புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 24, 2011

சித்திர நெற்றியிலே...
சித்திர நெற்றியிலே 
சிறுதுளி சந்தனமும் 
குங்குமமும் சிரிக்கின்றது!

விரிந்த கூந்தலின் 
சிறு பகுதி தென்றலுடன் 
தேடி வம்படிக்கின்றது!
வீண்வம்பு கூடாதென்று  
விலக்கிவிடுகிறாய்!

பூ போட்ட  பாவாடை 
சந்தன தாவணி
உன்னழகை கூட்டும்
நவரச உடைகள்!

சிப்பிக்குள் அழகிய 
முத்துக்களாய் 
வரிசையான பற்கள்!
அவ்வளவு அழகு !
அவ்வளவும் அழகு!

கைப்பம்பு வந்து 
நீர் நிரப்பி 
குடத்தை இடையில் 
ஏற்றி புறப்படுகிறாய்!

இடையில் சிக்கியது 
என்னிதயமும் தான் 
என்று அறியாமல்!!!

Post Comment

ஆகஸ்ட் 20, 2011

ஆதங்கம்

முன்னேரே சொன்னது போல் எனது ஊர் ஒரு சிறிய கிராமம்ங்க. சில வசதிகள் இருக்கும், பல வசதிகள் இன்னும் எட்டா கனி?! தாங்க எங்க ஊர் மக்களுக்கு.. மிகவும் அத்தியாவசிய தேவைகள் நிறையவே மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது. மிக முக்கியம் மின்சாரம். எங்க ஊர்ல மின்சாரம் எப்ப வரும் எப்போ போகும் என்று யாருக்கும் தெரியாது. (எல்லா ஊர்லையும் தான்). அங்குள்ள அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குக்கு உதாரணம் இந்த படம். இந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்து ஆறு , ஏழு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். 
இதுவரையிலும் மற்றியபாடு இல்லை. கடந்த வருடங்களில் அடித்த காற்றுக்கும், மழைக்கும் நிலைத்து நின்று விட்டது. இனி வரப்போகும் மழைக்காலங்களில் தாக்கு பிடிப்பது கடினம் என்றே நினைக்கிறேன். புகார் கூறினால் அலட்சிய பதில் மட்டுமே வருகிறது.

ஒருவேளை முறிந்து விழுந்தால் அதன் பாதிப்பு வேறு விதமாகவும் இருக்கும்.
அதன் கீழ் செல்லும் விலங்குகளோ , இல்லை மனிதர்களோ என்ன ஆவார்கள் என்று எண்ணி பார்க்கவே நெஞ்சம் பதைக்கிறது.

இதைவிட கீழ் இருக்கும் படத்தை பாருங்கள் இன்னும் நெஞ்சம் பதறும். மின் மாற்றிகளை சுமக்கும்  கம்பங்களின் நிலையை பாருங்கள். இதை கண்டும் காணாமல் செல்லும் அரசு விலங்குகளை என்னவென்று சொல்வது. முறிந்து விழுந்தால் பல நாட்களுக்கு மின்சாரம் தடைபடும். குழந்தைகளை வைத்து கொண்டு படும் அல்லல் சொல்லி மாளாது, பிறகு படிக்கும் குழந்தைகள் நிலை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மக்களுக்காக உழைக்க வந்த மக்களின் சேவகர்கள் வரப்போகும் விளைவை உணர மறுப்பதுதான் வேடிக்கையாகவும், ஆதங்கமாகவும் இருக்கின்றது.
ஊதிய பற்றாக்குறை, பணி நியமனம் இல்லாமல் வேலை வாங்குவது என்று பல காரணங்களை கூறி சமாளிக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழு வீச்சில் கவனம் செலுத்தி குறைகளை களைந்தால் பல உயிரிழப்புகளை தடுக்கலாம். இது என்னோட சொந்த ஆதங்கம் மட்டும் இல்லை, தமிழகத்தின் பல கிராமங்களில் நிலை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.


"வருமுன் காப்பதே மேல்"

Post Comment

ஆகஸ்ட் 11, 2011

அவளை எண்ணி...
காற்றுடைந்த பலூனை 
கண்டு கலங்கும் 
-சிறுவனாய் 
கண்டும் காணாமல் 
செல்லும் அவளை 
எண்ணி கரைகிறேன்.

