செழியனும் அவனது அப்பாவும் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள், இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் வந்து சேரும் என்று அறிவிப்பு வந்தது , ரயில் வந்ததும் அவர்களுக்குரிய பெட்டியில் ஏறி இருக்கை எண்ணை சரி பார்த்து அமர்ந்து கொண்டார்கள்
செழியனின் அப்பா சன்னலோர இருக்கையிலும் , செழியன் அவருக்கு எதிரில் நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டார்கள்! காலை நேர டிபன் விற்பனையாளர்கள் சற்று அதிகம் அடிக்கடி வந்து போனார்கள்! ஏதும் சாப்பிட வாங்கவா என்று தன் அப்பாவிடம் கேட்டான் செழியன், அவர் ஒன்றும் வேண்டாம் என்றதும் தான் கொண்டுவந்த பேக்கில் உள்ள புத்தகத்தை எடுத்தான்!
அருகில் அமர்ந்திருந்த அந்த நபர் என்ன
புத்தகம் என்று கேட்டார்.
அவனும் அந்த புத்தகத்தை அவரிடம் காட்டினான், அவர் உடனே வாங்கி பார்த்துவிட்டு ஐயோ இதை படிக்க முடியாது, நெஞ்சு வலிக்கும் என்று கூறிவிட்டு செழியனிடமே நீட்டி விட்டார், செழியனும் வாங்கி அதை படிக்க புரட்டினான்!
சற்று நேரம் கழித்து மெல்ல பேச்சு கொடுத்தார் அந்த நபர்!
"தம்பி நீங்க எந்த குருப்பு"
எனக்கு புரியலை சார் என்றான் செழியன்!
இல்லை நீங்க அணிந்திருக்கும் பனியன் ஒரு வண்ணத்தில் உள்ளது!
புத்தகமும் அதை சார்ந்து உள்ளது! நீங்க ..... அவரோட குருப்பா? இல்லை இன்னொரு கோமாளி குருப்பா?
இல்லை சார் நான் தமிழ் உணர்வாளன், நான் யாரையும் சார்ந்திருக்க வில்லை , என்றான் செழியன்!
இல்லை தம்பி சும்மா சொல்லுங்க என்றார் அந்த மனிதர்!
மீண்டும் இல்லை என்றுதான் சொன்னான் செழியன்!
அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர் மேலும் தொடர்ந்தார் , நீங்க எதிலும் சார்ந்தவரில்லை என்பதில் சந்தோஷம்,
இந்த மாதம் நாங்க தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்க ஒரு மாநாடு நடத்த போகிறோம் உங்களை போன்ற உணர்வாளர்கள் வர வேண்டும் என்றார்!
ஐயோ சார், எந்த அரசியல் சாயமும் எனக்கு வேண்டாம், என் வழியில் நான் பயணித்து கொண்டிருக்கின்றேன்,ஆளை விடுங்க போதும் என்றான் செழியன்!
அவர் விடுறமாதிரி தெரியவில்லை, அதிக மூளைசலவை செய்ய ஆரம்பித்தார், எங்கள் தலைவர் சமயோசித புத்தி கொண்டவர்,
அறிவாளி, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்தவர், அது இது என்று கதை அளக்க ஆரம்பித்தார்!(அதான் ஊருக்கே தெரியுமே...)
செழியன் சட்டென்று எனக்கு விருப்பம் இல்லை விட்டுடுங்களேன் என்றான்!
அவரும் பேச்சை மாற்றி மீண்டும் பிடிக்காத அரசியல் தலைகளை திட்ட ஆரம்பித்தார்! கோமாளிகள், குரங்குகள் என்று வசைபாடினார்.சுற்றி இருப்பவர்கள் இவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு வந்தார்கள்...
அவன் தான் ஈழத்தை உருவாக்க வந்தவன், இன்னொருவன் நான் இல்லையென்றால் ஈழம் இருக்காது என்கிறான் என்று அவரின் ஏசுதலில்
அவரின் தங்க தலைவரை மட்டும் விட்டு விட்டு அனைவரையும் திட்ட ஆரம்பித்து விட்டார்!
இன்னும் இவர்களின் ஈழத்தை வைத்து செய்யும் அரசியல் முடியாது போலும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே
பொறுமை இழந்த செழியன் உங்கள் விருப்பம் அதுவாக இருப்பின், அதை அடுத்தவரின் மேல் திணிக்க முயலுவது சரியில்லை!
ப்ளீஸ் இதை பற்றி பேசுவதை முதலில் நிறுத்துங்கள், இது உங்களின் வயதுக்கு தகுதியில்லை என்றான்.
தலைவன் மேல் கொண்ட பற்று ஒரு மனிதனை எந்த பாடு படுத்துகின்றது, தலைவன் தவறே செய்து இருந்தாலும் அதை சரி என்று நியாய படுத்தும் அளவுக்கு அவரின் பேச்சுக்கள் இருப்பதாய் செழியன் மனதுக்குள் எண்ணிகொண்டான்!
தனக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் செழியனின் அப்பா அடிக்கடி அவனை பார்த்துகொண்டிருந்தார்!அவனுக்கு அது மேலும் சங்கடத்தையும்
அந்த நபரின் மேல் கோபத்தையும் அதிகரித்து கொண்டே வந்தது!
எப்போடா இந்த ஆள் இடத்தை காலி செய்வார், நம்மளை நிம்மதியாக பயணம் செய்ய விடுவார் என்பதிலே செழியனின் எண்ணங்கள் அலை பாய்ந்தன, அதற்கு தகுந்த மாதிரி டிக்கட் பரிசோதகர் வந்தார், அவரின் waiting list டிக்கட் அடுத்த பெட்டியில் confirm பண்ணி தருவதாய் சொன்னதும் தான் செழியனுக்கு பெரும் நிம்மதி வந்தது, அப்போதான் தெரிந்தது அவருடன் மனைவி மற்றும் மகன் வந்திருப்பது!
இவரின் செய்கை அவர்களை எவ்வளவு உறுத்தி இருக்கும் என்பது அவர்களின் பார்வைகளிலே கண்டான் செழியன்...
இந்த மாதிரி மனிதர்களும் இப்பூமியில் உலவுகிறார்கள், எப்படி எல்லாம் கண் மூடித்தனமான நம்பிக்கை, பாவம் இந்த மனிதர்களை எவ்வகையில் சேர்ப்பது, இவர்கள் மாறுவார்களா? நாம் தான் ஒதுங்கி கொள்ளணுமா? இப்படி ஏகப்பட்ட சிந்தனைகளை கண்ணை மூடி யோசித்து வந்த செழியனை அப்பா எழுப்பி விட ரயிலை விட்டு இறங்கி நடந்தார்கள்! நித்தம் இந்த ரயிலும் ஓடும், இந்நிகழ்வும் சலிக்காமல் நிகழும் என்று சிந்தித்துக்கொண்டே நடந்தான் செழியன்....
(ஏனய்யா ஏன் ... பாருங்க நம்ம செழியன் பைத்தியம் பிடிக்காத ஒரு குறையா அலையுறான்... போதும் அதிமேதாவிகளே நிறுத்திக்கொள்ளுங்கள் ...)