புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 22, 2015

"ஜெயகாந்தன் எனும் கர்வம்"


2015 ஏப்ரல் 8, ஜெயகாந்தன் என்னும் எழுத்து சிங்கம் மறைந்த நாள். ஜெயகாந்தனைப் பற்றி யாரிடம் கேட்டாலும், அவரொரு சிங்கம், புலி என்று மிகையாக சொன்னமையால் இதுவரை அவரின் எழுத்துக்களை வாசிக்கவே விரும்பியதில்லை. "சில நேரங்களில் சில மனிதர்கள்" நூலை வாங்கிய தினமே, திரைத்துறையைச் சார்ந்த நண்பர் ஒருவர் வாசித்து விட்டு தருவதாக சொல்லி வாங்கிப் போனவர் தான் இந்த நொடி வரை அந்தப் புத்தகத்தை கண்ணில் காட்டவே இல்லை, நானும் பலமுறை கேட்டு சலித்து விட்டேன், அதன் பிறகு எனது கவனம் சம காலத்திய சக்ரவர்த்திகளை? நோக்கி திரும்பியமையால் JK வின் மீதிருந்த கவனம் சிதைந்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். சென்ற புத்தக திருவிழாவில் தான் "ரிஷி மூலம்", "அந்த அக்காவை தேடி" என்ற இரு நூல்களையும் வாங்கி இருக்கிறேன் என்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் விரைவில் வாசித்து விட வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியிருக்கிறது.

சென்ற சனிக்கிழமை, டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன் ஒருங்கிணைத்த, வடபழனி RKV ஸ்டுடியோவில் நிகழ்ந்து முடிந்த, ஜெயகாந்தனின் நினைவஞ்சலியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இப்படியான கூட்டத்திற்கு அரங்கம் நிறைந்திருந்தது ஆச்சரியத்தை தந்தது. பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவரவர், JK வோடு பழகிய தமது அனுபவங்களை சொல்ல சொல்ல, அவரொரு எளிதிலும் மிக எளிதான வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிந்தது. பேசிய பிரபலங்களில் ஜெயகாந்தன் அவர்களின் ஆவணப் படமெடுத்த திரு, ரவி சுப்பிரமணியன் மற்றும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் ஆகிய இவர்களின் பேச்சும் மிகையில்லாமல் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. 



தான் விரும்பிய வாழ்க்கையை அவ்வாறே வாழ்ந்து முடித்திருக்கிறார் அமரர் JK. பெரிதும் படித்திடாதவரின் தமிழ்ப் பற்றும், எழுத்தாளுமையும் அதன் மூலம் தான் யாரென்று இவ்வுலகுக்கு நிரூபணம் செய்த திறமையைக் கண்டு தலை வணங்கத் தோன்றுகிறது. அவரது பார்வை விளிம்பு நிலை மனிதர்களின் மீதிருந்திக்கிறது, அவரின் பேனா யாதார்த்தம் பிறழாமல் எழுதி இருப்பதாகவும் பலரும் சொன்னார்கள். இசைஞானி இளையராஜா தயாரிப்பில் திரு. ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்றொரு ஆவணப் படம் வந்திருக்கிறது. நேரமொதுக்கி பாருங்கள் JK வாழ்ந்த மறைவுகளற்ற வாழ்க்கைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடியும். 

வழக்கம் போல ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்கள், ஜெயகாந்தன் மறைந்ததும், அவர் பற்றிய செய்தி தொகுப்பு என்கிற பெயரில், அவரின் அந்தரங்கங்களை சேகரித்து அவற்றினை எழுதி, தங்களது கல்லாக்களை நிரப்பிக் கொள்ள முயன்றுள்ளனர். இவர்கள் இப்படி பண்ணக் கூடுமென்று தெரிந்து தான் முடிந்த வரை கண்ணாடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் போலும். யாரிடம் தவறுகளில்லை, மனிதராய் பிறந்த எல்லோரிடமும் தவறுகள் நிறைந்திருக்கிறது. படைப்புகளோடு நின்றுவிடாமல் படைப்பாளியின் அந்தரங்க வாழ்க்கையினுள் மூக்கை நுழைப்பது தவறு என்று எப்போது அறிவார்களோ? இந்த ஊடக அறிவு ஜீவிகள். 



அவரைப் பற்றி கூறும் அவரின் நண்பர்களும் அந்த "சபையை" பற்றியே கூறுவது மேலும் எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்கெல்லாம் கவலைப் படாத மனிதர் தான், இருந்தும் வரும் தலைமுறைகளுக்கு அவரைப் பற்றிய பிம்பம் வேறுமாதிரியல்லவா அறியக் கூடும்!  அந்தவகையில் எழுத்தாளர் எஸ். ரா. ஜெயகாந்தன் பற்றிய பேச்சிலும், எழுத்திலும் படைப்பாளனின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்காமல் நாகரீகத்தை கடைப்பிடித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.   