Post Comment

ஆகஸ்ட் 08, 2011

வெறும் மூணுதாங்க...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் ... "மூன்று" தொடர்பதிவுக்கு அழைத்த அன்பர் திரு. செய்தாலி அவர்களுக்கும் நேசமிகு அண்ணன் சிங்கையின் சூறாவளி மாணவன்  அவர்களுக்கும், அலைபேசியில் அழைத்து அன்பு பாராட்டி வரும் அண்ணன் திரு. R. V. சரவணன் (குடந்தையூர்)அவர்களுக்கும்  என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன். 

1) விரும்பும் மூன்று விஷயங்கள்?

* அமைதியான வாழ்க்கை
* நல்ல நட்புகள் நிறைய கிடைக்கின்ற வாழ்வு
* இந்நிலையில் இருந்து முன்னோக்கி செல்லாமல் இருந்தாலும் கூட பின்னோக்கி வேண்டாம்.

2) விரும்பாத மூன்று விஷயங்கள்?

* குறைகள் கூறுவதை தவிர்க்க வேண்டும் 
* பண்பில்லா அரசியலை.
* மரபில்லா உடைகளை உடுத்த.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

* உண்மை பேசினால் பின்னால் என்ன விளைவுகள் வரும் என்று.
* கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகக்கூடிய நிலை வேண்டாம் என்று
* கோபத்தில் தவறான வார்த்தைகள் சிதறி விடுமோ என்று...

4) புரியாத மூன்று விஷயங்கள் ?

* திருடியது உலகமே அறிந்தும்கூட நான் திருடன் இல்லை வாதிடுவதை.
* வாக்களிப்பது எதற்காக என்று?
* போலி சாமிகளிடம் மீண்டும் மீண்டும் சென்று ஏமாறும் பெண்களை காணும்போது.

5) எனது மேசையில் இருக்கும் மூன்று பொருட்கள்?

* கணினி 
* எழுதுகோல் 
* சில புத்தகங்கள் 

6) என்னை சிரிக்க வைக்கும் மூன்று விசயங்கள்?

* தரமான நகைச்சுவைகள் 
* நடிகையின் காதல் 
* சிலஅரசியல் வாதிகளின் மேடை பேச்சுக்கள் 

7) செய்து கொண்டிருக்கும் மூன்று விஷயங்கள்?

* ராமயணம் படித்து கொண்டிருக்கிறேன் 
* கவிதை என்கிற கிறுக்கல்களை கிறுக்க முனைந்து கொண்டுள்ளேன் 
* மெல்லிய இசைகளை சேமித்து கொண்டிருக்கிறேன்

8) கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

* வேறு மொழி கலப்பின்றி எம்மொழியை பேச 
* பிறர் இரசிக்கும் அளவுக்கு வாழ.
* கோபத்தை அடக்கி , எல்லோரிடமும் நட்பு பாராட்ட.

9) பிடித்த மூன்று உணவு வகைகள்?

* அரிசி சாதம் (காரக்குழம்பு கலந்து)
* பழைய சாதம் மோர் கலந்து  (காட்டு வேலைகள் செய்து களைப்பாக இருக்கையில் உண்டால் அமிர்தம் போன்ற சுவையை தரும்)
* அம்மாவின் கைப்பக்குவத்தில் கம்மஞ்சோறு (இப்போ அரிதாகத்தான் கிடைக்கின்றது நான் வெளி ஊரில் இருப்பதால்)

10) கேட்க விரும்பாத மூன்று விசயங்கள்?

* அன்னை தமிழில் அந்நிய மொழி கலந்து பேசுவதை.
* போலி புகழ்ச்சிகளை
* தமிழின தலைவர் என்று கூறிக்கொ(ல்)ள்வதை.

11) அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்?

* கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (தென்மேற்கு பருவகாற்று)
* உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது (விருமாண்டி)
* நன்றி சொல்ல உனக்கு (மறுமலர்ச்சி)

12) பிடித்த மூன்று பொன் மொழிகள்?

* உன் முதுகை பார் பின் அடுத்தவரின் முதுகை காண்
* இதுவும் கடந்து போகும் 
* ஓவ்வொரு பூட்டுக்கும் ஒரு திறவுகோல் இருக்கும் அதுபோல்தான் 
  ஒவ்வொரு பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். 


13) ஆசைபடும் மூன்று விஷயங்கள்?


* உள்ளதை வைத்து உருப்படியாய் வாழ 
* சொந்த தொழில் தொடங்கவேண்டும் என்று 
* கையூட்டு இல்லா இந்தியா வேண்டும் என்று. 


14) நிறைவேறாத மூன்று ஆசைகள்?


* முதல் காதல்  
* கல்லூரி காலங்கள் 
* வெளிநாடு செல்லவேண்டும் என்று எண்ணியது.

