மாலை நேரத்தின் சோம்பலை விரட்ட அலுவலகத்திலிருந்து சற்று தள்ளி இருக்கும் அந்த தேனீர் கடைக்கு செல்வது என் வழக்கம். தினமும் செல்வதில்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது அந்தக் கடையில் தேநீரை பருகும் வழக்கத்தை வைத்திருந்தேன். அப்படி சென்று திரும்புகையில் இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அவளை பார்த்திருக்கிறேன், என்னை அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்திருந்தேன் அதெல்லாம் பொய்யென்றாள் பின்னர் ஒரு மாலை நேர அலைபேசி உரையாடலில்! அவள் என் வாழ்க்கையில் வந்தது இன்னும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. பறிகொடுப்பதில் சுகமென்றால் அது காதலில் மட்டுமே சாத்தியம்!
மற்றவைகளை பற்றி சொல்லுமுன், அவளைப் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்! கண்டதும் ஈர்க்கும் அளவிற்கு அவளிடம் அழகில்லை, முன் ஏறிய நெற்றி அதில் சின்னதாய் இரண்டு வண்ணங்களில் பொட்டு, பின்னாமல் தொங்குமுடி, அதில் தொங்கும் கொஞ்சம் மல்லி, சிரிக்கையில் பாதி தெரியும் மேல்வரிசை தெத்துப் பல், வலது கரத்தில் கட்டியிருக்கும் சிவப்பும் மஞ்சளும் கலந்த கயிறொன்று இப்படி கவனித்து பார்த்தால் அவளும் அழகிதான்! உருவத்தைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் சமவிகித சதை திரட்சி கொண்ட தேவதையவள்.
ஒரு சனிக்கிழமை மாலைவேளையில் பலநாள் தயக்கங்களை உடைத்தெறிந்து ஒருவழியாக , "உன் மொபைல் நம்பர் சொல்லு" ... இதுதான் அவளிடம் நான் பேசிய முதல் பேச்சு. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, மிரட்சியாக Nine double eight four one ....என்று அவள் சொல்ல சொல்ல எனது மொபைலில் டைப்பிக் கொண்டேன். நான் போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மிக அவசரமாக நகர்ந்தேன். சாலையைக் கடந்து அவள் எண்ணுக்கு அழைக்க, துண்டித்து விட்டு அவளே அழைத்தாள்! சில நொடிகள் நான் மௌனிக்க, அவளே பேசத் துவங்கினாள்! பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்! அவளின் ஆசைகள், விருப்பங்கள் அனைத்தையும் சொன்னாள்!
தன் நண்பர்களிடம் மறைக்கும் சில விசயங்களை கூட பெண்ணிடம் சுலபத்தில் சொல்லிவிட முடிகிறது! அன்பும், அக்கறையும் காட்டுவது பெண்களின் பலமென்றால், அதற்காக ஏங்குவது ஆண்களின் பலவீனம்! அம்மா சொன்ன கரிசனமான கட்டளைகளைத்தான் அவளும் சொன்னாள் , அம்மா சொன்னதை காற்றில் பறக்கவிட்டவன், அவள் சொன்னதும் உடனே செய்ய துவங்கிவிட்டேன்... வார்த்தைகள் ஒன்று தான் வாய்ஸ் தான் வேறு!
துவங்கியது அவளாக இருந்தாலும், சண்டைக்கு சமாதானம் நான் தான் பேசணும், எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும் காதலித்தால் மண்டியிட்டு தான் ஆகவேண்டும் என்பது உலகநியதி போல. ஒரு நள்ளிரவில் பேசிக்கொண்டிருக்கையில், நீ நீயாக இரு, உன் செய்கைகளை நீயே சுய பரிசோதனை பண்ணு, அப்போதுதான் உன் தவறுகள் உனக்கே தெரியும், நான் சொன்னால் உனக்கு கோவம் வரும் என்றொரு சொற்பொழிவை ஆற்றினாள்! உண்மையில் அவளுக்குப் பிந்திய வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் தெரிந்தது!
அவளிடம் சொல்லிவிட்டு தான் ஊருக்கு கிளம்பினேன், நான் கோயம்பேட்டை அடையும் தருவாயில் அவளிடமிருந்து போன், என்னையும் உன்னுடன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போ என்று சொன்னதும், இளம் போதையிலிருந்த எனக்கு உள்ளூற உதற ஆரம்பித்துவிட்டது. பேருந்து நிலையம் வந்து மெல்ல சமாதானப் படுத்துகையில், சிரித்துக்கொண்டே, "யே .. லூஸு , நான் அத்தை வீட்டுக்குப் போவதற்காக கிளம்பி வந்தேன், சும்மா விளையாட்டுக்காக சொன்னா ,, இந்த பயம் பயப்படுறே" ... என்று சொல்லிவிட்டு மேலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்! (போதைக்கு அப்புறம் ஒரு நாள் கச்சேரி நடத்தினாள் என்பது அது வேறு கதை) பஸ்க்கு நேரம் இருந்தா, பக்கம் தானே , என்னை அத்தை வீடு வரை வந்து விட்டுட்டு போ என்றாள்! நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்கும் அந்த வேளையில் அவளுடன் நெருங்கி அமர்ந்து இருப்பது ஒரு வித கிளர்ச்சியை உண்டு பண்ணி கொண்டிருக்க, சட்டென இழுத்து இதழ் கவ்வினாள் (அவளுக்கும் உண்டு பண்ணியிருக்கும் போல), முதல் முத்தச்சுவை. மதுவை விட மாது தான் சிறந்தது!
பின்பொரு நாள் சிறிய மனக்கசப்பு பெரிய விரிசலை ஏற்படுத்த, இரண்டு மூன்று முறை சமாதானம் பண்ணியும் அவள் சாந்தமடையவில்லை! ப்ரியம் இருக்கையில் பெரிய விஷயம் கூட சின்னதாய் தெரிகிறது, பிரிவு கூடுகையில் சின்ன சின்ன விஷயம் கூட பூதகரமாகிவிடுகிறது என்னவோ உண்மை தான்! உச்சக் கோபத்தில் அவள் கத்த, நிதானமிழந்து அந்த வார்த்தையை சொல்லிவிட்டேன்! பாவம் துடித்துப் போனாள்! கொட்டிய பொருட்களை அள்ளலாம், ஆனால் சொற்களை? எத்தனையோ சமாதானம் எப்படியெல்லாம் செய்தாலும் தீர்க்கமாய் இருந்தாள்! இருந்தும் விட்டாள்!
சென்றவாரம் எதேச்சையாக அவளை காண்கையில், வேறு ஒருத்தனுடன் வண்டியில் சென்று கொண்டிருந்தாள், கழுத்தில் புது தாலியுடன்!
அரளி செடியா வெட்டி வீசிட, ஆலமரமாய் இருப்பவளை எப்படி? இனியொருத்தி வந்தாலும், அவள் இடம் அவளுக்கு மட்டுமே!......
arasan, Ariyalur, raja, Sendurai, U N Kudikkadu,
Tweet |