புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 20, 2015

சேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...
எந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்று வருத்தம் கொள்கிறது. தங்களது ஆதர்ச வீரனை இனி அந்தந்த விளையாட்டுக்களில் பார்க்க முடியாது என்ற நிலை வருகையில் பலரும் அவ்விளையாட்டுகளின் மீது செலுத்திய அதீத கவனத்தை குறைத்துக் கொள்வதை நேரில் கண்டிருக்கிறேன். 

நான் கிரிக்கெட்டை ரசிக்க துவங்கிய சமயங்களில் கோலோச்சி தங்களது திறமையை வெளிப்படுத்திய கிட்டத்தட்ட எல்லோரும் ஓய்வை அறிவித்து விட்டார்கள், அதில் சச்சின் எனும் சகாப்தத்தை தவிர வேறு எவரையும் நல்ல முறையில் வழியனுப்பி வைக்க தவறி விட்டது (அதிலும் நிறைய அரசியல் இருப்பதாக சொல்லப் படுகிறது) இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம். 

வங்கப் புலி கங்குலியை கிட்டத்தட்ட கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அழுத்தம் கொடுத்து ஓய்வை அறிவிக்க வைத்தார்கள், அவ்வாறே திராவிட்டையும் செய்ய வைத்தார்கள். அணில் கும்ப்ளே மற்றும் திராவிட் போன்ற ஜாம்பவான்களை முழுக்க முழுக்க பக்கா அரசியல் உள்ளீடுகளின் அழுத்தத்தினால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். 

இதில் உச்சம் எனில் லக்ஷ்மண் எனும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ரன் குவிக்கும் எந்திரத்தை முடக்கி வைத்தது தான். ஓய்வை அறிவிக்கச் சொல்லி கட்டாயபடுத்தி இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து போன் போட்டார்கள் என்பது அப்போதைய பரபரப்பு, அதையும் தங்களது அதிகாரத்தினால் நீர்த்துப் போக செய்து விட்டார்கள். 

இடையில் சில வருடங்கள் சீனிவாசனும், தோனியும் செய்த அரசியில் மிகப்பெரியது. அணிக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறேன் என்று சொல்லிக் கொண்டு பல சீனியர் வீரர்களை ஓரங்கட்டிய பெருமை திரு. தோனி மற்றும் தேர்வாளர்களுக்கு உண்டு. கவுதம் கம்பீர், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் இப்படி சில பட்டியல் உண்டு. வயது கூட கூட, ஆட்டத்தில் திறமை குறைவது இயல்பு தான் அதை மனதில் வைத்து அவ்வீரர்களை ஓரங்கட்டுவது கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் முன்னொரு காலத்தில் அணிக்கு அளித்த பங்களிப்பை மறந்து அவர்களை மிகவும் மோசமாக நடத்தி ரிட்டையர் செய்யத் தூண்டுவது தான் அசிங்கத்திலும் அசிங்கமாக இருக்கிறது. இன்று நாம் செய்யும் அரசியல் நாளைக்கு நமக்கே நேரிடலாம் என்பதை உணர்ந்தால் இந்த அவலங்கள் நடைபெறாது.

சென்ற வாரத்தில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ஓய்வு பெற்றார், ஒருகாலத்தில் துவக்க ஓவர்களை வீசி எதிரணி மட்டையாளர்களை மிரள வைத்த காட்சிகள் வந்து போயின. இந்தியாவின் சிறந்த துவக்க மட்டையாளர், ரன் குவிக்கும் எந்திரம், இவர் களத்தில் இருக்கும் வரை எதிரணி செய்வதறியாது குழம்பி தவிக்கும், தோற்றாலும் சிரித்த முகத்துடன் ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருப்பது இப்படி பல்வேறு அடைமொழிகளுக்கு சொந்தக்காரர் சேவாக் இன்று எல்லாத் தரப்பு கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். 

அப்பர் கட் மன்னன், களத்தில் நிற்கும் வரை அசராமல் எல்லா பந்துகளையும் விளாசும் வல்லமை கொண்ட மனோதிடம், டெஸ்ட் மேட்ச் என்றால் வெகு தூரம் ஓடும் என் போன்ற ரசிகர்களை அதிரடியாக மட்டையை சுழற்றி டெஸ்ட் டின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திய வித்தைக்காரர் இந்த டெல்லியை சேர்ந்த சேவாக். இரட்டை சதமும் சரி, முச்சதமும் சரி சிக்சர் பவுண்டரிகளால் மட்டுமே நிறைவு செய்த அசாத்திய துணிச்சல்காரர், எந்த நிலையிலும் தன்னிலை ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாதவர். தோனியுடன் ஏற்பட்ட பூசலினால் ஓரங்கட்டப்பட்டு, தற்போது தன்னோட பிறந்த நாளில் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

