புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 27, 2015

மலிவுக் கொலைகள்...இனி, யாரிடமும் கோபித்துக் கொள்ள கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன், ஆம் இப்போதெல்லாம் சின்ன சின்ன கோபங்கள் எல்லாம் கொலையில் தான் முடிகின்றன. (என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம்தான்) நித்தம் நிகழ்ந்தேறும் கொலைகளுக்கான பின்னணிகளை படிக்கையில் சிரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மனதினுள் பயம் மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்குகிறது. சல்லிக்காசுக்கு பிரயோசனமில்லாத நிகழ்வுகளுக்கெல்லாம் கொலை தான் தீர்வாக இருக்கிறது. அத்தனை மலிவாகி விட்டது போலும் மனித உயிர்!

முன்பெல்லாம் சினிமாவில் காட்டுவது போல் முறுக்கு மீசையும், மிரட்டும் விழிகளுமாய் பார்ப்பதற்கே கர்ண கொடூரமாய் இருந்த கொலையாளிகள், இப்பொழுது 'ரே பான்' கிளாஸும், 'டச்' போனுமாய் அமைதியாய் நம்மில் ஒருவராய் கலந்துள்ளனர். அவர்களாக சொல்லாதவரை, அவர்களை கொலையாளி என்று இனங்காணுவது மிகக் கடினம். இப்பொழுது சினிமாவில் கூட வில்லன்கள் மிக அழகாகவே காண்பிக்கப் படுகிறார்கள். அவசரமாய் எல்லாத்தையும் அனுபவித்து விட வேண்டி ஏற்பட்ட துடிப்பின் மிகுதி தான் அழிவின் துவக்கப் புள்ளியாக அமைகிறது.     

சென்றவாரம் கோயம்பேடு அருகே, "எங்க தலைமுறையில் பெரியவங்க முன்னாடி நின்னு பேசவே பயப்படுவோம், இப்ப இருக்குற தலைமுறையை பாருங்க" என்று ஒரு பெரியவர் தன் கூட வந்தவரிடம் பேசிக்கொண்டு போனதைக் கண்டு நகைக்கத் தான் முடிந்தது. எல்லாம் தலைமுறையிலும் சல்லிப் பயலுக இருக்கத்தான் செய்கிறார்கள், அது என்னமோ இந்த தலைமுறையில் சற்று மிகுதியாக இருக்கிறது அவ்வளவே! என்னதான் கட்டிப்போட்டு வளர்த்தாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டே தானிருக்கிறது! வாழ்வியலை, அதன் நிதர்சனத்தை பிள்ளைகளுக்கு புரிய வைத்து வளர்க்காமல், வெறும் கட்டுப்பாடுடன் வளர்ப்பதினால் எந்த பலனுமில்லை! குடி என்றால் என்ன? அதனால் வரும் விளைவுகள் எல்லாவற்றையும் ஒரு நண்பனாக அவர்கள் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுத்து வளர்த்துப் பாருங்கள் தரமான விதையாக இருக்கும்! எல்லாவற்றையும் மூடி மூடி வைத்து வளர்ப்பதினால் அதை அறிந்து கொள்ளவே மனது பிரியப்படும் என்பது மனித இயல்பு என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?

முந்தைய காலம் மாதிரி இல்லை, இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பம் தனது வேரை மிக ஆழமாக வேரூன்றி, தனது கிளையை முடிந்த மட்டும் அகல விரித்திருக்கிறது. தமிழகத்தின் கடைக்கோடி சிறுவன் கூட உலக நிகழ்வுகளை நொடியில் அறிந்து கொள்ளுமளவிற்கு வசதிகள் பெருகி இருக்கும் இந்த காலகட்டத்தில் போய், எதையும் மறைத்து வைத்து வளர்க்க முடியாது. நடக்கும் முக்கால்வாசிக் கொலைகள் பாலியல் வன்புணர்வுகளாகவும், அதை சார்ந்த நிகழ்வுகளாகவும் தான் இருக்கின்றன, காரணம் நமது அலட்சியமும், கல்வி முறைகளும் தான்! செக்ஸ் என்ற ஒன்றை பிள்ளைகளை அறிந்து கொள்ளதாவறு இருக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனத்தில் அதை அறிந்து கொள்ள வைக்க எத்தனை வழிகளை நாம் யோசித்திருக்கிறோம்? மூடி மூடி வைக்க தான் இணையம் திறந்து வைத்துக் கொண்டே வருகிறதே! இதுவரை நிரந்தர தீர்வைப் பற்றி யாரவது யோசித்தார்களா? டில்லி, மும்பை, சென்னை, பொட்டாம்பட்டி என்று வன்புணர்வுகளும் ஊருக்கு ஊர் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற மொண்ணை காரணத்தை கூறிவிட்டு கைகழுவி விடுகின்றனர் எதிரணியினர். வெட்கங்கெட்ட ஊடகங்களும் நான்கு நாள் ஒப்பாரி வைத்துவிட்டு ஐந்தாம்நாள்  வசதியாக மறந்து விடுகின்றன.


