புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 12, 2014

குஷ்பூவும், தமிழக போலீஸும் ...


இன்று காலை அண்ணாசாலையிலிருந்து வடபழனி நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருக்கும் போது சத்தியமூர்த்தி பவனின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம், சமீபத்தில் "கை"க்கு தாவிய தங்கத் தலைவி குஷ்பூ வந்திருக்காங்களோன்னு பேரார்வத்தில் எட்டிப்பார்த்தேன், வெறும் கதர் வேட்டிகளா தெரிஞ்சதும் டபுக்குன்னு தலைய திருப்பிக்கிட்டேன். வழக்கம் போல வேட்டி உருவலாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். சுமார் 50 போலீஸ்களும், இரண்டு மூன்று வஜ்ரா வண்டிகளும் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தது.  பத்திரிக்கை கூட்டமொன்று அவர்களின் தீனிக்காக அலைமோதிக் கொண்டிருந்தனர். சென்ற தேர்தல்களில்லாம் திமுக வை மாபெரும் வெற்றி பெறச் செய்த குஷ்பூ வரும் தேர்தலில் காங்கிரசை தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்கப் போகும் தலைவிக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தியமூர்த்தி பவனிலிருந்து சற்று தூரம் தள்ளி ஒரு லெட்டர் பேடு கட்சியின் சுமார் பத்து பேர் கொண்ட பெருங்கூட்டமொன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.. யாரோ, யாரிடமோ மன்னிப்பு கேட்கவேண்டுமாம். கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு மூச்சுமுட்ட ஒரு தொண்டர் கத்திக் கொண்டிருக்க ஏனைய தொண்டர்கள் அவர்களுக்கே கேட்காத குரலில் திருப்பி சொல்லிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தையும்? பத்திரிக்கை  தூணொன்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. ஒன்னும் விளங்கல... அந்த 10 பேர் கொண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த 20லிருந்து 30 போலீஸ்களும், ஒரு பாதுகாப்பு வாகனமும் நிறுத்தப் பட்டிருந்தது. இரண்டு இடங்களிலும் சேர்த்து சுமார் 80 போலீஸ்கள் நின்று கொண்டிருந்தனர். 

தினந்தோறும் ஏதாவதொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வள்ளுவர் கோட்டம் இன்று அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இல்லையென்றால் இங்குமொரு 100 போலீஸ்கள் தேமே வென நிற்க வேண்டியிருக்கும். தினந்தோறும் முளைக்கும் கட்சிகளுக்கும், வெறும் விளம்பர பிரியர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தே ஓய வேண்டிருக்கிறது. காது கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கூட்ட இரைச்சல்களுக்கு மத்தியில் எதுவுமே காதில் விழாத மாதிரி நிற்கும் இந்த காக்கிகளை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு கோமாளித்தனங்களை நாள்தோறும் அவர்கள் கடந்து போக வேண்டியிருக்கிறது. 

நண்பனொருவன் சென்ற வருடத்தில் போலீஸுக்கு தேர்வாகி ஆர்வமுடன் சென்றவனை சில மாதங்கள் கழித்து சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், அவன் வேலைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் வேறு ஏதாவது சொல்லி திசை திருப்பிக் கொண்டிருந்தான். நேரிடையாகவே கேட்டேன். மிடுக்காக, கர்வமுடன் வேலைக்கு சென்றவன் சற்று சோர்வாக, அவன் வேலை நிலையை கூறியது கொஞ்சம் வருத்தத்திற்குரியது தான். எங்கள் பகுதியில் துணை ஆய்வாளாராக 28 வயதில் ஒரு வாலிபம் வந்திருந்தது, அவர் வந்ததிலிருந்து ஏரியாவில் ஆடிக்கொண்டிருந்த பலர் வாலை சுருட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப் பட்டிருந்தனர். அனால் துரதிருஷ்டம் என்னவெனில் அவர் கூட பணி செய்யும் சக போலீசுகள் சிலர் தில்லாலங்கடி வேலை செய்து வேறொரு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். எல்லாம் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.

உடலெரிக்கும் கத்திரி வெயிலிலும், சென்னையின் ஜெமினி மேம்பாலத்திலும், பீச் ரோட்டிலும் ஐந்தடிக்கு ஒரு காவலர் வீதம் நிற்கும் காக்கிகளை நினைத்து பாருங்கள். எந்த ஜென்மத்திலோ அவர்கள் மிகப்பெரிய குற்றம் இழைத்திருப்பார்களோ என்று சில நேரங்களில் வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன். அதுவும் பெண் போலீசுகள் நிலை பாவம். சரி எதையோ சொல்ல வந்து எங்கோ வந்து நிற்கிறேன் பாருங்கள்.

