2015 ஏப்ரல் 8, ஜெயகாந்தன் என்னும் எழுத்து சிங்கம் மறைந்த நாள். ஜெயகாந்தனைப் பற்றி யாரிடம் கேட்டாலும், அவரொரு சிங்கம், புலி என்று மிகையாக சொன்னமையால் இதுவரை அவரின் எழுத்துக்களை வாசிக்கவே விரும்பியதில்லை. "சில நேரங்களில் சில மனிதர்கள்" நூலை வாங்கிய தினமே, திரைத்துறையைச் சார்ந்த நண்பர் ஒருவர் வாசித்து விட்டு தருவதாக சொல்லி வாங்கிப் போனவர் தான் இந்த நொடி வரை அந்தப் புத்தகத்தை கண்ணில் காட்டவே இல்லை, நானும் பலமுறை கேட்டு சலித்து விட்டேன், அதன் பிறகு எனது கவனம் சம காலத்திய சக்ரவர்த்திகளை? நோக்கி திரும்பியமையால் JK வின் மீதிருந்த கவனம் சிதைந்தது. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். சென்ற புத்தக திருவிழாவில் தான் "ரிஷி மூலம்", "அந்த அக்காவை தேடி" என்ற இரு நூல்களையும் வாங்கி இருக்கிறேன் என்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் விரைவில் வாசித்து விட வேண்டுமென்ற ஆவல் மேலோங்கியிருக்கிறது.
சென்ற சனிக்கிழமை, டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன் ஒருங்கிணைத்த, வடபழனி RKV ஸ்டுடியோவில் நிகழ்ந்து முடிந்த, ஜெயகாந்தனின் நினைவஞ்சலியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இப்படியான கூட்டத்திற்கு அரங்கம் நிறைந்திருந்தது ஆச்சரியத்தை தந்தது. பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவரவர், JK வோடு பழகிய தமது அனுபவங்களை சொல்ல சொல்ல, அவரொரு எளிதிலும் மிக எளிதான வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிந்தது. பேசிய பிரபலங்களில் ஜெயகாந்தன் அவர்களின் ஆவணப் படமெடுத்த திரு, ரவி சுப்பிரமணியன் மற்றும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் ஆகிய இவர்களின் பேச்சும் மிகையில்லாமல் மனதுக்கு நெருக்கமாக இருந்தது.
தான் விரும்பிய வாழ்க்கையை அவ்வாறே வாழ்ந்து முடித்திருக்கிறார் அமரர் JK. பெரிதும் படித்திடாதவரின் தமிழ்ப் பற்றும், எழுத்தாளுமையும் அதன் மூலம் தான் யாரென்று இவ்வுலகுக்கு நிரூபணம் செய்த திறமையைக் கண்டு தலை வணங்கத் தோன்றுகிறது. அவரது பார்வை விளிம்பு நிலை மனிதர்களின் மீதிருந்திக்கிறது, அவரின் பேனா யாதார்த்தம் பிறழாமல் எழுதி இருப்பதாகவும் பலரும் சொன்னார்கள். இசைஞானி இளையராஜா தயாரிப்பில் திரு. ரவி சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்" என்றொரு ஆவணப் படம் வந்திருக்கிறது. நேரமொதுக்கி பாருங்கள் JK வாழ்ந்த மறைவுகளற்ற வாழ்க்கைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.
வழக்கம் போல ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்கள், ஜெயகாந்தன் மறைந்ததும், அவர் பற்றிய செய்தி தொகுப்பு என்கிற பெயரில், அவரின் அந்தரங்கங்களை சேகரித்து அவற்றினை எழுதி, தங்களது கல்லாக்களை நிரப்பிக் கொள்ள முயன்றுள்ளனர். இவர்கள் இப்படி பண்ணக் கூடுமென்று தெரிந்து தான் முடிந்த வரை கண்ணாடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் போலும். யாரிடம் தவறுகளில்லை, மனிதராய் பிறந்த எல்லோரிடமும் தவறுகள் நிறைந்திருக்கிறது. படைப்புகளோடு நின்றுவிடாமல் படைப்பாளியின் அந்தரங்க வாழ்க்கையினுள் மூக்கை நுழைப்பது தவறு என்று எப்போது அறிவார்களோ? இந்த ஊடக அறிவு ஜீவிகள்.
