ஊரில் இன்றளவும் சாப்பாடு என்றால், சாதம் ஏதாவது
ஒரு குழம்பு. அதுவே மூன்று வேளைக்குமான உணவு. குழம்பு வைக்க நேரமில்லை என்றால்
பூண்டை தட்டிப் போட்டு ரசம் வைத்துவிடுவர். ரசத்திற்கும் வாய்ப்பில்லை என்றால்
இருக்கவே இருக்கும் உறியில் தொங்கும் தயிர். கூட்டு, பொரியல் என்பதெல்லாம் அறுவடை
நேரத்திலோ, இல்லை அமாவாசை நாட்களிலோ தான் கண்ணில் காண முடியும். இட்லியும், அரிசி
சோறும் கிடைக்கும் அமாவாசை நாட்களுக்கு ஆவலாக காத்திருந்த நாட்களுமுண்டு.
மாவரைக்கும் குடை கல் சத்தத்தை விட, கம்பும், சோளமும் உடைபடும் உலக்கைச் சத்தமே
மேலோங்கி கேட்கும் ஒவ்வொரு வீட்டிலும். பத்து காணி, பதினைந்து காணி வைத்திருக்கும்
பெருந்தனத்து குடும்பங்களின் அடுப்பங்கரையில் கூட கம்பும், சோளமும் தான் வெந்து
கொண்டிருக்கும்.
விடியுமுன் கிளம்பும் கணவனோடு, சோற்றுச் சட்டிகளை சுமந்துகொண்டு காடுகளுக்கு சென்றால், வீடு திரும்ப இரவு ஆகிவிடும். வீட்டிற்கு வந்து கம்பு/கேப்பை/சோளம் இவற்றில் ஒன்றில் களி கிண்டி, முருங்கைக் கீரை குழம்பு வைத்து ஆவி பறக்க தட்டில் வழித்து வைக்கையில் மணி பத்தினைக் கடந்திருக்கும். பசி களைப்பில் உறங்கிப் போன பிள்ளைகளை எழுப்பி அவர்களையும் சாப்பிட வைத்துவிட்டு, தானும் நான்கு வாய் அள்ளிப் போடுகையில் எப்படா படுக்கையில் வீழ்வோமென்று தூக்கம் சொக்கும். மாடுகளுக்கு தவிடு புண்ணாக்கு ஊறவைத்துவிட்டு வந்து படுக்கையில் வீழ்ந்தால், மெல்ல காலை சுரண்டும் புருசனுக்கும் ஈடு கொடுத்துவிட்டு உறங்கிப் போவாள். சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் அந்த உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது. இதுதான் அன்றைய சம்சாரிகளின் வாழ்வியல் முறை. சலிப்பின்றி உழைத்த கட்டைகள்.
இப்போது அப்படியொரு கடின உழைப்பு
இல்லையென்றாலும், உழைக்கும் மக்கள் இல்லாமல் இல்லை. உழைத்து மேம்பட்ட வாழ்வு
நிலைக்கு வந்துவிடவில்லை, வாழ்வியல் சூழல் தான் மாறியுள்ளது. உழைப்புக்கான தேவை
இருந்தும் அதை ஒரு பொருட்டாக கருதுவது கிடையாது. முன்பெல்லாம் கடையில் சென்று
அரிசி வாங்குவதை பெரும் இழுக்காக கருதிய காலம் மறைந்து, சந்தைகளில் பொருள் வாங்குவதை
கௌரவமாக கருத துவங்கிவிட்டனர் மக்கள். அதனால் தான் நம்மிடமே மூலப்பொருளை வாங்கி,
அதை இரண்டு மடங்கு வைத்து அதை நம்மிடமே சந்தைப்படுத்துகின்றன வியாபார மூளைகள்,
அதையும் சுரணையே இல்லாமல் வாங்கிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, தங்கள் மரங்களில்
விளையும் புளியம்பழங்களை பொறுக்கி அதை காயவைத்து, ஓடுடைத்து, பழைய கல் தொட்டிலில்
போட்டு உலக்கையால் குத்தி, கொட்டைப் பிரித்து, உருட்டி அடுக்கில் போட்டு வைத்தால்
அடுத்த விளைச்சல் வரை கடை பக்கம் தலை வைக்கவேண்டிய அவசியம் வராது. பிரித்து
எடுக்கப்பட்ட புளியம் விதைகளை வறுத்து, கூடு நீக்கி, மஞ்சளும், உப்பும், கலந்து
இரவில் ஊர வைத்து, விடிந்த பின்பு நீரை வடிக்கட்டி விட்டால் ஊறிய புளியம் விதைகள்
தான் அன்றைய தினத்துக்கான பெரும் சுவை கொண்ட நொறுக்குத் தீனி. இப்போதெல்லாம்
அதற்கான சாத்தியங்கள் குறைவே. உரலுக்கும், குடைக்கல்லுக்கும் டாட்டா காட்டிவிட்டு,
அந்த இடத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதில் யாரையும்
குறிப்பிட்டு விரல் நீட்டி குற்றம் சொல்லிவிட முடியாது.
எதையோ எழுத நினைத்து, வேறு எங்கையோ வந்து
நிற்கிறேன். நேற்று இரவு முருங்கைக் கீரை குழம்பு செய்தேன். அம்மாவிடம் அலைபேசியில்
கேட்டு முதல் தடவையாக செய்தேன், சுவை எனக்கு பிரமாதமாகத் தான் இருந்தது. சாதத்தில்
சுட சுட முருங்கைக்கீரை ஊற்றி பிசைகையில் சட்டென்று, அகப்பையில் வழித்துப் போட்ட
கம்பங்களியின் நடுவில் குழி தோண்டி அதனுள் முருங்கைக்கீரை குழம்பை ஊற்றி மணத்தோடு
பிசைந்து தின்ற அந்த நொடி நினைவில் வந்து போனது. நாகரீகம் என்று விரட்டிய
எல்லாமும் இன்று ஆரோக்கியம் என்கிற பெயரில் பலமடங்கு விலையில் நம்மிடமே வந்து
சேர்வதை நினைக்கையில் நம்மைப் போன்ற சிறந்த அடிமைவாதிகள் வேறு எங்கும் இருக்கமாட்டார்கள்
என்று தோன்றுகிறது.
பேரன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு.
Tweet |