தேவையற்ற வீண் ஆடம்பரத்திற்காகவும், தன் இருப்பை நிலை நிறுத்தி, மீடியாவின் பார்வையிலே இருப்பதற்காகவும் தான் பல கட்சித் தலைமைகள், எதற்கு எடுத்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று அலப்பரையை கூட்டுகின்றனர். எந்த வொரு விசயத்தையும் தீர்ப்பதற்காக இவர்கள் போராடுவதில்லை, முடிந்தவரை பிரச்சினையை தீர்க்க விடாமல் சொரிந்து சுகம் காணவே அலைந்து கொண்டிருக்கும் கட்சிகள் பல இங்குள்ளன. தேவையற்ற விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தும் சில்வண்டுகளுக்கும் பத்திரிக்கையில் இடம் தந்து பணம் பார்க்கும் பத்திரிக்கை தர்மத்தை எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை.

நேற்று முளைத்த காளான்கள் போலிருக்கும் சின்ன சின்ன கட்சிகளுக்கும், காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கையில் மனம் சற்று கோபமடைகிறது, இவர்களை கோபம் சொல்லி என்ன பயன், அதிகாரத்திலிருக்கும் அரசு ஆணையிட்டால் தானே இவர்கள் சுழல்வார்கள். அரசோ தனக்கு இலாபமில்லாத எந்தவொரு விசயத்திலையும் மூக்கை நுழைப்பதில்லை. நேற்று முளைத்த காளான்கள் என்று வேறு சொல்லிவிட்டேன், இப்படித்தான் 65 வருடத்திற்கு முன் திமுகவையும், 42 வருடத்திற்கு முன் அ திமுகவையும் அப்போதைய பலம் வாய்ந்த கட்சிகள் நினைத்திருக்கும். இப்போது இந்த இரு கட்சிகளின் வேர் மிக ஆழமாக இருக்கிறது. எதையும் நாம் சுலபமாக சொல்லிவிடக்கூடாது. தமிழக மக்களை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.

நமது பணத்தை விரயமாக செலவு செய்வதை தட்டி கேட்க மனமில்லாத சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி எதிர்காலம் நன்றாக இருக்குமென்று ஆருடம் சொல்ல முடியும்? வாழ்க நானும், எனது குடும்பமும்.... 


     

Post Comment

டிசம்பர் 06, 2014

களவாடிய பொழுதுகள்...

எந்தவொரு திரைப்படத்திற்காகவும் இந்த அளவிற்கு எதிர்பார்த்து காத்திருந்ததில்லை, திரு. தங்கர் பச்சானின் "களவாடிய பொழுதுகளுக்காக" நீண்டதொரு காத்திருப்பிலிருக்கிறேன். தங்கரின் கருத்துக்கள் சிலதோடு முரண்பட்டாலும், அவரின் படைப்புகளை பெரிதும் நேசிப்பவன் நான். எழுத்தானாலும் சரி, சினிமா என்றாலும் சரி அவரின் படைப்பில் ஒரு ஜீவனிருக்கும். மண்ணின் மணம் நிறைந்திருக்கும். என் போன்ற கிராமத்தானின் உணர்வுகளை சுமந்திருக்கும் என்பதும் ஒரு காரணம் என்று கூறலாம். 

நன்றாக நினைவிருக்கிறது, நான்கு வருடங்களுக்கு முந்தி ஒரு பனிக்கால அதிகாலையில் திரு. தங்கர் பச்சானின் "அம்மாவின் கைப்பேசி" நாவலை வாசித்தேன். அந்த நூலில் மேலும் சில கதைகள் இருந்தது. ஆனால் அம்மாவின் கைப்பேசி தந்த பாரத்தை மனதின் ஓரத்தில் இன்னும் சுமந்து கொண்டுதானிருக்கிறேன். அதையே படமாகவும் எடுத்தார், நாவல் தந்த உந்துதலினால் முதல் நாளே சென்று பார்த்தேன். எழுத்தில் இருந்த நேர்த்தி, காட்சியாக திரையில் காணும் போது இல்லை. நடித்திருந்த நாயக, நாயகிகளின் குறை, திரைக்கதையில் தெளிவின்மை இப்படி நிறைய குறைகள் இருந்தாலும், ஒரு பிரேமுக்குள் என்ன என்ன இருக்க வேண்டும் என்பதை கச்சிதமாக காட்டியிருந்தது கொஞ்சம் ஆறுதல்.




இப்போதும் அவரின் நாவலொன்றை தான் களவாடிய பொழுதுகள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இப்போ வரும் அப்போ வருமென்று காத்திருந்த எனக்கு சமீபத்தில் சில விளம்பரங்களை வெளியிட்டு இந்த வருடத்திற்குள் வருமென்று சொல்லியிருந்தார், மீண்டும் உற்சாகமானேன். ஆனால்  இப்போ அதற்கான வாய்ப்புகளும் மிக குறைவுதான் போலிருக்கிறது. பெரிய முதலைகளோடு மோதுவது மிகக் கடினம். 

முகமறிந்த ஒரு கலைஞனுக்கே இந்த நிலையெனில், முகமறியா படைப்பாளிகளின் நிலைகளை எண்ணி பெருங்கவலை கொள்கிறது மனசு. இந்தநிலை ஆரோக்கியமான சூழலை உணர்த்துவதாக தெரியவில்லை. 

