புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 10, 2014

ஊர்ப் பேச்சு # 17 ( Oor Pechu # 17)


யெக்கா, வேப்பண்ண இருந்தா கொஞ்சம் கொடேன், சொல்லிபுட்டு இடுப்புல இருந்த புள்ளைய திண்ணையில எறக்கி வுட்டா பாஞ்சாலை...

எதுக்குடி இந்த மத்திய நேரத்துல வேப்பண்ண கேக்குற ன்னு கேட்டுகிட்டே வடக்கால பனை மறப்புல மாட்டியிருக்கும் வேப்பண்ண சீசாவை தேடினாள் தங்கம்.

மூணு வருசம் ஆகுது, இன்னும் பாலு குடி மறவாம மார புடிச்சி கடிச்சி வைக்குறான் ஓம் பேரன்... அப்பனை கொண்டு வித்துடுவான் போல்ருக்கு...

ஆக்குற சோத்துல ரவ ஊட்டிவுட்டினா பாலு குடி தேடுமா, புள்ளைக்கு ... ஆக்குன தடம் மறையாம தின்னு, சட்டிய கழுவி காய வைச்சா பின்ன என்ன பண்ணுவாம்!... ஆக்குன கஞ்சில ரெண்டு உப்பு கல்லு போட்டு ஆத்தி கொடு, ருசிய கெட்டினா புடிச்சிப்பான், அப்புறம் பாலு தேடாது, பல்லு படாம வைச்சிக்கலாம்.

கம்மம் மாவு அரைச்ச திருவையில ஒட்டியிருந்த மாவ அள்ளி மூஞ்செல்லாம் இளிப்பிக்கொண்டு பாஞ்சாலை மடியில வந்து ஜங்குன்னு உக்காந்தான் மாசிலாமணி! 

என்னடி இப்படி மூக்கு ஒழுவுது, எத்தன நாளா இப்படி ஒழுவுது?

இல்லக்கா இப்பதாம் ரெண்டு நாளா ஒழுவிகிட்டு இருக்கு, உள்ளார சோறாக்கி கிட்டு இருந்தேன், அதுக்குள்ள ரெண்டு வட்டா தண்ணி ல, வூடு மொழுவ கொண்டாந்து வைச்சிருந்த பொட்ட மண்ண அள்ளி போட்டு குதியாட்டம் போட்டுட்டான். அதான் சளி புடிச்சிகிட்டுது.

பச்ச புள்ளைவோளுக்கு ரவ தண்ணி பட்டாலே அனத்திக்கிட்டு வந்துரும், நீ தான் பாத்து கவனமா இருக்கணும்டி. சரி பொழுதோட வூட்டுக்கு வா, கீழ காட்டுக்கு போயிட்டு திரும்புகால்ல தூதுவளா பறிச்சியாறேன், நல்லண்ண வுட்டு வதக்கி கொடுத்தா சரியா போய்டும்.

சரியக்கா ன்னு சொல்லிட்டு, மூக்கி சிந்தி வுட்டுட்டு முந்தானையில தொடைச்சிகிட்டு மாசிலா மணியை இடுப்புல வைச்சிகிட்டு கெளம்பினாள் பாஞ்சால...

பாஞ்சால போறதையே கொஞ்சம் நேரம் பார்த்துகிட்டே, எம்புள்ளை இருந்திருந்தா இப்படி தான் இருப்பா, மரத்தை வுட்டுட்டு கெளைய கொத்திகிட்டான் எமப்பய ன்னு சொல்லி பெரு மூச்சி விட்டா தங்கம்! 

தங்கத்துக்கு ஒத்த புள்ள தான், பேரு செந்தாமரை, எட்டின சொந்தத்துல கட்டி வைச்சாங்க, குடும்பத்தோட நல்லா இருந்தா ...
குடிசாமி கோயில் கெடா வெட்டி படையல் போடும்போது புருஷன் தண்ணிய போட்டுக்கிட்டு வந்து இரகள பண்ணினான், இவ மானம் போவுதேன்னு கேக்க,
போத கிறுக்குல இருந்தவன் பொல்லாதையும் இல்லாததையும் பேசி நாலு இருக்கு வுட்டுட்டான்...

ரோசம் தாங்காம வூடு வந்த சுருக்குல தூக்குல தொங்கிட்டா நாலு மாசமா இருந்த கிறுக்கு மவ...

புள்ளையே போச்சி இனி பேசி என்ன பயன்னு துண்ட ஒதறி தோளுல போட்டுகிட்டு , அழுது பொறண்டுகிட்டு கடந்த தங்கத்தையும் வூட்டுக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டார் பச்ச முத்து...

கொழுந்தெலையா பறிச்சியாந்து, நல்லண்ணைய சளும்பர ஊத்தி வதக்கி வைச்சிகிட்டு வாசலையே பாத்துட்டு உக்காந்திருந்த தங்கம், வாச வழியா போன ராசாம்பு கிட்ட, பாஞ்சாலைய ஒரு எட்டு புள்ளைய தூக்கி கிட்டு வர சொல்லேன் ன்னு சொல்லிட்டு சிணுங்கிட்டு இருக்கும் நெருப்புல கரண்டிய வைச்சா சூடு ஆறாம இருக்க ......   

   

Post Comment

8 கருத்துரைகள்..:

rajamelaiyur சொன்னது…

அழகான கிராம நடையில் கலக்குறிங்க ...

ராஜி சொன்னது…

வட்டார வழக்குல கதையைப் படிக்கும்போதே ஒரு உற்சாகம் பிறக்குது அரசா!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஊர்பேச்சுல போற போக்குல நல்ல மருத்துவ குறிப்புகளும் கொடுத்திட்டீங்க அரசன்! மிக்க நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஊர்பேச்சுல போற போக்குல நல்ல மருத்துவ குறிப்புகளும் கொடுத்திட்டீங்க அரசன்! மிக்க நன்றி

aavee சொன்னது…

இந்த டீடெயில் எல்லாம் எங்க புடிக்கறீங்க??

சிகரம் பாரதி சொன்னது…

அசத்தலான படைப்பு. மண்வாசனை மாறாமல் பேச்சு வழக்கை கலைநயத்தோடு பதிவு செய்திருப்பது அழகு. உங்கள் சுய அறிமுகம் ரசிக்க வைக்கிறது. நம்மில் பலர் பொருளாதாரம் தேடி சிறு சிறு கூடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள் தான். என் தளம்:சிகரம் - http://newsigaram.blogspot.com

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மன்வாசனை மணக்கும் எழுத்து
தம +1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கிராமிய மொழியில் அசத்தறீங்க அரசன்....