புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 27, 2014

கேள்விகளும், என்னோட ஆகச்சிறந்த பதில்களும் ....


அலுவலக வேலைப்பளு, இணைய பிரச்சினைகளினால் பதிவை மிக சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். (இல்லைன்னா மட்டும் அப்படியே நீட்டிட்டாலும் ....) எப்போதும் வருட இறுதியில் தான் இந்த தொடர்பதிவுகள் சராமாரியாக வந்து கொண்டிருக்கும். இப்போது வருட மத்தியில் வந்திருக்கிறது இருந்தாலும் தொய்வாக இருக்கும் பதிவுலகத்திற்கு இப்படியாவது ஒரு எழுச்சி ? தேவையாயிருக்கிறது. என்னைக்கு உருப்படியாய் எழுதிருக்கேன் இன்னைக்கு எழுத, சோ நோ சீரியஸ் ஒன்லி ஜாலி ... வாத்தியார் அவர்களின் கட்டளைக்கிணங்கி இதோ நானும்.... 


1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

தனித்தீவில் அப்போதைய உலக அழகியோடு தன்னந்தனியாய் கொண்டாட ஆசை,
என்னைக்கு நாம ஆசை பட்டது நடந்திருக்கு, இது நடக்க... 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இப்பொழுது அவசரமாய் ருமேனிய மொழி, அங்கிருந்து பெண் தோழி நிறைய மெயில் அனுப்புகிறாள். அவள் மொழியில் அவளுடனும் அவளின் தோழிகளுடனும் உரையாடி மகிழ ருமேனிய மொழியை கற்றுக் கொள்ள விருப்பம்.

3.கடைசியாக சிரித்தது எப்போதுஎதற்காக?

வாழ்க்கை என்னை பார்த்து சிரிக்க, நான் அதைப் பார்த்து சிரிக்க .. எப்போதுமே ஒரே சிரிப்பு தான்... இப்போ கூட சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இமயமலைக்கு பயணம் மேற்கொள்வேன், மீண்டும் பவர் கட் என்றால் நாட்டை விட்டே போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

உங்கள் வாழ்க்கை, உங்கள் கைகளில் ...

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

விவசாய நிலங்களை அதிகப் படுத்த முயலுவேன். 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

மனைவியிடம், வருகிறவளும் என்னைப் போலிருந்தால் தான் என்னிலை மோசமாக இருக்கும். 


8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

சிரித்து ஊக்கப் படுத்துவேன். நமக்கு விளம்பரம் முக்கியம் ..
  
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 அது நண்பரைப் பொருத்து ....

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

என்னோட பழைய போட்டோக்களை, நான் கிறுக்கிய கிறுக்கல்களை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பேன். இதை விட வேறு தண்டனை இருக்க முடியுமா ? 


Post Comment

ஜூன் 24, 2014

சிணுங்கலின் சத்தம் ....



சன்னக் குரலில் அலைபேசியில்
காதல் பேசுகிறாள்
மல்லிகை சூடிய
முன்னிருக்கை மங்கை!

மடியில் இரண்டை வைத்துக்கொண்டு
இளமை கொண்டாடுகிறது
வலப்பக்க 
இருக்கை சோடிகள்!

சிணுங்கலின் சத்தம் சொல்கிறது
பின்னிருக்கை நிகழ்வை!

தடதடத்துக் கொண்டிருக்கும் 
இந்த நள்ளிரவின் பேருந்து பயணத்தில்,
வேகங்கொண்ட மட்டும் 
ஓடிய 
என் சிந்தனை குதிரைகளுக்கு 
இப்போது 
மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது!

Post Comment

ஜூன் 14, 2014

சுற்றிப் பெய்யும் மழை ....




கன மழைக்கு அச்சாரமாய் 
சிறு தூறலும்,
பேரிடிகளுமாய்,  
வானம் அதிர்ந்து கொண்டிருக்கிறது!

வருவானென்று காத்திருந்து 
அயர்ந்த நேரத்தில், 
வர இரவு மூணு ஆகுமென்ற
அவனின் குறுஞ்செய்தியோடு 
மொபைல் ஒளிர்ந்தது!

அடக்க முடியா அழுகையாய் 
கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது 
"மழை"

  




Post Comment

ஜூன் 12, 2014

அழகிகளின் பேருந்து ...


முன்பெல்லாம் பயணமென்றால் பேருந்து தான் எனது முதல் சாய்ஸ், அது நெடுந்தூரமாக இருந்தாலும், குறுகிய பயணமாக இருந்தாலும் சரி. சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி பின்னோக்கி ஓடும் மரங்களை இரசிப்பதில் ஒரு அலாதி. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பயணமென்றாலே ஒரு வித எரிச்சல் தொற்றிக் கொள்கிறது, அதுவும் பேருந்து என்றால் சொல்லவே வேணாம்....

