நாம் ஒருவரை விமர்சிக்கும் முன் நம்மீதான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டும். எண்ணியதை எழுதுதல் அவ்வளவு எளிதல்ல, அதன் சாரம் குறையாமல் மிக தெளிவாக சமூக வரம்புக்குள் செயல்பட்டு தன் கருத்தை வெளிப்படுத்துதலே ஒரு நல்ல படைப்பாளனின் தகுதியாக பார்க்கப்பட்ட காலம் வெளிறி, தன் கருத்துக்கு ஒத்த நான்கைந்து நட்பு வட்டங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வளர்ச்சி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் இலக்கிய உலகம்!
வளரும் எழுத்தாளர்களுக்கு வழிமுறை சொல்லி பண்படுத்த வேண்டிய மூத்த எழுத்தாளர்கள், எழுத்தாளன் என்ற அங்கியை மாட்டிக்கொண்டு செய்யும் கூத்துக்கள் கண்டு மனம் விட்டு சிரிக்கத் தான் தோன்றுகிறது! தன் இடத்தை தக்க வைக்கவும், வியாபாரத்தை பெருக்கவும், தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கவும் சண்டை போடும் அவர்களுக்கு, கொடி பிடித்து கூக்குரல் இடும் வாசக வட்டங்களை எண்ணி தான் பெருங்கவலை கொள்கிறது மனசு!
எக்காலத்திலும் இலக்கிய வாதிகளுக்குள் ஒற்றுமை இருந்ததாய் எந்த வரலாறும் சொல்லவில்லை. சபை நாகரீகத்திற்காய் கட்டி பிடித்துக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு பொறாமை உணர்வு பொங்கி கொண்டுத்தான் இருந்திருக்கிறது என்பதை பல நிகழ்வுகள் நமக்கு வெளிச்சமிடுகின்றன! அனால் இப்போ நடந்துகொண்டிருக்கும் அளவிற்கு குழாயடி சண்டை போட்டுக்கொண்டதில்லை. அதற்கு காரணம் நாகரிக வளர்ச்சியாக கூட இருக்கலாம். இப்போதைய facebook , twitter மாதிரி அப்போதைய காலத்திலும் இருந்திருந்தால் பல "கன்றாவிக்கதைகளை " தாத்தாவும், அப்பனும் சொல்ல கேட்டிருப்போம்!
அவர்களுக்குள் விரிசலை பெருசாக்கி அதன் மூலம் வருமானம் பெருக்கவே முயல்கின்றன இன்றைய ஊடகமும் இன்னபிற அதன் சகாக்களும்! கேட்டால் மக்கள் ரசணை. அவர்களை சொல்லி குற்றமில்லை எந்த குதிரை ஓடுதோ அதன்மேல்தானே பந்தயம் கட்டுவார்கள்! நாமும் கண்மூடித்தனமாக இரசிப்பது வரும் சந்ததிகளுக்கு உகந்தது அல்ல!
இன்றைய எழுத்துலகம் என்னவோ வளர்ச்சி பாதையை நோக்கி செல்வது மாதிரி தெரிந்தாலும் அது வீழ்ச்சியை நோக்கி தான் வீறுநடை போடுவதாய் என் மனதுக்கு படுகிறது. எழுத்தின் ஆளுமை கொண்டு சண்டையிடுங்கள், எவன் பெரியவன் என்றல்ல! எழுத எண்ணற்ற களமிருக்கிறது, அதற்குரிய காலமும் இருக்கிறது. என் போன்ற வளரும் வாசகர்களுக்கு வளமான படைப்புகளை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் உங்கள் ஒவ்வொருத்தரின் மேல் இருக்கிறது என்று சொல்லி விடைபெறுகிறேன்!
வாசகனாக,
அரசன் .....
Tweet |