நான் படித்தது ச்சே நான் பள்ளிக்கு சென்றது தமிழ் வழிக்கல்வி பள்ளிக்கு தான் எனது ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி நத்தக்குழி.அங்கு தான் வித்தியாசமான மனிதர்களை? உலகத்தை காண முடிந்தது...ஒருத்தர் பெரிய மீசையும் , நரைத்த தலையுமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எல்லா பிள்ளைகளையும் வலது கையை எடுத்து தலைக்கு மேல் சுழற்றி இடது காதை தொடச்சொன்னார். தொட்டுவிட்டால் போதும் அந்த பிள்ளை ஒன்றாம் வகுப்பில் சேர தகுதி அடைந்து விட்டான். இப்போ உள்ள சூழலை நினைத்து பார்க்கும் போது வயிறு எரிகின்றது. அன்று நானும் சுழற்றி காதை தொட்டுவிட்டதால் என் பெயரையும் , அப்பா பெயரையும் கேட்டார் சொன்னதும் கையை நீட்டி ஒரு இடத்தில அமர சொல்லிவிட்டார். அப்பாவும் புன்னகையோடு சென்று விட்டார். சிக்கியது நான் தானே!
அப்புறம் எல்லா பசங்களுக்கும் மிட்டாய் கொடுத்தாங்க. சிலது அழுவும், சிலது சிரிக்கும், நான் இரண்டுக்கும் இடைப்பட்டு மிரண்டு தான் கிடந்தேன் ..மெல்ல மெல்ல எல்லாமே பழக்கமாச்சு. புது உலகத்திற்கு பழக்கமானேன் ..முதல் வகுப்பு ஆசிரியர் திரு. மருத முத்து என்னை செதுக்கிய முதல் சிற்பி. பிறகு இரண்டாம் வகுப்பு என்னை தட்டி கொடுத்து கொடுத்தே சொல்லி கொடுத்த திருமதி. ராசகுமாரி இவங்களுக்கு என்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.மூன்றாம் வகுப்பில் தான் ஆங்கிலம் ஆரம்பித்தது என்னை மிரட்டிய மீசை ஆசிரியர் திரு. பிச்சை பிள்ளை . அடி கொடுப்பதில் செம கில்லாடி ..இவரிடமும் கொஞ்சம் தப்பித்து வந்தாச்சு. அடுத்து திரு. கோவிந்தராசு இவரிடம் பயின்ற நான்காம் வகுப்பு தான் செம ஜாலி! நான்காம் வகுப்பு போனதே தெரியவில்லை அந்த அளவுக்கு பாடங்களை சொல்லியும் தருவார், கிள்ளியும் தொலைப்பார்!
அடுத்து தான் பெரிய பயமே வந்துச்சு. மேலே சொன்னேனே அந்த நரைச்ச முடி மனிதர் திரு. சாமுண்டி ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர். இவர் தான் படிப்பின் தேவையை உணர வைக்கக் முயன்றார். நாங்க கேட்டோமா? இல்லையே. எப்படியோ ஒரு வழியா தொடக்கப்பள்ளி முடித்து நல்ல பெயருடன்?! வெளி வந்தாச்சு! அடுத்து வீட்ல விடுதியில சேர்த்துவிடலாம் என்று முடிவு பண்ணி நல்ல பள்ளியா தேடி கிடைக்காம போனதுனால ஊரிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ள செந்துறை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டாங்க! என்னை சுமந்த மற்றுமொரு கருவறை. ஆறிலிருந்து எட்டுவரை நல்லா போச்சுங்க. சைக்கிள் அந்த அளவுக்கு ஓட்ட வராது என்பதினால் அதே பள்ளியில் படித்த எங்க ஊர் அண்ணன் ஜெயராஜ் என்பவருடன் செல்வேன். அவர்தான் சைக்கிள் மிதிப்பார் என்னை உட்கார வைத்து! நல்லா தான் போச்சு புது இடம் , புது அனுபவம்! புது கனவுகள்! எதுவுமே தெரியாம தான் போறது வரது. ஆனால் லீவு மட்டும் போடுறது இல்ல!
ஆறும் , ஏழும் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு மகிழ்வான நாட்கள்.
ஊரிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் இரண்டு நாவல் மரங்கள் இருக்கும். சீசன் நேரத்தில் பசங்க கூட்டம் களை கட்டும் மரத்திற்கடியில்! வெள்ளை சட்டை வேறா எல்லாம் கரையா போய்டும் வீட்டுல வாங்குற அடிக்கு மறு நாள் போக கூடாது என்று முடிவு பண்ணி இருந்தாலும் மரத்தை நெருங்கியதும் மனசு மாறி மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறும்! மீண்டும் முதுகு வீங்கும்! ஏழின் நடுவில் பெண்களுக்கென தனியாக பள்ளி ஆரம்பித்து விட்டார்கள். ஒரே பள்ளி தான், இடையில் மூங்கில் படல் வைத்து பிரித்து விட்டார்கள் மனசே இல்லாத நய வஞ்சகர்கள்!?
(பள்ளியின் தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு )
(என்னை சுமந்த மண்)
எட்டாம் வகுப்பு படிக்கையிலே நானே சைக்கிள் ஓட்டி வருவேன். இந்த நேரத்தில் தான் நான் கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். தமிழ் மன்றதேர்வில் முதல் மாணவனாய் வந்து பாரதியார் மற்றும் பாரதி தாசன் கவிதை புத்தகங்களை திருமதி. மணிமேகலை (தமிழ் ஆசிரியை) அவர்களின் கையால் பரிசாக பெற்றது, காலையும், மாலையும் டியுசன் செல்ல ஆரம்பித்தது இந்த எட்டில் தான்.
(டியுசன் சென்டரில் நண்பர்கள்)
ஒன்பது சென்றதே தெரியவில்லைங்க அவ்வளவு வேகம். நல்லா போச்சுங்க. பத்து வந்துச்சி பைத்தியம் புடிச்சிடுச்சி. என்னத்த சொல்றதுங்க நின்னா படி நடந்தா படி, படி தான் . டியுசன் பின்னி பெடலேடுத்துட்டாங்க மிஸ்ஸும் சாரும். எப்படியோ பள்ளி பொது தேர்வு நெருங்கியாச்சு. இரவு நேர வகுப்பு வரவேண்டும் என்று கட்டாயம். என்ன பண்ணுவது எப்படியோ மட்டம் தட்டினாலும் ஒரு நாள் மட்டியாச்சி. ஒரு நாள் சிங்கம் சிக்கிடுச்சி. அன்னைக்கு சிங்கம் வாங்கிய அடிய ஆயுசு முழுதும் மறக்காது. அப்படி ஒரு அடி. ஒரு வழியா பத்தும் ஒரளவு நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சியும் ஆகியாச்சு. இந்த நேரத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாய் எனது டியுசன் ஆசிரியர்கள் திருமதி . மலர்விழி மற்றும் அவர்களின் கணவர் திரு. ராஜவேல் இவர்களுக்கு என் நன்றிகளை கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளேன்.
(பள்ளியின் நடுப்பகுதியில் சுதந்திர தின நினைவு சின்னம்)
அப்புறம் அதே பள்ளியில் பதினொன்று மற்றும் பனிரெண்டு. நான் எந்த லட்சணத்தில் பள்ளிக்கு போனேன் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. பதினொன்று அரையாண்டு தேர்வு முடிந்து பிறகு ஒரு நாள் இயற்பியல் ஆசிரியர் திரு. செல்வ விநாயகம் என்னை பார்த்து தம்பி நீ என்ன நியூ அட்மிசன் ஆ என்று கேட்டார். அந்த மாதிரி பள்ளிக்கு சென்று வந்திருக்கின்றேன். அப்படி ஒரு ஆர்வம் படிப்பில். இந்த கால கட்டங்களில் எங்களின் வாழ்வே ஒரு நந்தவனமாய் இருந்தது. எப்போதும் அரட்டை தான். நண்பன் ஒருவன் ஆசிரியை ஒருவரிடம் பிட்டு அடித்து மாட்டிக்கொண்டு அதை சமாளிக்க அவன் மயக்கம் வருவதாய் நடித்து எங்களின் வயிற்றை புண்ணாக்கினான். அப்படி ஒரு சந்தோஷம் அந்த நாட்களில். எப்படியோ சில பல ரவுடிசங்களை செய்து முடித்து ஒரு வழியாய் பனிரென்டையும் முடிச்சி பள்ளியை விடு வெளியே வந்தேங்க. இதுதான் என்னோட சுருக்கம்.
(பள்ளி மைதானத்தில் நண்பர்கள்)
இந்த நேரத்தில் இந்த கல்லையும் ஒரு கலைநயமிக்க சிலையாய் செதுக்க முயற்சித்த என் ஆசான்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.
என் நினைவுகளை பின்னோக்கி சுழல வாய்ப்பளித்து தொடர்பதிவு எழுத அழைத்த தோழி. கலை (கிராமத்துக் கருவாச்சி) க்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.