சேவாக் என்ற வீரனுக்கு மதிப்பளிக்கவில்லை என்றாலும் அவர் செய்த சாதனைகளுக்கு மதிப்பளித்தாவது இந்த தென்னாப்பரிக்க டெஸ்ட் தொடரில் விளையாட வைத்து கௌரவம் செய்திருந்தால் என் போன்ற சேவாக் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும், அவருக்கும் ஓய்வு அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும். அவரின் இத்தனை வருட கடின உழைப்பை கொச்சைப் படுத்திய உணர்வு தான் மிஞ்சி நிற்கிறது. உங்களது ஒவ்வொரு அடியும் வரலாற்றில் பதிந்துவிட்டது இன்றைய சிலுவண்டுகள் எப்படி சிலுத்துக் கொண்டு திரிந்தாலும் உங்களின் அபரிமிதமான துணிச்சலும், எப்பேர்பட்ட பவுலரையும் கலங்கடிக்க கூடிய அதிரடியும் வேறு எவருக்கும் சாத்தியப்படாது. உங்களைப் போன்று கிரிக்கெட் ரசிகர்களை குஷிப் படுத்த முடியாது. உங்களது ஓய்வு அமைதியாகவும், குடும்பத்தினரோடு நிம்மதியாகவும் இருக்கட்டும் வீரு. 

சரி வீருவை விடுங்கள் வயதானவர், கம்பீர் இன்றளவும் ஐபில் வகையறா போன்ற கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கிக் கொண்டு தானே இருக்கார், சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணியிடம் அடிமேல் அடி வாங்கி கொண்டிருக்கும்  இந்திய அணியில் அனுபவ வீரரான கம்பீருக்கு ஏன் இடம் அளிக்கவில்லை? ஒருவேளை அவரையும் ஓய்வுக்கு தயார் செய்கிறார்களோ, என்னவோ? 
   

Post Comment

அக்டோபர் 15, 2015

கத்துக்குட்டி


இப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்தேன். இடையே புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் படம் வெளியான உடனே பார்க்க இயலாமல் போக, நேற்று தான் பார்க்க முடிந்தது. இப்படத்தை பற்றி சொல்வதை விட இப்படம் பேசும் சில விசயங்களை பார்க்கலாம். எப்போதெல்லாம் வாக்கு வங்கி சரிகிறதோ அப்போது தான் பாவப்பட்ட விவசாயிகளின் நினைப்பு வரும், அவ்வாறு நினைவு வந்தவுடன் சரிந்து கிடக்கும் தனது செல்வாக்கை மீட்டெடுக்க அவர்களை நோக்கி அவசர அவசரமாக ஓடும் அரசியல்வாதிகளை கண்டு சலித்து போன மனிதர்கள் வாழும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று முன்பொரு காலத்தில் சொல்லப்பட்ட தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மனிதர்களின் வாழ்வியலை இரண்டு மணி நேரம் திரையில் காணும் படி செய்திருக்கிறார் கத்துக்குட்டி இயக்குனர் சரவணன்.

விவசாயி எனும் ஒரு இனம் இருந்ததாகவும், அவர்கள் விவசாயம் எனும் அதி முக்கியமான தொழில் செய்து ஊருக்கெல்லாம் சோறு போட்டதாகவும் என்று வரலாற்றுப் புத்தகத்தில் ஏற்றாத குறைதான், மத்தபடி அவர்களின் வாழ்க்கை அதள பாதாளத்தில் தான் கிடக்கிறது. கிடந்து அல்லல் பட்டது போதும் நம்ம பிள்ளைகளாவது படித்து பெரியாளாகட்டும் என்ற நப்பாசையில் இருக்கிற நிலத்தை விற்று படிக்க வைத்து, வீட்டுக்கொரு இஞ்சினியர் உருவாக்கி விட்டு தன்னை சிதைத்து, மண்ணை தொலைத்து, எதிர்காலம் சூனியமாய் போய் எவ்வித ஆதரவு இல்லாமல் தனித்து நிற்கும் விவசாய குடிகளின் வலிகளை பதிவு செய்ய முனைந்திருக்கிறது இந்த கத்துக்குட்டி.அடி மேல் அடி வாங்கி நசிந்து கிடக்கும் மக்களின் மீது, மீத்தேன் திட்டம் என்ற ஒன்றை இடியாய் இறக்கி வேடிக்கை பார்க்கும் அரசாங்கம் இது. அரசாங்கத்தை எதிர்ப்பது போல் காட்சியமைத்தால் படம் வெளிவராது என்றறிந்து மீத்தேன் திட்டத்தினால் வரும் விளைவுகளை சொல்ல முயன்றிருக்கிறார். 

