புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 28, 2015

கீதாரி - சு. தமிழ்ச்செல்வி


மீபத்தில் வாசித்த புத்தகங்களில் மிகப்பெரும் அதிர்வை தந்த புத்தகமிது, இயக்குனர் சமுத்திரகனி “கிட்ணா” எனும் பெயரில் திரைப்படம் எடுப்பதாகவும், அது சு. தமிழ்ச்செல்வி அவர்கள் எழுதிய “கீதாரி” எனும் நாவலை தழுவியக் கதை என்றும் எங்கேயோ வாசித்த செய்தியை மனதில் வைத்திருந்து தான் கடந்த புத்தகச் சந்தையில் இப்புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கினேன். இப்புத்தகத்தை தேடிய கதை மிக சுவாரசியமானது, அதைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக காண்போம்!ஒரு புத்தகத்தை வாசிக்க துவங்குமுன், அப்புத்தகம் பற்றிய சின்ன மதிப்பிடலோடு தான் துவங்குவேன், பெரும்பாலும் என் மதிப்பிடலோடு ஒத்திருக்கும், சில புத்தகங்கள் நேரெதிராக அமைந்துவிடும். கீதாரி என் மதிப்பீட்டோடு நூறு சதவீதம் ஒத்திருந்தது. இப்புத்தகம் எனக்குப் பிடித்துப் போக முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது, இராமநாதபுரம் பகுதியிலிருந்து எங்களது பகுதி கிராமங்களுக்கு கிடை போடுவதற்கு வருடா வருடம் ஒரு இடையர்கள் குழு வரும் அதிலொரு ஆடு மேய்க்கும் பையன் எங்களது கூட்டாளிகளுள் ஒருவனாக இருந்தான், அதன்பொருட்டு அவன் படும் இன்னல்களை அவ்வபோது சிரிப்பினூடே சொல்ல கேட்டிருக்கிறோம் என்பதினால் கதையும், கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வியலும் சற்று பரிச்சயம்!

வாழ்க்கையில் எதுவுமே அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது அதற்கான கடின உழைப்பு தேவை என்பது எவ்வளவு சத்தியமான உண்மையோ அதைவிட இருமடங்கு கடின உழைப்பை தந்து தங்களது தினசரி  வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் கூட்டம் தான் இந்த இடையர்களின் கூட்டம். ஒருபக்கம் இரவினில் ஆட்டுக்கு காவல், இன்னொரு பக்கம் கிடை போட்டிருக்கும் நிலத்துக்காரர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கும் இன்னல்கள், நிலையற்ற இருப்பிடமற்று ஒவ்வொரு ஊராய் ஆட்டு மந்தைகளோடு மந்தைகளாக பண்ட பாத்திரங்களை தூக்கிக் கொண்டு திரியும் பெண்கள் இப்படி அவர்களின் வாழ்வியலே கோரமானதாகத் தான் இருக்கிறது.


ஓய்வு என்பதே இல்லை என்றாகிப் போன வாழ்க்கையை நம்மால் நினைத்துப் பார்க்க இயலுமா? ஆனால் அவர்கள் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். கொஞ்சமும் சளைக்காமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயாராக இருக்கிறார்கள். யாரிடமும் எதிர்த்துப் பேசுவதில்லை, எல்லோரிடமும் பணிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள். 

நாவலின் சுருக்கம்:

இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மா, வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு பையனோடு வளசையில் இருக்கையில் ஒரு மழை இரவினில் வந்து கரிச்சா, வெள்ளச்சி எனும் இரட்டைப் பெண் பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள் மனம் பிறழ்ந்த பெண்ணொருத்தி. அடுத்த நாள் காலையில் ஊராரை கூப்பிட்டு தகவலை கூறினால் ஊரினர் எங்கு நம்ம தலையில் விடிந்து விடுமோ என்று எண்ணி நழுவ முயல, கஷ்டத்தோடு கஷ்டமாக நானே ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் என்று இராமு கீதாரி சொல்லவும், ஊரின் பெரும் புள்ளியான சாம்பசிவம் இன்னொரு குழந்தையை நான் எடுத்து வளர்க்கிறேன் என்று சொல்லி இப்போது என்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது எனவும் சில வருடங்கள் கழித்து வந்து வாங்கி கொள்வதாகவும் சொல்லி செல்கிறார். 

