புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 30, 2013

நான் தொலைத்த தீபாவளி...




காலரில் மஞ்சள் தடவிய புதுச்சட்டையோடு,  எண்ணெய் தேய்த்துக் குளித்த சுறுசுறுப்பில் வெடியின் காதை திருகி கொண்டிருக்கும் எதிர்வீட்டுச் சிறுவனிடம், இருபது  வருடங்களுக்கு முந்திய என்னை காண்கிறேன்! அவனின் பார்வையிலும், செய்கையிலும் எத்தனை சந்தோசங்கள் ஒளிர்ந்து மறைகின்றன. அவனுக்கு எதைப் பற்றிய பயமுமில்லை,அவனின் முழுக்கவனமும் வெடியென்ற ஒன்றின் மீது தான் நிறைந்திருக்கிறது. வெடியை பற்ற வைக்க படாத படுகிறான். சில வெடிகள் வெடிக்காமல் அவன் ஆர்ப்பாட்டத்திற்கு சில மணித்துளிகள் அணை போட்டாலும் அயர்ந்து போகாமல் அடுத்த நொடியே மீண்டுவிடுகிறான். மாடிப்படியில் அமர்ந்துகொண்டு அவனின் சந்தோஷத்தை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 

இந்த வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள் மிக எளிதாய் நடந்தேறிவிடுகின்றன, நிறைய மாற்றங்கள் நமக்கு தெரியாமலே சன்னமாய் நம்முள் ஊடுருவி வெளியேறியும் விடுகின்றன. விரும்பியோ, விரும்பாமலோ நாம் சிலதுகளை அனுசரித்து போகத்தான் வேண்டியிருக்கிறது. வயது என்ற ஒன்று எவ்வளவு பெரிய  தாக்கத்தை மனிதருள் ஏற்படுத்துகின்றன என்பதற்கு எதிர்வீட்டுச் சிறுவன் ஒருவனே சாட்சி.வாழ்வின் வேக ஓட்டத்தினை தீர்மானிக்கும் காரணியாக வயதும் ஒன்றாக இருக்கிறது. 

பலகாரங்களை சாப்பிட அவனின் அம்மா அழைத்து ஆறு முறைக்கும் மேலாயிற்று, கொஞ்சம் கூட அவன் சட்டை செய்யவில்லை. வெடியை பற்ற வைப்பதும், வெடித்த காகிதங்களை கண்டு மலர்வதுமாக இருக்கிறான். இரண்டு வெடிகளுக்கு ஒருமுறை என்னையும் பார்த்து புன்னகை பூக்கிறான்.  குரலிட்டுக்கொண்டிருந்த அவன் அம்மா  இம்முறை வெளியே வந்துவிட இவன் வீட்டினுள் செல்ல, நினைவுகள் என்னை பின்னுக்கு இழுக்க தொடங்குகிறது.





ஏழு வயதிலிருந்து பதினைந்து, பதினாறுக்குள் தான் வெடிகளின் மீது வெறிக்காதல். ஒரு மாதத்துக்கு முன்பே தீபாவளி பற்றிய வண்ணக்  கனவுகளில் மிதந்து, எத்தனை வெடிகள், எவ்வளவு வாங்கவேண்டுமென்று பெரிய பட்டியலால் நிரம்பிவிடும்  வீட்டுப்பாட நோட்டின் கடைசி நான்கைந்து பக்கங்கள். தயாரித்து கொடுக்கும் பட்டியலில் கால்வாசி அளவு தான் அப்பா வாங்கி வருவார் என்று தெரிந்தும் பட்டியலிடுவதை நானும், பட்ஜெட்டை அப்பாவும் தளர்த்தியதில்லை. தீபாவளிப் புதுத் துணிகளின் மீதுகூட அவ்வளவு மோகம் இருந்ததில்லை, வெடிகளின் மீதும், அதன் ஒளி,  சத்தங்களின் மீதும் அவ்வளவு காதல். சில நாட்களுக்கு முன்பிருந்தே தீபாவளி களை கட்ட ஆரம்பித்துவிடும் குழந்தைகள் நிறைந்திருக்கும் வீடுகளில்.  

