புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 20, 2014

மூன்றாமாண்டு தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை


சென்ற வருடங்களில் சென்னையில் நடந்த தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக இம்முறை கூடல் நகராம் மதுரையில் மிக சிறப்பாக நடைபெற இருக்கிறது. 

தீபாவளியின் தொடர்ச்சி ஞாயிறு வரை உள்ளது, ஆம் அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிறு 26/10/2014 அன்று மூன்றாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர் திருவிழா நிகழ இருக்கிறது, அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விழா நிகழ்ச்சி குறிப்புகள் 
குடந்தையூர் ஆர்.வி. சரவணன்  இயக்க, கோவை ஆவிதிரு. துளசிதரன் மற்றும் நான் நடித்திருக்கும்? சிலநொடி சிநேகம் என்கிற குறும்படமும் விழா அன்று வெளியிட இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


வாருங்கள் நண்பர்களே மதுரையில் சந்திப்போம் .....


Post Comment

அக்டோபர் 10, 2014

இதயா எனும் தேவதை ....


இருபதைக் கடந்து இரண்டு மூன்று  வருடங்களாகும் என்பதை அங்கங்கே தேங்கியிருக்கும் அவளழகு சொன்னது. இப்படியொரு பெண்ணை இப்பொழுதுதான் இவ்வளவு நெருக்கத்தில் காண்கிறேன். தீவிர சிந்தனையில் இருக்கையில் திடீரென வந்து பயமுறுத்தும் ஏதாவது ஒன்றைப் போல் தான் அவளும் வந்து அதிர்ச்சியளித்தாள். ஆனால் அதிலொரு சுகம் இருந்தது. இரவுப் பணியும் பார்க்கிறாள் என்பதை கண்ணுக்கு கீழிறக்கத்தில் கரு"மை"யில்  எழுதியிருந்தது!

சொல்ல மறந்துவிட்டேன் அவளொரு "நர்ஸ்", ஆம் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் சமீபத்தில் பார்த்தேன். அவளுக்கென்றே பிரத்யோகமாக தைக்கப் பட்ட உடை போலிருந்தது, அணிந்திருந்த அந்த வெளிர் "பிங்க்" சீருடை. அழகியலை சேமித்திருக்கும் அதிசய உடையாகத்தான் தெரிந்தது. பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், அவளின் கழுத்துக்கு கீழே பார்வையை செலுத்த, அடையாள அட்டை தன் பின் பக்கத்தை காட்டியபடி பல்லிளிக்க, மீண்டும் கண்ணுக்கே திரும்பியது என் பார்வை.

மனதுக்குப் பிடித்திருந்தால் உடனே அது பரிச்சய முகம் போல் தெரிவதை அன்று தான் முதன் முதலாக உணர்ந்தேன், இதற்கு முன் எங்குமே சந்தித்திராத அவளை, எங்கோ சந்தித்த உணர்வை தந்தது அவளின் முகம். அவள் பேசினாள், எல்லாப் பெண்களையும் போல் தான் குரலிருந்தது. பேசுகையில் சற்று தலையை சாய்த்து சாய்த்து பேசுவது பிடித்திருந்தது, அதற்காகவே அவளை  பேசவிட்டு கேட்க வேண்டும் போலிருந்தது. உதட்டில் பொய்யில்லை, கண்களில் கொஞ்சம் பொய் இருப்பதாய் எனக்கு தோன்றியது. ஒருவேளை என்னோட பலகீனமாக இருக்கலாம். 

ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீளவில்லை எங்களின் பேச்சு, இல்லையில்லை அவள் நான்கு நிமிடங்கள் பேசினாள் , நான் ஒரு நிமிடம் பேசி இருப்பேன். இந்த நேரத்தில் முப்பது முறைக்கு மேல் எங்கள் கண்கள் பார்த்துக் கொண்டன, என்னவாக இருக்கும் என்று யூகிக்க எனக்கு விருப்பமில்லை! அவளுக்கு எப்படியோ தெரியவில்லை! இன்று தான் பார்த்திருக்கிறோம் இவளிடம் பேச என்ன இருக்கிறது என்று இன்னொரு பக்கம் மனசாட்சி உள்ளுக்குள்ளே காரி உமிழ்ந்ததையும் இங்கு சொல்லியே ஆகவேண்டும். 

