சில வருடங்களுக்கு முன்பு 'இரவின் புன்னகை' என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத்தான் இவனைத் தெரியும், அடுத்தடுத்த பேச்சுக்களில் எனது மண்ணுக்காரன் என்று தெரிந்ததும் கூடுதல் நெருக்கமானது. இப்படித்தான் சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி அறிமுகமானான்.
அமெச்சூர் கவிதைகளை எழுதி உருகிக் கொண்டிருந்தவனை பல முறை திட்டியிருக்கிறேன், கவிதையின் வலிமையை பற்றியும், சமகால படைப்பாளிகளின் தவறுகளையும் பற்றியும் மணிக்கணக்கில் பேசித் தீர்த்திருக்கிறோம். தற்போது கவிதைகள் எழுதுவதை குறைத்திருக்கிறான் என்பது ஆறுதல். களப்பிரர்கள் பற்றி இவன் எழுதிய பதிவுகள் தரமான படைப்புகள். அதிகம் கவனம் பெறாமல் போனது காலத்தின் சோகம்.
பிறகொரு நாள் 'வானவல்லி' என்ற வரலாற்றுப் புதினத்தை இணையத்தில் தொடராக எழுதுவதாக கூறி, எழுதிவிட்டு என்னை வாசிக்கச் சொல்லி கருத்தினைக் கேட்டான். வரலாற்று நூல்களை வாசித்து பழக்கமின்மையால் முதல் இரண்டு தொடரினை வாசித்துவிட்டு கருத்தினை கூறினேன். அதன்பிறகு மின்னல் வேகத்தில் எழுத துவங்கிவிட்டான் நான் தான் அவனைப் பின்தொடர இயலாமல் போய்விட்டது. வாழ்வில் முதன் முறையாக இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன் என்றால் அது 'வானவல்லி' என்ற தம்பியின் நெடிய கனவு நூல் தான்.
இந்த நூலினை எழுத வெற்றிவேல் மேற்கொண்ட ஆய்வும், வாசிப்பும் மிகப் பெரியது. ஒருமுறை எனது அறையில் வந்து தங்கியிருந்தவன் சட சடவென்று எழுதுவதைக் கண்டதும், வெறும் ஐந்து பக்கங்கள் எழுதவே நமக்கு நாக்கு தள்ளுகிறதே, ஆனால் இவனுக்கோ எப்படி சாத்தியமாகிறது என்ற ஆச்சர்யமும் கொஞ்சம் பொறாமையும் எட்டிப் பார்த்தது. அவ்வளவு கடின உழைப்பைக் கொடுத்து இந்நூலினை எழுதியிருக்கிறான்.
அவனது ஒருவருடத்திய உழைப்பினை வானதி பதிப்பகம் நான்கு பாகங்கள் கொண்ட புத்தகமாக வானவல்லியை வரும் புத்தக திருவிழாவினில் வெளியிட இருக்கிறது, அவனது எடையை விட புத்தக எடை கூடுதலாக இருக்குமென்று நம்புகிறேன்.
எனது 'இண்ட முள்ளு' நூல் வெளிவர முதன்மை காரணிகளில் இவனும் ஒருவன். எல்லோரிடமும் நட்பு பாராட்டும் தன்மையே அழகு. இவனின் சிறகு இன்னும் பெரிதாக விரியட்டும்.
இந்த ஒல்லிப்பிச்சான் இன்னும் பல நூல்களை எழுதி தனது இருப்பினை மிக அழுத்தமாக பதிவு செய்ய வாழ்த்துகளை கூறிக்கொண்டு, வானவல்லிக்காக காத்திருக்கிறேன்... நீங்களும் வாழ்த்துங்கள் அவன் வளரட்டும்....
Tweet |
8 கருத்துரைகள்..:
நண்பரின் நூலையும் அவரது உழைப்பையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை. நல்லதொரு நூலினைப் பற்றிய தங்களின் எழுத்துக்கு நன்றி. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வெற்றி :) எழுத்து உலகில் பல சாதனைகள் புரிந்து புகழும்,செல்வமும் பெற்று மங்காத விடிவெள்ளியென எந்நாளும் திகழ்வாய் நீ !!! proud to be your friend :)
//வாழ்வில் முதன் முறையாக இரண்டாயிரத்து ஐந்நூறுக்கு மேற்பட்ட ஒரு புத்தகத்தை வாசிக்க போகிறேன்//
'பக்கங்கள் கொண்ட'
-என்ற வார்த்தைகள் விடுபட்டுள்ளன. இணைத்துக் கொள்ளவும்!
அவரது வலையில் கண்டிருக்கிறேன், இதை..
வாசித்ததில்லை!
4 பாகங்கள் கொண்ட புத்தகமாக வெளியிடும் வெற்றிக்கு, வெற்றி கிட்டட்டும்!!!
மனம் நிறைந்த வாழ்த்துகள் வெற்றி. மேலும் பல புத்தகங்களை நீங்கள் வெளியிட வேண்டும். மேலும் பல வெற்றிகள் உங்களை வந்தடையட்டும் வெற்றி.....
வாழ்த்துக்கள் வானவல்லிக்கு.
நூல் வெளியிடும் தங்களை எல்லாம் பார்த்தால் பொறாமையாக வருகிறது.
நன்றி அண்ணா,
வானவல்லியை தங்களது வலைப் பக்கம் மூலமாக அறிமுகம் செய்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது எனக்கு...
முதலில் அன்பு நண்பர் நாவலாசிரியருக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துக்கள். வரலாற்று நாவல் எழுதுவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதை எழுத துணிவதற்கே மனதில் ஆழமான வலிமை வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன் என்ற வகையில் இதை இங்கே பதிவு செய்கிறேன். போதிய வெளிப்படையான ஆதாரங்கள் இருந்தாலே அதற்கு புதினவடிவம் கொடுத்து அதன் கதாபாத்திரங்களை ஆடவிடுவது என்பது குதிரை கொம்பான செயல், அப்படியிருக்க இலக்கிய சான்றுகள் அங்கும் இங்குமாக கிடைக்கின்ற சுவடுகளை கோர்த்து இரண்டாயிரம் வருடம் பின்னோக்கி சென்று அந்த கால கட்டத்தின் நிகைழ்வுகளுடன் நிஜத்தை பொருத்தி அதனூடே கற்பனை பாத்திரங்களை கலக்கவிட்டு புதினத்தை பிறப்பிப்பதற்குள் தங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளமாய் இருக்கும். இதில் ஒன்று பிசகினாலும் பலமுனைகளில் இருந்து விமர்சன அம்புகள் கூர்பாய தயாராய் இருக்கும். இத்தகைய சோதனைகளை கடந்து தாங்கள் உருவாக்கியிருக்கும் வானவல்லி நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியவள். எனக்கு இன்னும் தங்களது புத்தகம் வாசிக்க நேரம் வரவில்லை. படித்துமுடித்ததும் நிச்சயம் எனது கருத்துகளை தங்களுடன் பகிர்கிறேன். நன்றி. கா.சுப்ரமணியன், வழக்கறிஞர் , சென்னை 9841788286
கருத்துரையிடுக