நடக்க கூடிய தொலைவில் இருந்ததினால் அலுவலகத்திற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்த எனக்கு அலுவலகம் மாறியது பெரும் தலைவலியாய் இருக்கிறது. எப்பவாது பேருந்தை நாடிய நான் தினமும் பேருந்தை நோக்குவதாய் நேர்ந்துவிட்டது. நாட்கள் செல்ல செல்ல பழகிவிடும் என்று நம்புகிறேன்.  

தினமும் வேடிக்கையாகவும், விரக்தியாகவும் சென்று கொண்டிருந்த பயண வேதனை, நேற்று கொஞ்சம் இரம்மியமாக அமைந்தது என்று சொல்வதில் மிகையிருக்காது என்று நினைக்கிறேன். வழக்கம் போல் பேருந்துக்காக காத்திருக்கையில், அழகிகளால் (மகளிர் பேருந்து அல்ல என்பது இங்கு மிக முக்கியம்) நிரம்பிய தாழ்தள சொகுசு பேருந்து ஒன்று வந்து தனது இரு இதழ்களை மெல்ல திறந்துகொண்டு என்னை வா, என்றழைக்க தயங்காமல் ஏறினேன். உள்நுழைந்த சற்று நேரத்தில் உள்ளூர உணர்ந்தேன், அவர்களைனைவரும் அழகிய அரக்கிகளென ... என்னா அராத்து... 




ஒரே சிரிப்பொலியும், பேச்சொலியுமாக பேருந்தே அதகளம் தான். பதிமூன்றுக்கும் மேற்பட்ட அழகிகளில் ஒருவர் கூட தலை வாரவில்லை எல்லாம் பார்லர்களின் புண்ணியத்தால், பேருந்தின் மங்கலான வெளிச்சத்தில் மின்னியபடி இருந்தன நிமிர்த்தப்பட்ட கூந்தல்? மேலை நாகரீகம் பாரபட்சம் பாராமல் அவர்களைனைவரையும் அரவணைத்திருந்தது. அழகிய பிரதேசங்களை சீராட்டியபடி வித விதமான "ஹெண்ட் பேக்" மாட்டியிருந்தாலும் மொபைல்களை மட்டும் உட்கரங்கள் வேர்க்க வேர்க்க பத்திரப் படுத்தியிருந்ததை பார்த்து கண்கள் வேர்க்க ஆரம்பித்து விட்டது, யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டேன்!

அக்கூட்டத்தினுள் உடல் பருத்த அழகியொருத்தி இருந்தாள், உடலுக்கு பொருந்தாத குரல். மொத்தக் கூட்டமும் அதிரும்படி அடிக்கடி சிரித்து மொத்தக் கூட்டத்தின் கவனத்தையும் தன் மேல் விழும்படி பார்த்துக்கொண்டாள். எனக்கு மட்டும் ஏனோ சிரிக்கும் போதெல்லாம் வித்தைக் காட்டும் பாம்பாட்டியாகவே தெரிந்தாள் அவள்.     

இன்னொருத்தி மெல்ல இதழ் விரிக்க, அருகில் நின்றவள் என்னவென்று சைகையில் கேட்க, இவள் மொபைல் அவள் கைக்கு மாறிய இருபது வினாடிகளில் அவள் சற்று பல் தெரியும்படி சிரித்து விட்டாள். பாவம் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை வீறிட ஆரம்பித்துவிட்டது. உண்மையில் அவள் சிரிப்பு அழகாகத்தான் இருந்தது, என் போல் அந்தக் குழந்தைக்கு இரசனை இல்லையென்றே கருதுகிறேன். 

கல்லூரிக் காலங்களுக்கே உரிய சீண்டலும் சில்மிசமும் நிறைந்த வாழ்க்கையை நகரத்து வாழ் தோழிகளும், தோழர்களும் நிறைவாக பயன் படுத்திக் கொள்கின்றனர். நான் கண்டவரை புறநகர்களில் சற்று குறைவு தான் என தோன்றுகிறது ... 

ஏதோ ஒரு நிறுத்தத்தில் இரண்டு மூன்று அழகிகளை தவிர்த்து மற்றவர்கள் இறங்கி கொள்ள, பேருந்து ஏதோ நரகத்தை நோக்கி விரைவதாய் தெரிந்தது இந்த நகரச் சாலைகளில். அடுத்த நிறுத்தத்தில் எஞ்சிய அழகிகளும் டாட்டா காட்டிவிட நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமியபடி நகர்கிறது நகரப் பேருந்து உறுமியபடி....    

Post Comment

ஜூன் 10, 2014

ஊர்ப் பேச்சு # 17 ( Oor Pechu # 17)


யெக்கா, வேப்பண்ண இருந்தா கொஞ்சம் கொடேன், சொல்லிபுட்டு இடுப்புல இருந்த புள்ளைய திண்ணையில எறக்கி வுட்டா பாஞ்சாலை...