முதல் நாள் இரவே இந்த வெடியை, இந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் என்ற திட்டமிடலில் உறக்கம் தள்ளி போய் வழக்கமாய் எழும்பும் நேரத்தை விட தாமதமாக எழும்பி வெடியை தேடும் கண்களுக்கு தடை போடும் அம்மாவின் எண்ணெய் கிண்ணம். ஒருவழியாய் குளித்து வெடிகளை தொடச் சென்றால் நாலு பக்கத்துக்கு கண்டிப்பு கட்டளைகளை போடுவார் அப்பா. அதையும் கடந்து வெடித்து மகிழ்ந்த தருணங்களின் தடங்கள் இன்னும் மறையாமல் அப்படியே தான் இருக்கின்றன, என்ன காலமும் , நானும் கொஞ்சதாய் மாறியதாய் கவலை கொள்கிறது மனசு! சின்ன சின்ன மத்தாப்புக்கெல்லாம் பயந்து அப்பாவின் பின் ஒளிந்த காலத்திலிருந்து இன்றுவரை தீபாவளி தீபாவளியாகத்தான் இருக்கிறது. பருவமும், வாழ்வியலும் தான் அதிலிருந்து என்னை தனித்துவிட்டு, என் பின் சந்ததிகளை சேர்த்துக் கொண்டுவருகிறது.

பால்யமும், அதனுள் நிரம்பிய சேட்டைகளும், நந்தவனத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் பூக்களாக மனம் முழுதும்  நிறைந்து கிடக்கிறது. அதை இரசிக்கத்தான் நேரமின்றி துரத்திக் கொண்டிருக்கிறது எந்திர வாழ்வு. வளர்ச்சியையும், அது தரும் போதையையும் சுவைத்து மகிழ, இதுபோன்ற எண்ணற்ற மின்மினிகளை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. வளரும் பிள்ளையென்று அளவு சற்று கூடுதலாக எடுத்த புதுத் துணிக்குள் நான் புகுந்து கொண்டு, பலகாரம் சாப்பிட்ட எண்ணெய் பிசுபிசுப்போடும், கந்தக நெடியோடும் நண்பர்களோடு அன்று ஓடியாடிய அதே தெருவில் இப்போது என்னை ஓடவிட்டுருக்கிறேன், மீண்டு(ம்)  வர சில காலம் பிடிக்கும்! 


Post Comment

அக்டோபர் 23, 2013

மல்லிகைப்பூ தோளொன்று!




பெரும் நெரிசலில்லை, 
என்னைத் தவிர்த்து 
அவ்விடத்தில் 
மூன்று பேர்கள் மட்டுமே!

என் வலது தோளை 
உரசியபடி கடந்தது 
மல்லிகைப்பூ தோளொன்று!
ஏதோ, 
அவசரமென்று 
அவள் நடையில் தெரிந்தாலும், 

என் அவசியங்களை  புறந்தள்ளி 
அவள் அவசரத்தை,
ஆராயத் தொடங்கிவிட்டது  
குரங்கு மனசு! 

Post Comment

அக்டோபர் 21, 2013

நான் சுட்டது, உங்களுக்கு சுடாமல் # 2....




மட்டை வெட்டப்பட்ட பனைமரங்கள் 


காய்ந்த பனை மரம் ...


நஞ்சை நிலம் ...


எருக்கம் தான்...


சென்னையில் ஒரு காதல் காதல் சோடி ..


பனை வரிசை 

இயற்கையாய் அமைந்தது ...

எருக்கம் மலர்கள் 



முருங்கை 



மாற்றான் பிரதர்ஸ்...



Post Comment

அக்டோபர் 16, 2013

நையாண்டி சற்குணம் அவர்களுக்கு ...


வாகை சூட வா எனும் தரமான சினிமாவை திரையரங்கில் பார்த்து வியந்த சராசரி பாமர இரசிகன் நான், நையாண்டி என்கிற மகா கேவலத்தையும் முதல் நாளே திரையரங்கில் சென்று பார்த்து நொந்த கடைக்கோடி தமிழ் இரசிகனின் மனக்குமுறல் இது! படம் பார்த்து இத்தனை நாள் கழித்து எழுதுவதற்கு காரணம் இருக்கிறது!

தோழர் பிலாசபி பிராபகரன் சொன்னது போல் வாகை சூட வா என்னும் தரமான படத்தை திரையரங்கில் பார்க்காமல் போன பெரும்பாலானவர்கள் தான் நையாண்டியை இங்கு கிழித்து தொங்கவிட்டு இருகின்றனர்! என்னைய்யா உங்க நேர்மை?

