புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 27, 2014

கிளை ஏறுகையில்... (Semman Devathai # 16)
கிளை மாறி கிளை ஏறுகையில் 
சிமிரொன்று இடறுகிற மாதிரி, 
ஏதாவது ஒன்று 
கலைத்து விடுகிறது  
அவளுடனான 
அதிகாலைக் கனவுகளை!!!


வேண்டாம், 
வேண்டாமென்று சொல்லியே 
வாங்கிவிடுகிறாள் 
விரும்பியதனத்தையும்.

வேண்டுமென்று சொல்ல 
இன்னும் நிறைய இருக்கிறது 
என்னிடம்... 

Post Comment

மே 09, 2014

ஊர்ப் பேச்சு # 16 ( Oor Pechu # 16)கைய உள்ளார விட்டு துழாவி பார்த்து கையில சிக்கிய கொஞ்சம் கம்மஞ் சோத்தோடு தீசையையும் சுரண்டி போட்டு எரும தயிர சேத்து கரைச்சி நாலு சொம்பு உள்ள வுட்டதும் தான் கண்ணு வழி உசுர் நின்னுது கனகசபைக்கு! 

வேவாத வெயிலுல எள்ளுக்கு தண்ணி கட்டுனா என்னா ஆவுறதாம் ன்னு பொலம்பிகிட்டே தலையில இருந்த தொவர அடிக்கட்டைகள கூடையோட குப்புற கவுத்தா கனகசபை பொண்டாட்டி...

(தொவரைய வெட்டுனதுக்கு அப்புறம் அடிக்கட்டை அப்பிடியே தான் இருக்கும், மழை பேஞ்ச ஈரத்துல புடுங்குனா பூவு போல கையோட வந்துடும், வூடு கொண்டாந்துட்டா போதும் பத்து நாளைக்கு நிம்மதியா அடுப்பு எரிவுடலாம். 

என்ன வூடு சேக்கறதுக்குள்ள பாதி சீவன் போய்டும். மலைச்சிட்டு புடுங்காம வுட்டுட்டா ஏர் ஓட்டும் போது உழுவுக்காரன் காலுல கூராணி கணக்கா விசுக்குன்னு ஏறி தொலைச்சிடும். பாவம் அவன் பொழப்பு நாலு நாளைக்கு போய்டும், அதுக்கு பயந்துட்டே பாதி சம்சாரிக புடுங்கிடுவாங்க. 

டிராக்டர் வந்த பின்னாடி இந்த கவலை இல்லாம பாதி மக்க விட்டத்த பாத்து கெடக்குதுக.  மழ பேஞ்ச ஒடனே டிராக்டர முன்னாடி வுட்டு பின்னாடி வெர புட்டிய தூக்கியாந்து கடமைக்கு வீசி எறிஞ்சிட்டு போற சனங்களுக்கு எங்க தெரிய போவுது பயிர் பண்ற அருமை....) 

ஒருவேள சோத்துக்கு நேரம் தள்ளி போனதுக்கே பாழும் ஒடம்பு பாடா படுத்துதே, பாவும் நெற மாசம் புள்ளத்தாச்சி கணக்கா உடம்பெல்லாம் எள்ளுக்காயோடு தொவண்டு நிக்குற செடிவோல பாத்த பின்னும் சோறு தேடுமா? அப்படியும் மூணு பாத்திக்கு முடியாம போச்சி ... =#@@@## பய மவன் கரண்ட்ட புடுங்கிட்டான். நாளைக்கு வரைக்கும் தாங்குமான்னு தெரியல, இன்னைக்கே சுருண்டு விழுந்துர மாதிரி இருந்துச்சி ...

எள்ளு கொள்ளுன்னு கெடந்தா உடம்பு என்னாத்துக்கு ஆவுறது, விடியறத்துக்குள்ள ஒன்னும் செத்து போவாது, போயா போயி கொஞ்சம் கண்ண அசரு , ராவெல்லாம் கட்டிபுட்டு, சூரியன் உச்சிக்கு வந்துட்டான் இன்னமுட்டும் வெறும் வவுத்தோட இருந்திருக்க .. இதுல பேச்சு வேற ...

உனக்கென்னாடி ..... தெரியும். வந்து பாரு தெரியும்,

ஆமா நான் பாக்காத காடுதான் .. ஏக்கர் கணக்குல இருக்கு ... போவியா ...

சரி இரத்தினம் வரேன்னு சொன்னானே, வந்தானா? வெத சோளம் கேட்டிருந்தான், உங்கையால கொடு வெளையாத பூமியும் வெளைஞ்சி தள்ளும்...

ஆமா எங்கையில தான் எல்லாம் இருக்கு, அது அது உழைச்சா தான் வெள்ளாம பெருகும்.. வீட்ல படுத்து மோட்டு வளையையே பாத்து கெடந்தா குதிரு நொம்புமா ?