விவசாயம், அதன் மீதான மக்களின் அலட்சிய போக்கு, மீத்தேன் திட்ட விளைவு, அரசாங்க கெடுபிடி, வடிக்கட்டிய அரசியல், குடி, பட்டினிச்சாவு, இயற்கை விவசாயம், கதிர்வீச்சு பாதிப்பு, இப்படி படம் நெடுக தொலைத்து கொண்டிருக்கும் வாழ்வியலை பற்றியே பேசிக்கொண்டிருந்தாலும் பாடமெடுக்கும் உணர்வு வராமல் பார்த்துக் கொள்கிறார். பன்ச் வசனங்களாய் கேட்டு கேட்டு புளித்துப் போன காதுகளுக்கு கொஞ்சம் இனிமையாய் இருக்கிறது மக்களின் கிராமத்து மொழி. 

இந்தப் படத்திலும் குறைகள் இல்லாமல் இல்லை, இதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் பட்டியல் வெகு நீளமாய் நீளும், இருந்தும் முதல் முயற்சி, மக்களின் அவசிய பிரச்சினைகளைப் பற்றி பேசும் படமென்பதால் குறைகளை புறந்தள்ளி நிறைகளை மட்டும் சொல்கிறேன். இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தந்தால் மட்டுமே தொடர்ந்து இம்மாதிரியான படைப்புகள் வெளிவரும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதுகிறேன். 

படம் நெடுக பாடமெடுக்க முனைந்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்றறிந்து சந்தியாவை வைத்து ஒரு குத்து பாடல்? அரசியல் கலாட்டா என்று கொஞ்சம் கமர்சியல் மாசலா பூசி கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். இவரை நம்பி முதலீடு செய்தவரும் பிழைக்க வேண்டுமல்லவா?

இயற்கையோடு தவழ்ந்திருக்கிறது கேமரா, பிண்ணனி இசையில் நிறைய மெனக்கெட வேண்டும் என்பதை படம் நெடுக உணர வைக்கிறது அயர்ச்சியான இசை. பாடல் ஒருமுறை கேட்கவைக்கும் ரகம். 

ரியல் எஸ்டேட் க்கு விளம்பரம் செய்ய வந்த தேவி ப்ரியாவை கடத்திக் கொண்டு சென்று பேசும் வசனங்களும், முதல் பத்து நிமிடங்களின் படத்தொகுப்பு பட்டாசாக இருக்கிறது. வசனங்களில் தொய்வில்லை என்றாலும் இயக்குனர் அதிகம் மெனக்கெட வேண்டுமென்று பலக்காட்சியமைப்புகள் உணர்த்துகின்றன. உதாரணம் பட்டினிச்சாவு பற்றி பேசி மீத்தேன் திட்டத்திற்காக நாயகியின் அப்பா தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் போது பார்வையாளனாய் மட்டுமே இருக்க முடிந்ததே தவிர பங்காளனாய் பங்கெடுக்க முடியவில்லை.

தனிக் கவனம் எடுத்து நடித்திருக்கும் சூரி, நரேன், சிருஷ்டி மற்றும் மற்ற நடிகர்களுக்கும் ஒரு பெரிய பூங்கொத்து. திரையில் காண வேண்டிய படமிது!


   