சொன்ன படியே சிறிது வருடங்கள் கழிந்து இரண்டில் ஒன்றை வாங்கி கொண்டு செல்லும் சாம்பசிவம் அப்பெண்ணை வீட்டு வேலை செய்ய சொல்லி துன்புறுத்தி வளர்க்கிறார். 

கரிச்சா , வெள்ளையனோடு உதவியாக வளசையில் இருக்கிறாள், வளர்ந்து பெரியவள் ஆனதும் பெண் பார்க்க வரும் கூட்டத்தினர் வெள்ளையனையும், கரிச்சாவையும் இணைத்து வைத்து தவறாக பேசிவிட ராமு கீதாரி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தனி வளசை போட்டுக் கொண்டு இருக்குமாறு பணித்துவிட்டு தன்னோட மகள் மருமகனோடு இணைந்து கொள்கிறார்.

அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கும் போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சாம்பசிவம் வெள்ளச்சியை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறாள். 

ஆரம்பத்தில் ஒரு சுணக்கம் இருந்தாலும் கரிச்சாவும், வெள்ளைச் சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையை தவிர்த்து எவ்வித சிக்கலுமின்றி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். சரியான மேய்ச்சல் நிலமின்மையால் இன்னொரு பகுதிக்கு நகரும் நிலை நேரிடுகிறது, அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணனை சந்திக்கிறான் வெள்ளையன், அதன்பிறகு குழந்தையின்மையை காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியை திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவி முடிவு செய்து அதன்படியே காய் நகர்த்தவும், 

தன் மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளையன் இப்படி மனம் மாறிவிட்டானே என்று வருந்தி அவனைப் பிரிந்து ராமு கீதாரியிடம் வந்து சேர்கிறாள் கரிச்சா. ராமு கீதாரியோ பயங்கர பண நெருக்கடியில் இருக்கிறார். வெள்ளையனிடம் தனயே சென்று எடுத்து சொல்லியும் அவன் கேட்காமல் போனதில் ரொம்ப மன வருத்தத்தில் அவனை சபித்து விட்டு வந்துவிடுகிறார் ராமு. வெள்ளையன் திருமணம் ஏதோ காரணத்தினால் நின்று விட்டாலும் கரிச்சாவை மட்டும் மீண்டும் அழைக்க வரவே இல்லை. 

வெள்ளையனை பிரிந்து வந்த சில நாட்களிலே அவள் கருவுற்றிருப்பதை அறிகிறாள், ஆனால் வெள்ளையனிடம் போகாமல் தானே சுயமாக நிற்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் ஆடுகளை பிடித்துக் கொடுக்க சொல்லி வளர்க்கிறாள், குழந்தை பிறந்து வெள்ளைசாமியோடு சேர்ந்தாளா இல்லையா ? என்பது நாவலின் முடிவு ...

*********

அண்ணனாய் இருந்து வளர்த்தவனே கரிச்சாவை திருமணம் செய்து கொள்வது, வாசிக்கையில் மனதுக்கு ஒப்பாமல் இருந்தாலும் யதார்த்தம் அதுவாகத்தான் இருக்கிறது, அவர்கள் திருமணத்தின் போது கிடை ஆடுகளை பார்த்துக் கொள்வதற்கு ஆளில்லை என்பதினால் வெள்ளையன் ஆடு வளைக்க வைத்திருக்கும் கம்பை, மாப்பிள்ளைக்கு பதிலாக வைத்து திருமணம் நடத்துவது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஆனால் அது அவர்களின் சடங்காக மதிக்கிறார்கள். இப்படி அவர்களின் தொழிலுக்கு எவ்வித பாதிப்புமின்றி தான் தங்களது விசேசங்களை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

சமுத்திரகனி இயக்கி நடிப்பதாக சொல்லும் 'கிட்ணா' எனும் அந்தப் படம் எப்போது வருமென்ற ஆவல் மேலோங்கி இருக்கிறது. ஆனால் இன்னொரு கவலையும் மனதைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது, அது என்னவெனில், நாவலைத் தழுவி படமெடுக்கிறேன் என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கிய ஒரு சிலரைத் தவிர, பலரும் சொதப்பி இருக்கிறார்கள். அப்படி ஏதும் இக்கதைக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த நாவலை வாசித்து முடிக்கையில், நாமெல்லாம் சொகுசிலும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு அதிலும் எண்ணற்ற குறைகளை கூறிக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்று உணர்ந்து கொண்டேன். ஆங்காங்கே டாக்குமென்ட்ரி உணர்வு எட்டிப் பார்த்தாலும் அது அவர்களின் வாழ்வியலை வரலாற்றில் செய்யும் பதிவாக நினைத்து கடந்து வந்தேன். நிச்சயமாய் இந்த நூல் என்னளவில் முழுமையான ஒரு நாவல் கட்டமைப்பு தான். இன்றைய விரைவான வாசகத் தோழர்களுக்கு இது பிடிக்குமா என்பது சற்று சந்தேகம் தான். வாசித்தே ஆக வேண்டிய வகையறா புத்தகமிது, தவறவிடாதீர் ....