வாகை சூடவா என்னும் நேர்த்தியான சினிமாவை வெற்றி பெற செய்யாத நாம் நையாண்டியை குறை கூறுவதில் என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நானும் எழுதாமல் இருந்தேன்! ஆனால் சில நாட்களாக என் கண்ணில் கண்ட நையாண்டி விளம்பரங்கள் மண்டையை கிறுகிறுக்க வைத்தமையால் தான் இந்த பதிவு!

நையாண்டிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் செம நையாண்டியாக இருக்கிறது அதுவேறு கதை! களவாணி என்ற சுமார் படத்தையும், வாகை சூட வா என்ற விருது படத்தையும் கொடுத்த சற்குணம் ஏன் இந்த அளவுக்கு கீழிறங்கி மட்டமான படத்தை கொடுத்திருக்கிறார் என்று சற்று யோசிக்கையில் ஒன்று மட்டும் என் புத்திக்கு தெளிவாக விளங்குகிறது!

களவாணியில் தான் இயக்குனர் என்பதை நிறுத்திக்கொண்ட சற்குணம் வாகை சூட வா வில் சிறந்த இயக்குநர் என்பதை நிருபித்தவருக்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றி இல்லை கவலை தான் நையாண்டி என்ற வீழ்ச்சியை எடுக்க வைத்திருக்கிறது அதற்கு ரசிகர்களாகிய நாமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்!

பெரிய பட்டாளமே வைத்துக் கொண்டு சோபிக்க தவறிய சற்குணம் அவர்களிடம் வைக்கும் சில கோரிக்கைகள் ....

மதுரைக்காரர்கள் தன்னோட படங்களில் தன் மண்ணையும், மக்களையும் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்வது போல் நீங்களும் ஆசைபடுவது தப்பில்லை நேர்த்தி தேவையாய் இருக்கிறது பிரதர்! (மதுரை, மதுரை  என்று அவர்கள் கொடுக்கும் அக்கப் போர் அது வேறு கதை) 

திரைக்கதை உங்களுக்கு நன்றாக வரும் என்பதை முந்தைய இரு படங்களும் உணர்த்தின, அதை தவிடு பொடியாக்கியது இந்த நையாண்டிஎன்பதை மனதில் வையுங்கள் பாஸ்!

பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை முந்தைய பட பாடல்கள்  எவ்வளவு அருமையாக இருந்தது! இந்த மாதிரி குப்பை சினிமாக்களை எடுக்க தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள், குட் புக் லிஸ்டில் இருக்கும் நீங்கள் எடுக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து! 

மீண்டும் ஒரு தரமான சினிமாவில் சந்திப்போம்!  

Post Comment

அக்டோபர் 11, 2013

ஏக்கப் பெரு வலி!


அவளைப்பற்றி எழுதிட
அமர்கையில்,
மழை ஓய்ந்த
வானம் போலாகிறேன்!



எவ்வளவோ முயற்சித்தும்
நாலு வார்த்தை கூட
எழுத முடிவதில்லை!

இயலாமையின் வெறுப்பில்
காகிதங்களை வீசுகையில் 
நாலைந்து வார்த்தைகள்
வந்து விழுகின்றன!

மீண்டும்
அதே ஏக்கப் பெரு வலி!
உள்ளிருந்து உறுத்துகிறாள் ,
எழுதத்தான் முடிவதில்லை!

தலை கவிழ்ந்த படி
அவளிடம் சொன்னேன்,
தலையை நிமிர்த்தி
சிரித்துவிட்டு செல்கிறாள்!

இதற்கு 
திட்டிவிட்டே சென்றிருக்கலாம் - அவள், 
அந்த நொடியே மறந்திருப்பேன்!


Post Comment

அக்டோபர் 05, 2013

ஊர்ப்பேச்சு # 10 ( Oor Pechu # 10)


இராத்திரி "கிடேரி" கன்னு ஈன்ற பசுவின் இளங்கொடியை நரம்பு பையில் போட்டு கட்டி தாழ்வாரத்தில் கட்டி வைத்திருந்தார் ரத்தினம்! நாயிடம் சிக்காமலிருக்க சற்று உயர்த்தி கட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்தார், இளங்கன்னை பாக்க எந்திருக்கும்பொதெல்லாம் இதுமேலவும் ஒரு கண்ணு இருந்து கொண்டே இருந்தது அவருக்கு!  

விடிஞ்சதும் விடியாததுமா கட்டுத்தறிய சுத்தம் பண்ணிட்டு, அது கட்டியிருந்த இடத்துக்கு கீழ இரத்தம் மாதிரி கொஞ்சம் கறுப்பா சொட்டியிருந்ததை நாய் நாக்கால் சுத்தம் பண்ணியிருக்கும் போல!