களவாடிய பொழுதுகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிப்பேரரசு வைரமுத்து சொன்னது போல் காலம் கனிந்து வரும் அதுவரை காத்திரு, உன் காத்திருப்பு வீண் போகாது என்று சொன்னது ஆறுதலாக இருந்தாலும், தன் படைப்புக்காக, ஒரு படைப்பாளி இவ்வளவு நாள் காத்திருப்பது கொடுமைதான். 

திரைக்கு வருவதற்கு முன் ஒரு திரைப்படம் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்குமென்று ஓரளவு அறிந்திருந்தாலும் இப்படியான கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் சில திரைப்படங்கள் முடங்கி கிடப்பது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும் சினிமாவின் சக்கரம் பின்னோக்கி சுழலாதா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 




களவாடிய பொழுதுகளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன் திரு. தங்கர் அவர்களே ...
    

Post Comment

டிசம்பர் 04, 2014

"மருதாணி வீடு"...



குடைந்தெடுத்த கற்கோயில்
போல கம்பீரமாய் வீடு,
சத்தம் கூட புகா வண்ணம்,
சரளைக்கல் சுற்றுச் சுவர்!


அந்த வீட்டை தவிர்த்து
ஊருக்குள் வழி சொல்வது கடினம்!


அங்குள்ள தென்னைகளுக்கு
நூறுக்கு மேலிருக்கும்
வயசு,
என்பார் "சுருட்டை" மெல்லும்
கருப்பு மாமா!


கடைசியாக அவ்வீட்டை
கடக்கையில்,
நான்காம் தலைமுறையின்
பேரக்குழந்தைகள் விளையாடுவதை
வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது
அவ்வீட்டின் முற்றம்!


அறுபதடுக்கு மிடுக்கைத் தாண்டியும்
அவ்வப்போது வந்து போகும்
அந்த "மருதாணி" வீடு 
அயலகத்தின் தனிமை இரவுகளில்!


மூன்று வருடம் கழிந்து 
ஊர் திரும்புகையில் 
அவ்விடம் வந்ததும் 
அனிச்சையாய் தலை திரும்ப 
அதிர்ச்சியாய் இருக்கிறது,


அவ்வீட்டைக் கொன்று
இரண்டடுக்கில் சமாதியொன்றெழுப்பி,
"இன்பகமென்று" 
பெயர் சூட்டியிருக்கிறார்கள்!....  




Post Comment

நவம்பர் 25, 2014

மொபைல் கிளிக்குகள்...


வைக்கோல் போர் போட அடிபட்டரைக்கு பயன்படுத்த, சோளத்தட்டைகள் வீணாகாமல் இருக்க சேமித்து வைக்கும் முறை. 


நண்பகலில் ஒருத்தரை கூட காண இயலா எங்களூர், இதே நேரத்தில் சென்னையை நினைத்தால் ? 


வறண்டு கிடக்கும் பாசன ஏரி, இதே நிலைதான் விவசாயத்துக்கும்...


காளைக்கு செருப்பணிவிக்கும் வைபவம் .... 

குளித்து களிக்கும் சிறுவர்கள்.  


இதன் பெயர் தெரியவில்லை. 


அரிதாகி வரும் "பத்தாயம்". 


கூட்டுக்குடும்பம். 


இதன் இலையை எலும்பு முறிவுக்கு வைத்து கட்டுவர். 


மழைக்கு முந்திய மதியவேளையில். 


Post Comment

வளைந்த பனை...




தாவுகால் போட்டு 
கிளுவை கொழுந்தை 
உன் ஆடுகள் தின்று கொண்டிருக்க,
மேல்கரையோரம் 
என் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க,


வறுத்த ஈசல் கலந்த அரிசியில் 
நாமிருவரும் பசியாறிய 
அந்த வளைந்த "பனை",
அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது  
நீயற்ற 
"என்னிருப்பை". 




Post Comment

நவம்பர் 24, 2014

கயலும், அன்புடன் அன்பரசியும்....


முன்பெல்லாம் பாடல் வெளியிட்ட மறுதினமே தரவிறக்கம் செய்து கேட்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்த என்னை, தமிழ் இசையமைப்பாளர்கள் பெரிதும் சோதிக்க ஆரம்பித்ததும், "வேண்டாம் டா சாமீ, இந்த விபரீத விளையாட்டு" என்று நானாக ஒதுங்கி கொண்டேன். அவ்வப்போது சில ஆதர்ச இசையாளர்களின் படங்களை மட்டும் தரவிறக்கி கேட்டு வருகிறேன். அவர்களும் தற்பொழுது அடித்த மத்தளத்தையே திருப்பி போட்டு அடிக்க ஆரம்பித்திருப்பது தான் சோகத்திலும் சோகம். அளவுக்கு மீறி நிறைய படங்களில் ஒப்புக் கொண்டுவிட்டால் இப்படித்தான் அரைத்த மாவையே அரைக்க வேண்டும் போல, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள் போலும். துட்டுக்களின் உலகத்தில் இயங்கிகொண்டு, தொழில் தர்மம், பயபக்தி பற்றி பேசும் என்னை,  இளம் பெண்ணொருத்தி,  முச்சந்தியில் வைத்து முத்த தண்டனை கொடுக்க உரக்க சபியுங்கள்.



