என்றைக்கும் மனிதர்கள் அதிகம் முக்கியத்துவம் செலுத்தும் பொருட்களில் ஆடைகளும் நிச்சயம் இருக்கும்.
அழகாய் உடையணிந்து அனைவரையும் கவரவேண்டும் என்பதில் அதிகம் பேர் ஆவல் கொள்வர். அது இயல்பு.
ஒவ்வொரு கட்டத்திலும் அதன் சூழலுக்கு, காலத்திற்கு, மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப புது வடிவம் அடைந்து
வந்துள்ளது .. வந்து கொண்டும் இருக்கின்றது. அதன் வடிவத்திலும், வடிவாக்கதிலும் சரி, புதுப்புது வடிவம் கொண்டு மக்களின்
நாகரிக வளர்ச்சியை மேம்படுத்தி உலகத்திற்கு பறை சாற்ற ஆடை அதிகம் முக்கியத்துவத்தில் உள்ளது.
உடைகளுக்கு மயங்காத மக்கள் இல்லை என்றே கூறலாம் . அந்த அளவுக்கு ஆடைகளின் மோகம் நாளுக்கு நாள்
அதிகரித்து கொண்டுதான் வருகிறதே தவிர குறைந்த பாடில்லை ..ஒரு குறிப்பிட இனத்தின் அடையாளமோ,
அல்லது ஒரு நாட்டின் அடையாளமோ அவர்கள் அணியும் ஆடைகளை வைத்தே நாம் அறிந்து கொள்ளலாம்.
இன்னும் சில நாடுகளில் அவர்களின் மரபுப்படி, பண்பாடுப்படி மட்டுமே ஆடை அணிந்து வருகின்றனர்.
நமது தமிழர்களின் பண்பாடு நல்ல உடையணிந்து நாடு போற்ற வாழ்ந்தோம். நமது உடைகளை வெளிநாட்டினர் கூட விரும்பி அணிந்து
கொண்டதை கண்கூடாய் காண முடிந்தது. இன்றைய வளரும் தலைமுறைகள் உடுத்தும் உடைகளை கண்டால் முகம் சுளிக்க வைக்கின்றது.
அந்த அளவுக்கு மட்டமான முறையில் உடையணிந்து வலம் வருகின்றனர். கேட்டால் நாகரிக வளர்ச்சி என்று கூறி மழுப்பி இருபாலரும் பிறந்த
மேனியாய் வலம் வருவதை மாநகரங்களில் கண்கூடாக காணலாம். கொஞ்சம் முன்னேறி நகரம் கிராமம் நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது இந்த உடை குறையும் கலாச்சாரம்!
தமிழையும் , தமிழர்களின் மரபுகளையும் அழிக்க வேறு எவரும் தேவையில்லை. தமிழனே அனைத்தையும் அழித்துவிடுவான் போலிருக்கின்றது. நெடுங்காலமாக மொழியை அழித்து வருகிறான், கூடவே இப்போ மரபுகளையும், பண்பாட்டையும், நவ நாகரிகம் என்ற சேற்றை கொண்டு பூசி வருகின்றான்.
இக்கால இளைய தலைமுறைகள் உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் பணிக்கு செல்கின்றனர். அங்கு பலதரப்பட்ட பல்வேறு வகையான, பல மாநில, நாட்டு மக்களின் தொடர்பும் எளிதில் கிட்டுகிறது. அந்த மக்கள் அணியும் ஆடைகள் சற்று வித்தியாசமாக கொஞ்சம் நாகரிகமாக??? இருப்பதால் அதை அணிய ஆரம்பித்து, அதையே தினமும் பின்பற்றி, வரும் தலைமுறைகளுக்கும் உதாரணமாய் இருக்கும் அவல நிலை கண்டு மனம் வெம்முகிறது. அப்புறம் முன்பை விட ஆடைக்கு அதிக விளம்பரம் கொடுத்து கவனத்தை ஈர்க்கின்றனர் வியாபார முதலாளிகள். இந்த படத்தில் இந்த நடி(கை)கன் அணிந்திருந்தது, அந்த படத்தில் அந்த நடி(கை) கன் அணிந்திருந்தது என்று அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவே அதிக இளசுகள் விரும்பும் சூழல் இங்கு நிலவுகிறது.