புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 28, 2013

அரசு அலுவலரின் உச்சக் கோபமும், அன்பும் ....

அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி நேர்கையில் இயற்கையாகவே மனம் சலிப்படைந்து விடுவதை தவிர்க்க முடிவதில்லை. அவர்களின் பேச்சும், செய்கைகளும் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருக்கும். நகர்ப்புறங்களை விட கிராம வாசிகள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் அதிகமாக இருக்கும். தான் பெரிய கடவுளென்றும், நம்மை நாடி வருபவர்களை ஏதோ தூசிக்கு ஒப்பாகவே கருதுகின்றனர்.

நான் நேரில் கண்ட ஒரு சில நிகழ்வுகளை இங்கு பட்டியலிடுகிறேன். ஒரு சான்றிதழ் வாங்க எங்க ஏரியா வருவாய் ஆய்வாளரை சந்திக்க சென்றேன். அப்போது ஒரு பாமர விவசாயியும் வந்திருந்தார், ஒரு மணி நேரம் காக்க வைத்துவிட்டு அது நொட்டை, இது நொட்டை என்று என்னை அலைக்கழித்தார் அந்த அதிகாரி... எனக்கு முன் வந்திருந்த பாமரரிடம் சில கேள்விக்கணைகளை தொடுத்தது அந்த கரு நாக்கு .. இதில் இணைத்திருக்கும் தாளுடன் ஏன் பிறப்பு சான்றிதழ் இணைக்கவில்லை, அந்த ஆள் இவர்களுக்குத்தான் பிறந்தான் என்பதை நான் எப்படி நம்புவது... படித்த நாக்கு தான் இப்படி ஒரு மனிதமற்ற கேலியும் கிண்டலையும் ஒரு சேர தொடுக்க பாவம் அவர் அப்படியே உருக்குலைந்து நின்றார். அந்த அரசாங்க அவலத்தின் வாயிலிருந்து உதிரும் சில எச்சில்துளிக்காகவே காத்திருக்கும் நாலைந்து அல்லக்கைகள் வாய் கிழிய சிரித்தது தான் வேதனையின் உச்சம். எனக்கு பின் சில பெண்களும் வந்து காத்திருந்தனர். வெளியே வருகையில் இதுவரைக்கும் நாலாயிரம் வாங்கி இருக்கான், இன்னும் வேலை முடிச்சு கொடுக்க மாட்டேங்குறான் என்று நொந்த படியே வெளியேறினார்... 

இன்னொரு முறை ஒரு பட்டா பெயர் மாறுதல் விசயமாக வட்டாட்சியரை சந்திக்க செல்லுகையில், அங்கிருந்த ஒரு அதிகாரி ஒரு கர்ப்பிணியிடம் பேசிக்கொண்டிருப்பதை காண நேர்ந்தது. நீங்க இந்த விசயத்துக்காக இவ்வளவு தூரம் வரணுமா? வீட்டில் இருப்பவர்களிடம் கொடுத்து அனுப்புங்க போதும், மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன். எங்கெங்கு கையெழுத்து போடணுமோ அதை இப்பவே போட்டுட்டு நீங்க கெளம்புங்க, உங்களுக்கு பதிலாக யாரேனும் வந்தால், தன் பெயரை சொல்லி என்னை சந்திக்க சொல்லுங்க , நான் முடித்து அனுப்புகிறேன் என்றார். அந்த பெண்மணியும் முகம் மலர்ந்து விடை பெற்று சென்றார். எத்தனை முரண்பாடு மேலே உள்ள நிகழ்வுக்கும், இதற்கும்!


இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அங்கு அசிங்கத்தை கக்கிய அந்த வாய்க்கு எப்படியும் ஐம்பது இருக்கும், மனிதத்தோடு பேசிய இந்த வாய் முப்பதைத்தான் தொட்டிருக்கும். ஐம்பதுக்கு இருக்கவேண்டிய பொறுமையும், பொறுப்பும் முப்பதுக்கு இருக்கிறது. யாருக்காக சேவை செய்ய வந்தோம் என்பதை மறந்து பணத்தை நுகரும் அந்த மூக்குக்கு, பணம் மலத்தில் இருந்தாலும் சங்கடப்படுவதில்லை போலும்.

"தான் என்ற ஆணவம் அவர்களை அழிக்காதவரை, அவர்களாய்  திருந்தப் போவதில்லை!"  


Post Comment

பிப்ரவரி 26, 2013

எங்கே போகிறது இந்த சமூகம் ...

கரட்டுப் பாதையில் 
சிறு கல் இடறி,
தடுமாறியவள் 
முன் சென்ற 
என் தோளைப் பற்ற,
நடை பிசகி 
கிழே விழுந்தோம்.
நொடியில் எழுந்து 
விலகிய ஆடைகளை 
சரி செய்கையில்,  
ஏளனமாய் கடந்தன  
சில கோரப் பார்வைகள்!
அவர்களை தொடர்ந்து 
சென்ற நாயொன்று 
நின்று, தலையை தூக்கி 
முகத்துக்கு முகம் பார்த்துவிட்டு 
பின் 
மௌனமாய் நகர்கிறது ....


