ரெண்டு நாளா அந்தப்பக்கம் போகமுடியல, அஞ்சாறு தடவைக்கு மேல சாணிய கரைச்சிப் போட்டு பார்த்தும் , குடலை குமட்டிக் கொண்டு வருது குருணை மருந்தின் நாத்தம். "இந்த வழியா போற சனங்களுக்கு பதில் சொல்லி மாளல...
எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இப்ப நெனச்சாலும் இருதயம் எக்குத்தாப்பா துடிக்குது. பங்காளிச்சி கூட சண்டைன்னு புத்தி மலங்கி போயி மருந்த திங்க போவேனா? கதவை உடைச்சிகிட்டு எம்புள்ள வரலைன்னா, "வடக்க போயி" ரெண்டு ராத்திரியாயிருக்கும். கையிலிருந்த மருந்தை புடுங்கி கொண்டு போயி கெழக்கால கொட்டிவிட்டு வந்துட்டான், நாத்தம் ஊர கூட்டுதுன்னு ரெண்டு நாளைக்கு முந்தி நடந்த கதையை ரோம்பாளிடம்(லோகம்பாள்) சொல்லிக்கொண்டிருந்தாள் தேனு...
என்னதான் சண்டையா இருந்தாலும், இந்த மாதிரி முடிவு எடுக்குறது தப்பு தேனு, தலைக்கு ஒசந்த ஆம்பள புள்ள இருக்கு, வயசுக்கு வர மாதிரி பொம்பள புள்ளைய வைச்சிகிட்டு இப்படி ஒரு விபரீதம் தேவையா ? சொல்லு ன்னு சொல்லிக்கிட்டே, திருகையில் கைப்பிடி உளுந்தை கொட்டி அரைக்க ஆரம்பிச்சா- ரோம்பா.
அதாம்புள்ள, சொல்றேனே எப்படி அந்த முடிவ எடுத்தேன்னு இன்னும் ஆச்சர்யமா இருக்கு, அதுமட்டுமில்ல அந்த *&#டியா பேசுன பேச்சு அப்படி, இல்லாதது பொல்லாதத சொல்றவளுக்கு நல்ல சாவே வராது பாரேன்...
நரம்பில்லாத நாக்கு என்ன எழவை வேணும்னாலும் பேசும், நாம தான் பொறுமையா இருக்கணும். நிமிசத்துல நாம கண்ண மூடிக்குவோம், ஆனா பெத்ததுக தவிக்குற பாவத்தை எந்த சென்மத்தலையும் போக்க முடியாது தேனு. பெத்தவ ஊத்துற கஞ்சி போல வருமா ? மத்தவ ஊத்துற கஞ்சி. உன்னைய நம்பித்தான் வூட்டுக்காரர் வெளிநாடு போயிருக்கார், அதையும் மனசுல நிறுத்தி இனி பொழப்ப பாரு, இனியும் இந்த மாதிரி மோசமான முடிவெல்லாம் வேணாம் புள்ள.
இனியும் இந்த மாதிரி கனவுல கூட நெனைக்க மாட்டேன் ரோம்பா, எந்த சாமி புண்ணியமோ தொடாமலே புத்தி வந்தது. அப்பன் இல்லாம கூட புள்ள வளர்ந்துரும், ஆனா ஆத்தா இல்லாம வளரும் புள்ளைகளோட நெலம இருக்கே, சொல்லி மாளாது.
ஆமாம் தேனு, என் நாத்தனார் வழியில ஒருத்தி இப்படித்தான், புருஷன் ஏதோ சொல்ல, நடு சாமத்துல கயித்துல தொங்கிட்டா, பாவம் அந்த ரெண்டு பொட்ட புள்ளைகளும். அவன் மறு கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமாத்தான் இருக்கான், புள்ளைங்க நெலம தான் மகா மோசமாம்.
