புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 31, 2015

சொதப்பல் "இசை" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.
இசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு,

உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக்கு முன்னரே ஒரு பாடலை வெள்ளோட்டமாக விட்டு சற்று எதிர்பார்ப்பை கூட்டினிர்கள். சும்மா சொல்லக் கூடாது தல, உங்களுக்கே உரிய இரசனையில் கிளுகிளுப்பாய் இருந்தது. முதல்நாளே படம் பார்க்கும் வழக்கமில்லாதவன் நான், ரொம்ப நாள் கழித்து உங்களின் படம் வருவதாலும், புதிய பரிமாணமாக நீங்களே இசையமைத்திருப்பதாலும், நேற்றைய இரவுக்காட்சிக்கு சென்றிருந்தேன். அரங்கமும் நிரம்பியிருந்தது. உங்களின் படத்திற்கு பெண்கள் நிறைய பேர் வந்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது. சரி விசயத்துக்கு வருகிறேன்.

பலரும் உங்களின் படத்தை அருமையான திரில்லர், ஆகா ஓகோவென்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எனக்கென்னமோ படம் சுத்தமாக பிடிக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலே வரும் பாடலில் தெருவோர சிறார்களை உங்களின் இசைக்கூடத்திற்கு அழைத்து சென்று ட்ரம்ஸ் வாசிக்க வைத்த போதே மண்டைக்குள் மர்ம ஒலி ஒலித்ததை சாதரணமாக எடுத்துக்கொண்டதின் விளைவாக, என்னுடைய உறக்கம் போனதில்லாமல், தீவிர மன உளைச்சலுக்கும் ஆளேனேன் என்று சொன்னால் மிகையாகாது. வழமையாய் உங்களின் படங்களில் இளசுகளை கவர்கிற மாதிரி சில அம்சங்கள் அழகாய் இருக்கும் தல, அது இந்த படத்திலும் இருக்கிறது. என்ன உங்களின் முந்தைய படங்களில் இதே இரக காட்சிகளை அதிகம் பார்த்தமையால் இது என்னோட பொறுமையை ரொம்ப சோதித்து விட்டது. 

இயற்கையின் இசையை சேகரிக்க காட்டிற்கு சென்ற தாங்கள் மனைவியை சேகரித்து வரும் காதல் காட்சிகள் அப்பட்டமாய் தனியாய் தொங்கி நிற்கிறது. சின்ன கிச்சு கிச்சுக்கூட மூட்டவில்லை என்பது தான் பரிதாபம். எதிர்பார்ப்பை கூட்டிய சத்யராஜ், அதன்பிறகு வெறும் புகையை மட்டுமே ஊதி எரிச்சலை கொட்டிக் கொண்டிருந்தார் என்பது தான் உண்மை. இறங்கி அடித்து ஆடவேண்டிய பந்துகளை எல்லாம் வீணடித்துவிட்டு கடைசி ஓவர்களில் சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தது மாதிரி இருந்தது அவரின் பாத்திர படைப்பு. உங்களை பழிவாங்கவும், தவறவிட்ட இசை நாற்காலியை மீண்டும் பிடிக்க போராடும் போராட்டத்தில் பாதியை அவரின் இசையின் மீது செலுத்தியிருந்தாலே, அஞ்சாறு அவார்ட் வாங்குமளவிற்கு சாதித்திருப்பாரே என்று இரு நண்பர்கள் படம் முடிந்து செல்கையில் நொந்தபடி பேசிக்கொண்டு  போனதை கேட்கமுடிந்தது தல.

நீங்கள் எழுதிய வசனங்களை எனக்கு பின்னால் அமர்ந்திருந்த தோழர் அநாயசமாய் சொல்லிக்கொண்டிருந்தார் நீங்கள் சொல்லும் முன், அந்தளவிற்கு வசனத்தில் புதுமையை புகுத்தியிருந்தது புதுசாக இருந்தது. அது ஏனென்றே தெரியவில்லை தல, தொடர் நாடகங்கள் மாதிரியே நகர்ந்தது ஒவ்வொரு காட்சிகளும். நீங்கள் என்ன நினைத்து எடுத்தீர்கள் என்று உங்களுக்கே வெளிச்சம். நீங்கள் நாயகிக்கு பாவமன்னிப்பு கொடுக்கும் காட்சிகளில் மற்றும் இன்னபிற சில காட்சிகளில் எல்லாம் காண்கையில், தியேட்டர் என்றும் கூட பாராமல் எங்களுக்கும் பாவமன்னிப்பு கொடுங்கள் என்று மண்டியிட்டு கதறவேண்டும் போலிருந்தது.    


எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது ஜெனி என்று நீங்கள் கண்ணீர் விடுகையில், எங்களுக்கும் தான் என முன்வரிசையில் ஒரு தோழர் கதறியது சிரிப்பலையை கொடுத்தது. அப்புறம், அரசி போடும் முன் ஓடும் வெற்றுக் கிரைண்டர் போல பின்னணி இசை மண்டையில் மாவாட்டியது அருமை தல. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் மாவரைத்தது பிரமாதம் தல. எதையும் விட்டு வைக்காமல் எல்லா இடத்திலும் மிகச்சரியாக கோட்டை விட்டு படமெடுத்தது சிறப்பு தல. லாஜிக் என்றால் என்ன கேட்குமளவிற்கு படமெடுத்துவிட்டு, கடைசியாக அதையும் ஒப்புக்கொண்டு நீங்கள் ஒரு ஜகஜால கில்லாடி என்று நிரூபித்து இருக்கிறீர்கள் பாஸ்.

படம் ஒருமாதிரி சென்று கொண்டிருக்கையில், திடிரென ஒரு திருப்பத்தை நிமிர வைத்த தாங்கள், மீண்டும் ட்விஸ்ட்டுக்குள் ட்விஸ்ட் கொடுத்து படம் பார்க்க வந்த எங்களை பொடனியில் ஒரே சாத்து சாத்தியது தான் வேதனையிலும் வேதனை. 

கஞ்சா கருப்பின் சில காட்சி காமெடி, உங்களின் குழந்தை ஏக்கம் அதன் வளர்ப்பு பற்றி நீங்கள் சொல்லும் வசனமும் அதன் தாக்கத்தால் வரும் காதலும், சில சில கேமரா கோணங்கள் மட்டுமே படத்தில் சொல்லும்படி இருக்கிறது.

  
தல போதும் தல எனக்கே போரடிக்கிறது, புதுசா யோசித்து படமெடுத்தால் மட்டுமே பீல்டில் நிலைத்து நிற்க முடியும் என்பதை மனதில் வைத்து படமெடுங்கள் என்பதுதான் என்னோட  தாழ்மையான வேண்டுகோள்.

Written, Screenplay, Composed & performed என்று போட்டுக்கொண்டு, பாடியதை மட்டும் போட மறந்ததை நினைவு படுத்த விரும்புகிறேன் தல. 

இப்படிக்கு 

உங்கள் முன்னாள் இரசிகன்.  

       
                

Post Comment

ஜனவரி 23, 2015

கெடா வெட்டி ஊர் பேச்சு #20


மூங்கில் படப்புக்கு ஊணி, மரமாகிவிட்ட ரெண்டு பூவரச மரத்துக்கிடையில் மூங்கிலொன்றை கட்டி அதில் மாட்டியிருந்த இரும்பு கொக்கியில், தலைகீழா தரையை பார்த்துக் கொண்டிருந்தது தலையில்லா வெள்ளாட்டுக் கெடா.

நடுவயிறை தாண்டி, முன்னங்காலை நோக்கி தோலை, பெரு வெற ரெண்டாலும் மழிச்சி மழிச்சி உரிச்சிக் கொண்டிருந்தார் குருசாமி. அஞ்சாறு மொற போட்டு துப்பிய வெத்தல எச்சி மண்ணோடு மண்ணா செவந்து கெடந்தது.

"கழுத்து ரத்தம் கசிஞ்சி கசிஞ்சி தண்ணி செவந்து போச்சி, வந்து தண்ணிய மாத்திபுட்டு அப்புறம் போயி ஒன்னுத ஒராயி ன்னு" சின்னமுத்துவ கூப்புட்டார் குருசாமி.

வெட்டுண்ட கழுத்துக்கு கீழ இரத்தமா செவந்திருந்த அன்னக்கூட தண்ணிய ஊத்திட்டு, வேறொரு கொடத்து தண்ணிய ஊத்திட்டு போனான் சின்னமுத்து.

கவை போலிருக்கும் பூவரச கெளை சந்துல வைச்ச கெடா தலையை கண் சிமிட்டாமல் பாத்து எச்சி ஒழுகிக் கொண்டிருந்தது வாலறுந்த நாய்க்கு, மனுசனுக்கு மீசையும், நாய்க்கு வாலுமில்லைன்னா பாக்க சகிக்காது என்னவோ நெசம்தான் போல.

சாஞ்சாப்புல இருக்கும் லைட்டுக் கம்பத்துல ஒராஞ்சி சூறிய பதம் தீட்டிக் கொண்டிருந்தான் சின்ன முத்து, எடது காதுல பீடியொன்னு இருந்தது.

சுத்துப்பட்டு ரெண்டு மூணு ஊருக்கு சின்னமுத்தும், குருசாமியும் தான் கெடா வெட்டிகள். குறைஞ்சது மாசத்துக்கு பத்து அறுப்பிருக்கும்.
தேவையான அளவுக்கு கறி, நெஞ்சு முட்ட சாராயம் இருந்தா போதும், கூலின்னு தனியா கேட்டதுமில்லை, யாரும் கொடுத்ததுமில்லை இவர்களுக்கு.

குலசாமி கோவிலுக்கு கெடா வெட்ட வந்திருந்த "பஞ்சன்" தண்ணிய போட்டு மல்லாந்துவிட, எளம்போதையில இருந்த குருசாமி வீசுன ஒரே வீச்சுல தல துண்டா விழுந்தது. அன்னைக்கு தொட்ட அருவா, ஆச்சு வருசம் முப்பது, இன்னும் நிறுத்துன பாடில்லை.