சென்ற மாதத்தில் எனது கிராமத்திற்கு மிக அருகில், இருபது வயது மதிக்கத்தக்க வாலிபனை, ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியோட, அந்தப் பையன் அதே இடத்தில் காலி. சில நாட்கள் கழிந்த பின் மூன்று பேர் சரணடைந்து இருக்கிறார்கள் அதன் பின்னர் மூன்று பேர் சிக்கி இருக்கிறார்கள். கொலைக்கான காரணமாய் அவர்கள் சொன்னது வேடிக்கையாக இருந்தாலும், அந்த ஆறு பேரில் இருவரை தவிர்த்து, நான்கு பேருக்கு வயது இருபத்தைந்துக்கும் கீழ் தான். இந்த சின்ன வயதில் கொலை செய்யக் கூடிய அளவிற்கு என்ன விரோதம்? கொலை செய்வது என்ன அவ்வளவு எளிதா? இன்னொரு சம்பவம் ராமநாதபுரம் அருகே என்று நினைக்கிறேன், ஏழாம் வகுப்பு படிக்கும் பையனை, அவனது கூட்டாளிகள் இரண்டு பேர் சேர்ந்து பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்று பிடிபட்டிருக்கிறார்கள். வெறும் பதினைந்து வயதைக்கூட பூர்த்தி செய்யாத இவர்களின் மனதில் எவ்வளவு வன்மம் இருந்திருந்தால் இந்த செயலுக்கு துணிந்திருப்பார்கள்? சமூகத்தின் பிரதிபலிப்பு தான் இந்த இளம்வயது கொலையாளிகள்!

ஒவ்வொரு பதினைந்து வருடத்துக்கு ஒருமுறை ஒரு தலைமுறை மாறுவதாக சொல்கின்றனர், வரும் தலைமுறையினரைக் கண்டால் சற்று பீதிக் கொள்கிறது மனது! ஆம், சென்னை கேளம்பாக்கத்தில் மூன்று இஞ்சினியர் பட்டதாரிகள் சரியான வேலை கிடைக்காதலால் வழிப்பறியில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டுள்ளனர். சீரற்ற கல்வி முறையினால் தரமற்ற பட்டதாரிகளை உருவாக்கிய கல்வியாளர்களையும் அதனை நடத்தும் ஆட்சியாளர்களையும், அதனை அனுமதித்த அரசாங்க இயந்திரத்தை இப்படி சங்கிலி போல் தொடரும் குற்றங்களை யார் சீர் செய்வது?

எல்லாத்துக்கும் மேலாக பேராசை, தான், மட்டும் சொகுசாக வாழ்ந்தால் போதுமென்ற மனம் பரவலாக விரவிட்ட இந்த சமூகத்தின் மக்களாகிய நாம் தான் முதன்மையான குற்றவாளிகள். நீதித்துறையும், நிர்வாகத்துறையும் பணத்திற்கு வளைந்து கொண்டிருப்பதைக் கண்கூடாக கண்டும், ஒரு சின்ன எதிர்ப்பைக் கூட பதிவு செய்யத் துணிவில்லாத நமக்கு அடுத்தவனை சிறுமைப் படுத்தி பேச என்ன யோக்கியதை இருக்கிறது? சமதளமற்ற சமூகத்தில் சாதிக் கொலைகளும், ஜாலியாய் துவங்கிய கல்யாண மது விருந்தில், சின்ன வாக்குவாதத்தில் காலையில் தாலிக் கட்டவேண்டிய மணமகனின் மார்பில் பீர் பாட்டிலை இறக்கி விட்டு நண்பன் தலைமறைவு, இப்படி வித விதமான கொலைகள் நடந்துக் கொண்டுதானிருக்கும்! இல்லாதவன் தலையில் இருப்பவனின் கால் மிதித்துக் கொண்டே தானிருக்கும் போல!