*********************************************************************************

மொத்தப் பக்கங்கள் : 175

விலை : ரூபாய் 75/-

பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்


*********************************************************************************

நன்றி : வாசகர் கூடம்

Post Comment

செப்டம்பர் 24, 2015

49 - ஓ & மாயா ....


சில வருட இடைவெளிகளுக்குப் பிறகு கவுண்டரை திரையில் காணும் ஆவலில் முதல் நாள் இரவுக் காட்சிக்கு சென்றிருந்தேன். படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு கவுண்டர் தான் முக்கியம் என்பதினால் படம் மொக்கையாகவே இருந்தாலும் அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் தான் சென்றேன்! கவுண்டருக்கான ரசிகப் பட்டாளம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று நிறைந்திருந்த அரங்கம் உணர்த்தியது.இப்போதையே தமிழ் ரசிகர்களை கணிப்பது அவ்வளவு எளிதல்ல போலும், எதற்கு சிரிக்கிறார்கள் எதற்கு வெறுக்கிறார்கள் என்று தெரியாமலையே படத்தை காண வேண்டியதாய் இருக்கிறது. படு மொக்கையான நகைச்சுவைகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பவர்களைப் பார்த்து ஒருவேளை நம்மளோட ரசனை மழுங்கி விட்டதோ என்ற பயம் உள்ளூர ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 

49 ஓ வின் முதல் பாதி சுமாருக்கும் படு கீழ், இரண்டாம் பாதி சுமார் ரகம். தலைவரின் தலையில் மொத்த சுமையை வலிந்து திணித்திருக்கிறார்கள். படத்தின் மைய பிரச்சினையான விவசாயத்தை விட்டு நழுவாமல் அதைப் பற்றி பேசி இருப்பதற்காகவே  இயக்குனருக்கு பெரிய கை குலுக்கல். 

குடி, கொலை, கொள்ளை, ஆபாசம், கேவலமான வசனத் தொகுப்புகள் என்று வந்து கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு மத்தியில், நலிந்து கிடக்கும் விவசாயியைப் பற்றி, விளை நிலங்கள் எப்படி அபகரிக்கப் படுகிறது பற்றி, எதைப் பற்றியும் கவலைப் படமால் எனக்கென்ன என்று ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் கேடு கெட்ட அரசியல் வாதிகளைப் பற்றியும், நமக்கு சோறு தான் முக்கியம் எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று செல்லும் இன்றைய சராசரி மனிதர்களைப் பற்றியும் துணிந்து பேச முனைந்திருக்கும் இயக்குனர் ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கும் அதற்கு துணையாய் ஆதரவு தந்து தயாரித்த திரு. சிவபாலன் அவர்களுக்கும், மேலும் மக்களின் தலையாய பிரச்சினைகளின் மூலமாக மீண்டும் திரை பிரவேசம் செய்திருக்கும் கவுண்டருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!  என்ன இப்படியான பிரச்சினைகளை பேசும் படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தருவதில்லை அதுதான் இங்கு பிரச்சினையே, அந்த வகையில் இது மக்களிடம் எந்த வகையில் சேர்ந்திருக்கிறது என்பது பெரிய வினாக்குறி தான்?

சீரியல்களே விறு விறுவென நகரும் காலத்தில் போய், சவ சவ என்று காட்சியை வைத்து பொறுமையை மிகவும் சோதிக்கிறார் இயக்குனர். அரசியல் நையாண்டி பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் அமரர் மணி வண்ணனை நினைவில் நிறுத்தினார். அரசியல் நையாண்டியை மணி வண்ணனைத் தவிர்த்து வேறு எவராலும் அவ்வளவு நாசூக்காக, நறுக்கென்றும் சொல்ல முடியாது என்பதை உறுதி படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்த வயதில் போயி கவுண்டரை ஆட வைத்து இம்சை செய்தது, பல சவ சவ காட்சிகள் தவிர்த்துவிட்டு சொன்னால் பார்க்க கூடிய படம் தான் இந்த 49 ஓ!