அட ஏன் ரோம்பா அம்புட்டு தூரம் போற, நம்ம பொன்பரப்பியா ஒடுவந்தழ தின்னுட்டு கண்ண மூடிக்கிட்டா, மறு கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் குடியே கதின்னு கெடக்குறான் சின்னதுரை. புள்ளைங்கள பார்த்தியா தெவையா தெவைக்குதுக. அதுவும் இந்த பொங்க, தீவாளிக்கு நல்லது பொல்லது பண்ணி கொடுக்க ஆத்தா இல்லாம ரெண்டும் ஏங்கி தவிக்கிறத பார்த்தா நெஞ்சு சுருக்குங்குது, எத்தனை நாளைக்கு தான் அக்கா காரி தங்கச்சி புள்ளைகளை பார்த்துக்குவா ?
அவளும் பாவமில்ல தேனு, அவளும் மூணு புள்ளைகளை வைச்சிருக்கா, அதோட சேர்த்தி தான் இதுகளையும் பார்த்துக்குறா... கட்டுனவன் ஒன்னும் சொல்லலைன்னாலும் மாமியாக்காரி சும்மா இருப்பாளா?
"என்ன பண்றது எல்லாம் விதி" - தேனு.
ஆமாம் கேக்க மறந்துட்டேன் எங்க புள்ளைய காணோம்?
கால் பரீட்சை லீவுல்ல, அதான் எங்கம்மா வூட்டுல விட்டுட்டு வந்திருக்கேன் ரோம்பா. "வீரன்" அங்க தங்க மாட்டேன்னுட்டான். வர சனிக்கிழம போய் கூட்டியாரனும்.
பெறாக்கா அப்படி ரெண்டு நாளு தங்கிட்டு வரட்டுமே"ன்னு சொல்லிக்கொண்டே ஒடச்ச உளுந்த சல்லடையால சலிச்சும் முடிச்சா லோகம்பாள்.
"வாங்கு" விழுற சத்தம் கேட்டு வாசல்ல எட்டிப்பார்த்தா, வேப்பந்தழை கட்டை வாசலில் சாய்த்து வைத்து விட்டு கை கால் கழுவ போனான் வீரன்.
கிண்ணத்துல சோறள்ளி போட்டு, புளிச்ச தயிர கலந்து கொண்டாந்து வைச்சா தேனு.
ஒடைச்ச உளுந்த கூடையில அள்ளிக்கொண்டு, வாரேன் தேனு ன்னுட்டு கெளம்பினால் ரோம்பா..
என்ன அத்த, திருமால் என்ன பண்றான் ன்னு கேட்டான் வீரன்.
"அது எங்கையாவது பம்பர கட்ட அடிக்க போயிருக்கும் வீரா" ன்னு சொல்லிக்கொண்டே தெருவை தாண்டி ரோட்டை தொட்டு, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் லோகம்பாள்.
ரெண்டு வாய் சோறை அள்ளி போட்டுக்கொண்டு, "தொட்டுக்க எதுனா கொண்டாம்மா" என்று சொல்லி முடிப்பதற்குள்,
பலாக்கொட்டை, முருங்கை காயை சுண்டிய கொழம்போடு கொண்டு வைத்தாள் தேனு.
சாப்புட்டு பெரு ஏப்பமொன்றை விட்டபடி எழுந்து போனவனை பார்த்து,
ரொம்ப நேரம் ஏரில குதியாட்டம் போடாம, மத்தியானம் ஒழுங்கா நேரத்துக்கு சாப்புட வந்துடணும் வீரா என்று சொல்ல,
சரிம்மா ன்னு சொல்லிபுட்டு சாவகாசமா நடந்தான் வீரன் பசங்க கூடியிருக்கும் கோவிலை நோக்கி .....
வீரன் போறதையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு நின்னவ மனசுல, சட்டுன்னு ஆட்டுக் குட்டிக நெனப்பு வர ஓடி, தும்ப திரிச்சி விட்டா.
வாசலில் சாத்தியிருந்த வேப்பந்தழைகளை, வாலை ஆட்டியபடி தின்று கொண்டிருக்கின்றன, பத்து நாட்களுக்கு முன் இரயிலுக்கு "தாயை பலி கொடுத்த ஆட்டுக் குட்டிகளிரெண்டும்".....