புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 18, 2017

மாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .கடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில் நூலகம் மற்றும் கணினி அறை திறப்பு விழாவில் நானும் ஒரு விருந்தினனாய் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அரியலூர் மாவட்டத்திற்கே இந்த முயற்சினை முன்னுதாரணமாக கூறலாம். படிப்பிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பெயரெடுத்த எங்களது மண்ணினை மாற்ற முனைந்திருக்கும் இளையோருக்கு அன்பு கலந்த நன்றியும், பாராட்டுக்களும்.முதல் விதையாக தங்களது சொந்தக்கிராமமான செட்டித்திருக்கோணம் அரசுப் பள்ளியை தேர்வு செய்து இணைய வசதியோடு கூடிய கணினி அறையும், சிறிய நூலகம் ஒன்றையும் அமைத்து தந்திருக்கிறார்கள். வெளிநாடு வாழ் நண்பர்களின் பொருளாதார பங்களிப்போடு, உள்ளூரில் இருக்கும் சில நண்பர்களின் உழைப்பில் இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். யாருக்கோ?, யாரோ செய்யும் உதவி என்பது போல், இன்றைய தலைமுறையினர் சிலர் அலட்சியப்படுத்தி கடந்தாலும், அவர்களும் உணர்ந்து வருங்கலாத்தில் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.சமூக மாற்றம் வேண்டுமெனில் அது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்பதை மிகச் சரியாக உணர்ந்து, அந்த இடத்தில் விதையினை பதியமிட்டிருக்கிரார்கள், அதற்கான பலனை கண் கூடாக காணலாம் என்று சர்வ நிச்சயமாக நம்புகிறேன். தங்களது கிராமத்திற்கு என கூகுள் செயலி, இணையப் பக்கம் என்று எந்தவொரு பிரதிபலனும் பாராமல் பலரின் உழைப்பின் வாயிலாக நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம் விரைவில் அரியலூரின் மற்ற கிராமங்களுக்கும் பரவும் என்றே நம்புகிறேன்.

இத்தோடு நின்றுவிடாமல் தங்களது அடுத்தக் கட்ட முயற்சியினை அவர்கள் விவரிக்கையில், அவர்களின் தோள் சுமையை நாமும் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கிளம்பியிருக்கிறது. ஆக்கப் பூர்வமற்ற வெட்டிப் பேச்சுகளோடு, எதிர்கால சந்ததிகளின் மீது பெரிய அக்கறை இல்லாமல், வெறுமனே பொழுதைக்  கழித்துக் கொண்டிருக்கும் எங்களது சுண்ணாம்பு கிராமங்களின் முகம் மாற தொடங்கியிருக்கிறது என்பதே சற்று நம்பிக்கையை தந்திருக்கிறது.   எவன் எவனோ, எங்கிருந்தெல்லாமோ வந்து, என் பாட்டனையும், அப்பனையும் ஆசை வார்த்தைக்காட்டி எங்களது வாழ்வாதரமான விவசாயப்பூமியை குறைந்த விலைக்கு வாங்கி, மண்ணுக்கடியில் இருக்கும் கனிம வளத்தை சுரண்டி... சுரண்டி... இன்றளவும் தின்று கொழுத்துக்கொண்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் எங்களிடம் போதிய படிப்பறிவும், தெளிவான அரசியல் பார்வையும் இல்லாமல் போனது தான். இன்றளவும் தனியார் ஆலைகள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்க ஆளில்லாமல், துணிவில்லாமல், அவர்கள் இடும் ஏவலுக்கு காத்து நிற்கும் கூலிகளாகவே இருக்கின்றோம். வளரும் தலைமுறைகளுக்கு, விழிப்புணர்வு தந்து, வாசிப்பை நோக்கி ஈர்க்க முன்னெடுப்புகள் செய்யாமல் வெறும் விளம்பரப் பிரியர்களாகவே இருக்கின்றனர் எங்களது மாவட்டத்தின் பேரமைப்பு நண்பர்கள். 

