புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 13, 2016

அரசனின் இண்ட முள்ளு (கதைகள்) ஒரு பார்வை


வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம்,மரகதம், மாணிக்கம்,  நீலம் என ஒன்பதும் நவரத்தினங்கள் என்றழைக்கப்படும். அந்த நவரத்தினங்களைப் போலவே திரு. அரசன் அவர்கள், பெருஞ்சொம, தூவானம்,சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காத்து என ஒன்பது கதைகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு கதையும்அவர் தம் கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் வைத்து மண்மணம் மாறா பேச்சுமொழியில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது.

ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் அதனுடன் வாசகன் பயணிக்க வேண்டும். அவ்வாறு வாசகனைக் கதையோட்டத்தோடு அழைத்துச்செல்ல வேண்டும். கதையையும் கதாமாந்தர்களையும் நம்முன் காட்சிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சிப்படுத்தும் கலை திரு அரசன்  அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதை அறிந்து அவரது திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.கதைதானே என்றில்லாமல், ஒவ்வொரு கதையிலும் தாம் வாழும் சமுதாயத்திற்கு ஒரு கருத்தையும் உள்ளடக்கிச்செல்கிறார். ஆனால், அறிவுரை என்பதை வெளிக்காட்டாமல் கதைக்குள்ளே படிப்பவர்கள் உணரும் அறவுரையாகத் தந்திருப்பது சிறப்பு.

பெருஞ்சொம & எதிர்க்காத்து– கதையில் பெண் ஆண் நட்பு – காதல், திருமணம் செய்து கொள்ளாமல் கருவுறுதல், கருக்கலைப்பு, எப்படியும் திருமணம் செய்து கொள்வான் என்ற பெண்ணின் நம்பிக்கை, ஏற்றத்தாழ்வால் ஏமாற்றம் இறுதியில் தற்கொலை, தனிமை. வாழ்நாள் முழுவதும் தன்னெஞ் சறிவது பொய்யற்க என மனசாட்சியே கொல்லுதல் என படிப்பவர்களையும் பெரிய சுமையை சுமக்க வைத்து விடுகிறார் ஆசிரியர். ஒருவர் தன் வயிறெரிந்து கொடுக்கும் சாபம் என்றும் பொய்க்காது என்பதையும் ஏமாற்ற வேண்டும் என்று எண்ணுபவனின் வாழ்க்கை என்றும் ஏற்றங்காணாது என்பதையும் உய்த்துணர முடிகிறது. 

தூவானம் –ஒற்றைப் பெற்றோராக இருக்கும் ஒருவர் வாழ்க்கையில் தன் குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்குப்படும் சிரமங்களை உணர முடிகிறது. தனித்து வாழும் பெண்கள்,சமுதாயத்தில் குரலை உயர்த்தியும் கறாராகப் பேசவேண்டிய அவசியத்தையும் இக்கதை உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெள்ளந்தெளிவாகக் காட்டுகிறது.  அப்படி இருந்தால்தான் சமுதாயத்தில் உலவும் பல மானிட வல்லூறுகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும் என்பதையும் கூறுகிறது இக்கதை. பெண்ணுக்குத் திருமணம் செய்ய தான் மட்டுமே  அலைந்து திரிந்து முடிப்பதைச் சற்றும் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.

சாந்தி – கதையின் தலைப்பே அமைதியின்றித் தவிக்கும் ஒரு பிறவியைக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது. ஆண் பெண் இருவரும் எப்படி இருக்கக்கூடாது என்பதையும், கட்டாயத் திருமணத்தால் பெற்றோரைப் பழிவாங்குவதாக நினைத்து தன் வாழ்க்கையையே தொலைத்த பெண்ணும்  சமுதாயத்திற்குக் காட்டப்பட்ட அறவுரை எனக் கொள்ளலாம். ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த சாந்தி ஒரு எடுத்துக்காட்டு. சமுதாயத்தில் சரியான வழிகாட்டுதலும்  விழிப்புணர்வும் இல்லாத பெண்களுக்கு இந்த சாந்தி ஒரு சரியான முன்னுதாரணம்.