அவள் பூசியிருந்த மெல்லிய நறுமணம் மனதுக்கு இதமாய் இருந்தாலும், பணியில் இருக்கும்போது "சென்ட்" அடிக்காதீங்க என்று சொன்னேன். பதிலேதும் கூறாமல் சிரித்தபடி விலகிச்சென்றாள், மீண்டும் வருவாள் என்று உள் மனசு சொன்னாலும், வெளியெங்கும் துழாவிக் கொண்டிருந்தன வெட்கங்கெட்ட விழிகளிரண்டும். உள்மனசு சொன்னது போல் வந்தாள் ......... 

எங்கள் மருந்தகத்தில் இந்த மருந்தில்லை இல்லை, வெளியில் வாங்கிவருமாறு ஒரு "தாளை" கொடுத்து விலகிச் சென்றாள். சிறிது நேரம் கழித்து வாங்கி வந்து கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வாங்கி கொண்டாள், அப்பொழுது அவளின் சுண்டு விரல் என் சுண்டு விரலோடு உரசியது. எந்த சலனுமுமில்லை.  பெண்ணொருத்தியின் விரல் பட்டால் போதும் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருக்கும் என்று சொன்ன நண்பன் குமாரை *+-*.# ல் அடிக்க வேண்டும் என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

பெயரையும் மொபைல் எண்ணையும் இருவரும் பகிர்ந்து கொண்டு புன்னகைத்து விடைபெற்றோம். பணி முடிந்து விடுதி திரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் இதயா. நேற்று வரை நன்றாகத்தான் இருந்தேன், ஏன் இப்பொழுதும் நன்றாகத்தான் இருக்கிறேன். அவளிடம் ஏதாவது பேசவேண்டுமென்ற உந்துதல் மட்டும் மேலோங்கி இருக்கிறது. இதற்காக அவளை நான் காதலிக்க துவங்கி இருக்கிறேன் என்று நீங்கள் அனுமானித்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல. சத்தியமாய் சொல்கிறேன் அவள் மேல் காதல் கொள்ளும் எண்ணம் துளியுமில்லை.  

நிறைய பேசவேண்டும் என்ற தவிப்பு என்னிடம் இருப்பது போல் அவளுக்கும் அதே பரபரப்பு இருப்பதாய் சுற்றி சுழலும் அந்த முயல் கண்கள் சொல்கிறது. மேக கூட்டங்களோடு பயணிப்பது போன்ற உணர்வை தந்த அந்த அழகிக்கு என் அன்பார்ந்த ஆராதணைகள் எப்போதிருக்கும்! 

நான் சொல்லியும் நீங்கள் நம்பாத அது, வந்துவிட்டால் நிச்சயம் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!


Post Comment

அக்டோபர் 04, 2014

ஏமாற்றம் ...


உடலெரியும் 
ஒரு மதிய வேளையில் தான் 
அவளைக் கண்டேன்.

வெயிலின் கோரத்தை 
வியர்வையில் நனைந்து  
வெளித்தெரியும் உள்ளாடை 
சொல்லியது.

நிதானித்து நான் பார்ப்பதை, 
கண்டு 
சீற்றம் கொள்ளாமல் 
சிரம்தாழ்த்தி கொண்டாள்!

எவனையோ நம்பி,
குள்ளம், குதிரைப்பல்லு
இப்படிச் சொல்லி வெளியேற்றினாள் 
ஆறுமாசத்துக்கு முன் 
பெண் கேட்டுப் போன 
என்னை!

மேற்கத்திய குளிர்பானத்தை 
உறிஞ்சிக் கொண்டிருக்கும் 
மனைவியிடம் சொல்ல 
வாயெடுக்கையில், 
மிகச்சரியாக திரும்பி பார்த்தாள் 
அவள்!

கலங்கியது போலிருக்கும் 
அவள் கண்களில் 
ஏமாற்றச் சுவடுகள்!

சைக்கிளை எடுத்துக் கொண்டு 
அவள் கிளம்பி விட்டாள்,
சினிமாவுக்குப் பயணப்பட்ட  நாங்கள் 
கோவிலுக்கு போயிட்டு வந்தோம்! 


Post Comment