ஒரு படைப்பாளி என்பதோடு நின்றிருந்தால், தமிழ் இலக்கிய உலகமும், கலை உலகமும் இந்த அளவிற்கு ஜெயகாந்தனை கொண்டாடியிருக்காது, பழைய யுக்திகளை உடைத்தெறிந்து, புதிய சிந்தனைகளை புகுத்தி, தனி வழியில் சென்று வெற்றியும் அடைந்தவர் என்பதினால் தான் இந்த மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள். காலம், எப்போதும் "டிரெண்ட் செட்டர்களை" மட்டுமே அதன் தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது. இலக்கிய உலகில் JK மாபெரும் டிரெண்ட் செட்டர் தான். 

ரவியின் ஆவணப் படத்தில் ஜெயகாந்தனின் பேச்சில், ஒரு கம்பீரத் திமிரு இருக்கிறது, அதில் தானென்ற கர்வம் துளியுமில்லை. மாறுபட்ட சிந்தனைகளை கொண்டவரிடத்தில் இசையார்வமும் இருந்திருக்கிறது. குழந்தை சிரிப்பில் கோவமும் கலந்திருக்கிறது. அந்தக் கோபத்தில் குழந்தையின் குறுகுறுப்பும் இருக்கிறது. அந்த முறுக்கு மீசையும், வெள்ளை முடியும் கொண்ட மனிதனை காண்கையில் மனதுக்குள் ஒரு வெறிநிரம்பிய தவிப்பு ஊற்றெடுக்கிறது. இவரைப் போல் ஒருநாளாவது வாழ்ந்திட உள்ளத்துடிப்பு கூடுகிறது. 

யாரிடமும், எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தான் தானாகவே வாழ்ந்து மறைந்த ஜெயகாந்தன் போன்றதொரு மனிதன் மீண்டும் பிறக்கப் போவதில்லை, JK வின் சிம்மாசனத்தை நிரப்ப எவராலும் முடியாது. அப்படியொரு மனிதனை ஆவணப் படுத்திய இசைஞானி இளையராஜா அவர்களுக்கம், திரு. ரவி சுப்ரமணியன் அவர்களுக்கும், காலம் கடந்தும் தமிழ் இலக்கிய உலகம் நன்றி செலுத்திக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!   



Post Comment

ஏப்ரல் 18, 2015

கொம்பனும், சென்னை உ. அ . வரவேற்கிறதும்...





முதல் நாள் இரவுக் காட்சி பார்ப்பதாக புக் பண்ணி, கிருஷ்ணசாமி கிச்சு கிச்சு மூட்டியமையால் இரண்டாம் நாள் இரவாக மாறிப்போனது, முதல் நாள் சாயந்திர காட்சி பார்த்துவிட்டு, பருத்திவீரனை தூக்கி சாப்பிட்டுவிட்டது, நடிப்பில் கார்த்தி பட்டையை கிளப்பியிருக்கிறார் என்ற சல்லைகளுக்கு மத்தியில் போய் பார்த்தால், எப்பவோ அரைத்து இறுகிப் போன மாவை மீண்டும் பழைய தண்ணியை கலந்து அரைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா, அவ்வளவே. சட்டென வந்து விருட்டென தியேட்டரை விட்டு கிளம்பியிருக்கும் கொம்பனை, தன்னுடைய வெட்கங்கெட்ட அரசியலுக்காக சர்ச்சையை கிளப்பி வாங்கி கட்டிக்கொண்டதில்லாமல், சற்று ஆசுவாசப் படுத்தி அனுப்பி வைத்த பெருமை திரு. கி. சாமி யையே சாரும். சென்சார் போர்டுன்னு ஒன்னு இருப்பது தெரியாமலே கொடி பிடித்தால் இப்படித்தான் இருக்குமென இனியாவது அவரவர் உணரட்டும்.

அதே வார கடைசியில் ஊருக்குப் போயிருக்கையில்,  மீண்டுமொரு தடவை கொம்பனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். ஊர்ப்புறங்களில் இருக்கும் தியேட்டர் லட்சணங்களை உலகமே அறியும். கொம்பையா பாண்டியன், சல்லையை கொடுக்கும் எதிரிகளை அல்லையில் மிதிக்கும் போதெல்லாம் அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது. படம் முழுக்க எவனையாவது போட்டு அடித்து துவைத்தாலும், இவர்களின் ஆராவாரிப்பும் ஓயவில்லை என்பது தான் வேடிக்கை. இப்படியொரு மூர்க்கத்தனமான ரசிகர்கள் இருக்கும்வரை கொம்பன் பல்வேறு வடிவங்களில் வந்து நம்மை மிரட்டுவது உறுதி என மனதில் நினைத்துக் கொண்டேன்.

