இராத்திரி "கிடேரி" கன்னு ஈன்ற பசுவின் இளங்கொடியை நரம்பு பையில் போட்டு கட்டி தாழ்வாரத்தில் கட்டி வைத்திருந்தார் ரத்தினம்! நாயிடம் சிக்காமலிருக்க சற்று உயர்த்தி கட்டி பத்திரப்படுத்தி வைத்திருந்தார், இளங்கன்னை பாக்க எந்திருக்கும்பொதெல்லாம் இதுமேலவும் ஒரு கண்ணு இருந்து கொண்டே இருந்தது அவருக்கு!
விடிஞ்சதும் விடியாததுமா கட்டுத்தறிய சுத்தம் பண்ணிட்டு, அது கட்டியிருந்த இடத்துக்கு கீழ இரத்தம் மாதிரி கொஞ்சம் கறுப்பா சொட்டியிருந்ததை நாய் நாக்கால் சுத்தம் பண்ணியிருக்கும் போல!
ருசி கண்ட நாய் பையை தவிர்த்து கவனம் சிதறாமல் பையையே பார்த்துக்கொண்டு இருந்த நாயை வெறட்டிவிட்டு பையை எடுத்துகொண்டு போய் ஊருக்கு வெளிய ஏரிக்கரை "ஆலின்" பெருத்தக் கிளையின் மூணாவது நடுக்கம்பில் கட்டிவிட்டு இறங்கி பனி போர்த்திய வெதுப்வெதுப்பான தண்ணியில் முங்கி எழுந்தார் இரத்தினம்!
மார்கழி மாசம் குளிருல அதுவும் விடிய விடிய ஏரில குளிக்கிற சுகத்த எப்படி சொல்ல? அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும். புகை படர்ந்திருக்கும் குளிர் நீரினுள் இறங்கி ஒரு முங்கி முங்கினாள் போதும் எம்மாம் பெரிய குளிரும் தெரிச்சி ஓடும்! மேந்தண்ணி குளிராவும், கீந்தண்ணி வெதுவெதுன்னு இருந்து ஏரிக்குள் இறங்கும்போதே மனசுல கிளர்ச்சிய உண்டுபண்ணும்!
பொடி அள்ளுவது போல் கரை மண்ண அள்ளி பல்லுவிளக்கினார், களியும், மணலும் கலந்து சன்ன ரவை போல் இருந்ததால் இன்னொருமுறை எடுத்து நாலு சிலுப்பி சிலுப்பிவிட்டு அடித்தொண்டையிலிருந்து காரி நாலு முறை உமிழ்ந்தார், சத்தம் கேட்டு தான் எடம் திரும்பும் பழந்தின்னி வவ்வாலுக கொஞ்சம் மேல பறக்க ஆரம்பிச்சிதுக! நடுத்தண்ணியில வா கொப்பளிச்சிட்டு இன்னொருமுறை முங்கி முங்கிட்டு மனுசன் விறுவிறுன்னு நடைய கட்ட ஆரம்பிச்சிட்டார் தர்மலிங்கம் டீ கடை நோக்கி!
பனியின் குளுமையை தேநீரும் , காலைநேர அமைதியை "முருகனைக் கூப்பிட்டு" என்று சௌந்திர ராசனும் விரட்டிக் கொண்டிருக்க கண்ணு முழிக்க ஆரம்பிச்சது ஊரு!
டீ குடிச்சிட்டு இருக்கும் இரத்தினத்த ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு டீ போடு தர்மலிங்கம்ன்னார் கனகசபை.
என்ன இரத்தினம் இம்புட்டு காலையிலே குளிச்சிட்ட , என்ன சேதி! ஏதேனும் பயணமா ?
இல்லைய்யா மாடு கன்னுபோட்டிருக்கு, அதான் எளங்கொடி கொண்டு போய் ஆலமரத்துல கட்டிட்டு, உடம்பெல்லாம் பிசு பிசுன்னு இருந்துச்சி அப்படியே ஒரு குளியல போட்டுட்டு வாறன்! இப்படி காலையில குளிச்சி எம்புட்டு நாளாச்சி ...
ஆமாம் இரத்தினம் , காலைக்குளியல் சுகமே தனித்தான்யா ... ஆமா என்ன கன்னு ?
"கிடேரி " (பெண் கன்று குட்டி ). சாயந்திரம் மூணு மணியில வலியில துடிச்சி ஒரு வழியா ஒம்பது மணி இருக்கும் அப்பத்தான்யா வெளிய தள்ளுச்சி .. பாவம் வயசான மாடு ... இதோட எட்டாவது கன்னு ... எஞ்சுமையில பாதிய சுமக்கும் இன்னொரு புள்ளய்யா அது ...
இந்த காலத்துல பெத்ததுக கூட கவனிக்கிறதில்ல இரத்தினம், இதுகதான் ஒருவழியில நம்மள காப்பாத்துதுக ...
சரி கனகசபை கம்பு வேக வைச்சிருந்தேன், எடுத்து மாட்டுக்கு வைக்கணும், கண்ணு போட்ட மாடு வேற ... சாயந்திரம் ஓய்வா இருந்தா வாயேன் அந்தப் பக்கம், பேசி ரொம்ப நாளாச்சி ...
ம்ம் சரி சரி வரேன் இரத்தினம், பாக்கலாம் ...