Post Comment

அக்டோபர் 03, 2015

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 11/10/2015, புதுக்கோட்டை


சென்னை மற்றும் மதுரையின் தொடர்ச்சியாக இந்த வருடம் புதுக்கோட்டையில் நிகழ இருக்கிறது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு. தொடர்ச்சியாக நான்காம் ஆண்டு சந்திப்பு நிகழ இருப்பது பெரும் மன மகிழ்வைத் தருகிறது. இம்முறை புதுக்கோட்டை நண்பர்கள் அதற்கான முயற்சியை முன்னெடுத்து மிகச் சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள், மேலும் விழாக் குழுவினர் பெரும்பாலானோர்  ஆசியர்கள் என்பதினால் கூடுதல் ஒழுங்கு இருக்குமென்று பெரிதும் நம்புகிறேன், அவர்களின் கலந்தாய்வு கூட்டங்களை நிகழ்த்திய விதம் அதற்கான சான்றாக இருக்கிறது. விழாக்குழுவினர் அனைவருக்கும் முன் கூட்டிய எனது வாழ்த்துகள் தோழமைகளே!முந்தைய சந்திப்புக்களில் இல்லாத அளவிற்கு சில புதுமையான திட்டங்கள் வகுத்து செயல் படுத்தவும் காத்திருக்கிறார்கள் அதற்காகவே கலந்து கொள்ள வேண்டும் என்று ஆவலைத் தூண்டுகிறது. எழுத்துக்கும், கலைக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பதை பெரிதும் நம்புகிறவன் நான், அவ்வாறே விழா அரங்கினை கவிதைகளாலும், அதற்கு தகுந்த ஓவியங்களாலும் நிரம்பச் செய்ய இருக்கிறோம் என்று சென்னை சந்திப்பில் திரு. முத்துநிலவன் அவர்கள் சொன்னதிலிருந்து, அவ்வப்போது மனம் அந்த அரங்கத்தையே சுற்றி வருகிறது. 

பிரத்யோகமாக ஒரு வலைத்தளம் துவங்கி அதில் எல்லாத் தகவல்களையும் ஒருங்கிணைத்து அளிப்பதினால் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது. வரும் காலங்களில் சந்திப்புக்களை நிகழ்த்தப் போகும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.உடலுழைப்பையும் தாண்டி, கணிசமான பண பங்களிப்பையும் அளித்து விழாவை நிகழ்த்த இருக்கும் நண்பர்களுக்கு முடிந்தவரை, நம்மளால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். வங்கி கணக்கிலோ அல்லது விழா நிகழ்வன்றோ கூட கொடுக்கலாம் என்று நம்புகிறேன்.மேலும் உடனுக்குடன் உங்களுக்கு தகவல்களை அறிந்து கொள்ள, பிரத்யோக வலைப்பக்கமான தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 2015 தளத்தை பாருங்கள், மற்றும் தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றுவது மட்டுமில்லாமல், நேர்த்தியாக ஒருங்கிணைத்து அளிக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்திலும் http://dindiguldhanabalan.blogspot.com/ பதிவர் சந்திப்பு - 2015 பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்!


இதுவரை இல்லாத அளவிற்கு சில புதுமைகளை நிகழ்த்த இருக்கும் நண்பர்களுக்கு ஆதரவளித்து, வரும் 11/10/2015 அன்று புதுக்கோட்டையில் சந்தித்து மன மகிழ்வோம் நண்பர்களே, வாருங்கள் அனைவரும்!


Post Comment

அக்டோபர் 01, 2015

ஒரு வெயில் நேரம் - நர்சிம் (சிறு கதைகள்)


சில நாட்களுக்கு முன் எனது புத்தக அலாமரியை மேய்ந்து கொண்டிருக்கையில் கையில் சிக்கியது இந்த "ஒரு வெயில் நேரம்", எப்போது இந்நூலை வாங்கினோம் என்ற ஆச்சர்யத்துடன் எடுத்து சில பக்கங்களை புரட்டுகையில் நினைவுக்கு வந்தது. இந்த நூலை வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகிறது, எப்படி தவற விட்டேன் என்கிற சிந்தனையில் படிக்கத் துவங்கினேன். அமிர்தம் சூர்யாவின் அணிந்துரையை படித்ததும் கொஞ்சம் மிகைப் படுத்தி புகழ்ந்திருப்பாரோ என்ற நினைப்புடன் வாசிக்கத் துவங்கிய என்னை, உன் நினைப்பு தவறென்றது முதல் கதை. வாசித்து முடிக்க மிகச் சரியாக இரண்டு நாட்கள் ஆனது எனக்கு, இடையிடையே நிறுத்தி நிறுத்தி தான் வாசித்தேன். ஒழுங்கான வாசிப்பாளனுக்கு ஒரு நாள் போதுமானது என்று நம்புகிறேன்.பதினைந்துக்கும் மேற்பட்ட கதைகளால் உள்ளடங்கியிருக்கும் இந்த வெயில் நேரம் வாசிக்க வாசிக்க குளுமையாக இருக்கிறது. தன்னை கடந்து போன மனிதர்களையும், தாம் கடந்து வந்த மனிதர்களையும் அவர்தம் வாழ்வியலையும் கதைக்களனாக தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் திரு. நர்சிம். ஒவ்வொரு கதைக்குப் பின் ஒரு அழுத்தமான வலி இருக்கிறது. சிலவற்றை படித்து அறிந்து கொள்ள முடிகிறது, இன்னும் சிலவற்றை உணரவும் முடிகிறது.