ஒரு சமூகம் மேம்பட்ட சமூகமாக இருக்கவேண்டுமெனில், பள்ளிக் கல்வியோடு சேர்ந்த பொது வாசிப்பும் அவசியம் தேவை. அதற்கான முன்னுதாரணமாக செட்டிதிருக்கோணம் நண்பர்களின் முயற்சினை பார்க்கிறேன், பெரிதும் பாராட்டுகிறேன்.   
உங்களது ஒவ்வொரு செயலையும் நுணுக்கமான திட்டமிடுதலோடு செய்யுங்கள் நண்பர்களே, நானும் சில பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவன் என்கிற முறையில் சொல்கிறேன், சில நெருடல்களும், உரசல்களும் இருக்கத்தான் செய்யும், அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கடந்து வெளிவாருங்கள் உங்களை ஊரே கொண்டாடும்...

பேரன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு.   


Post Comment

ஜூலை 12, 2017

விளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்
அகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது. 

தேர்வும் தொகுப்பும் : திரு. பொன். வாசுதேவன்.

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு : 

விலை: ரூ.140

+91 99945 41010
aganazhigai@gmail.com

Post Comment

நவம்பர் 23, 2016

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில், கவிஞர் சுப்ரா அவர்களின் வண்டறிந்த ரகசியம்”, உமையவனின் வண்டிமாடுஹைக்கூ தொகுப்பு, கோ.கலியமூர்த்தி அவர்களின் தீபங்கள் பூத்த கார்த்திகை வீதிகவிதைத் தொகுப்பு, இவற்றோடு சேர்த்து எனது சிறுகதைத் தொகுப்பான இண்ட முள்ளுவையும் அறிமுகம் செய்து வைத்தனர். இண்ட முள்ளினைப் பற்றி நண்பன் கார்த்திக் புகழேந்தி நேர்த்தியானதொரு அறிமுக உரையை வழங்கினார். தான் காணும் நண்பர்கள் எல்லோரிடமும், “இவர் அரசன், இண்ட முள்ளு எனும் கதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கார், அட்டகாசமான கதைகள், வாசித்துப் பாருங்கள்” என்று கூறி, எனது கதைகளை நிறைய நண்பர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்த பெருமை கார்த்திக் புகழேந்தியைச் சேரும். இவருடைய நட்பு வெளி பெரிது, அதில் நானும் ஒருவன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.


பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இரு பெரும் தூண்கள் பூபாலன் மற்றும் அம்சப் ப்ரியா. ஓரிரு கூட்டங்களை ஒருங்கிணைக்கவே மூச்சு முட்டுகையில், தொடர்ச்சியாக மூன்று வருடங்கள், 43 நிகழ்வுகள் என்பது பெரும் சாதனை தான். இருவருக்கும் பெரிய கைகுலுக்கல்கள். இளம் படைப்பாளிகளை இனங்கண்டு வெளிக்கொணரும் தங்களின் அரும்பணி தொடரட்டும். தன்னுடைய உரை முடிந்த பின் மெல்ல நழுவிய ஒன்றிரண்டு நபர்களை தவிர்த்து, நிகழ்வு முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த பொள்ளாச்சி இலக்கிய வாசக/படைப்பாளிகளுக்கு வணக்கமும், நன்றிகளும்.