மைனா, கும்கி கொடுத்த உந்து சக்தியால், "கயலை" தரவிறக்கம் செய்து கொண்டிருந்த என் கண்ணில் சிக்கினாள் அந்த "அன்புடன் அன்பரசி". ஆம் அது ஒரு தமிழ் சினிமாவின் பெயர். பெயரில் சொக்கிவிழுந்து  அன்பரசியையும் தரவிறக்கி எனது மியூசிக் பிளேயரில் சேமித்த நான் அத்தோடு அன்பரசியை மறந்து விட்டு, கயலை ஓடவிட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். கும்கி அளவிற்கு கயல் என்னை ஈர்க்கவில்லை. பெரிதும் நம்பிய யுகபாரதியும் என்னை ஏமாற்றி விட்டார். யுகபாரதியின் வரிகளில் இருக்கும் இளமை துள்ளல் ஏனோ "கயலில் மிஸ்ஸிங்", ஒருவேளை திரையில் காட்சியாக மிரட்டுவாளா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

கேட்டவரை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது 

ஒரத்தநாடு கோபு என்பவரின் குரலில், "அவ மேல ஆசைவைச்சான்" கானா வகை பாடல் கேட்க புடிக்கிறது. 

 அடுத்து, பால்ராம் குரலில் "உன்னை இப்போ பாக்கணும்" வரிகளுக்காகவே கேட்கவேண்டும் போலிருக்கிறது.

என் நெஞ்சுக்குள் குடியிருக்கும் குரலழகி ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் "என் ஆளை பாக்க போறேன்" பாடல் தான் அடிக்கடி காதை சிலிர்ப்பூட்டுகிறது. இதை எப்படி காட்சிப் படுத்தியிருப்பார் பிரபு சாலமன் என்று இப்பவே மனம் ஒரு தவிப்பிலிருக்கிறது. 

மற்ற பாடல்களில் மைனா, கும்கி சாயலிருந்தாலும் மோசமில்லை, கேட்கலாம் இரகம். 

சரி வாங்க அன்பரசியை பார்ப்போம். 

அன்புடன் அன்பரசியை கொஞ்ச நாள் கழிச்சி தான் கேட்டேன். பல தமிழ் சினிமாவில் கேட்ட இசையை இவர்கள் சற்று வேறு வித்தியாசமாக? போட்டிருந்தார்கள். அதில் ஒன்றிரண்டு ஓகே இரகம். "உன்னை மட்டும் தான்டா, நான் கண்ணா நெனச்சேன்டா, ஓகே சொல்லு போதும் விளையாடலாம்" என்றொரு பாடாவதி பாடலொன்றை ஒரு பெண் பாடியிருக்கிறாள். பாடல் சுத்த மோசம், ஆனால் அதை பாடிய பெண்ணின் குரல் கிறுக்க புடிக்க வைக்கிறது, ஏதோ ஈர்ப்பு இருக்கிறது, அதற்காகவே அந்த பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பெண்ணின் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில் கூகுளை ஆராய்கையில், அப்படத்தின் ட்ரைலரை பார்த்து பீதியில் உறைந்துள்ளேன்.    

(தலைவர் டூயட்டின் போது) 


இசை சத்ய தேவ் என்று போட்டிருந்தார்கள், இதற்கு முன் கேள்வி படாத  பெயர். வேறு எவரையும் இம்சிக்காமல் இயக்குநர் ஆல்வின் அமல பிரசன்னாவே அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பதோடு மட்டுமில்லாமல் நடித்தும் இருக்கிறார். இதுவரை எவரும் சொல்லாத காதலை இவர்கள் காட்டப்போவதாய் சொல்லியிருக்கிறார்கள்.  ஏதோ ஒரு உன்னத இலட்சியத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கும் அக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தவிர சொல்ல வேறொன்றுமில்லை!

(தலைவர் காதல் கொள்ளும் அழகே தனி தான்)

வாலிபன் சுற்றும் உலகம், திருமதி தமிழ் போன்ற திரைகாவியங்கள் வரிசையில் இப்படமும் மிகப்பெரிய வெற்றியடையட்டும்...


Post Comment

நவம்பர் 21, 2014

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி)




ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,
மற்றும் "ஆவி".


விதிமுறைகளும்நிபந்தனைகளும்:
  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  • கதைகள் நகைச்சுவைகாதல்க்ரைம்சமூக உணர்வுக் கதைகள்,விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோயார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை'இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வாரமாத இதழ்களுக்கோஇணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.

  • கதை உங்கள் தளங்களிலோவேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோநிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும்தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு12 மணிக்குள் (IST)

  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:

  •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால்MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

  •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்திபிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : 


Dates to Remember : 





Post Comment

நவம்பர் 19, 2014

குட்டிகளிரெண்டும்...


ரெண்டு நாளா அந்தப்பக்கம் போகமுடியல, அஞ்சாறு தடவைக்கு மேல சாணிய கரைச்சிப் போட்டு பார்த்தும் , குடலை குமட்டிக் கொண்டு வருது குருணை மருந்தின் நாத்தம். "இந்த வழியா போற சனங்களுக்கு பதில் சொல்லி மாளல...


எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இப்ப நெனச்சாலும் இருதயம் எக்குத்தாப்பா துடிக்குது. பங்காளிச்சி கூட சண்டைன்னு புத்தி மலங்கி போயி மருந்த திங்க போவேனா? கதவை உடைச்சிகிட்டு எம்புள்ள வரலைன்னா, "வடக்க போயி" ரெண்டு ராத்திரியாயிருக்கும். கையிலிருந்த மருந்தை புடுங்கி கொண்டு போயி கெழக்கால கொட்டிவிட்டு வந்துட்டான், நாத்தம் ஊர கூட்டுதுன்னு ரெண்டு நாளைக்கு முந்தி நடந்த கதையை ரோம்பாளிடம்(லோகம்பாள்) சொல்லிக்கொண்டிருந்தாள் தேனு...


என்னதான் சண்டையா இருந்தாலும், இந்த மாதிரி முடிவு எடுக்குறது தப்பு தேனு, தலைக்கு ஒசந்த ஆம்பள புள்ள இருக்கு, வயசுக்கு வர மாதிரி பொம்பள புள்ளைய வைச்சிகிட்டு இப்படி ஒரு விபரீதம் தேவையா ? சொல்லு ன்னு சொல்லிக்கிட்டே, திருகையில் கைப்பிடி உளுந்தை கொட்டி அரைக்க ஆரம்பிச்சா- ரோம்பா.

அதாம்புள்ள, சொல்றேனே எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இன்னும் ஆச்சர்யமா இருக்கு, அதுமட்டுமில்ல அந்த *&#டியா பேசுன பேச்சு அப்படி, இல்லாதது பொல்லாதத சொல்றவளுக்கு நல்ல சாவே வராது பாரேன்...

நரம்பில்லாத நாக்கு என்ன எழவை வேணும்னாலும் பேசும், நாம தான் பொறுமையா இருக்கணும். நிமிசத்துல நாம கண்ண மூடிக்குவோம், ஆனா பெத்ததுக தவிக்குற பாவத்தை எந்த சென்மத்தலையும் போக்க முடியாது தேனு. பெத்தவ ஊத்துற கஞ்சி போல வருமா ? மத்தவ ஊத்துற கஞ்சி. உன்னைய நம்பித்தான் வூட்டுக்காரர் வெளிநாடு போயிருக்கார், அதையும் மனசுல நிறுத்தி இனி பொழப்ப பாரு, இனியும் இந்த மாதிரி மோசமான முடிவெல்லாம் வேணாம் புள்ள.

இனியும் இந்த மாதிரி கனவுல கூட நெனைக்க மாட்டேன் ரோம்பா, எந்த சாமி புண்ணியமோ தொடாமலே புத்தி வந்தது. அப்பன் இல்லாம கூட புள்ள வளர்ந்துரும், ஆனா ஆத்தா இல்லாம வளரும் புள்ளைகளோட நெலம இருக்கே, சொல்லி மாளாது. 

ஆமாம் தேனு, என் நாத்தனார் வழியில ஒருத்தி இப்படித்தான், புருஷன் ஏதோ சொல்ல, நடு சாமத்துல கயித்துல தொங்கிட்டா, பாவம் அந்த ரெண்டு பொட்ட புள்ளைகளும். அவன் மறு கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமாத்தான் இருக்கான், புள்ளைங்க நெலம தான் மகா மோசமாம்.

அட ஏன் ரோம்பா அம்புட்டு தூரம் போற,  நம்ம பொன்பரப்பியா ஒடுவந்தழ தின்னுட்டு கண்ண மூடிக்கிட்டா, மறு கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் குடியே கதின்னு கெடக்குறான் சின்னதுரை. புள்ளைங்கள பார்த்தியா தெவையா தெவைக்குதுக. அதுவும் இந்த பொங்க, தீவாளிக்கு நல்லது பொல்லது பண்ணி கொடுக்க ஆத்தா இல்லாம ரெண்டும் ஏங்கி தவிக்கிறத பார்த்தா நெஞ்சு சுருக்குங்குது, எத்தனை நாளைக்கு தான் அக்கா காரி தங்கச்சி புள்ளைகளை பார்த்துக்குவா ?

அவளும் பாவமில்ல தேனு, அவளும் மூணு புள்ளைகளை வைச்சிருக்கா, அதோட சேர்த்தி தான் இதுகளையும் பார்த்துக்குறா... கட்டுனவன் ஒன்னும் சொல்லலைன்னாலும் மாமியாக்காரி சும்மா இருப்பாளா?

"என்ன பண்றது எல்லாம் விதி" - தேனு.

ஆமாம் கேக்க மறந்துட்டேன் எங்க புள்ளைய காணோம்? 

கால் பரீட்சை லீவுல்ல, அதான் எங்கம்மா வூட்டுல விட்டுட்டு வந்திருக்கேன் ரோம்பா. "வீரன்" அங்க தங்க மாட்டேன்னுட்டான். வர சனிக்கிழம போய் கூட்டியாரனும். 

