புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 10, 2017

அரியலூரில் விதைத் திருவிழா ....உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்படும் சிறு (கூடை) புட்டி. குமரிகளை சிங்காரிப்பது போன்று சாணம் போட்டு வழித்து மொழுகி வைத்திருப்பர். அன்று எல்லோர் வீட்டிலும் இருந்த கூடை, இன்று சிலர் வீட்டில் மட்டும் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது. எனது பாட்டனும், அவனுக்கு முந்திய சந்ததிகளும் விதைகளுக்காக கையேந்தி நின்றதில்லை. தங்களுக்கான விதைகளை தாங்களே சேமித்து வாழ்ந்த சாமர்த்தியசாலிகள். அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை ஒருபோதும் தங்களை அழித்துக்கொள்ள அவர்கள் விரும்பியதில்லை என்பதை தற்போதைய விவசாய சூழல் தெள்ளத் தெளிவாக நமக்கு உணர்த்தி வருகிறது.இந்த நிலையில் தன்னெழுச்சியாக விவசாய நலன் சார்ந்த மக்களும், அதன்பால் வேட்கை கொண்ட இளைஞர்களும் கிளம்பியிருப்பது சற்று நிம்மதியைத் தருகிறது. இயற்கை விவசாயத்தின் மீதும், நாட்டு விதைகளின் அவசியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணர்வது மீண்டும் பழைய சூழலுக்கு திரும்புவதற்கான முதற்படியாகத் தான் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக இளையோர்களின் ஆர்வம் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. 

இதன் நீட்சியாக வருகிற சனிக்கிழமை (12.08.2017) அன்று அரியலூர் அரசு மகளிர் பள்ளி வளாகத்தில், ஒரு நாள் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் நிகழ இருக்கிறது. நாட்டு விதைகள் அதன் தேவை, அவசியம், மற்றும் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கமும் நடைபெறுகிறது. துறை சார்ந்த வல்லுனர்களும், ஆர்வலர்களும் பேச இருக்கிறார்கள். கூடவே அரியலூர், பெரம்பலூர், மற்றும் கடலூர் மாவட்ட இயற்கை வழி வேளாண்மை குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர உள்ளனர். நாம் தான் நமக்கான வாழ்வியலை கட்டமைத்து கொள்ள வேண்டும். முடிந்தவரை குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள், ஒரு திருவிழாவிற்கு சென்று வந்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும். இப்படியொரு சிறப்பான நிகழ்வு மேலும் பலரை சென்றடைய வேண்டுமென்ற நோக்கத்திற்காக எங்களது கிராமத்தினை சுற்றியுள்ள கிராமங்களில் சுவரொட்டிகளின் வாயிலாக பரப்பி வருகின்றனர் எங்கள் ஊரின் தமிழ்க்களம் நண்பர்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துச் சொல்லி விதைத் திருவிழாவினை பெருவிழா ஆக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

இந்நிகழ்வினை ஒருங்கிணைக்கும் 'தமிழ்க்காடு' இயற்கை வேளாண்மை இயக்கத்திற்கும், அதன் நண்பர்களுக்கும் எங்களது அன்பும், நன்றிகளும்.

அழைப்பின் மகிழ்வில்,  

தமிழ்க்களம் நண்பர்கள், 
உகந்த நாயகன் குடிக்காடு.     


Post Comment