கடந்த ஞாயிற்றுக் கிழமை
அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில், கவிஞர் சுப்ரா அவர்களின் “வண்டறிந்த
ரகசியம்”, உமையவனின் “வண்டிமாடு” ஹைக்கூ தொகுப்பு, கோ.கலியமூர்த்தி அவர்களின் ‘தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி’ கவிதைத் தொகுப்பு, இவற்றோடு சேர்த்து எனது சிறுகதைத் தொகுப்பான
இண்ட முள்ளுவையும் அறிமுகம் செய்து வைத்தனர். இண்ட முள்ளினைப் பற்றி நண்பன்
கார்த்திக் புகழேந்தி நேர்த்தியானதொரு அறிமுக உரையை வழங்கினார். தான் காணும்
நண்பர்கள் எல்லோரிடமும், “இவர் அரசன், இண்ட முள்ளு எனும் கதைத் தொகுப்பு
வெளியிட்டிருக்கார், அட்டகாசமான கதைகள், வாசித்துப் பாருங்கள்” என்று கூறி, எனது
கதைகளை நிறைய நண்பர்களிடத்தில் கொண்டு போய் சேர்த்த பெருமை கார்த்திக்
புகழேந்தியைச் சேரும். இவருடைய நட்பு வெளி பெரிது, அதில் நானும் ஒருவன் என்பதில்
மட்டற்ற மகிழ்ச்சி.
பொள்ளாச்சி இலக்கிய
வட்டத்தின் இரு பெரும் தூண்கள் பூபாலன் மற்றும் அம்சப் ப்ரியா. ஓரிரு கூட்டங்களை
ஒருங்கிணைக்கவே மூச்சு முட்டுகையில், தொடர்ச்சியாக மூன்று வருடங்கள், 43 நிகழ்வுகள் என்பது பெரும் சாதனை தான்.
இருவருக்கும் பெரிய கைகுலுக்கல்கள். இளம் படைப்பாளிகளை இனங்கண்டு வெளிக்கொணரும்
தங்களின் அரும்பணி தொடரட்டும். தன்னுடைய உரை முடிந்த பின் மெல்ல நழுவிய ஒன்றிரண்டு
நபர்களை தவிர்த்து, நிகழ்வு முடியும் வரை பொறுமையுடன் அமர்ந்திருந்த பொள்ளாச்சி
இலக்கிய வாசக/படைப்பாளிகளுக்கு வணக்கமும், நன்றிகளும்.
கார்த்திக் புகழேந்தியின்
அறிமுக உரைக்குப் பின் எனது ஏற்புரை. என்ன பேசினேன் என்பதை விட எப்படி பேசினேன்
என்பது தான் முக்கியமான விஷயம். மேடைப்பேச்சு என்றாலே உதறல் தான், குடந்தையூர்
சரவணன் அவர்களின் நூல் வெளியீட்டில் நான் வழங்கிய வரவேற்புரையை அவர் மறந்தாலும்
நான் மறக்கவே மாட்டேன், அப்படியொரு சொதப்பலான பேச்சு. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக
மாறினாலும், படைப்பது மட்டுமல்ல அதை சரியான முறையில் மக்களிடம் சேர்க்கவும் தெரிய
வேண்டும், இன்னும் என் பேச்சை சரி செய்ய வேண்டும் என்ற கற்பிதத்தை வழங்கி
இருக்கிறது பொள்ளாச்சி மண்.
நிகழ்வு முடிந்து மதிய
உணவை முடித்துக் கொண்டு கோவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில் திருமதி. கீதா
பிரகாஷ் அவர்கள், கார்த்திக் புகழேந்திக்கு போன் செய்து ஐந்து கதைகளை வாசித்து விட்டதாகவும்,
பெண்களின் உணர்வுகளை அவ்வளவு நெருக்கமாக எழுத்தில் எழுதியிருக்கும் அரசனுக்கு
வாழ்த்துகளைக் கூறுங்கள் என்று சொன்னதோடு, திங்கள் காலையில் எனக்கும் போன் செய்து மேடையில்
பேச கூச்சப்படும் நீங்கள் தானா இந்தக் கதைகளை எழுதியது என்ற சந்தேகம் வந்ததாகவும்,
இன்னும் இன்னும் எழுதுங்கள் என்று கூறி என்னை வாழ்த்தினார்கள். வாங்கிய உடனே
படித்துவிட்டு, போனில் அழைத்து கருத்துக்களைக் கூறிய அந்த நொடி சந்தோஷம் இருக்கிறதே,
உணர்ந்தால் மட்டுமே தெரியும் அந்த நொடிகளின் பூரிப்பை. வழியில் திருமதி. சிவகாமசுந்தரி
அவர்களின் இல்லத்திற்கு சென்று இண்ட முள்ளு பிரதி ஒன்றை வழங்கிவிட்டு நொறுக்குத்
தீனியோடு காபி குடித்து, சாலை வரை வந்து அவரது மகள் தேஜுக்குட்டி வழியனுப்ப மகிழ்ச்சியுடன்
நண்பன் ஆவியின் வீடு சேர்ந்து அம்மாவின் கையால் சுடச் சுட சப்பாத்தியோடு
கோழிக்கறியை ஒரு பிடி பிடித்துவிட்டு சென்னைக்கு ரயில் ஏறினோம்.
இண்ட முள்ளு வெளி வர
முக்கிய காரணி நண்பன் ஆவி, என்னோடைய எல்லாவிதமான பயணத்திலும் கூடவே இருக்கும் மனிதர். மெரினாவில் நிகழ்ந்த அறிமுகக்
கூட்டம், புதுக்கோட்டை வீதி அமைப்பின் அறிமுகக் கூட்டம், இப்போது பொள்ளாச்சி
இலக்கிய கூட்டம் இப்படி எல்லாவற்றிலும் தனது வேலைகளை/பயணங்களை ஓரங்கட்டி
வைத்துவிட்டு என்னோடு கிளம்பி வரும் ஜீவன், ஆவி. இந்த அரவணைப்புக்கு வாழ்நாளைய
அன்பும் பிரியமும் நண்பா.
நன்றிகள் சொல்ல நிறைய நல்ல
உள்ளங்கள் இருந்தாலும், இண்ட முள்ளினை, பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் கொண்டு
சேர்க்க முக்கிய காரணியாக இருந்த(சுகமின்மையால் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்று
பெரிதும் வருத்தப்பட்டுக்கொண்டார்) திருமதி. முகில் நிலா தமிழ் அவர்களுக்கும்,
அண்ணன்கள் நாஞ்சில் மனோ மற்றும் இலியாஸ் அவர்களுக்கும் அன்பு கனிந்த நன்றிகள்.
பின்வரும் இணைப்பில் நண்பன் கார்த்திக் புகழேந்தி அவர்களின் அறிமுக உரை ஒலி வடிவத்தில் : https://soundcloud.com/gsrkteam/arasan-book-review
நன்றிகளுடன்
நன்றிகளுடன்
அரசன்
Tweet |