பெறாக்கா அப்படி ரெண்டு நாளு தங்கிட்டு வரட்டுமே"ன்னு சொல்லிக்கொண்டே ஒடச்ச உளுந்த சல்லடையால சலிச்சும் முடிச்சா லோகம்பாள்.

"வாங்கு" விழுற சத்தம் கேட்டு வாசல்ல எட்டிப்பார்த்தா, வேப்பந்தழை கட்டை வாசலில் சாய்த்து வைத்து விட்டு கை கால் கழுவ போனான் வீரன். 

கிண்ணத்துல சோறள்ளி போட்டு, புளிச்ச தயிர கலந்து கொண்டாந்து வைச்சா தேனு. 

ஒடைச்ச உளுந்த கூடையில அள்ளிக்கொண்டு, வாரேன் தேனு ன்னுட்டு கெளம்பினால் ரோம்பா..

என்ன அத்த, திருமால் என்ன பண்றான் ன்னு கேட்டான் வீரன். 

"அது எங்கையாவது பம்பர கட்ட அடிக்க போயிருக்கும் வீரா" ன்னு சொல்லிக்கொண்டே தெருவை தாண்டி ரோட்டை தொட்டு, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் லோகம்பாள்.

 ரெண்டு வாய் சோறை அள்ளி போட்டுக்கொண்டு, "தொட்டுக்க எதுனா கொண்டாம்மா" என்று சொல்லி முடிப்பதற்குள்,

பலாக்கொட்டை, முருங்கை காயை சுண்டிய கொழம்போடு கொண்டு வைத்தாள் தேனு.

சாப்புட்டு பெரு ஏப்பமொன்றை விட்டபடி எழுந்து போனவனை பார்த்து, 
ரொம்ப நேரம் ஏரில குதியாட்டம் போடாம, மத்தியானம்  ஒழுங்கா நேரத்துக்கு சாப்புட வந்துடணும் வீரா என்று சொல்ல,

சரிம்மா ன்னு சொல்லிபுட்டு சாவகாசமா நடந்தான் வீரன் பசங்க கூடியிருக்கும் கோவிலை நோக்கி .....

வீரன் போறதையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு நின்னவ மனசுல, சட்டுன்னு ஆட்டுக் குட்டிக நெனப்பு வர ஓடி,  தும்ப திரிச்சி விட்டா.

வாசலில் சாத்தியிருந்த வேப்பந்தழைகளை, வாலை ஆட்டியபடி தின்று கொண்டிருக்கின்றன, பத்து நாட்களுக்கு முன் இரயிலுக்கு "தாயை பலி கொடுத்த ஆட்டுக் குட்டிகளிரெண்டும்".....      

Post Comment

நவம்பர் 14, 2014

வெள்ளமொன்றில்...



கோடு சேரா 
கோலப் புள்ளிகளைப் போல
தனித்தே இருக்கின்றன,
அந்த ஏகாந்த நினைவுகள்!

வேண்டாமென்று விலக்கி,
ஆறு முடிந்து 
ஏழாம் வருடம் துவங்கி 
ஒன்பது நாட்களாகிறது!

அனல் வெயில்,
தொடர் மழை 
இதில் ஏதாவதொன்று 
உணர்த்திக் கொண்டிருக்கிறது
அந்த கிறக்கச் சுவையை!

பெருமழைக்கு முந்திய 
இடியொன்றில் சாயாமல்,
பிந்திய 
சிறு வெள்ளமொன்றில் 
கரைந்து போகவே காத்திருக்கிறேன்!










Post Comment

நவம்பர் 05, 2014

சில நொடி சிநேகம் - குறும்பட அனுபவமும், கன்னிகளும்....


திரும்புகிற பக்கமெல்லாம் அழகிகளாக?, சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் தான் காண கிடைக்கும் என்று நம்பி கொண்டிருந்த என் எண்ணத்தை பொய்யென்றது கும்பகோணம் நகராட்சி.  திரு. ஆர் வி சரவணன் இயக்கி சமீபத்தில் வெளியான சில நொடி சிநேகம் குறும்படத்திற்கான ஷூட்டிங்கிற்காக குடந்தையில்  காலடி வைத்த நொடியிலிருந்து நோக்குமிடமெல்லாம் தேவதைகளாக காட்சி அளித்த கும்பகோணத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இதற்காகவே இயக்குனருக்கு தனி நன்றி சொல்லியாகவேண்டும். 

தேவதைகளைப் பற்றி சொல்லுமுன் உங்களிடம் எனது முதல் நடிப்பு அனுபவத்தை சொல்லிட வேண்டுமென்று அடி மனசு அடம்பிடிப்பதால் சொல்லிவிடுகிறேன். 

பள்ளியில் கூட நாடகமென்றால் பின்னோக்கி நகரும் சுபாவம் கொண்ட நான், எந்த துணிச்சலில் குறும்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சில இரவுகளில் வியந்திருக்கிறேன் சாரி பயந்திருக்கிறேன்! சின்ன உதறலுடன் தான் குடந்தையூருக்கு பயணமானேன். இருப்பினும் அண்ணன் ஆவி, துளசிதரன் சார், மற்றும் கீதா மேடம் போன்ற அறிந்த முகங்களே இருப்பதால் கொஞ்சம் தைரியமாகவும் இருந்தது. 