-----------------------------------------------------------------------------------------------------------

மாயா 

கருப்பு வெள்ளை காட்சியமைப்பு, கண்ணை மட்டும் அல்ல நெஞ்சையும் கொள்ளை கொள்ளும் ஒளி அமைப்பு இவற்றிற்காகவே இந்த மாயாவை பலமுறை பார்க்கலாம்! வயசு கூட கூட அழகு குறையும் என்பார்கள் ஆனால் நயன்தாராவின் அகராதியில் தலைகீழாக எழுதி இருக்கும் போல! பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்கள் போலும் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு நேர்த்தியாய் வந்திருக்கிறது காட்சிகள் அனைத்தும்! 

பேய் படம் எடுக்கிறேன் என்று குப்பைகளை எடுத்து இம்சிக்கும் இயக்குனர்கள் இந்தப் படத்தை சுமார் முன்னூறு தடவை பார்த்துவிட்டு படமெடுக்க வரட்டும் என்று மாயாவை வேண்டிக் கொள்கிறேன்!

பீசா விற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் மாயா தான், நேர்த்தியான சினிமாவை தந்த குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !   

Post Comment

செப்டம்பர் 08, 2015

பாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...
புலியின் பாய்ச்சல்? கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை ஆக்கிரமித்தோம். வழக்கமாய் என்ன எதிர் பார்த்து சென்றேனோ அதே டெம்ப்ளேட் கதை தான். படத்தின் டைட்டில் கார்டில் துவங்கிய ஒரு தீம் இசை படம் முடிந்து வீட்டிற்கு வந்து உறங்கி, காலையில் எழுந்து அலுவலகம் வந்து இதோ சாயந்திரம் ஆகிவிட்டது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த கருமாந்திர தீம் இசை. மூணே மூணு பிண்ணனி இசையை வைத்து முழுப் படத்தையும் ஒப்பேற்றி விட்ட இமானின் சாதூர்யத்தை கண்டு வியக்கிறேன். 

படத்திற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாத காட்சியை போன்று இருக்கிறது சூரியின் காமெடி??? காட்சிகள். எப்பவோ பரணில் ஏற்றி வைத்துவிட்ட காமெடி வசனங்களை தூசி தட்டி கொண்டு வந்து நிற்கும் இடங்களில் எல்லாம் சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வருகிறது. போதா குறைக்கு காஜல் அகர்வாலின் அறிமுகம் காட்சி மண்டையின் அனைத்துப் பக்கங்களிலும் அமிலத்தை தடவிய சுகத்தை தந்தது. காதல் காட்சிகள் அனைத்தும் ஆசம் என்று சொல்வதை தவிர வேறெந்த வார்த்தைகளும் இல்லை. 

கொலையும், கொலை சார்ந்த மனிதர்கள் வாழும் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒரு நியாயமான போலீஸ் வந்தால் என்ன அதகளம் பண்ண முடியுமோ அவ்வளவும் யாரும் கேள்வி கேட்க இடம் வைக்காமல் மசாலா இம்மி அளவும் குறையாமல் பார்த்து கொண்டிருக்கிறார் திரு. சுசீந்திரன். யாரோ கொடுத்த அழுத்தத்திற்கு படம் எடுத்தால் உங்களை நம்பி வரும் என் போன்ற ரசிகன் மீண்டும் எப்படி ஜி அடுத்த படத்துக்கு வருவான்? ஒரு சுமார், படம் கொடுத்தால் அஞ்சி மொக்கை படங்கள் கொடுத்தே தீருவது என்று விஷால் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் போலும். சின்ன சின்ன சுவாரசியங்கள் தவிர்த்து படம் கொட்டாவி விட வைக்கிறது. படத்துக்கு சென்ற முதன்மை காரணம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ரொம்ப ஈர்க்கவில்லை என்றாலும் மோசம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை. அந்தளவில் கொஞ்சம் மன நிறைவு. 

