புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 29, 2013

ஊர்ப்பேச்சு # 11 ( Oor Pechu # 11)

ஐப்பசியில் சன்னமாய் தொடங்கி மார்கழியில் மல்லுகட்டும் பனியின் குளுமை, விடிகாலையில் பார்த்தால் சிறுமழை பெய்து நனைத்த மாதிரி செடி கொடிக குளித்திருக்கும். எவ்வளவு சீக்கிரம் படுத்தாலும் காலையில் எழும்ப எவருக்கும் மனசு வராது. காலைச்சூரியனின் இளஞ்சூட்டு வெயிலில் முகம் கழுவவே எல்லோரும் பிரியப்படும் கடுங்குளிர் காலம் அது. ஆனால் முதல் ஆளா எழும்பி குளுமையை விரட்டிக்கொண்டிருந்தார் இரத்தினம்! கடினமான உழைப்பாளி என்று சொல்லுவதற்கு வேறு ஏதும் வார்த்தைகளில்லை.

இப்ப போனாதான் பய ,பள்ளிக்கூடம் கிளம்பறதுக்குள்ள நாம வூடு திரும்ப முடியும் எந்திருடி. பனி நப்புல புடுங்க ஏதுவா இருக்கும் கெளம்பு , சீக்கிரம் கெளம்பு , பயலையும் எழுப்பு அவன் வந்தா ரெண்டு மெனை சீக்கிரம் காலியாவும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார் இரத்தினம் கம்பளித்துண்டை தேடியபடி!

மேற்கத்தி காட்ல வெளைஞ்சி வெடிக்க காத்திருக்கும் உளுந்து பிடுங்க தான் இம்புட்டு காலையிலே மனுஷன் ஆர்ப்பாட்டம் போடுறது. மூணு வருசமா அரைப்படி வெதை போட்டா முழுசா மூணு படி கூட விளையாம ஏமாத்தி கிட்டு இருந்த பூமி, இந்த வருசம் தான் காய் சடை சடையா காய்ச்சிருப்பத பார்த்து ஊர்க்கண்ணு விரிஞ்சிருச்சி, மனுசன் மனசு நெறஞ்சிருக்கு.வெயிலுக்கு முந்தி போனா களைப்பு தெரியாம சீக்கிரமா பிடுங்கலாம்னும், வெயில் ஏற ஏற உளுந்த நெத்து வெடிக்க ஆரம்பிச்சிடும்ன்னு உள்ளுக்குள்ள ஓடுறதாலத்தான் இம்புட்டு அவசரப்படுத்திட்டு இருக்கார்.  

இந்த மனுசனுக்கு தூக்கமே வராது , அலுத்துக்கொண்டே பாயின் மூலையில் சுருண்டு கிடக்கும் பயலை எழுப்பினாள் இரத்தினத்தின் மனைவி. ரெண்டு மூணு தடவ சுனங்கினவன் அப்பாவின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டான்.

இவர்களை எழுப்பிக்கொண்டே சுக்கு காபியும் தயார் பண்ணிட்டார், ஆவி பறக்க ஆத்திக்கொண்டிருக்க, கழுவிய முகத்தோடு அவர் பக்கம் வந்து அமர்ந்தான் பையன் ... ஆத்திய டம்ளரை அவனிடம் நீட்ட , வேண்டாம் உரைக்கும் என்று தப்பித்துக்கொண்டான். 

இரத்தினம் வைப்பது சுக்கு காபியல்ல, கசாயம் ன்னு தான் சொல்லணும் அவன் மனைவி மட்டும் அறிந்த இரகசியம் அது. குளிருக்கு இது எவ்வளவோ மேல் என அவளும் ஒரு டம்ளரை காலி பண்ணிவிட்டு 
மூவரும் கிளம்பினார்கள்.

மணி ஏழுக்கெல்லாம் கால் காணி உளுத்தங் கொடிகளை பிடுங்கிவிட்டார்கள், பனி நப்போடு கட்டு கட்டியாச்சின்னா இன்னைக்கே அடிச்சி உளுந்த எடுத்துடலாம் என்கிற முனைப்பில் தீவிரம் செலுத்தினார் இரத்தினம். 

மணி எட்டை நெருங்கினதும் புள்ள பள்ளிக்கூடம் கெளம்பனும், வீட்டுக்கு போகட்டுமான்னு மனைவி கேட்க, சரி நீயும் கூட போயி அவனை கெளப்பி அனுப்பிட்டு எனக்கு சோறு எடுத்துவான்னு சொல்லிட்டு புளிச்ச செடியை முறுக்கி முடிந்து கொண்டிருந்தார், உளுத்தங்கொடிகளை கட்டுவதற்கு.

உளுத்தங்கொடி சிறுசா இருந்தா பெரிய கூடையில அள்ளிடலாம், இந்த முறை உரம் கொஞ்சம் கூடுதலா போட்டதால செடி கொஞ்சம் முரடா வளர்ந்திருக்கிறதுனால கட்டா கட்டிடலாம் என்பது இரத்தினத்தின் எண்ணம்.

ஆறேழு கட்டுகளாக கட்டி கொண்டு போய் சிங்காரவேலு களத்துல சேர்த்தார், கடைசி கட்டையும் பிரிச்சி காயப் போட்டுட்டு, களைச்சி போய் புளிய மரத்தடியில் உக்காரவும், சோத்துக் கூடையோட மனைவி வரவும் சரியா இருந்தது ....