பதற்றத்தில் துவங்கியதால் முதல் காட்சி ஓகே ஆகவே கொஞ்சம் நேரம் பிடித்தது, பிறகு அனைவரும் இயல்பு நிலைக்கு வந்தமையால் காட்சிகள் சற்று எளிதாகவும் நினைத்த மாதிரியும் வர ஆரம்பித்தன. மதிய உணவுக்கு பிந்திய பேருந்துநிலைய இறுதி காட்சிகளில், மூணே மூணு வசனத்தை வைத்துக்கொண்டு நான் தவித்த தவிப்பை குடந்தை பேருந்து நிலையத்திடம் கேட்டாலும் சொல்லும், ஒருவழியாய் ஓகே என்று இயக்குனர் சொன்னபிறகு தான் மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.

சரி வாங்க நம்ம தேவதைகள் கதைக்கு வருவோம். ஷூட்டிங் நடைபெறும் தருணங்களில் சில தேவதைகள் எங்களை கடந்து போனாலும் கவனிக்க நேரமின்றி இருந்தமையால், மதிய உணவுக்கு முன்பு அண்ணன் ஆவி அவர்களின் காட்சிகளை பேருந்து நிலையத்தில் படமாக்க, நான் பேருந்து நிலையத்தை சற்று வலம் வந்தேன், பேருந்து நிலையம் பராமரிப்பின்றி படு கேவலமாக இருக்கிறது, ஆனால் நகரப் பேருந்து நிலையம் அருமையாக இருக்கிறது. கண்ணில் விழுந்த கன்னிகள் சிலர் தேவதைகளாகவும், பலர் தேவதைகளின் தோழிகளாகவும் இருந்தது பெரும் வியப்பு...

கண்ட முக்கால்வாசிப் பெண்கள் ஒப்பனைகளற்ற இயற்கை எழிலோடு இருப்பதால் சட்டென்று கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். அண்ணன் ஆவியும் இதே கருத்தை சொன்னதில் மனம் சந்தோசத்தில் திளைத்தது. மறுநாள் இயக்குனரின் இல்லத்தில் சுவையான காலை உணவை உண்டோம், வெகுநாள் கழித்து விருந்து உண்ட நிறைவை தந்தது.

வலங்கைமானிலிருந்து குடந்தை வரும் வழிகளில் சின்ன சின்ன கால்வாய்களும், தென்னை மரங்களுமாய் மனதை திணறடித்துக் கொண்டிருந்தது இயற்கை. சின்ன சின்ன இடைவெளிகளில் கோயில் இருப்பது கூடுதல் இனிமை. பெரிதாய் சுற்றிப் பார்க்கவில்லை என்றாலும், துண்டு துண்டுகளாய் ரியல் எஸ்டேட் கூறு போட்டதில் போக மிச்சமிருக்கும் அந்த சின்ன கிராமங்கள் இவ்வளவு அழகென்றால், ஒரு 40, 50 வருடங்களுக்கு முந்தி என்ன ஒரு எழிலோடு இருந்திருக்குமென்ற  எண்ண ஓட்டங்களுடன் சென்னை நோக்கி விரைந்தது எங்களின் விரைவுப் பேருந்து ..... 

Post Comment

அக்டோபர் 20, 2014

மூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை


சென்ற வருடங்களில் சென்னையில் நடந்த தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இம்முறை கூடல் நகராம் மதுரையில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. 

தீபாவளியின் தொடர்ச்சி ஞாயிறு வரை உள்ளது, ஆம் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிறு 26/10/2014 அன்று மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா நிகழ இருக்கிறது, அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விழா நிகழ்ச்சி குறிப்புகள் 




குடந்தையூர் ஆர்.வி. சரவணன்  இயக்க, கோவை ஆவிதிரு. துளசிதரன் மற்றும் நான் நடித்திருக்கும்? சிலநொடி சிநேகம் என்கிற குறும்படமும் விழா அன்று வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


வாருங்கள் நண்பர்களே மதுரையில் சந்திப்போம் .....


Post Comment

அக்டோபர் 10, 2014

இதயா எனும் தேவதை ....


இருபதைக் கடந்து இரண்டு மூன்று  வருடங்களாகும் என்பதை அங்கங்கே தேங்கியிருக்கும் அவளழகு சொன்னது. இப்படியொரு பெண்ணை இப்பொழுதுதான் இவ்வளவு நெருக்கத்தில் காண்கிறேன். தீவிர சிந்தனையில் இருக்கையில் திடீரென வந்து பயமுறுத்தும் ஏதாவது ஒன்றைப் போல் தான் அவளும் வந்து அதிர்ச்சியளித்தாள். ஆனால் அதிலொரு சுகம் இருந்தது. இரவுப் பணியும் பார்க்கிறாள் என்பதை கண்ணுக்கு கீழிறக்கத்தில் கரு"மை"யில்  எழுதியிருந்தது!

