புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 12, 2016

"வீதி" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...


எதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத சுகங்களினால் நிறைந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நானெல்லாம் எழுதுவேன் என்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தவன், இப்போது பாருங்கள் ஒரு சிறுகதை நூலினை வெளியிடுமளவிற்கு உருமாறியிருக்கிறேன். இப்படியான நிறைய நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என் வளர்ச்சிக்குப் பின்னாடி நிறைய நண்பர்களின் ஊக்கமும், ஆதரவும் நிறைந்திருக்கின்றது. அவர்கள் இல்லையெனில் இந்த அளவுக்கு எனது வளர்ச்சி இருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.சென்ற வாரம் நடந்த புதுக்கோட்டை "வீதி" கலை இலக்கிய அமைப்பின் கூட்டத்தில் எனது இண்ட முள்ளு நூலினை அறிமுகம் செய்து வைத்து எனது முயற்சிக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறார்கள். நிகழ்வினைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் முன், "வீதி" அமைப்பினை பற்றி கூறி விடுகிறேன்.மிகுந்த கவனமுடன், பலரின் அரவணைப்போடு நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அமைப்பு இது. படைப்பாளிகளை உருவாக்கும் பயிற்சி நிலையம் வீதி. புதிதாக எழுத முனையும் நண்பர்களுக்கு, தனது அகண்ட தோளினைக் கொடுத்து அரவணைத்து, படைப்பாளிகளின் குறை நிறைகளை எவ்வித சமரசமுமில்லாமல் விளக்கி கூறி அவர்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாய் இருந்து வழி நடத்துகிறார்கள் வீதியின் அமைப்பு நண்பர்கள். திரு. முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வீதி அமைப்பின் கூட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாடல், கவிதை, கதையென அனைவருக்குமான களமாக இருக்கிறது வீதி.

துல்லியமான திட்டமிடுதலில் துவங்கி, கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்துவது வரை மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள். சிறப்பம்சம் என்னவெனில் வீதி அமைப்பில் உள்ள பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அதனாலோ என்னவோ மிகுந்த உறுதியுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கூட்டம் முடிந்து வெளியே வருகையில் நம்ம ஊரில் இப்படியொரு அமைப்பு இல்லையே என்கிற ஏக்கம் மெல்ல எட்டிப் பார்த்தது எனக்குள். இன்னும் இன்னும் வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறகுகள் விரிய அன்பு நிறைந்த வாழ்த்துகள், அதன் உறுப்பினர்களுக்கு பெரிய கைகுலுக்கல்கள்.கூட்டத்தின் ஒரு பகுதியாக எனது இண்ட முள்ளு நூலினை அறிமுகம் செய்து வைத்து துள்ளலான உரை ஆற்றினார் விதைக்கலாம் குழுவின் வேராக இருக்கும் நண்பன் ஸ்ரீ மலையப்பன். நான் என்ன நினைத்து ஒரு கதையை எழுதி இருந்தேனோ அதை மிகச் சரியாக கண்டு பிடித்து சொன்ன நண்பனுக்கு அன்பும் நன்றியும். நானும் எனது பங்கிற்கு சில மணித்துளிகள் பேசினேன். முதன் முறையாக படபடப்பின்றி பேசிய கூட்டமிது. என்றும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வாக மாற்றிய வீதிக்கு வாழ்நாளைய நன்றியும் அன்பும்.

எப்போதும் போல என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் நண்பர்கள் கோவை ஆவி, 'சேம்புலியன்' ரூபக்ராம், 'திடங்கொண்டு போராடு' சீனு,     திரு. கருணாகரசு, 'வானவல்லி' வெற்றிவேல், நண்பன் கார்த்திக் புகழேந்தி , வாத்தியார் பால கணேஷ், குடந்தையூர் ஆர் வி சரவணன், கார்த்திக் சரவணன் ஆகியோருக்கு அன்பும் பிரியமும்.

இண்ட முள்ளு வெளியறிய பெரும்பங்கு ஆற்றிய திரு, இலியாஸ் அபுபக்கர், திருமதி. முகில் நிலா, திரு. நாஞ்சில் மனோ, திரு. செல்வகுமார், திருமதி. தேவதா தமிழ், திருமதி. மாலதி, திரு. சோலச்சி ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.


Post Comment