Post Comment

பிப்ரவரி 21, 2013

மிரட்டும் அனுபவங்கள்...


அலுவலகத்திற்கும் எனது அறைக்கும் பெரிதான தூரமில்லை என்பதால் நடந்து செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன், பேருந்தில் சென்றால் எட்டு நிமிடத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் ஆகும், சில நேரங்களில் இருபது முப்பது நிமிடங்கள் கூட பிடிக்கும் போக்குவரத்து நெரிசலை பொருத்து இந்த பயண நேரம் மாறுபடும்! நடந்தால் ஏழு நிமிடம் தான் பிடிக்கும்! இத்தனை வருட நடை பயணத்தில்? கண்ட காட்சிகள் சில நொடிகளில் மறைந்து விடும், இல்லை ஒரு நாள் தான் அதிக பட்சம் அதனை தாண்டி மனதில் நின்றதில்லை! ஒரு சில நிகழ்வுகளே மனதுக்குள் பசுமரத்தாணியாய் பதிந்துள்ளது! அதை வேறு பதிவில் விரிவாக காண்போம்! இப்போ நான் சொல்ல வருவது என்னவென்றால் இரண்டு வார இடைவெளிக்குள் நான் சந்தித்த நிகழ்வுகளைத்தான்... 

சம்பவம் - 1:- 

மனசை எங்கோ பறிகொடுத்துவிட்டு, "எங்கே செல்லும் இந்த பாதை" என்ற பாடலை கேட்டுக்கொண்டு  சென்ற என்னை வம்படியாய் ஒருவர் வழி மறித்து ஒரு அஞ்சு நிமிடம் டைம் ஒதுக்க முடியுமா சார் ? என்றார் படு பவ்யமாய்! நம்மையும் மதித்து ஒருவர் கேட்கிறாரே என்று நின்றேன். சார் உங்க பெயர் என்றது ஒரு தேன் குரல், திரும்பினால் திவ்யமாய் ஒரு தேவதை. பெயர், எடை, உயரம் எல்லாம் நோட் பண்ணிக்கொண்டு கையில் ஒரு கருவியை கொடுத்து இப்படி நேரே பிடிங்க சார் என்று செய்து காட்ட நானும் அவ்வாறே செய்தேன்! சில மணித்துளிகளில் எதையோ கணக்கு பண்ணிவிட்டு, சார் உங்க உயரத்துக்கும் , வெயிட்டுக்கும்  கொழுப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கு. நீங்க ஒன்னும் வருத்தப் படவேண்டாம், நாங்க கொடுக்குற மூலிகை டீ தொடர்ந்து ரெண்டுவாரம் குடிச்சா போதும் எல்லாம் சரியாகிரும், என்று ஒரு தொகையை சொல்லிச்சு பாருங்க, அப்படியே ஒரு எம்பது சம்பட்டி கொண்டு அடித்த மாதிரி பொறி கலங்கி நின்றேன்! என் ரெண்டு மாசத்து சாப்பாட்டு செலவை அந்த புள்ள ரெண்டு வார டீ செலவாக சொல்லுச்சி!  நம்மளை மடக்கிய ஆசாமியை தேடினேன், அவர் இன்னொருவரிடம் வலை வீசுவதில் மிகவும் தீவிரமாக இருந்தார், ஒருவழியா அந்த அம்மணியிடம் சமாளித்து வருவதற்குள் பெரும் சங்கடமா போச்சு!   நிறைய அழகிய அருவா இப்படி வீதிக்கு ஒன்று நிற்கலாம் , வம்படியா சென்று கழுத்த நீட்டாமல் சூதானமாக இருக்கும்படி உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் நண்பர்களே!சம்பவம் 2:-

ஒரு மாலை வேளையில் ஒரு இடத்தில் பயங்கர கூட்டம், முழுதும் இல்லத்தரசர்கள் தான் ஏதோ பெயருக்கு ஒன்றிரண்டு பெண்கள் கண்ணில் தென் பட்டனர். என்னவாக இருக்குமென்று அவசரமாக தலையை நீட்டி நோக்கினால் அங்கு வட இந்திய இளசுகள் இரண்டு, காய்கறி நறுக்கும் இயந்திரத்தை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். பை நிறைய கொண்டு வந்திருந்த பழைய காய்கறிகளை நறுக்கி காட்டி விற்பனை வெகு மும்முரமாக சென்று கொண்டிருந்தது. வட்டம், சதுரம், முக்கோணம், பூகோளம் இப்படி புதுபுதுசா நறுக்குற சின்ன சின்ன எந்திரங்களை காட்டி  விலை  பேரம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இது நமக்கு ஒவ்வாத இடமென்று சாதூர்யமாக நழுவினேன், பிறகுதான் பொறி தட்டியது,  அம்புட்டு இல்லத்தரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதின் மர்மம் விளங்கவில்லை? விபரம் தெரிந்த இல்லத்தரசர்கள் விளக்கினால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்....