சொல்ல மறந்துவிட்டேன் அவளொரு "நர்ஸ்", ஆம் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் சமீபத்தில் பார்த்தேன். அவளுக்கென்றே பிரத்யோகமாக தைக்கப் பட்ட உடை போலிருந்தது, அணிந்திருந்த அந்த வெளிர் "பிங்க்" சீருடை. அழகியலை சேமித்திருக்கும் அதிசய உடையாகத்தான் தெரிந்தது. பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், அவளின் கழுத்துக்கு கீழே பார்வையை செலுத்த, அடையாள அட்டை தன் பின் பக்கத்தை காட்டியபடி பல்லிளிக்க, மீண்டும் கண்ணுக்கே திரும்பியது என் பார்வை.

மனதுக்குப் பிடித்திருந்தால் உடனே அது பரிச்சய முகம் போல் தெரிவதை அன்று தான் முதன் முதலாக உணர்ந்தேன், இதற்கு முன் எங்குமே சந்தித்திராத அவளை, எங்கோ சந்தித்த உணர்வை தந்தது அவளின் முகம். அவள் பேசினாள், எல்லாப் பெண்களையும் போல் தான் குரலிருந்தது. பேசுகையில் சற்று தலையை சாய்த்து சாய்த்து பேசுவது பிடித்திருந்தது, அதற்காகவே அவளை  பேசவிட்டு கேட்க வேண்டும் போலிருந்தது. உதட்டில் பொய்யில்லை, கண்களில் கொஞ்சம் பொய் இருப்பதாய் எனக்கு தோன்றியது. ஒருவேளை என்னோட பலகீனமாக இருக்கலாம். 

ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீளவில்லை எங்களின் பேச்சு, இல்லையில்லை அவள் நான்கு நிமிடங்கள் பேசினாள் , நான் ஒரு நிமிடம் பேசி இருப்பேன். இந்த நேரத்தில் முப்பது முறைக்கு மேல் எங்கள் கண்கள் பார்த்துக் கொண்டன, என்னவாக இருக்கும் என்று யூகிக்க எனக்கு விருப்பமில்லை! அவளுக்கு எப்படியோ தெரியவில்லை! இன்று தான் பார்த்திருக்கிறோம் இவளிடம் பேச என்ன இருக்கிறது என்று இன்னொரு பக்கம் மனசாட்சி உள்ளுக்குள்ளே காரி உமிழ்ந்ததையும் இங்கு சொல்லியே ஆகவேண்டும். 

அவள் பூசியிருந்த மெல்லிய நறுமணம் மனதுக்கு இதமாய் இருந்தாலும், பணியில் இருக்கும்போது "சென்ட்" அடிக்காதீங்க என்று சொன்னேன். பதிலேதும் கூறாமல் சிரித்தபடி விலகிச்சென்றாள், மீண்டும் வருவாள் என்று உள் மனசு சொன்னாலும், வெளியெங்கும் துழாவிக் கொண்டிருந்தன வெட்கங்கெட்ட விழிகளிரண்டும். உள்மனசு சொன்னது போல் வந்தாள் ......... 

எங்கள் மருந்தகத்தில் இந்த மருந்தில்லை இல்லை, வெளியில் வாங்கிவருமாறு ஒரு "தாளை" கொடுத்து விலகிச் சென்றாள். சிறிது நேரம் கழித்து வாங்கி வந்து கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வாங்கி கொண்டாள், அப்பொழுது அவளின் சுண்டு விரல் என் சுண்டு விரலோடு உரசியது. எந்த சலனுமுமில்லை.  பெண்ணொருத்தியின் விரல் பட்டால் போதும் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருக்கும் என்று சொன்ன நண்பன் குமாரை *+-*.# ல் அடிக்க வேண்டும் என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

பெயரையும் மொபைல் எண்ணையும் இருவரும் பகிர்ந்து கொண்டு புன்னகைத்து விடைபெற்றோம். பணி முடிந்து விடுதி திரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் இதயா. நேற்று வரை நன்றாகத்தான் இருந்தேன், ஏன் இப்பொழுதும் நன்றாகத்தான் இருக்கிறேன். அவளிடம் ஏதாவது பேசவேண்டுமென்ற உந்துதல் மட்டும் மேலோங்கி இருக்கிறது. இதற்காக அவளை நான் காதலிக்க துவங்கி இருக்கிறேன் என்று நீங்கள் அனுமானித்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல. சத்தியமாய் சொல்கிறேன் அவள் மேல் காதல் கொள்ளும் எண்ணம் துளியுமில்லை.  

நிறைய பேசவேண்டும் என்ற தவிப்பு என்னிடம் இருப்பது போல் அவளுக்கும் அதே பரபரப்பு இருப்பதாய் சுற்றி சுழலும் அந்த முயல் கண்கள் சொல்கிறது. மேக கூட்டங்களோடு பயணிப்பது போன்ற உணர்வை தந்த அந்த அழகிக்கு என் அன்பார்ந்த ஆராதணைகள் எப்போதிருக்கும்! 

நான் சொல்லியும் நீங்கள் நம்பாத அது, வந்துவிட்டால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!


Post Comment