எல்லாத்துக்கும் ஒரு இராசின்னு ஒன்னு இருக்குடி.. எடுத்து வை, நான் அருவா கருக்கு வைக்க கொடுத்திருந்தேன், போயிட்டு வாங்கிட்டு வந்துடுறேன்....

சரி சரி சீக்கிரம் வந்து சேரு, அங்க யார்கிட்டயும் கத அளந்துகிட்டு நிக்க வேண்டாம், வரும்போது மருவத்தூரான் கடையில நாலு ரொட்டி கட்டிக்கிட்டு வா, புள்ள ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கான் ...

சரி சரி ...

Post Comment

மே 06, 2014

ஓட்டுநர் உரிமம் வாங்கிய கதை ....


என்றோ நடந்திருக்கும், அந்த நேர கடுப்பில் மறந்திருப்போம். பின் வேலைகளற்ற ஒரு அழகிய வெட்டிப் பொழுதில் அசைபோடுகையில் மனத்திரையில் விரிந்து உள்ளம் உவகை கொள்ளும் நிகழ்வுகளாய் பசுமரத்தாணியாய் பதிந்துவிடும். இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி எண்ணற்ற நிகழ்வுகளில் பிரதானமான ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள நெஞ்சம் விரும்புகிறது.    

பெரம்பலூரில் தொடங்கிய என் படையெடுப்பு கடைசியாக சிங்கார சென்னையில் முடிவுற்றது என் ஓட்டுநர் உரிம வேட்டை. விரிவாக சொல்வதற்கு முன்பு வண்டி ஓட்டும் திறமையை? உங்களிடம் சொல்லவில்லையெனில் உறக்கம் வராமல் தவித்தாலும் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதால் சொல்லிவிடுகிறேன்.

பக்கத்து ஊரில் சம்பத் மாமா பழைய டிராக்டர் வைத்திருந்தார், காடுகளில் மட்டுமே அதிகம் உழைக்கும் வண்டி எப்பாவது கப்பி சாலைகளை கண்டிருக்கும் அதன் சக்கரங்கள். அப்படி ஒரு உழைப்பாளிகள் வண்டியும் முதலாளி மாமாவும். கரும்புகையை வானோக்கி கக்கியபடி ஈரம் காய்ந்த வண்டல் மண்ணில் திணறி திணறி முன்னோக்கி நகர்ந்து கொண்டே, பின்னே  பற்கள் தேய்ந்த கலப்பை  பூமியை கோடிடும் அழகை காண கண்கள் கோடி வேண்டும். 

சில பல எடுபுடி வேலைகளுக்கு பலனாக வண்டியில் ஏற்றிக் கொண்டார் மாமா. வண்டியை விட பழசாய் ஒரு ரேடியோ செட் இருந்தது. வண்டியின் சத்தத்துக்கும், ரேடியோவுக்கும் எப்போதுமே போட்டி தான். இரண்டு சத்தங்களும் காதை பிளக்கும். ஆனாலும் மாமா சவுந்திரராசனையும், இளையராசாவையும் மதிய வெயில் மண்டையை பிளக்கும் நேரத்தில் கதறவிட்டு களிப்படைவார். வண்டியை கண்டதும் ஆர்வமுடன் ஏறிய நான் பிறகு ஆர்வமிழந்து விட்டதால் கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து தாறுமாறாக சுழற்ற துவங்கிய காலம் அது! பள்ளிக் கல்வியும் முடிந்து நீண்ட விடுமுறை....

கோடை உழவுக்கு வந்தவர் கூப்பிட்டார், சாக்கு போக்கு சொல்லிவிட்டு மட்டையடிக்க கெளம்பிட்டேன். மறுநாள், வண்டி ஓட்ட கற்று தருகிறேன் என்றதும் வேதாளம் மீண்டும் டிராக்டரில் ஏறியது. சொன்னது போல் கற்று தந்தார். அதோடு இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. சில மாதங்களுக்கு பிறகு லைசென்ஸ் வா லைசென்ஸ் எடுக்க போகலாம். உனக்கு தான் வண்டி நல்லா ஓட்ட வருகிறதே என்று உசுப்பேத்தி ஒரு தறுதலை டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார். 

சேர்ந்ததுமே LLR அப்ளை பண்ண ஒரு தொகை வாங்கி கொண்டு பாடமெடுக்கிறேன் என்கிற பேர்வழியில் கொலை செய்ய பார்த்தான். பிறகு கும்பலோடு கும்பலாக பத்து நாள் வண்டி ஓட்டவும் கொடுத்தான். அவ்வளவு தான் டெஸ்ட்க்கு வந்தா போதும் என்று சொல்லி அனுப்பிவிட்டு ஒரு மாதம் கழித்து போன் பண்ணினார். போனேன் அன்றும் ஏதும் சொல்லவில்லை சில போக்குவரத்து விதி முறைகளை சொல்லி கொடுத்துவிட்டு பயமில்லாமல் ஓட்டினால் போதும் உரிமம் உங்கள் கையில் என்று தெம்பூட்டி சென்றார். 