தனக்கென சுய ஒழுக்கமும், சுய புரிதலும், சுயக் கட்டுப்பாடும் வகுத்துக் கொண்டு வாழாத வரை எதுவும் மாறப்போவதில்லை, அதை உணரக்கூடிய மனநிலையில் மக்களுமில்லை என்பதுதான் ஆழ்ந்த வருத்தமான செய்தி!  

   

Post Comment

மே 21, 2015

36 வயதினிலே - புறம்போக்கு.


36 வயதினிலே!

இதன் மூலமான மலையாளத்திலையே பார்த்துவிடலாமா என்று தான் முதலில் யோசித்தேன், பின்பு அதனை வேண்டாம் என்று சொல்லியது ஜோதிகாவின் பளிச் போஸ்டர்கள்! இந்த மாதிரி படத்தில் நடித்த ஜோதிகாவிற்கும், அதற்கு பக்கபலமாய் இருந்த சூரியாவிற்கும் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும்!ஆகா, ஓகோவென்று புகழக் கூடிய வகையறா படமில்லை. பல இடங்களில் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கிற உணர்வைத் தருகிறது. இருந்தும் இதில் சொல்லிக்கொள்ள நிறைய இருக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து தான் வரும்காலங்களில் தமிழ் சினிமாவில் இம்மாதிரியான முயற்சிகள் அதிகம் எடுக்க கூடும் என்று நம்பலாம்! 

ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமான வரவேற்பு இருந்தாலும், தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்றிருப்பதாக தெரிகிறது. சினிமாவுக்கென புகுத்திய சின்ன சின்ன கிச்சு கிச்சுக்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல முயற்சி என்றே சொல்லலாம்! ஜோதிகாவின் ஒரே பிரச்சினை கூடுதலான நடிப்பு, ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கிறார் என்பது தெரிகிறது. பக்கத்து வீட்டுப் பெண் போன்று தெரிய வேண்டிய ஜோதிகாவை, அன்னியப் படுத்தி காட்டுகிறது கூடுதல் மேக்கப்பும், பளிச்சென்று கண்ணை பறிக்கும் சேலைகளும், இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நெஞ்சில் பதியும் வசனமும், காதை கிழிக்காத இசையும், கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்க்கின்றன. நேர்த்திக்கு சற்றுதொலைவில் இருக்கும் இந்த 36 வயதினிலே உங்களை நிச்சயம் திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன், தவறவிடாமல் பாருங்கள்.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை: 

நான்கு நிமிட பாடலுக்கு கோடிகளில் அரங்கமைத்து காசை வீணாக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில், இப்படியொரு சிறைச்சாலையை அமைத்து அதிலையே முக்கால் வாசிக்கும் மேலான படத்தை எடுத்திருக்கும் ஜெகன்னாதன் அவர்களுக்கு ஒரு வாழ்த்துக்கள். 

மூன்று நாயகர்களை ஒன்றிணைத்து படமெடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை என்றாலும் அதை முயன்றிருக்கும் இயக்குனருக்கும், ஒத்துழைத்த நடிகர்களுக்கும் வணக்கங்கள் சொல்ல வேண்டும்! படத்தைப் பற்றி ஆளுக்கொரு கருத்துக்கள் உலவினாலும், என்னளவில் இது திருப்திகரமான சினிமா தான். தான் என்ன சொல்லவேண்டும் என்று மனதில் நினைத்தாரோ அதை கொஞ்சம் சமரசத்தோடு சொல்லி இருக்கிறார், அந்தளவில் ஜெகன்னாதனுக்கும் வெற்றி என்று தான் நம்புகிறேன்! 

நிச்சயமாய் இது எல்லோருக்குமான சினிமா கிடையாது, பரந்து பட்ட அரசியல் அறிவும், பொதுவுடைமை சிந்தனைகளும், கம்யூனிஸ சித்தாந்தங்களும் ஓரளவேனும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது!

இதற்கு மேலும் நுணுக்கமான வசனங்களை வைத்திருந்தாலோ, அல்லது கதையை விலாவாரியாக சொல்கிறேன் என்று முயன்றிருந்தாலோ, சென்ஸார் போர்டின் கத்திரி பல இடங்களில் விளையாண்டிருக்கும். இதை தெரிந்து தான் அடக்கி வாசித்திருக்கிறார் என்று நம்புகிறேன். .