வாசிப்பாளனையும் கதையின் பங்குதாரியாக ஆக்குவதில் இருக்கிறது கதையாளனின் வெற்றி, அது நர்சிமுக்கு மிக அழகாய் கை கூடி வருகிறது. இந்த தொகுப்பிலுள்ள எந்த கதையிலும் இலகுவாய் நம்மை இணைத்துக் கொள்ள முடிகிறது. வாசகனை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைத்து கதை சொல்கிறேன் என்று வகுப்பெடுக்காமல் எவ்வித சிக்கலுமில்லாமல் கதைக்குள் புகுத்தி கதை சொல்வது புது இரகம். ஒரு நாவலுக்கான கருவை சுமந்து நிற்கின்றன இவரது ஒவ்வொரு கதைகளும்.

இத்தொகுப்பில் என்னை பெரிதும் ஈர்த்தது என்றால் 'புளிக்காரக்கா' கதை தான், காதலியோடும், அவளின் அம்மாவோடும் நிகழ்த்தும் காதலன் ஒருவனின் காம களியாட்டம், அக்கதையை வாசித்து முடிக்கையில், உச்சிக்கிளையில் ஏறி காலின் பெருவிரலால் அழுத்தி புளியை உலுக்கும் அந்த உதறலை நமக்கும் வரவைக்கிறது. அந்த நடுக்கம் குறைய சில நாட்கள் தேவையாய் இருக்கிறது.

 'அம்பத்தாறு' கதையில் கிராமத்து ஆணின் மனதுக்குள் ஒளித்து வைத்திருக்கும் வன்மத்தை வெளிச்சம் போட்டு காட்டுகையில் மனது பக்கென்று அடித்துக் கொள்கிறது, வாழையடி வாழை கதையில் இறப்பினை வைத்து ஒருத்தன் கொண்டாடுவதும், ஒருத்தன் அதை துக்கமாய் அனுஷ்டிப்பதுமாக இருவேறு மன நிலையை அவ்வளவு நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

'மதுரம்' கதையில் வரும் தங்கைய்யா போன்று ஊருக்கு ஒன்றேனும் இருப்பர், அப்படி ஒரு மனிதரோடு கொஞ்ச நாள் நானும் பழகி இருக்கேன் என்பதினால் இக்கதை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கைய்யா இறந்த பின்பு அவரின் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட காதல் கடிதத்தை வாசித்த எவராலும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது அந்த சோக சுரத்தை!

உச்சமாக 'வேப்பம் பழங்கள்' கதையில் வரும் பழனி செய்யும் செயல் நெஞ்சை பிசைந்தாலும் தன்னால் இல்லறத்தில் ஈடுபடமுடியாமல் தன்னோட தந்தையிடம் கதறுகையில் பழனி மேல் வரும் மரியாதை கலந்த அனுதாபத்தை கண்டு  பிரமித்து நிற்கையில், அவரின் அப்பா தரும் அதிர்ச்சியை பழனி மட்டுமல்ல வாசிக்கும் நம்மாலும் தாங்கி கொள்ள இயலாத பெருஞ்சுமை.

இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும், அது என்னவெனில் சில கதைகளை வாசிக்க கொஞ்சம் அதீத கவனம் தேவையாய் இருக்கிறது. அவ்வளவு எளிதில் சில கதைகளை புரிந்து கொள்ள இயலாமல் வாசகர்கள் தடுமாறலாம் என்பது எனது கருத்து. இந்த "ஒரு வெயில் நேரம்" வாசிக்கையில் நிச்சயம் ஒரு மழை நேரமாக நம்முள் படரக் கூடிய வல்லமை கொண்டுள்ளது, நேரம் கிடைக்கையில் வாசிக்க மறந்து விட வேண்டாம்.

இந்த நூலைப் பற்றியும், திரு. நர்சிம் அவர்களைப் பற்றியும் இணையத்தில் துழாவிப் பார்த்துவிட்டேன், உங்களுக்கு யாரேனும் தகவல் தெரிந்தால் கருத்துரையில் மறக்காமல் தெரிவித்து செல்லுங்கள்.

--------------------------------------------------------------------------

பதிப்பகம்: பட்டாம்பூச்சி
                      28/A, கிருஷ்ணன் கோயில் தெரு,
                      ஆழ்வார் திருநகர்,
                      சென்னை - 600 087.
                      mobile: 9841003366

பக்கங்கள் : 112

விலை : ரூபாய் 50/-

--------------------------------------------------------------------------

courtesy : http://vasagarkoodam.blogspot.com/2015/10/blog-post.html

Post Comment