கார்த்திக் புகழேந்தியின் அறிமுக உரைக்குப் பின் எனது ஏற்புரை. என்ன பேசினேன் என்பதை விட எப்படி பேசினேன் என்பது தான் முக்கியமான விஷயம். மேடைப்பேச்சு என்றாலே உதறல் தான், குடந்தையூர் சரவணன் அவர்களின் நூல் வெளியீட்டில் நான் வழங்கிய வரவேற்புரையை அவர் மறந்தாலும் நான் மறக்கவே மாட்டேன், அப்படியொரு சொதப்பலான பேச்சு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறினாலும், படைப்பது மட்டுமல்ல அதை சரியான முறையில் மக்களிடம் சேர்க்கவும் தெரிய வேண்டும், இன்னும் என் பேச்சை சரி செய்ய வேண்டும் என்ற கற்பிதத்தை வழங்கி இருக்கிறது பொள்ளாச்சி மண்.நிகழ்வு முடிந்து மதிய உணவை முடித்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் திருமதி. கீதா பிரகாஷ் அவர்கள், கார்த்திக் புகழேந்திக்கு போன் செய்து ஐந்து கதைகளை வாசித்து விட்டதாகவும், பெண்களின் உணர்வுகளை அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் எழுதியிருக்கும் அரசனுக்கு வாழ்த்துகளைக் கூறுங்கள் என்று சொன்னதோடு, திங்கள் காலையில் எனக்கும் போன் செய்து மேடையில் பேச கூச்சப்படும் நீங்கள் தானா இந்தக் கதைகளை எழுதியது என்ற சந்தேகம் வந்ததாகவும், இன்னும் இன்னும் எழுதுங்கள் என்று கூறி என்னை வாழ்த்தினார்கள். வாங்கிய உடனே படித்துவிட்டு, போனில் அழைத்து கருத்துக்களைக் கூறிய அந்த நொடி சந்தோஷம் இருக்கிறதே, உணர்ந்தால் மட்டுமே தெரியும் அந்த நொடிகளின் பூரிப்பை. வழியில் திருமதி. சிவகாமசுந்தரி அவர்களின் இல்லத்திற்கு சென்று இண்ட முள்ளு பிரதி ஒன்றை வழங்கிவிட்டு நொறுக்குத் தீனியோடு காபி குடித்து, சாலை வரை வந்து அவரது மகள் தேஜுக்குட்டி வழியனுப்ப மகிழ்ச்சியுடன் நண்பன் ஆவியின் வீடு சேர்ந்து அம்மாவின் கையால் சுடச் சுட சப்பாத்தியோடு கோழிக்கறியை ஒரு பிடி பிடித்துவிட்டு சென்னைக்கு ரயில் ஏறினோம்.இண்ட முள்ளு வெளி வர முக்கிய காரணி நண்பன் ஆவி, என்னோடைய எல்லாவிதமான பயணத்திலும் கூடவே  இருக்கும் மனிதர். மெரினாவில் நிகழ்ந்த அறிமுகக் கூட்டம், புதுக்கோட்டை வீதி அமைப்பின் அறிமுகக் கூட்டம், இப்போது பொள்ளாச்சி இலக்கிய கூட்டம் இப்படி எல்லாவற்றிலும் தனது வேலைகளை/பயணங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு என்னோடு கிளம்பி வரும் ஜீவன், ஆவி. இந்த அரவணைப்புக்கு வாழ்நாளைய அன்பும் பிரியமும் நண்பா.

நன்றிகள் சொல்ல நிறைய நல்ல உள்ளங்கள் இருந்தாலும், இண்ட முள்ளினை, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் கொண்டு சேர்க்க முக்கிய காரணியாக இருந்த(சுகமின்மையால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்று பெரிதும் வருத்தப்பட்டுக்கொண்டார்) திருமதி. முகில் நிலா தமிழ் அவர்களுக்கும், அண்ணன்கள் நாஞ்சில் மனோ மற்றும் இலியாஸ் அவர்களுக்கும் அன்பு கனிந்த நன்றிகள்.  

பின்வரும் இணைப்பில் நண்பன் கார்த்திக் புகழேந்தி அவர்களின் அறிமுக உரை ஒலி வடிவத்தில் : https://soundcloud.com/gsrkteam/arasan-book-review

நன்றிகளுடன்

அரசன்    

Post Comment

அக்டோபர் 12, 2016

"வீதி" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...


எதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத சுகங்களினால் நிறைந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நானெல்லாம் எழுதுவேன் என்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தவன், இப்போது பாருங்கள் ஒரு சிறுகதை நூலினை வெளியிடுமளவிற்கு உருமாறியிருக்கிறேன். இப்படியான நிறைய நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என் வளர்ச்சிக்குப் பின்னாடி நிறைய நண்பர்களின் ஊக்கமும், ஆதரவும் நிறைந்திருக்கின்றது. அவர்கள் இல்லையெனில் இந்த அளவுக்கு எனது வளர்ச்சி இருக்குமா? என்பது கேள்விக்குறி தான்.சென்ற வாரம் நடந்த புதுக்கோட்டை "வீதி" கலை இலக்கிய அமைப்பின் கூட்டத்தில் எனது இண்ட முள்ளு நூலினை அறிமுகம் செய்து வைத்து எனது முயற்சிக்கு மேலும் வலு சேர்த்து இருக்கிறார்கள். நிகழ்வினைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் முன், "வீதி" அமைப்பினை பற்றி கூறி விடுகிறேன்.மிகுந்த கவனமுடன், பலரின் அரவணைப்போடு நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அமைப்பு இது. படைப்பாளிகளை உருவாக்கும் பயிற்சி நிலையம் வீதி. புதிதாக எழுத முனையும் நண்பர்களுக்கு, தனது அகண்ட தோளினைக் கொடுத்து அரவணைத்து, படைப்பாளிகளின் குறை நிறைகளை எவ்வித சமரசமுமில்லாமல் விளக்கி கூறி அவர்களின் முயற்சிகளுக்கு பக்க பலமாய் இருந்து வழி நடத்துகிறார்கள் வீதியின் அமைப்பு நண்பர்கள். திரு. முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி வீதி அமைப்பின் கூட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாடல், கவிதை, கதையென அனைவருக்குமான களமாக இருக்கிறது வீதி.

துல்லியமான திட்டமிடுதலில் துவங்கி, கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்துவது வரை மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார்கள். சிறப்பம்சம் என்னவெனில் வீதி அமைப்பில் உள்ள பெரும்பாலானோர் ஆசிரியர்கள். அதனாலோ என்னவோ மிகுந்த உறுதியுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கூட்டம் முடிந்து வெளியே வருகையில் நம்ம ஊரில் இப்படியொரு அமைப்பு இல்லையே என்கிற ஏக்கம் மெல்ல எட்டிப் பார்த்தது எனக்குள். இன்னும் இன்னும் வீதி கலை இலக்கிய அமைப்பின் சிறகுகள் விரிய அன்பு நிறைந்த வாழ்த்துகள், அதன் உறுப்பினர்களுக்கு பெரிய கைகுலுக்கல்கள்.கூட்டத்தின் ஒரு பகுதியாக எனது இண்ட முள்ளு நூலினை அறிமுகம் செய்து வைத்து துள்ளலான உரை ஆற்றினார் விதைக்கலாம் குழுவின் வேராக இருக்கும் நண்பன் ஸ்ரீ மலையப்பன். நான் என்ன நினைத்து ஒரு கதையை எழுதி இருந்தேனோ அதை மிகச் சரியாக கண்டு பிடித்து சொன்ன நண்பனுக்கு அன்பும் நன்றியும். நானும் எனது பங்கிற்கு சில மணித்துளிகள் பேசினேன். முதன் முறையாக படபடப்பின்றி பேசிய கூட்டமிது. என்றும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வாக மாற்றிய வீதிக்கு வாழ்நாளைய நன்றியும் அன்பும்.

எப்போதும் போல என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் நண்பர்கள் கோவை ஆவி, 'சேம்புலியன்' ரூபக்ராம், 'திடங்கொண்டு போராடு' சீனு,     திரு. கருணாகரசு, 'வானவல்லி' வெற்றிவேல், நண்பன் கார்த்திக் புகழேந்தி , வாத்தியார் பால கணேஷ், குடந்தையூர் ஆர் வி சரவணன், கார்த்திக் சரவணன் ஆகியோருக்கு அன்பும் பிரியமும்.

இண்ட முள்ளு வெளியறிய பெரும்பங்கு ஆற்றிய திரு, இலியாஸ் அபுபக்கர், திருமதி. முகில் நிலா, திரு. நாஞ்சில் மனோ, திரு. செல்வகுமார், திருமதி. தேவதா தமிழ், திருமதி. மாலதி, திரு. சோலச்சி ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள்.


Post Comment