திரையில் ஓடிய படத்தைவிட எங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்லீப்பர் செல் இருவரின் அதகளம் தான் தாங்க முடியவில்லை. திடீர் திடிரென்று கைத்தட்டுவதும், பயங்கரமாக சிரிப்பதும் ஏதோ பேய் பட எபெக்டை கொடுத்து பீதியில் உள்ளாக்கி மண்டை காய வைத்துவிட்டார் மொக்கை ஜென்டில் மென். இவனுங்க விழுந்து விழுந்து சிரிப்பதினால் தான் சூரி போன்ற காமெடி? நடிகர்கள் காமெடி என்கிற பெயரில் பேசிய வசனங்களையே பேசி நம்மளை சோகத்தில் ஆழ்த்துகிறார்கள் போலும். எனக்கு கூட பிரச்சினை இல்லை, ஆவியின் பின் மண்டைக்கு பின்னாடி தான் அடிக்கடி தபேலா வாசித்துக் கொண்டிருந்தான் அந்த ஸ்லீப்பர் செல்! 

மொத்தத்தில் இருநூறு கொடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம். 


Post Comment

செப்டம்பர் 05, 2015

எழுத மறந்த கடிதம் # 1
எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை, ஊதா கலந்த வெள்ளைச் சுடிதாரில் உன்னை முதன் முதலில் பார்த்த தருணத்தில் எப்படி பரபரத்து, பேச்சற்று நின்றேனோ, அதே உணர்வு தான் இப்போதும். என்ன, அப்போது மனசெல்லாம் சந்தோசங்களும், கனவுகளுமாய் நிறைந்திருந்தன, இப்போது நீயும், உன் நினைவுகளுமாய் நிறைந்திருக்கின்றது. பெரும்பாலான பொழுதுகளை உன்னோடு கழிக்கவே பிரயத்தனப் பட்டேன், இப்பொழுது எப்படி நகர்கிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. சத்தியமாய் சொல்கிறேன் உன்னை அடியோடு மறந்து விடவேண்டும், உன் நினைவுகளை அமிலம் போன்றதொரு ஏதாவது ஒன்றில் கரைத்துவிட வேண்டும் என்று நினைக்கையில் தான், ஊற்று நீராய் கசிந்து கொண்டிருக்கிறாய். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் தேவையாய் இருக்கிறது.

ஏதாவது ஒரு அஞ்சலுக்காவது பதில் அனுப்புவாய் என்ற நம்பிக்கையில் இத்தனை மின் அஞ்சல்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன், பதிலெழுதாவிட்டாலும் பரவாயில்லை, படித்த பின் அழித்தலாவது மனது சற்று ஆறுதல் கொள்ளும். அதுவும் வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் உன் பிடிவாதம் பற்றி நானறிவேன். கொஞ்சலிலும், கெஞ்சலிலும் சொல்லியே மாற்றிக்கொள்ளாத நீ, இப்பொழுதா மாற்றிக்கொள்ள போகிறாய்?, உன்னிடம் பிடித்ததே, நீ, நீயாக இருந்தது தான்! "எனக்காக, உன் தனித்துவத்தை அழித்துக்கொள்ளாதே, ஒருவேளை நாம் பிரிய நேரிட்டால், உன்னை எதிலிருந்து மீட்டெடுப்பாய்" என்ற உன் வார்த்தைகளின் வலிமையை நாம் பிரிந்த சில மாதங்களில் அனுபவப் பூர்வமாய் அறிந்து கொண்டேன். சில நேரங்களில் அடக்க முடியா ஆத்திரங்கள் வந்தாலும், எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை அறிவுறுத்திய உன் தெளிநிலை சிந்தனையைக் கண்டு பிரமித்துக் கொள்வேன்!   

அவ்வளவு எளிதில் உணர்ச்சி வயப்படாமல் பேசுவதைக் கண்டு சில நேரங்களில் சந்தேகம் வரும், அப்போது "என்னை, காதலிக்கிறாயா? இல்லையா? என்று நான் கேட்கையில், யாருமில்லையென்றால் நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமொன்று தருவாய், அதில் கொஞ்சம் கோபம் கலந்திருந்தாலும், அடிக்கடி அப்படி கேட்க தூண்டும் எனக்கு. ஒவ்வொன்றையும் நினைவில் வைத்திருந்து, பரிசு கொடுக்கையில் முகம் சுளித்துக்கொண்டே, "ப்ளீஸ் சீனு, ச்சைல்டிஷ் ஆ பிஹேவ் பண்ணாத, கடைசி வரைக்கும் இப்படி ஒவ்வொன்றுக்கும் கணக்கு வைத்திருந்து ஞாபகமா உன்னால பரிசு கொடுக்க முடியுமா? யதார்த்தமா வாழப் பழகு! என்று சொன்ன உன் வார்த்தைகள், போன மாசம் என்னோட மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டு முழித்தபோது மண்டையில் உரைத்தது. இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவமாகத்தான் இருக்கிறாய் என்னுள்!     