Post Comment

நவம்பர் 27, 2013

உன் இரகசிய அழகினை !


கொடியில் நீ 
தொங்கவிட்டுப் போன உந்தனாடைகள்,
உன் பேரழகையும், பெருந்திமிரையும்
பேசியபடி இருக்கின்றன ,
நீர்ச்சொட்டுகளாக!உன் வீட்டு ,
மாடியில் காய்ந்துகொண்டிருக்கும் 
மற்றத் துணிகளோடு 
சேர்ந்து வந்துவிட்ட 
உந்தன் உள்ளாடையொன்று 
காற்றில் கசிந்துக் கொண்டிருக்கிறது 
உன் இரகசிய அழகினை !

Post Comment

நவம்பர் 20, 2013

எச்சில் முத்தங்கள்...


உதிரிகள் போல் 
சிதறி கிடக்கும் அவனின்  
நினைவுகளை 
கோர்த்துக்கொண்டிருக்கிறேன் 
நெடிய நரம்பொன்றில்,

"முதலிரவு" கழிந்த 
நான்காம் நாளிரவில் 
விமானம் ஏறியவன்,
இரண்டு வருடம் தொலைத்து, 
இன்றிரவு வருகிறானாம்!

கனவுகளை நனவாக்கி, 
ஏக்கங்களை சுமையேற்றி, 
வண்டி ஏறப் போவதாய் 
அலைபேசி வழி அழுது 
துண்டித்தான்!

செல்லும் அவசரத்தில் 
கடித்து காயப்படுத்திய,
உதட்டு தழும்போடு 
காத்திருக்கிறேன் 
அவன் தரும், 
எச்சில் முத்தங்களை சு(ம)வைக்க! 


Post Comment

நவம்பர் 13, 2013

பதிவுலகம் அவ்வளவுதானா ?


முன்புபோல் பதிவெழுத நேரம் கிடைப்பதில்லை என்பது என்னவோ உண்மையாக இருந்தும், பெரும்பாலான நேரங்களில் விழும் இடைவெளிகளுக்கு காரணம், "என்னத்த எழுதி", "என்னத்த படித்து" என்கிற இலக்கிய சிந்தனைகள் தான். இதுபோன்ற  சிந்தனைகள் அடிக்கடி என்னை ஆட்கொண்டு  தொடர்ந்து இயங்கவிடாமல் செய்கிறது,

ஏதாவது ஒரு சித்தரை சந்தித்து கலந்தாலோசிக்க விருப்பமாய் இருக்கிறேன், அனுபவசாலிகள் சிறந்த சித்தரை சிபாரிசு செய்யவும்!

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் இளம்பெண்கள் நிறைந்த திருவிழா போல் எப்போதும் சுறு சுறுப்பாய் இயங்கிய பதிவுலகம் இப்போது பல்லுபோன கிழவி கணக்கா பெரும் அமைதி கொண்டுள்ளது. 

என்னடா நமக்கு வந்த சோதனை, இப்படி நித்தம் பதிவெழுதி கொல்லுகிறார்களே என்றெல்லாம் குமுறிய காலம் போய், அந்த இரக பதிவுகள் கூட வருவதில்லையே என்கிற கவலை மனசுக்குள் பாரமேற்றுகிறது! ஆண்டவரே அவர்களின் வருத்தங்களை நீக்கி, மீண்டும் பதிவு எழுதும்படி இரட்சியும்! பாவங்கள்  தொலையட்டும்?....!

நண்பர்களை சம்பாரித்தது தவிர்த்து இங்கு நான் எதையும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்ற அலார மணி என் சிறு, பெரு மூளைகளின்? மடிப்புகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருந்தாலும் நானும் ஒரு  பதிவன்? என்று சொல்லிக்கொள்(ல்லு)வதில் என்னவோ மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறது.

சமீப காலமாக எவரும் புதிதாய் பதிவெழுத வந்தமாதிரி எனக்கு நினைவில்லை. நமக்குள்ளே தான் பம்பரம் சுற்றிக்கொண்டிருக்கிறோம். இந்நிலை நீடித்தால் சோர்ந்து கிடக்கும் பதிவுலகம் , இன்னும் சோர்ந்து தான் போகும். எத்தனை நாளைக்குத் தான் நம் சட்டைகளை நாமலே கிழித்துக்கொண்டு திரிவது ?

புதிதாய் வருபவர்களை ஊக்கப்படுத்தி, கரங்கொடுத்தால் தான் மேலும் புதியவர்கள் உள்நுழைய வாய்ப்பு உருவாகும். (எலேய் அரசா உம் பிரச்சினை என்னதான்னு சொல்லித்தொலையும் ). தெரிஞ்சாதான் சொல்ல மாட்டேமோ ? எதிலும் புது வருகை இல்லையெனில் அது  காலப்போக்கில் தானே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எங்கோ படித்த நியாபகம். 

எழுத வா வென யாரையும் கரம் பிடித்து இழுக்க முடியாது ? அவர்களாக வந்தால் தான் உண்டு என்கிற நிதர்சனமும் புரிகிற அதே வேளையில் தான்,  ஏன்? முன்பிருந்த பிளாக்கின் மோகம் இப்போதில்லை என்கிற பெருங்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது. உங்களுக்கு ?         


Post Comment