****

 பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் ஓரளவிற்கு பேசப்பட்ட படமென்பதால் "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது" படத்தை பார்த்தேன். தரமான முயற்சி. சினிமா மீது ஆர்வமிருந்தாலும்  அடுத்த கட்ட நகர்வில்லாமல் முடங்கிவிடக் கூடிய பலருக்கு மத்தியில், அந்தளவில் துணிந்து இறங்கி தயாரித்து, இயக்கி வெற்றியும் அடைந்திருக்கும் இயக்குனர் மருது பாண்டியன் அவர்களுக்கு வணக்கமும் வரவேற்பும்.

புதுமுக இயக்குனர்களிடம் இருக்கும் மிகப்பெரிய குறையாக எனக்கு தெரிவது என்னவெனில் தான் நினைத்த அத்தனை விசயங்களையும் தன்னுடைய முதல் படத்தில் புகுத்தி விட நினைப்பது தான். இவரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத திரைக்கதை, கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் பார்க்க வைக்கும் படம் என்றளவில் இது வெற்றித் தான்.

நான் சென்னை வந்த புதிதில் பேச்சுலர்களுக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு. சில காட்சிகளை காணும்போது, அம்பத்தூர் பாடியில் அண்ணன் ஒருவரின் சிறிய அறையில் அடைந்து கொண்டு, ஹவுஸ் ஓனர் வருகையில் கழிப்பறையிலும், குளிப்பறையிலும் மறைந்து நின்ற அவலக் காட்சிகள் மனதில் வந்து போனது, இப்படி படம் பார்க்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்றை நினைவு கூற வைக்க கூடிய படைப்பு.

வசனம், காட்சியமைப்பு என்று சுவராசியமாக இருந்தாலும் இசை தான் இந்தப் படத்தின் மகா சொதப்பல். பின்னணி இசை கதை கடைகிறது, பாடல் மனதில் நிற்கவே இல்லை. ஒவ்வொரு முறையும் ரூமுக்கு பெண்ணை அழைத்து வந்து சல்சா பண்ணுவதினால் வீடு மாற வேண்டி இருக்கிறது என்ற காட்சி படு மொக்கையாக இருக்கிறது. சின்ன சின்ன குறைகள் தவிர்த்து, படம் பாராட்டுதலுக்குரிய தகுதியோடு இருக்கிறது.

சிவாஜி பாடல்களை வைத்து சில காட்சிகளை நகர்த்துவதும், வசனமின்றி வெறும் சிவாஜி பாடல்களை கொண்டு  விவரிப்பதும், ஒரு பெண்ணிடம் என் மேல் நம்பிக்கை இருந்தால் என் கூட ரூமுக்கு வா என்று ஒருத்தன் சொல்வதும் , அந்தப் பெண் இல்லையென்று அழுத்தமாய் சொல்வதும் சரி, அதே பெண் என்னை கல்யாணம் பண்ணிப்பல்ல என்று தன்னை இழப்பதும் செம செம காட்சிகள்.    இதுவே சொல்கிறது இயக்குனரிடம் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது என்று. பாத்திர தேர்வில் ஒரு நேர்த்தி இருக்கிறது. சின்னப் பையன் கூட அவ்வளவு அட்டகாசமாக நடித்திருக்கிறான்.  அடுத்தடுத்த படைப்புகளில் மீண்டும் பெரிய வெற்றியடைய வாழ்த்துவோம். திரையரங்கை விட்டு தூக்காமல் இருந்தால் (முடிந்தால்) திரையில் ஒருமுறை பார்த்துவிடுங்கள்...       

Post Comment

ஏப்ரல் 02, 2015

பால்முலையறுப்பு...


மூன்று பேர் சேர்ந்து
அறுத்து சாய்க்கையில்
எழுப்பிய சத்தம்
இன்னுமென் செவியை
துளைத்துக் கொண்டிருக்கிறது!

நிறைமாத கர்ப்பிணி
வயிறு பிளந்து கிடப்பது போல்
கிளை களைந்து கிடக்கிறது
எங்கள் வீட்டின் மாமரம்!

ஆறு தலைமுறைகளின்
பிள்ளையை,
மரமென அறுத்தெறிந்த
ஏழாம் தலைமுறை
நாங்கள்!

வயிறு நிறைத்த
பால்முலையை
துண்டாடி
வண்டியிலேற்றிவிட்டோம்!