ஆர்யா ஏற்றிருக்கும் பாலு பாத்திரத்தை இன்னும் அழுத்தமாய் பிண்ணியிருந்தால் அவரின் திரை முடிவு பார்வையாளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும், ஆனால் அப்படி அவர் சார்ந்த இயக்கங்களின் கொள்கைகளை வைத்திருக்க முற்பட்டிருந்தால் படம் வெளி வரக்கூடிய சூழல் இந்தியாவில் இல்லை, இந்தியா உரிமைகள் மிகுந்த நாடு தான் ஆனால் அந்த உரிமைக்கும் ஒரு வரையறை கொண்டுதான் இயங்கவேண்டிய சூழலில் இருக்கிறோம், இல்லையென்றால் வரக்கூடிய விளைவுகள் மிக மோசமானவையாக இருக்குமென்பதால் இப்போதைக்கு அதை தள்ளி வைத்து விடுவோம்!

மெக்காலே என்கிற போலீஸ் அதிகாரியாக ஷாம், கவனம் ஈர்க்கும் நடிப்பு, கச்சிதமான தேர்வு. உடல்மொழி நேர்த்தியாக இருக்கிறது. அடுத்து எமலிங்கம் விஜய்சேதுபதி, முன்னர் பார்த்த படங்களில் தெரிந்த அதே பாவனைகள் தான். திருடன் போலீஸ் பாத்துட்டு சொல்லணும் நெனச்சேன், இயக்குனரே சொன்னாலும் குத்து பாட்டில் மட்டும் ஆடாதீங்க பாஸ், சத்தியமா சகிக்கல, வராத ஒன்னை ஏன் புடிச்சி வம்படியா தொங்குறீங்க. 

இம்மாதிரியான கதைகளில் நடிக்க ஒப்புக்கொண்ட கார்த்திகாவுக்கு ஒரு ஓ! 
பரவாயில்லை ரகம்தான், வண்டி ஓட்டுகையில் மட்டும் கிச் கிச்! பாத்திரத்தை வெயிட்டா காட்ட இப்படில்லாம் பண்ண வேண்டியிருக்கிறது! 

ஆங்காங்கே பிரமிப்பை கொடுக்கிறது பின்னணி இசை, ஒளிப்பதிவு அட்டகாசம், ஹெலிகாப்டர் இறங்குவது ஏறுவது சூப்பர் ...

நால்வருக்கும் திரையை சமமாக பங்கிட்டு கொடுத்த இயக்குனர் ஜனநாதன் சாமர்த்தியசாலி தான்! விரும்பி பார்க்கும் சினிமா பிரியர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்!     
  


Post Comment

மே 08, 2015

காமத்துளிகள்...
கூட்டமிகுந்த 
ஷேர் ஆட்டோவொன்றில் 
நெருக்கமாய் அமர்ந்திருந்த மங்கையின்
மார்பிளவில் 
பிறந்திருக்க வேண்டும் 
என் ஞானத்தின் முதல் துளி!

சிலநாள் கழிந்து, 
ஒரு முன்னிரவில்
கடற்கரை காதலர்களின் 
நெருக்கத்தில் துளிர்த்திருக்குமென்று  
நம்புகிறேன், 
இரண்டாம்துளி ஞானம்!

பிறகொரு நாள்,
மாநகர கழிவறையொன்றில்  
"விந்தை" பீய்ச்சியடித்துவிட்டு 
அவசரமாய் வெளியேறிய 
அந்த வயசாளியின்,
மோகத்தூண்டிலினை எண்ணி 
மோதிப் பிறந்திருக்கும் மூன்றாம் துளி!

இரவுப் பயணத்தில்  
தன் சிறுத்த மார்பகங்களை
தடவத் துவங்கி,
பிசைந்து கொண்டிருப்பவனுக்கு
இசைந்து கொண்டிருக்கும் 
பருத்த உடல்க் காரியின்
உடல் மொழியில் உதிர்ந்திருக்கலாம்  
நான்காம் துளி ஞானம்! 

நினைவு நீட்சிகளில் 
திறந்த மேனித்  தேவதைகள்,
சமைந்த 
சதைத் திரட்சிகளைக் கொண்டு 
விருந்திட முனைகையில் 
உடைப்பெடுத்து ஓடத் துவங்குகிறது,  
தடுப்புகளற்ற என் ஞானத் துளிகள்!  

காமம் எப்போது 
ஞானமாகியது என்ற குழப்பத்தில் 
வழியும் வியர்வையை துடைத்துவிட்டு 
திரும்பிப் படுக்கிறேன்,
களைந்த உடைகளை தரித்துக் கொண்டிருக்கிறது
 "ஞானமெனும் பேய்" 

Post Comment