வெள்ளாம;சாதாரண வேளாண் குடும்த்தைப் பற்றிய கதையாக இருந்தாலும், மனைவி தவிர பிற பெண்களைத் தொடமாட்டேன் என்ற உறுதி கொண்ட பழனி, இன்றும் பல குடும்பங்களில் இருப்பதைப் போல  கணவனுக்கும் மகனுக்கும் நடுவே அல்லாடிக்கொண்டு இருக்கும் தங்கம், காதல் கணவன் இறந்தபின்னும் கண்ணியமாக வாழும் செல்லம்மா, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பாங்கு, ஒரே ஊரிலிருந்தும் தாய் தந்தையோடு ஒட்டுறவாக இல்லாத மகன், விளைநிலம் அறுவடை என சாதாரண சூழலில் பல அறக் கருத்துக்களை உள்ளடக்கிச் செல்கிறது இந்த வெள்ளாம. விளைந்த பொருள் வீடு வந்து சேர்வதற்குள் விவசாயி படும் பாடு அவனுக்கு மட்டுந்தான் தெரியும். இக்கதையிலும் பழனியின் மன உறுதி தன் நெஞ்சுவலியும் தாங்கிக்கொண்டு வெள்ளாமையை வீட்டிற்குக் கொண்டு வந்தபின்பு அவர் உயிர் பிரியும் அவலம் படிப்போர் மனத்தைக் கனக்கச் செய்கிறது என்றார் அது மிகையில்லை.

தாய்மடி மதுவினால் அழியும் மனிதர்களைப் பற்றியது. மகள் இறந்தபின்பு பாஞ்சாலையை மகளாக நினைக்கும் தாயுள்ளம் என கதை செல்கிறது.

காயடிப்பு– இக்கதை ஒன்றும் அறியாத ஒரு சிறுவனின் மனத்தில் இருக்கும் ஓராயிரம் விடைதெரியா வினாக்களை வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது. அக்காலத்தில், பெற்றோருக்கு உதவும் சிறுவர்கள், பிறருக்கு உதவும் ஓரூர் மக்கள்,தெரிந்தவர்களின்  இறப்பு படுத்தும்பாடு, நினைவுகளில் தேங்கி நிற்கும் தாவரங்கள், ஓரிரு வினாடிகளில் எடுக்கப்படும் தற்கொலை முடிவுகள் என அனைத்தும் வாசிப்பவர்களுக்குத் தொய்வு ஏற்படுத்தாமல் செல்கிறது இக்கதை.

நலுவன்  காலங்காலமாக நடக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சமூகப் போராட்டம். குறைந்த கூலியில வேலைக்கு ஆள், எதைச் செய்தாலும் எதிர்த்துக் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணம் என பணம் படைத்தோர், மானம்தான் பெரிசு மற்ற எதுவும் பெரிதில்லை என வாழும் இல்லாதோர் என இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை இக்கதை எடுத்துரைக்கிறது. இக்கதைக்கரு அக்காலம் முதல் இக்காலம் வரை இந்த சமுதாயத்தில் நடக்கும் அவலமாக இருந்தாலும் கதையைக் கொண்டு செல்லும் பாங்கு சிறப்பு.

மொத்தத்தில், நூலின் பெயர், அட்டைப் படம் என அனைத்தும் பசுமை மாறா கிராமியச் சூழல். கழனிவெளி, நெற்களம்,கிராமிய மக்களின் வாழ்வியல், ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி மண்மணம் மாறா சிறுகதைகளை அக்கிராமிய மொழிகளில் எழுதி ஒரு நூலாக நம் கைகளில் தவழ விட்டிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு தாவரத்தின் தன்மை குறித்தோ அல்லது நிலத்தைப்பற்றியோ கதைக்குத் தொய்வு ஏற்படாமல் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் கதாசிரியரின் முதல்நூல் என்று சொல்ல முடியாத அளவிற்கு அமைந்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழன்னைக்கு மேலும் பல நூல்களால் நூலாசிரியர் அழகு சேர்க்கட்டும்.

பொருளடக்கம் அல்லது உள்ளடக்கம் என ஒரு பக்கத்தில் தலைப்புகளையும் பக்கங்களையும் எழுதி இருக்கலாம். இளங்கன்று பயமறியாது என்ற பழமொழியைப் படித்ததுண்டு. ஆனால் ருசிகண்ட பூனை பயமறியாது என்பதை இங்குதான் தெரிந்து கொண்டேன். கெடாவெட்டி என்னும் கதையை என்னால் படிக்க முடியவில்லை. கொஞ்சம் நெருடலாக இருந்தமையால் அதைப் படிக்க என்னால் இயலவில்லை. இண்ட முள் என்பது எப்படி இருக்கும் எனத்தெரியாது. அதனை ஒரு படமெடுத்துப் போட்டிருக்கலாம். (இது என்கருத்து மட்டுமில்லை. கவிஞர் கோ. கண்ணனுடையதுமாகும்.) மறுபதிப்பில் சேர்த்து விடுங்கள். இந்தப்புத்தகத்தைக் கொடுத்த கவிஞர் கருணாகரசுக்கு மனமார்ந்த நன்றி. இது ஒரு நூலாய்வோ அல்லது மதிப்புரையோ இல்லை. இங்கு எழுதப்பட்டவை நான் இந்த நூலைப் படித்தபோது நான் உணர்ந்தவை மட்டுமே. நன்றி.

திருமதி. உஷா சுப்புசாமி
கல்வியாளர்

சிங்கப்பூர்.


Post Comment