நன்றி 

Post Comment

பிப்ரவரி 11, 2013

மழைக்கால முத்தங்கள் ... (Semman Devathai # 10)

மழைக்கால நாட்களில் 
இதம் வேண்டி 
பூனை 
அடுப்படி தேடி அலைகிறது 
நான் 
உன் மடி தேடி ....
நிறைமேகம் 
ஒன்றிரண்டு தூறலோடு 
கலைவது போல், 
இவளும் 
இரண்டொரு முத்தங்களோடு 
ஏமாற்றிப் போகிறாள்!Post Comment

பிப்ரவரி 07, 2013

முத்த சிராய்ப்புகள்...நடைபயில ஆரம்பிக்கும் 
குழந்தை விழுந்து 
சிராய்த்துக் கொள்வதுபோல், 
அவனும் நானும் 
முத்தம் பயில்கையில் 
ஒன்றிரண்டு கீறல்கள் 
வந்து தொலைப்பதை 
தவிர்க்க முடிவதில்லை...எந்தப் பிசகுமின்றி 
என்னை முழுதாய் 
எடையிடும் அளவீடாக 
அவன் கண்களாத்தான் 
இருக்கும்!


Post Comment

பிப்ரவரி 04, 2013

உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ....


நெடு நாட்களாய் அந்த மாதிரி வாசகங்களை நான் நிறைய பார்த்துக்கொண்டு வந்தாலும் பெரியதாய் எடுத்துக்கொண்டதில்லை. பேருந்தில் தான் அதிகம் இதை அதிகம் கண்டிருக்கிறேன்! அப்புறம் மாநகர தெருக்களில் பாடாவதியாய் நின்றுகொண்டு பிரசுரம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள், மேலதிக விபரம் கேட்டால் எனக்கு தெரியாதுங்க இதை கொடுத்தா சம்பளம் தரேன்னு சொன்னாங்க அதனால் இதை கொடுக்குறேன், உங்களுக்கு அதிகம் தகவ ல் வேண்டுமென்றால் குறிப்பிட்டிருக்கும் எண்ணில் தொடர்பு கொண்டு கேளுங்க என்று பதில் வரும்! அதன்பிறகு கொடுத்தாலும் வாங்குவதில்லை!

சில நாட்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு விளம்பரத்தை அரியலூர் பேருந்து நிலையத்தில் கண்டேன், பொழுது போகாமல் இருந்த தருணம் வேறு, 
!!!பிரபல நிறுவனத்தில் பணி  புரிய உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!!!.
பகுதி நேரம் 8000/- முழுநேரம் 12000/- சண்டே மட்டும் 4000/- வீட்டில் இருந்த படியே நீங்கள் சம்பாதிக்கலாம்! இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெற ஒரு சந்தர்ப்பம்! என்று அடங்கிய சுவரொட்டி! வேறு எந்த விபரமும் இல்லை இரண்டு அலைபேசி எண்கள் மட்டும் இருந்தன! சரி என்னதான் சொல்லுவாங்க கேட்போமே என்று முதலில் இருந்த எண்ணுக்கு அழைத்தேன் பதிலில்லை, அடுத்த எண்ணுக்கு அழைத்தேன் கானக்குரல் கவனத்தை ஈர்த்தது! 

நான் ஒரு கல்லூரி மாணவர் என்று அறிமுகபடுத்திக்கொண்டு வேலையை பற்றிய சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தேன், என்னைப்பற்றியும் சில கேள்விகளை கேட்டு அறிந்து கொண்ட அம்மணி, நேர்ல வாங்க சார் பேசுவோம், போன்ல சொன்னா உங்களுக்கு சரியா புரியாது, என்று கொக்கி போட ஆரம்பித்தது அந்த அம்மணி! கெஞ்சி கதறி கேட்டுக்கொண்டதற்கு இனங்கி எங்க நிறுவனத்துல நீங்க சேருவதற்கு இரண்டு தகுதி வேண்டும்.
 1) 10,000/- நீங்கள் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யணும், 2) நீங்கள் சொந்தமாக கணினி வைத்திருக்க வேண்டும் (இணைய இணைப்புடன்) மேலும் விருப்பம் இருப்பின் கோவையில் உள்ள ஒரு ஹோட்டலின் முகவரியை சொல்லி நேரில் வரும்படி சொல்லி இணைப்பை துண்டித்தது!

நிச்சயம் இது ஒரு மன்னாரன் வகையை சேர்ந்த கம்பெனியாகத்தான் இருக்கும் என்பது விளம்பரத்தை பார்க்கும் போதே அறிந்து கொண்டேன்! மாநகரங்களில் இவர்களின் பருப்பு வேகவில்லை என்று தெரிந்ததும் மாவட்டங்களை குறி வைத்துள்ளனர். பெரும்பாலும் மாணவர்கள், இல்லத்தரசிகள் இவர்களின் இலக்கு! இவர்களுக்கு மாதம் நான்கு, ஐந்து ஆடுகள் சிக்கினாலே போதும் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள் போலும்! ஆகவே நண்பர்களே, சிக்காமல் இருந்து சிக்கலை எடுத்து சொல்லுங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களிடம், சிக்கியவர்கள் வெட்கத்தை உதிர்த்து சிலரிடம் விழிப்பு கொடுங்கள்! 

Post Comment