அவரைப் பற்றி கூறும் அவரின் நண்பர்களும் அந்த "சபையை" பற்றியே கூறுவது மேலும் எரிச்சலைத் தூண்டுகிறது. அதற்கெல்லாம் கவலைப் படாத மனிதர் தான், இருந்தும் வரும் தலைமுறைகளுக்கு அவரைப் பற்றிய பிம்பம் வேறுமாதிரியல்லவா அறியக் கூடும்! அந்தவகையில் எழுத்தாளர் எஸ். ரா. ஜெயகாந்தன் பற்றிய பேச்சிலும், எழுத்திலும் படைப்பாளனின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்காமல் நாகரீகத்தை கடைப்பிடித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.
ஒரு படைப்பாளி என்பதோடு நின்றிருந்தால், தமிழ் இலக்கிய உலகமும், கலை உலகமும் இந்த அளவிற்கு ஜெயகாந்தனை கொண்டாடியிருக்காது, பழைய யுக்திகளை உடைத்தெறிந்து, புதிய சிந்தனைகளை புகுத்தி, தனி வழியில் சென்று வெற்றியும் அடைந்தவர் என்பதினால் தான் இந்த மக்கள் கொண்டாடி இருக்கிறார்கள். காலம், எப்போதும் "டிரெண்ட் செட்டர்களை" மட்டுமே அதன் தோளில் வைத்து கொண்டாடியிருக்கிறது. இலக்கிய உலகில் JK மாபெரும் டிரெண்ட் செட்டர் தான்.
ரவியின் ஆவணப் படத்தில் ஜெயகாந்தனின் பேச்சில், ஒரு கம்பீரத் திமிரு இருக்கிறது, அதில் தானென்ற கர்வம் துளியுமில்லை. மாறுபட்ட சிந்தனைகளை கொண்டவரிடத்தில் இசையார்வமும் இருந்திருக்கிறது. குழந்தை சிரிப்பில் கோவமும் கலந்திருக்கிறது. அந்தக் கோபத்தில் குழந்தையின் குறுகுறுப்பும் இருக்கிறது. அந்த முறுக்கு மீசையும், வெள்ளை முடியும் கொண்ட மனிதனை காண்கையில் மனதுக்குள் ஒரு வெறிநிரம்பிய தவிப்பு ஊற்றெடுக்கிறது. இவரைப் போல் ஒருநாளாவது வாழ்ந்திட உள்ளத்துடிப்பு கூடுகிறது.
யாரிடமும், எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தான் தானாகவே வாழ்ந்து மறைந்த ஜெயகாந்தன் போன்றதொரு மனிதன் மீண்டும் பிறக்கப் போவதில்லை, JK வின் சிம்மாசனத்தை நிரப்ப எவராலும் முடியாது. அப்படியொரு மனிதனை ஆவணப் படுத்திய இசைஞானி இளையராஜா அவர்களுக்கம், திரு. ரவி சுப்ரமணியன் அவர்களுக்கும், காலம் கடந்தும் தமிழ் இலக்கிய உலகம் நன்றி செலுத்திக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!
Tweet |
9 கருத்துரைகள்..:
உண்மையே நண்பரே கடைசிவரை அவர் ஒரு சிம்மசொப்பனமாகவே வாழ்ந்தார்.
தமிழ் மணம் 1
உண்மைதான், அரசன் சே.. பகுத்தறிவு பேசியவன் பண்டாரமாகி, சாதீயப் பெருமிதத்துடனும், சம்ஸ்கிரத அடிவருடியாவும், தமிழினத் துரோகியாக சாவது தனித்துவம்தான்!
We dont need any more of that kind. Let him be unique and dead!
படைப்புகள் அழிவதில்லை...