15) இது இல்லாம வாழ முடியாது என்று கூறும் மூன்று விஷயங்கள் ?

* நீர் 
* காற்று 
* உணவு  

Post Comment

ஆகஸ்ட் 01, 2011

நான் இரசித்த பாடல் (2)....படம்: தூத்துக்குடி 

பாடல்: கருவாப்பையா  கருவாப்பையா 

இசை: திரு. பிரவீன் மணி 

வரிக்கு சொந்தக்காரர்: கவிஞர் இளைய கம்பன். 


நான் அடிக்கடி கேட்கும் புதுப்பாடல்களில் இதுவும் ஒன்று.
இந்த பாடலின் சிறப்பு என்னவெனில் முழுப்பாடலையும் 
எளிய அன்றாட வழக்கு மொழியையே பயன்படுத்தி எழுதி இருப்பார் 
கவிஞர் இளைய கம்பன். 

2006  ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது.. தொடக்க வரிகளே உள்ளதை 
கொள்ளை கொள்ளும். "கருவாப்பையா கருவாப்பையா கருவாச்சி கவுந்துபுட்டா" என்று ஆரம்பித்து இசையுடன் சென்று செவிகளை சிலிர வைக்கும்.

"குண்டூசி மீசை குத்தி
மேல் உதடு காயமாச்சி
கிறுக்கு பைய பல்லு பட்டு 
கீழ் உதடு சாயம் போச்சு,
கிச்சு கிச்சு தாம்பூலத்தில் 
உசுர வச்சி விளையாடுறேன் 
நீ தான் வந்து கண்டுபிடிக்கணும் டா."

என்று கிராம காதலின் நேசத்தையும், ஏக்கத்தையும் மிக அழகாய் 
வெளி படுத்தி இருப்பார் கவிஞர். அடுத்து, 

"வீச்சருவா புடிக்கிற
வித்தை தெரிஞ்சவன் 
புத்தகத்தை சுமக்கிற 
பூவை ரசிக்கிறேன் "

என்ற வரிகளை இணைத்து உள்ளதை கட்டிப்போட்டு 
அந்த பாடலோடு நம்மையும் பயணிக்க தூண்டுவார்.

"கட்டபுலி மாடனுக்கு 
பொங்க வச்சி தான்
கட்டபொம்மன் உன்னோட 
கைய புடிக்கிறேன்"

என்ற உயிர்ப்பான வரிகளை கொண்டு உள்ளத்தின் ஆசையை உறதி பட கூறி இருப்பார் கவிஞர் இளைய கம்பன். இந்த பாடல் முழுதும் ஒரு அழகான மண் வாசனை நிறைந்த காதலை அழகுடனும், அழுத்தமாகவும் கொடுத்திருப்பார்.
இந்த பாடல் வெளி வந்த நேரத்தில் எங்க ஊர் பகுதியில் திரும்பிய இடத்தில எல்லாம் ஒலித்துகொண்டிருந்தது. அந்த அளவுக்கு இந்த பாடல் ரொம்ப பிரபலம் ஆன பாடல். கிராமத்து சோடிகள் அதிகம் விரும்பி கேட்ட கேட்கின்ற பாடல்களில் இதுவும் ஒன்றாய் அமைந்து விட்டது என்றே கூறலாம். 

இந்த வரிகளுக்கு தேவையான அற்புதமான ஒரு மெல்லிசை அமைத்து வரிகளை அதன் வடிவம் மாறாமல் நம்மை ரசிக்க தூண்டுவார் இசைஅமைப்பாளர் திரு. பிரவீன் மணி. 

ஆடம்பரமில்லா பசுமையான சூழலை கொண்டு எளிய காட்சி அமைப்புகளை வைத்து இந்த பாடலை ஒளி வடிவம் கொடுத்திருப்பார்கள் இயக்குனர் திரு. சஞ்சய் ராம் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ஜீவன். 

நாயகன் ஹரிக்குமார் மற்றும் நாயகி கார்த்திகா இரண்டு பேருமே அறிமுகமானது இந்த படத்தில் தான் என்று நினைக்கிறேன். 

இறுதியாக இந்த நெகிழ்வான வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள் திருமதி. சித்ரா மற்றும் திரு. திப்பு. குறிப்பாக சின்னக்குயில் அவர்களின் குரலில் வரிகள் அனைத்தும் இனிமை கூட்டும்.. 

விரும்பி ரசிக்கும் பாடல்களில் ஒன்றான இந்த பாடலையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நட்புகளே. நன்றி 


(சென்ற வாரம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்)

(நன்றி: கூகுள் இணையம் மற்றும் youtube)

Post Comment