ருசி கண்ட நாய் பையை தவிர்த்து கவனம் சிதறாமல் பையையே பார்த்துக்கொண்டு இருந்த நாயை வெறட்டிவிட்டு பையை எடுத்துகொண்டு போய் ஊருக்கு வெளிய ஏரிக்கரை "ஆலின்" பெருத்தக் கிளையின் மூணாவது நடுக்கம்பில் கட்டிவிட்டு இறங்கி பனி போர்த்திய வெதுப்வெதுப்பான தண்ணியில் முங்கி எழுந்தார் இரத்தினம்!

மார்கழி மாசம் குளிருல அதுவும் விடிய விடிய ஏரில குளிக்கிற சுகத்த எப்படி சொல்ல? அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும்.  புகை படர்ந்திருக்கும் குளிர் நீரினுள் இறங்கி ஒரு முங்கி முங்கினாள் போதும் எம்மாம் பெரிய குளிரும் தெரிச்சி ஓடும்! மேந்தண்ணி குளிராவும், கீந்தண்ணி வெதுவெதுன்னு இருந்து ஏரிக்குள் இறங்கும்போதே மனசுல கிளர்ச்சிய உண்டுபண்ணும்!   

பொடி அள்ளுவது போல் கரை மண்ண அள்ளி பல்லுவிளக்கினார், களியும், மணலும் கலந்து சன்ன ரவை போல் இருந்ததால் இன்னொருமுறை எடுத்து நாலு சிலுப்பி சிலுப்பிவிட்டு அடித்தொண்டையிலிருந்து காரி நாலு முறை உமிழ்ந்தார், சத்தம் கேட்டு தான் எடம் திரும்பும் பழந்தின்னி வவ்வாலுக கொஞ்சம் மேல பறக்க ஆரம்பிச்சிதுக!  நடுத்தண்ணியில வா கொப்பளிச்சிட்டு இன்னொருமுறை முங்கி முங்கிட்டு மனுசன் விறுவிறுன்னு நடைய கட்ட ஆரம்பிச்சிட்டார் தர்மலிங்கம் டீ கடை நோக்கி!

பனியின் குளுமையை தேநீரும் , காலைநேர அமைதியை "முருகனைக் கூப்பிட்டு" என்று சௌந்திர ராசனும் விரட்டிக் கொண்டிருக்க கண்ணு முழிக்க ஆரம்பிச்சது ஊரு!

டீ குடிச்சிட்டு இருக்கும் இரத்தினத்த ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு டீ போடு தர்மலிங்கம்ன்னார் கனகசபை. 

என்ன இரத்தினம் இம்புட்டு காலையிலே குளிச்சிட்ட , என்ன சேதி! ஏதேனும் பயணமா ?

இல்லைய்யா மாடு கன்னுபோட்டிருக்கு, அதான் எளங்கொடி கொண்டு போய் ஆலமரத்துல கட்டிட்டு, உடம்பெல்லாம் பிசு பிசுன்னு இருந்துச்சி அப்படியே ஒரு குளியல போட்டுட்டு வாறன்! இப்படி காலையில குளிச்சி எம்புட்டு நாளாச்சி ... 

ஆமாம் இரத்தினம் , காலைக்குளியல் சுகமே தனித்தான்யா ... ஆமா என்ன கன்னு ?

"கிடேரி " (பெண் கன்று குட்டி ). சாயந்திரம் மூணு மணியில வலியில துடிச்சி ஒரு வழியா ஒம்பது மணி இருக்கும் அப்பத்தான்யா வெளிய தள்ளுச்சி .. பாவம் வயசான மாடு ... இதோட எட்டாவது கன்னு ... எஞ்சுமையில பாதிய சுமக்கும் இன்னொரு புள்ளய்யா அது ...

இந்த காலத்துல பெத்ததுக கூட கவனிக்கிறதில்ல இரத்தினம், இதுகதான் ஒருவழியில நம்மள காப்பாத்துதுக ...

சரி கனகசபை கம்பு வேக வைச்சிருந்தேன், எடுத்து மாட்டுக்கு வைக்கணும், கண்ணு போட்ட மாடு வேற ... சாயந்திரம் ஓய்வா இருந்தா வாயேன்  அந்தப் பக்கம், பேசி ரொம்ப நாளாச்சி ... 

ம்ம் சரி சரி வரேன் இரத்தினம், பாக்கலாம் ...  


Post Comment