கடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர்
மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில்
நூலகம் மற்றும் கணினி அறை திறப்பு விழாவில் நானும் ஒரு விருந்தினனாய் கலந்து
கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அரியலூர் மாவட்டத்திற்கே இந்த முயற்சினை முன்னுதாரணமாக
கூறலாம். படிப்பிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று
பெயரெடுத்த எங்களது மண்ணினை மாற்ற முனைந்திருக்கும் இளையோருக்கு அன்பு கலந்த நன்றியும்,
பாராட்டுக்களும்.
முதல் விதையாக தங்களது சொந்தக்கிராமமான செட்டித்திருக்கோணம் அரசுப் பள்ளியை தேர்வு செய்து இணைய வசதியோடு கூடிய கணினி அறையும், சிறிய நூலகம் ஒன்றையும் அமைத்து தந்திருக்கிறார்கள். வெளிநாடு வாழ் நண்பர்களின் பொருளாதார பங்களிப்போடு, உள்ளூரில் இருக்கும் சில நண்பர்களின் உழைப்பில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். யாருக்கோ?, யாரோ செய்யும் உதவி என்பது போல், இன்றைய தலைமுறையினர் சிலர் அலட்சியப்படுத்தி கடந்தாலும், அவர்களும் உணர்ந்து வருங்கலாத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
சமூக மாற்றம் வேண்டுமெனில் அது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்பதை மிகச் சரியாக உணர்ந்து, அந்த இடத்தில் விதையினை பதியமிட்டிருக்கிரார்கள், அதற்கான பலனை கண் கூடாக காணலாம் என்று சர்வ நிச்சயமாக நம்புகிறேன். தங்களது கிராமத்திற்கு என கூகுள் செயலி, இணையப் பக்கம் என்று எந்தவொரு பிரதிபலனும் பாராமல் பலரின் உழைப்பின் வாயிலாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம் விரைவில் அரியலூரின் மற்ற கிராமங்களுக்கும் பரவும் என்றே நம்புகிறேன்.
இத்தோடு நின்றுவிடாமல் தங்களது அடுத்தக் கட்ட முயற்சியினை அவர்கள் விவரிக்கையில், அவர்களின் தோள் சுமையை நாமும் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கிளம்பியிருக்கிறது. ஆக்கப் பூர்வமற்ற வெட்டிப் பேச்சுகளோடு, எதிர்கால சந்ததிகளின் மீது பெரிய அக்கறை இல்லாமல், வெறுமனே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் எங்களது சுண்ணாம்பு கிராமங்களின் முகம் மாற தொடங்கியிருக்கிறது என்பதே சற்று நம்பிக்கையை தந்திருக்கிறது.
எவன் எவனோ, எங்கிருந்தெல்லாமோ வந்து, என் பாட்டனையும், அப்பனையும் ஆசை வார்த்தைக்காட்டி எங்களது வாழ்வாதரமான விவசாயப்பூமியை குறைந்த விலைக்கு வாங்கி, மண்ணுக்கடியில் இருக்கும் கனிம வளத்தை சுரண்டி... சுரண்டி... இன்றளவும் தின்று கொழுத்துக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எங்களிடம் போதிய படிப்பறிவும், தெளிவான அரசியல் பார்வையும் இல்லாமல் போனது தான். இன்றளவும் தனியார் ஆலைகள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்க ஆளில்லாமல், துணிவில்லாமல், அவர்கள் இடும் ஏவலுக்கு காத்து நிற்கும் கூலிகளாகவே இருக்கின்றோம். வளரும் தலைமுறைகளுக்கு, விழிப்புணர்வு தந்து, வாசிப்பை நோக்கி ஈர்க்க முன்னெடுப்புகள் செய்யாமல் வெறும் விளம்பரப் பிரியர்களாகவே இருக்கின்றனர் எங்களது மாவட்டத்தின் பேரமைப்பு நண்பர்கள்.
ஒரு சமூகம் மேம்பட்ட சமூகமாக இருக்கவேண்டுமெனில், பள்ளிக் கல்வியோடு சேர்ந்த பொது வாசிப்பும் அவசியம் தேவை. அதற்கான முன்னுதாரணமாக செட்டிதிருக்கோணம் நண்பர்களின் முயற்சினை பார்க்கிறேன், பெரிதும் பாராட்டுகிறேன்.
உங்களது ஒவ்வொரு செயலையும் நுணுக்கமான திட்டமிடுதலோடு செய்யுங்கள் நண்பர்களே, நானும் சில பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், சில நெருடல்களும், உரசல்களும் இருக்கத்தான் செய்யும், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கடந்து வெளிவாருங்கள் உங்களை ஊரே கொண்டாடும்...
பேரன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு.
Tweet |
3 கருத்துரைகள்..:
நல்லதொரு சிறந்த முயற்சி...
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
Vazhthukal...
அரசன்! வெகு சிறப்பான செயல்! உங்கள் ஊர் இளைஞர் மற்றும் அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
கருத்துரையிடுக