உண்மையை சொல்ல வேண்டுமெனில் உன்னோடு பழகும் காலங்களில் நான், நானாக இருந்ததில்லை. பலமுறை எடுத்துரைத்தும் உன்னை சுற்றும் "அதுவாகத்தான்" இருந்தேன்! உன்னை பிரிய நேரிட்ட அன்று உலகமே எனக்கு எதிராக இயங்குவதாய் நினைத்து ஒளிந்து கொள்ள இடம் தேடிய போது கிடைத்தது உன் நினைவு மடிகள் தான். பேருந்தோ, ரயிலோ, மரத்தடியோ, கழிப்பறையோ இப்படி எங்கிருந்தாலும் நான் தலை வைத்து சுகங் காணுவது என்னவோ உன் நினைவு மடியில்தான்! பொதுவாக பெண்களை புதிர்களின் அணிவகுப்பென்று சொல்பவர்களை நரகத்தீயில் ஆழ்த்த வேண்டும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால் உன்னை நெருங்கி கவனிக்கையில் தான் அப்படி சொன்னவர்களை ஆரத்தழுவி மரியாதை செய்யாமல் போன அறிவீனத்தை எண்ணி அவமானம் கொள்கிறேன்.

ஆம், என்னை விட ஐந்து வயது இளையவள் நீ, உன்னிடம் பழகத்தூண்டிய முக்கிய காரணிகளில் ஒன்று, உன்னோட நிதானமான பேச்சு. லொட லொடவென்று பேசிக் கொல்லும் பலருக்கு மத்தியில், அளவாய், அதே நேரத்தில் மிக அழுத்தமாய் சொல்லிச் செல்லும் பாங்கிடம் தான் முதலில் மண்டியிட்டேன். சின்ன சின்ன அன்பு குமிழிக்குள் என்னை புதைத்துக் கொண்டு வெளிவர தெரியாமல் வழி தேடி அலைந்து கொண்டிருக்கையில், உன்னைச் சுற்றி அன்பு சுழலிருந்தாலும் எதனுள்ளும் தன்னை இழந்துவிடாமல், உன்னுள் இயங்க அனுமதிக்காமல், நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் உன்னைச் சுற்றி மட்டுமே இயங்க அனுமதிக்கும் அந்த முதிர்நிலை பக்குவத்தை கண்டு பலமுறை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். அதிசயத்தின் அதிசயமென்றால் அதில் உன் பெயரைத் தான் எழுத ப்ரியப்படுவேன்.

"இப்பொழுது தான் இப்படி புலம்பி தவிப்பாய், கால சுழற்சியில் உனக்கே உனக்கென்று ஒரு பெண் வருவாள், இதை விடவும் வாழ்க்கை மிக வேகமாக சுழன்றோடும், அப்போது என் நினைவு கூட உனக்கு வராமல் போகலாம், எல்லாவற்றுக்கும் தயாரான மன நிலையில் வாழப் பழகு, ஏமாற்றங்கள் இன்றி வாழலாம்" இதுதான் இறுதியாக நாம் சந்தித்த தினத்தில் நீ சொன்ன வார்த்தைகள். நீ, சொன்னது போன்று எனக்கே எனக்கென்று ஒருத்தி வந்திருக்கிறாள், உன்னைப் போன்று இல்லையென்றாலும் அவளிடமும் பிரமிக்க ஏராளம் வைத்திருக்கிறாள். நுட்பமான அன்புக்காரி. எனக்கென்று நெய்த ஆடையவள். திகட்டாமல் அன்பூட்டும் அழகி. அவளைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது, இருந்தும் சொல்வதினால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதினால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். உன்னை, உன் நினைவுகளை மறந்து விடுவேன் என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் இன்றும் என் செவி மண்டல சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பிராண வாயு இன்றி உயிர் வாழ முடியுமென்றால் நான் உன்னை, உன் நினைவுகளை மறப்பதும் சாத்தியமே! 

படிக்க மாட்டாய் என்று நம்புகிறேன், அப்படி ஒருவேளை நீ படிக்க நேரிட்டால் தயவு செய்து பதில் அஞ்சல் மட்டும் அனுப்பிவிடாதே!

   

Post Comment