நீயெல்லாம் நல்ல மனுசந்தானா, இருக்குற கொஞ்ச நஞ்ச காணியையும் நத்தக்குழியான் கிட்ட குத்தவைக்கு கொடுத்துட்டு, ஆடறுப்பு, ஆடறுப்பு ன்னு அலையுறியே நீயெல்லாம் என்ன சென்மமோ? ன்னு கெழவி கத்துவதும், நம்மாளு விடிஞ்சதும் சூறிய இடுப்புல சொருவிகிட்டு கெளம்புவதும் முப்பது வருசமா மாறாத ஒன்னு.

சம்பந்தம் பண்ணி பேர புள்ள பார்த்தாச்சி, இனியா மாற போறாரு.

தலைக்கேறிய போதையில பேரங்கிட்ட வந்து செவரொட்டி தின்னுடா, அப்பத்தான் உடம்பு கல்லு மாதிரி இருக்கும். ஆம்பள புள்ளை மாதிரியா இருக்கே, அடியே என்துரைக்கு ஈரலை அள்ளி வைடி ன்னு கெழவிகிட்ட சலம்புவதை பார்த்தா எப்பேர்பட்ட கோவக்காரனும் சிரிச்சிட்டு தான் போவான்.

நாய்க்கு எட்டாம, அந்த கெளையில சுருட்டி வை ன்னு சின்னமுத்துகிட்ட தோலை கொடுத்துட்டு,

கல்லு உப்பு எத்தனை கிலோ வாங்கிருக்க மாமா ன்னு கொழுப்பை அறிஞ்சிட்டுருக்கும் வடிவேலிடம் கேட்டார்.

ரெண்டு மாகாணி உப்பு இருக்கும்னு நெனைக்கிறேன்யா னார் வடிவேலு.

உப்புக்காரன் வர நேரந்தான், மேலும் ரெண்டு மாகாணி வாங்கி வை மாமா, இல்லன்னா தோலு பத்து ரூவாய்க்கு கூட போவாது.

உரிச்ச தோலுக்குள்ள, உப்பை சதும்பர தடவி வைச்சா ரெண்டு மூணு மாசத்துக்கு தாங்கும், இல்லைன்னா தோலு நஞ்சி, வீணா போயிரும்.

"போன வாரம் செந்துறை சாய்ப்பு கிட்ட கறி வாங்கியாந்து வீட்டுல தொறந்து பார்த்தா, ஒரே மசுரா இருக்கு, அதை அலசி கொழம்பு வதக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி" ன்னு சொல்லிகிட்டே கொண்டு வந்த தூக்கு சட்டியை ஓரமா வைச்சிட்டு குத்துக்காலிட்டு உக்காந்தார் பரமசிவம்.

கறியிலையும் ஒத்த மசுரு இல்லாம, தோலும் கிழிபடாம எடுக்க நம்ம மாப்ள மாதிரி வேற எவன் இருக்கான் இந்த சுத்து பட்டுல ன்னு சொல்லிக்கொண்டே,

டேய் சின்னமுத்து, வீட்டுல போயி எட கல்லு வாங்கியாடா ன்னார் வடிவேலு.

 உரிக்கிரதுக்குன்னு நேக்கு இருக்கு மாமா, எல்லாராலையும் உரிச்சிட முடியுமா ?ன்னார் கொஞ்சம் ஒசந்த கொரலில் குருசாமி. கர்வம் முகத்தில் தெரிந்தது.

"எல்லா பங்குளையும் கொழுப்பை வைச்சிட்டேன், நெஞ்சாங்குத்து எலும்பை மட்டும் நீயே வைச்சிடு மாப்ள "நீ தான் வாட்டமா வைப்பன்னார் வடிவேலு.

கறில்லாம் முடிஞ்சி, தலைய சுட்டு வடிவேலிடம் கொடுத்துட்டு, வடக்க ஏரில குளிச்சிட்டு வரும்போதே,கருவையில வித்த மருதூர் தண்ணிய ரெண்டு கிளாஸ் போட்டுட்டு தான் வந்தார் குருசாமி.

சின்னமுத்து குடிச்சிட்டு அப்படியே மவ வூட்டுக்கு போறேன்னுட்டு போய்ட்டான் பெண்ணாடத்துக்கு.

என்னய்யா, "என்னைக்கும் இல்லாத அளவுக்கு கறிய வேணும் வேணும்னு கேட்டு வாங்கி திங்கிற" ன்னு கெழவி கேட்டதுக்கு, ஒண்ணும் பேசாம சிரிச்சிகிட்டே போய் படுத்தவர் தான் எழுந்திரிக்கவே இல்ல. தூக்கத்துலயே உசுரு போயிருச்சி.

சித்துடையார் டமாரம் அடிபொளக்க, திட்டக்குடி வானத்தோட அய்யாவை அடக்கம் பண்ணிட்டு வந்து மாசம் ஒண்ணாச்சி.

கெழவி தான் பாவம், ராவாச்சின்னா சூரிய பாத்து அழுதுட்டுருக்கு......  
 Post Comment