இரண்டாவது ஆளாக என்னை அழைத்தார் அதிகாரி, ஏறி அமர்ந்ததும் பேரை கேட்டார் சொன்னேன் வண்டியை எடுன்னார், எடுத்தேன் "S" வடிவ சாலையில் செல் என்றார், ஓட்டினேன் நடுங்கும் கரங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தது நான் மட்டுமே அறிந்த இரகசியம். ஒருவழியாய் போய் நிறுத்தினேன். அதே மாதிரி "பின்னால் வா" என்று ஆபிசர் சொன்னதும் கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்துவிட்டது. "ரிவர்ஸ்" என்பது தான் எனக்கு பெருத்த தலைவலி. மாலையிடப்பட்ட ஆடாய் முழித்துக்கொண்டே சிக்கு கோலம் போட்டபடி வண்டியை வந்து நிறுத்தும் போது நான் நானாக இல்லை... 

அதிகாரி என்னை பார்த்து முறைத்ததுக்கு, இந்த ஜென்மத்தில் உனக்கு இங்கு லைசென்ஸ் கிடையாது என்பதின் அர்த்தம் விளங்கியது. இறங்கியவுடன் டிரைவிங் ஸ்கூல் அதிபர் ஓடிவந்து என்ன தம்பி உங்களுக்கு ரிவர்ஸ் வராதா ? என்று கேட்க எரிச்சலில் விழி பிதுங்கி நின்றேன். டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவன் கேட்டிருக்கணும், இல்லை நானாவது எனக்கு முன்னோக்கி மட்டுமே ஓட்ட தெரியும் பின்னோக்கி தெரியாது என்று சொல்லிருக்கணும். ரெண்டில் எதுவுமே இல்லையென்பதால் அடுத்த பாய்ச்சலுக்கு தயாரானேன், அதுவும் அவுட்டு. மொத்தம் நான்கு டெஸ்ட், பணத்துக்கு பணமும், மரியாதைக்கு மரியாதையும் போச்சி... நான்கில் ஒருமுறை கூட வெற்றிக்கனியை சுவைக்க முடியவில்லை.

சென்னை வந்த பிறகு மீண்டும் வேதாளம் வண்டி ஏறியது, இம்முறை மக்கள் பயணிக்கும் சாலையில் டெஸ்ட் , உள்ளுக்குள் பயம் கரை புரளத்தான் வண்டியில் ஏறினேன், ஆனால் முன்னோக்கி மட்டும் என்பதினால் கொஞ்சம் பயமில்லை. ஒருவழியாக "வெற்றிக்கோட்டை" தொட்டு உரிமத்தையும் வாங்கிவிட்டேன். தேசியக்கொடியை போல் சட்டைப்பையில் குத்திக் கொள்ளாத குறைதான் அந்த அளவுக்கு வெற்றிக் களிப்பில் திரிந்தேன் நான்கைந்து நாட்கள்.  

ஒரு மாதம் கழித்து டிராக்டர் மாமா ஊரிலிருந்து போன் பண்ணி, டேய் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன், அடுத்த வாரம் வந்திடு, இந்த முறை லைசென்ஸ் வாங்கிடலாம் என்று சொல்ல, நான் பொறுமையாக லைசென்ஸ் சென்னையில் வாங்கிட்டேன், வேண்டுமென்றால் சொல்லுங்கள் நம்ம டிராக்டரில் ரிவர்ஸில் ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம் என்றதும் மவுனமாக போனை துண்டித்தவர் அதன் பிறகு வெகு காலத்துக்கு போன் பண்ணவே இல்லை ..... உங்கள் யாரிடமாவது வண்டி இருக்கா சொல்லுங்கள் ரிவர்ஸில் ஒரு ரவுண்டு போய் வரலாம் ...............Post Comment

மே 03, 2014

பெற்ற சுமைக்கு...பிளவுகளுக்குள் நுழையும்
மழை நீராய்
என் உடற்கூறுகளெங்கும்
அந்த சொற்களின்
எச்சில் சிதறிக் கிடக்கிறது...

செவி சேருமுன்னே
செத்திருக்கணும்,
பருவம் வந்த மகளை 
நினைத்து,
பழித் துடைக்கும்
கல்லாகி நிற்கிறேன்!

மறைக்க முற்பட்டும்
பற்ற வைக்கப்பட்ட
ஈர விறகாய்
முகம் புகைந்து கொண்டிருக்கிறது...

இன்னும் என்னவெல்லாம்
சகிக்க வேண்டியிருக்குமோ
எதிர் வீட்டுக்காரனின்
மகளை இழுத்துச் சென்ற
புள்ளையை பெற்ற சுமைக்கு...


Post Comment