ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" குறித்து தோழி விஜிலா அவர்கள் பேசினார். அவரின் பேச்சினை முழுமையாக கேட்க முடியவில்லை, அந்த நேரத்தில் வந்த அவசிய வேலைகளினால் அது தடைப்பட்டு போனது. குறைந்த நேரமே கேட்க முடிந்தது. கூடுதலாக  மாதவன் புத்தகம் பற்றியும் பேசினார் என்று பின்னர் அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி.




இவ்வளவு சிறப்பாக நடந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவெனில், குறிப்புகளில்லை, முன் திட்டங்கள் ஏதுமில்லை. இவ்வளவு நேரத்தில் தான் பேசவேண்டும் என்ற அவசரமில்லை, போலி புகழ்ச்சிகள் இல்லை, பேசியவர்கள் அனைவரும் நிறுத்தி நிதானமாக தனது கருத்தினை மிகவும் வெளிப்படையாக முன் வைத்தார்கள். இதுமாதிரியான மனம் திறந்த மணற்வெளிக்கூட்டங்களை அவ்வப்போது வைத்து உரையாடலாம், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

நிகழ்வுக்கு வந்திருந்த தோழமைகள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் வணக்கங்களும். எனது அழைப்பை ஏற்று குடும்பமாக வந்திருந்த கார்த்திக் சரவணன் அவர்களுக்கும், ஊருக்கு செல்ல வேண்டிய பயணத்தை நட்புக்காக தள்ளிவைத்து விட்ட வந்த நண்பன் கோவை ஆவி அவர்களுக்கும், அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்களுக்கும், எங்களது வாத்தியார் பால கணேஷ் அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.

எனக்கே எனக்கேயான நிகழ்வு போன்று நிகழ்த்தி காட்டிய நண்பன் கார்த்திக் புகழேந்திக்கும், ஆகுதி பதிப்பகம் அகர முதல்வனுக்கும் என்றைக்குமான அன்புகள் நிறைந்திருக்கும். இந்த நிகழ்வினை காலத்துக்கும் மறக்க முடியாது அப்படியான அன்பு நிறைந்த அடர்த்தியான நிகழ்வு மற்றொன்று வீட்டம்மாவுடன் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. இண்ட முள்ளுக்கென தனி விழா வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை போக்கிய தினம் அன்று. ஓடோடி கருப்பட்டி தேநீர் வழங்கிய தோழர் கவி மணிக்கும், படமெடுத்த தோழர் கிரிதரனுக்கும் சிறப்பு நன்றிகள். இப்படியான ஊக்கங்கள் இருந்தால் இன்னும் இன்னும் முயன்று பார்க்கலாம். 
     

Post Comment

6 கருத்துரைகள்..:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்களும் உடனிருந்ததுபோல உணர்ந்தோம்.

Kasthuri Rengan சொன்னது…

அருமையான நிகழ்வு ...
பகிர்ந்தமைக்கு நன்றி

r.v.saravanan சொன்னது…

இனிமையான நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அரசன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான நிகழ்வு. பாராட்டுகள் அரசன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையானதொரு நிகழ்வு...
வாழ்த்துகள் அரசன்.
அடுத்த புத்தகம் வெளிவரட்டும்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மகிழ்ச்சி வாழ்த்துகள் இலக்கிய வரிசையில் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துகள்.