Thanks for the video
அவரது சிறுகதைகள் சில வாசித்துள்ளேன்! நாவல்கள் வாசித்தது இல்லை! தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியை இழந்துவிட்டோம் என்றால் மிகையில்லை! ஆழ்ந்த இரங்கல்கள்!
கட்டுரை ஆசிரியர் முதலில் ஜெயகாந்தனை படித்துவிட்டு கருத்து எழுதவும். அவரை விட பல மடங்கு சிறப்பாக எழுதிய எழுத்தாளர்கள் பலர் 70 களில் தமிழகத்தில் இருந்தனர்.
ஆனந்த விகடனில் எழுதிவிட்டால் அவர் சிறந்த எழுத்தாளரா?
அவரின் பல கதைகள் மலையாள பிட்டுப் படங்கள், பாலச்சந்தரின் கள்ளக் காதல் கதைகளுக்கு இணையானவை.
இவரை எப்படி சிறுகதை மன்னன் என மனசாட்சியில்லாமல் பேசுகிறீர்கள்?
இவரது நடையும் நறுக் சுறுக் என இல்லாமல், வளவளா ரகம்தான், இவரது கதைவசனங்கள், பாத்திரங்களுக்குப் பொருந்தாமல், செயற்கையாய் அமைந்தவை. இயல்பிலிருந்து பிறழ்ந்தவை.
முதலில் தமிழில் நிறைய படியுங்கள். அடுத்தவர் சொல்வதை கிளிப்பிள்ளை போல் நம்பி விடாதீர்கள்.
சம்ஸ்கிரத அடிவருடியாவும், தமிழினத் துரோகியாக சாவது தனித்துவம்தான்!//
வணக்கம் வருண்.
தான் விரும்பியது போன்று வாழ்ந்து இறப்பது என்பதும் தனித்துவம் தானே!
தமிழினத் துரோகிகளை பட்டியலிட நேரிட்டால், அவர்மட்டுமல்ல அப்பட்டியலில் நீங்களும் நானும் கூட வருவோம் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
கட்டுரை ஆசிரியர் முதலில் ஜெயகாந்தனை படித்துவிட்டு கருத்து எழுதவும். அவரை விட பல மடங்கு சிறப்பாக எழுதிய எழுத்தாளர்கள் பலர் 70 களில் தமிழகத்தில் இருந்தனர். //
அப்புறம் ஏன் ஜெயகாந்தனின் பெயர் மட்டும் வெளியே தெரிய ஆரம்பித்தது என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும் நண்பா,,,
//அவரின் பல கதைகள் மலையாள பிட்டுப் படங்கள், பாலச்சந்தரின் கள்ளக் காதல் கதைகளுக்கு இணையானவை.//
அப்படியாக இருக்கும் பட்சத்தில் மக்களுக்காக அயராது எழுதிய "மக்களின் எழுத்தாளரை" அடையாளம் காட்டுங்கள், நான் படித்து தெரிந்து கொள்கிறேன் ப்ரோ...
//முதலில் தமிழில் நிறைய படியுங்கள். அடுத்தவர் சொல்வதை கிளிப்பிள்ளை போல் நம்பி விடாதீர்கள்.//
நான் தமிழில் அதிகம் படிக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது? நேரமிருப்பின் இந்த பதிவையே இன்னுமொருமுறை படியுங்கள் தோழரே, நான் சொல்ல வந்து கருத்து உங்களுக்கே விளங்கும்... நான் ஒன்றும் குழந்தை இல்லை யார் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்ப ... கருத்து சொல்ல வருகையில் தங்களின் பெயரோடு வாருங்கள், ஏனெனில் அழைக்க சிரமமாக இருக்கிறது....
மறைந்து விட்ட ஒரு மனிதரை பற்றிகூட இங்கே “மறைந்தே” கருத்திடுவதை காட்டிலும் , தன் வாழ்வையே ஒளிவுமறையில்லாமல் வாழ்ந்த படைபாளன் போற்றதக்கவன்.
கருத்துரையிடுக