மனசைப் போட்டு குழப்பிக்காதே,
ஒன்றை இழந்தால் தான்
இன்னொன்றை பெறமுடியுமென்ற
சித்தப்பாவின் சட்டையைப்  பிடித்து,

குஞ்சுகளோடு, தன் கூடு தொலைத்து
மரமிருந்த இடத்தையே வட்டமிடும்,
அந்த தாய்ப் பறவைக்கு
என்ன சொல்ல போகிறாய் என்று
கேட்கவேண்டும் போலிருந்தது!

கேட்டால் அதற்கும்
ஒரு காரணி
சொல்லாமலா போய்விடுவார் ?
நாங்கள்தான் மிருகமாயிற்றே!!!

Post Comment

ஏப்ரல் 01, 2015

நதிகள் நனைவதில்லை - எப்படி நனையும்?


இந்த சினிமா உலகம் மிகவும் வேடிக்கையானது என்பதை அடிக்கடி ஏதாவது ஒரு நிகழ்வு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. வலிமையான, திறமையான படைப்பாளிகளுக்கு மத்தியில் சில அரைகுறை ஆர்வக் கோளாறுகளும் அவ்வப்போது வந்து நம்மை கிச்சு கிச்சு மூட்டிகொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலரால் மட்டும் தொடமுடிந்த சினிமாக் கனவை, அதீத ஆசையும், திறமையான சினிமா அறிவும் கொண்ட இன்றைய கிராமத்து இளைஞனால் தொடக் கூடிய  அளவிற்கு தொழில் நுட்ப வளர்ச்சி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் சிலர் அரைத்த மாவையே மீண்டும் அரைக்க வந்திருப்பது தான் கொடுமை.  

கடந்த சில மாதங்களாக நதிகள் நனைவதில்லை என்ற படத்தின் விளம்பரங்கள் கண்ணில் பட்டாலும் பெரிதாய் கண்டுகொள்ளாமல் தான் இருந்தேன். நானும் நண்பர் ஆவியும் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கையில் இப்படத்தை பற்றி தொடர்ந்து மூன்று நாட்களாக பேசிய சுகானுபவமும் நடந்திருக்கிறது. நதிகள் நனைவதில்லை என்ற தலைப்பும், அவர்கள் கொடுத்த விளம்பரங்களும் செம  அட்ராசிட்டி. 

காதலிக்காதவர்களிடம் மட்டும் காதல் பாதுகாப்பாக இருக்கிறது என்று சலம்பல் வேறு அந்தப் படத்தின் போஸ்டர்களில் கண்ணை களவாடியது. பென்சில் fit காலத்தில், பெல்பாட்டம் பற்றி பாடம் எடுக்க வந்திருக்கிறார் என்று சாதரணமாக கடந்து போனாலும் நாஞ்சில் பி. சி. அன்பழகனின் கவித்துவ இயக்கத்தில் என்று வம்படியாய் கழுத்தை நீட்டுபவர்களை என்ன சொல்வது. 

பொங்குவது மட்டுமே உங்க வேலை மிஸ்டர் அன்பு பெயரை நாங்க வைச்சிக்குறோம், நீங்களே கவித்துவ பொங்கல் என்று பொங்கவேண்டாம் ப்ளீச். உங்க படத்தின் போஸ்டர் வடிவமைப்பே சொல்கிறது உங்களின் கவித்துவ லட்சணத்தை சாரி லட்சியத்தை. இன்று காலை உங்களின் கவித்துவத்தின் விளம்பர பதாகையை பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு.

தமிழ் சினிமாவில் படமெடுப்பது 
தற்கொலைக்கு சமமென்றும்,

கதையை, 
கதா நாயகனாக்கியவனை 
ஊசலாட்டாமல் 
ஊஞ்சலாட்டுமாறு கேட்டுக் கொண்ட உங்களின் தைரியத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். 

ஆமாம் மிஸ்டர் அன்பு உங்களை யாரு தற்கொலைக்கு முயற்சிக்க தூண்டியது? பிரியாணி கிண்டும் அடுப்பு தகதகவென்று எரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் அடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு குத்துதே குடையுதே என்றால் நாங்க என்ன ஸார் பண்ண முடியும்?

நல்லக் கதைகளை படமாய் எடுத்துக் கொண்டு திரையிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், மொக்கை கதையொன்றை படமெடுத்துவிட்டு இம்புட்டு பேச்சு உங்களுக்கு ஆகாது பாஸ்.

வலுவான கதையாகவும், உண்மையில் கவித்துவ இயக்கமாக இருந்தால் இன்றைய இரசிகன் நிச்சயம் கொண்டாடுவான், சோ கவித்துவ பொங்கலை ஓரங்கட்டிவிட்டு நல்ல சினிமா எடுங்க அன்பு, நிச்சயம் பேசப்படும். இல்லையெனில் உங்களின் நதி எப்போதும் நனையவே நனையாது...



   

Post Comment