எதுக்குடி இந்த மத்திய நேரத்துல வேப்பண்ண கேக்குற ன்னு கேட்டுகிட்டே வடக்கால பனை மறப்புல மாட்டியிருக்கும் வேப்பண்ண சீசாவை தேடினாள் தங்கம்.

மூணு வருசம் ஆகுது, இன்னும் பாலு குடி மறவாம மார புடிச்சி கடிச்சி வைக்குறான் ஓம் பேரன்... அப்பனை கொண்டு வித்துடுவான் போல்ருக்கு...

ஆக்குற சோத்துல ரவ ஊட்டிவுட்டினா பாலு குடி தேடுமா, புள்ளைக்கு ... ஆக்குன தடம் மறையாம தின்னு, சட்டிய கழுவி காய வைச்சா பின்ன என்ன பண்ணுவாம்!... ஆக்குன கஞ்சில ரெண்டு உப்பு கல்லு போட்டு ஆத்தி கொடு, ருசிய கெட்டினா புடிச்சிப்பான், அப்புறம் பாலு தேடாது, பல்லு படாம வைச்சிக்கலாம்.

கம்மம் மாவு அரைச்ச திருவையில ஒட்டியிருந்த மாவ அள்ளி மூஞ்செல்லாம் இளிப்பிக்கொண்டு பாஞ்சாலை மடியில வந்து ஜங்குன்னு உக்காந்தான் மாசிலாமணி! 

என்னடி இப்படி மூக்கு ஒழுவுது, எத்தன நாளா இப்படி ஒழுவுது?

இல்லக்கா இப்பதாம் ரெண்டு நாளா ஒழுவிகிட்டு இருக்கு, உள்ளார சோறாக்கி கிட்டு இருந்தேன், அதுக்குள்ள ரெண்டு வட்டா தண்ணி ல, வூடு மொழுவ கொண்டாந்து வைச்சிருந்த பொட்ட மண்ண அள்ளி போட்டு குதியாட்டம் போட்டுட்டான். அதான் சளி புடிச்சிகிட்டுது.

பச்ச புள்ளைவோளுக்கு ரவ தண்ணி பட்டாலே அனத்திக்கிட்டு வந்துரும், நீ தான் பாத்து கவனமா இருக்கணும்டி. சரி பொழுதோட வூட்டுக்கு வா, கீழ காட்டுக்கு போயிட்டு திரும்புகால்ல தூதுவளா பறிச்சியாறேன், நல்லண்ண வுட்டு வதக்கி கொடுத்தா சரியா போய்டும்.

சரியக்கா ன்னு சொல்லிட்டு, மூக்கி சிந்தி வுட்டுட்டு முந்தானையில தொடைச்சிகிட்டு மாசிலா மணியை இடுப்புல வைச்சிகிட்டு கெளம்பினாள் பாஞ்சால...

பாஞ்சால போறதையே கொஞ்சம் நேரம் பார்த்துகிட்டே, எம்புள்ளை இருந்திருந்தா இப்படி தான் இருப்பா, மரத்தை வுட்டுட்டு கெளைய கொத்திகிட்டான் எமப்பய ன்னு சொல்லி பெரு மூச்சி விட்டா தங்கம்! 

தங்கத்துக்கு ஒத்த புள்ள தான், பேரு செந்தாமரை, எட்டின சொந்தத்துல கட்டி வைச்சாங்க, குடும்பத்தோட நல்லா இருந்தா ...
குடிசாமி கோயில் கெடா வெட்டி படையல் போடும்போது புருஷன் தண்ணிய போட்டுக்கிட்டு வந்து இரகள பண்ணினான், இவ மானம் போவுதேன்னு கேக்க,
போத கிறுக்குல இருந்தவன் பொல்லாதையும் இல்லாததையும் பேசி நாலு இருக்கு வுட்டுட்டான்...

ரோசம் தாங்காம வூடு வந்த சுருக்குல தூக்குல தொங்கிட்டா நாலு மாசமா இருந்த கிறுக்கு மவ...

புள்ளையே போச்சி இனி பேசி என்ன பயன்னு துண்ட ஒதறி தோளுல போட்டுகிட்டு , அழுது பொறண்டுகிட்டு கடந்த தங்கத்தையும் வூட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டார் பச்ச முத்து...

கொழுந்தெலையா பறிச்சியாந்து, நல்லண்ணைய சளும்பர ஊத்தி வதக்கி வைச்சிகிட்டு வாசலையே பாத்துட்டு உக்காந்திருந்த தங்கம், வாச வழியா போன ராசாம்பு கிட்ட, பாஞ்சாலைய ஒரு எட்டு புள்ளைய தூக்கி கிட்டு வர சொல்லேன் ன்னு சொல்லிட்டு சிணுங்கிட்டு இருக்கும் நெருப்புல கரண்டிய வைச்சா சூடு ஆறாம இருக்க ......   

