நஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் கழனியின் நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி மாநகர மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உகந்த நாயகன் குடிக்காடு தான் எனது பிறப்பிடம்.
பொதுவாக அதிக பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமம், இப்போ கொஞ்சம் பேருந்து நடமாட்டம் உள்ளது. ஊரில் நான்கு கோவில் உள்ளது, ஆடி மாத அம்மன் திருவிழா எங்களுக்கு பெருவிழா. விவசாயம்தான் பிரதான தொழில், பிறகு கூலி வேலை. சில அந்நிய நாட்டுக்கு சென்று வரும் பறவைகளும் உள்ளது, பொருளாதார இரையை தேடி!
மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பித்தாலே நெஞ்சில் ஊற்றெடுக்கும் இன்பத்திற்கு வார்த்தைகள் இல்லை இந்த பிரபஞ்சத்தில்!
வாய்க்கால் நீரில் முகம் கழுவி, தூக்கு சட்டியில் இருக்கும் பழைய கம்மங்கஞ்சியை குடிச்சி எண்ணையில பொரிச்ச பச்ச மிளகா வை ஒரு கடி கடிச்சா உச்சியில ஏறும் அந்த சுவைய இதுவரைக்கும் யாரும் ஏட்டுல எழுதி வைக்கவில்லை, அப்படி ஒரு சுவை... என்னங்க பண்றது அதுவும் கரைஞ்சி போச்சு நாகரிக காற்றுல!
மழைக்கால நாட்கள் கிராமத்தில் இன்னும் ரம்மியமானது, தொடர்மழையாக இருப்பின் பள்ளிகளும் விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பசங்களை ஓரிடத்தில் அமரவைப்பது அவ்வளவு எளிதல்ல! காகித கப்பல் கொண்டு போர்தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்! இன்று அதை நினைத்து பார்த்தாலும் நெஞ்சுக்குள் தேன்சுரக்கும் காலங்கள்!
திருட்டு மாங்காய், புளியம்பிஞ்சு, நுங்கு, ஈச்சம்பழம், இலந்தை பழம், கூட்டாஞ்ச்சோறு, ஏரியில் கிடைக்கும் கிழங்கு இப்படி எதையும் விட்டுவைக்காமல் எல்லாத்தையும் ஒரு கை பார்த்துவிடுவது. இன்னும் ஒட்டிருக்கின்றன அந்த நிறைவான தருணங்களின் நிலைத்த வடுக்கள்!
எல்லா பசங்களும் இணைந்து பொழுதுக்கும் விளையாண்டு பொழுது முடியும் பொது வீட்டுக்கு சென்றால் கிடைக்கும் பாருங்க முதுகுல பரிசு அதெல்லாம் சுகமான காலமுங்க! இப்பெல்லாம் எங்க ஊர்லையே நகரம் மாதிரி எல்லாம் தொலைக்காட்சிக்கு அடிமையா கிடக்குதுங்க புள்ளைங்க ... என்னத்த சொல்லுறது!
முடிவாக எங்க ஊர்ல எந்த விதையும் போட்டாலும் நல்லா விளையும் மண்ணுங்க... இப்போ கொஞ்சம் விவசாயம் பழுது அடைந்து போச்சுன்னு சொல்லலாம்! கொஞ்சம் நாகரிகம் எட்டிப்பார்த்தாலும் இன்னும் நான் என் இளம் வயதில் விழுந்து புரண்டு மகிழ்ந்த மண் அப்படியே இருக்கிறது என்பதில் மன நிறைவடைந்து விடைபெறுகிறேன்... நன்றி ...
என் மண்ணை பற்றி கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வாய்ப்பளித்து தொடர்பதிவு எழுத அழைத்த அன்பின் தோழமை சசிகலா மேடம்(தென்றல்) அவர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்!
சிட்டுக்குருவி எனக்களித்த அன்பின் விருது...
அன்பின் நண்பர் திரு. விமலன் சார் வழங்கிய அன்பு விருதுக்கு என் உள்ளம் நிறைந்த என் நன்றிகள்!
Tweet |