   

Post Comment

ஜூன் 07, 2014

அஞ்சலை - கண்மணி குணசேகரன்




சென்ற ஆண்டு நடைபெற்ற பதிவர் சந்திப்பின் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராகத்தான் அண்ணன் கண்மணி அவர்களின் அறிமுகம் கிட்டியது. மண் சார்ந்த படைப்பாளி என்று உருவத்தை வைத்தே கணித்துவிடுமளவிற்கு எளிமையான மனிதர். அன்றைய உரையில் எந்த குறிப்புகளுமின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேல் இனிமையான உரையாற்றிய பின் இவரின் மேல் கூடுதல் ப்ரியம் உண்டானது என்னுள்! வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வியலை நேர்த்தியாக பதிவு செய்வதில் அண்ணனுக்கு நிகர் அண்ணனே!

வாசித்து முடித்த அடுத்த சில நாட்களில் எல்லாம் பல நூல்களை மறந்திருக்கிறேன். ஆனால் திரு. கண்மணி குணசேகரன் அவர்களின் "அஞ்சலை" என்னும் நாவலை வாசித்து ஆறுமாதம் ஆகியும் இன்னும் அதன் தாக்கம் மனதின் ஓரத்தில் வேர் கொண்டுள்ளது. எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது என்பது தனிக்கதை! 

கற்பனைகளை தவிர்த்த நிதர்சனத்தின் பதிவு என்று அஞ்சலை என்னும் நாவலை நான் சொல்வேன். அஞ்சலை என்னும் பெண்ணை கொண்டு, அவளை சுற்றி நிகழும் வாழ்வியல் சூழலை மிக நுட்பமாய், எழுத்தில் கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதை அண்ணன் தனக்கே உரிய நடையில் எழுதி, வென்றிருக்கிறார் என்பதை எண்ணி இன்னும் வியப்பாகவும், பெருமையாகவும் இருக்கிறது!

குறிப்பாக அஞ்சலை நெல் கட்டு சுமந்து வருவதையும், அவள் தாளடிக்கும் முறையையும், அவளை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தி களத்து மேட்டுக்கு வந்த பின் அவளின் வெட்கத்தையும், மன தவிப்பையும் படித்துக் கொண்டிருக்கையில், காட்சியாக கண் முன் வந்து போகிறது. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் காட்சியாக வருவதை படித்தவர்கள் உணர்ந்திருப்பர்.

திருமணம் என்ற பெயரில் பெண் ஒருத்தி ஏமாற்ற பட்டு, அதன்பின் அவளின் இன்னல் சூழ் வாழ்வினை மிக அழுத்தமாய் பேசியிருக்கும் இந்த நாவலில் கற்றுக் கொள்ள ஏகப்பட்ட விடயங்கள் பொதிந்துள்ளன. நான் கண்ட, வாழ்ந்த கிராமத்து வாழ்வினை எழுத்தாய் வாசிக்கையில் கூடுதல் சுகம் சேர்கிறது!

எங்கேனும், யாரேனும் அஞ்சலை என்று அழைத்தால், மின்னல் மணித்துளிகளில் இந்நூலின் ஆணி வேரான நாயகி அஞ்சலை சட்டென்று வந்து போகிறாள் என்னுள். இதுதான் எழுத்துக்கும், எழுத்தாளனுக்கும் கிடைக்கும் வெற்றியென கருதுகிறேன்....

இன்னும் இன்னும் சொல்லப்படாமல் புதைந்து கிடக்கும் எண்ணற்ற வாழ்வுகளையும், அதை வாழ்ந்த மனிதர்களையும் எழுத்தில் கொண்டு வருமாறு அண்ணன் கண்மணி குணசேகரன் அவர்களை வேண்டிக் கொள்கிறேன். 

தமிழினி பதிப்பகத்தின் வாயிலாக வந்திருக்கும் இந்நூல் வாழ்க்கையில் தவற விடக்கூடாத நூல், வாசித்துப் பாருங்கள் தோழமைகளே!

ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்குங்கள் : டிஸ்கவரி புக் பேலஸ்         


Post Comment

ஜூன் 05, 2014

பயணத் தேவதை...





புழக்கமில்லாத கிணறின் 
அடர் பாசி போல் 
சலனமற்றிருக்கும் மனதிற்குள்  
கல்லெறிந்து இறங்கும் 
பயணத் தேவதைகளுக்கு 
விரைவில் திருமணம் நடக்கட்டும்  
என்பதைத் தவிர வேறெந்த 
வேண்டுதலுமில்லை!!! 








Post Comment