புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 03, 2016

சுய புலம்பலும் - நூல் அறிவிப்பும்...


கிட்டத்தட்ட இது சுய சொரிதலே, ஆகவே நண்பர்களே, கொஞ்சம் பொறுத்தருள்க! "வாசிப்பு என்பது ஒரு போதை மச்சி, அதை ஒரு தடவை தொட்டிட்டின்னா, நீ விடணும்னு நெனச்சாலும் அது உன்னை விடாது.. அதனாலத்தான் நான் .............." என்று அளவுக்கு மீறிய குடிகாரனை விட வெகு ஜோராக பாடமெடுத்து படுத்தினான் நெருங்கிய நண்பனொருவன். அன்றிலிருந்து இன்றளவும் அவனிடம் பேசுகையில் சர்வ ஜாக்கிரதையாக பேசிக்கொண்டு இருக்கிறேன். 

"எப்படி மச்சி உன்னால மட்டும் படிக்க முடியுது, ஸ்கூல் டேஸ்ல கூட நீ இப்படி படிச்சி நான் பார்த்ததில்லையே டா... என்னால முழுசா ரெண்டு பக்கங்கூட படிக்க முடியலைடா, நீ என்னடான்னா இம்புட்டு புத்தகத்தை வாங்கி குமிச்சி வைச்சிருக்கியே மச்சி" என்று தன்னோட இயலாமையை வெளிப்படுத்தினான் இன்னொரு சிநேகிதன். இரண்டு பக்கத்திற்கு மேல் படித்தால் உறக்கம் வருகிறது என்று இவனைப் போன்று உண்மையை ஒப்புக் கொள்பவர்களின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழும்பலாம், தவறில்லை! அதை விடுத்து, வண்ணத்திரை நடுப்பக்கத்தையோ, டைம்பாஸ் புக்கையோ இல்லை ஆகாவலி எவனோ ஒருவன் எழுதியோ ஏதோ ஒரு புத்தகத்தை இடையிடையே கொஞ்சம் மேய்ந்துவிட்டோ, இல்லை எங்கேயோ யாரோ பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு வந்து, ஏதோ தமிழ் இலக்கியத்தை மட்டுமில்லாமல் அண்டவெளி இலக்கியங்களை எல்லாம் ஒரே மிடறில் குடித்தவன் மாதிரி நீட்டி முழங்கி, சும்மா இருப்பவனை தூக்கு மாட்டிக் கொள்ளலாமா என்று யோசிக்க வைத்துவிட்டு செல்லும் அரை வேக்காடுகளை வெள்ளாவியில் வைத்து வேகவைக்க வேண்டும்.

இதையெல்லாம் கடந்து இன்னொரு கர்ண கொடூரமான வகையறா ஒன்று இருக்கிறது. அவர்கள், பொன்னியின் செல்வன் படித்தாயா, கடல் புறா பார்த்தாயா? சிவகாமியின் சபதம் கண்டாயா? எனக் கேட்டு, இல்லையென்று மறுத்து நாம் தலையசைக்கையில், 'என்ன இன்னும் படிக்கலையா நீ' என்று பிறப்பிலும் இழி பிறப்பை போன்று நம்மை நோக்குகையில், ஆயிரம் "பீப்" பாடல்களை ஒருசேர எழுதி அவர்களை நோக்கி பாடக் கூடிய வல்லமை கண நேரத்தில் வழங்கிச் செல்வர்.

பெரும்பாலும் புத்தகங்கள் பற்றி எல்லோரிடத்திலும் நான் விவாதிப்பதில்லை, என் ரசனையோடும், எண்ண அலைவரிசையோடும் ஒத்துப் போகும் வெகு சிலரோடு மட்டும் புத்தகங்கள் பற்றி பேசுவது என் வழக்கம். அவ்வகையில் பதிவுலகில் மிக சொற்ப எண்ணிக்கையிலான நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். பேசாமைக்கு  மிக முக்கிய காரணம் இருக்கிறது, படித்த நூலைப் பற்றி, அதன் உள்ளடக்க விழுமியங்களை கூறுவதை விட்டுவிட்டு, தன்னோட வாசிப்புத்திறன் பற்றிய அருமை பெருமைகளை பெருங்குரலெடுத்து பாடுவதினால், "வேணாம்டா சாமீ இந்த மன உளைச்சல்" என்று விலகி நழுவிவிடுவேன்.

ஒவ்வொருவரும், ஒவ்வொரு வெரைட்டியான சுகானுபவங்களை வழங்கிவிட்டுத் தான் போகிறார்கள். இப்போதெல்லாம் அவர்களை பேசவிட்டு கேட்பதையே ஒரு பொழுதுபோக்காக வைத்துள்ளேன் என்பது தனிக்கதை!

என்னோடு நெருக்கமாய் வாசிப்பு/படைப்பு வெளிகளில் இயங்கும் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவரை பெரும்பாலான தோழமைகளுக்கு முறையான வாசிப்புத் துவக்கம் இருந்திருக்கிறது அதை தொடர்வதில் அவர்களுக்கு எவ்வித சிக்கல்களுமில்லை, அவ்வாறான நண்பர்கள் பலரும் வாசிப்பதில்லை என்று சொல்லக் கேட்கையில் கவலையில் உறைகிறது மனம். எனக்கோ வாசிப்பு என்பது பள்ளிப் புத்தக வாசிப்பு தான். அதன்பிறகு எப்பவாது குமுதம், குங்குமம் அவ்வளவு தான். நான் பயின்ற அரசுப் பள்ளிகளில் நூலகமென்ற ஒன்று இருந்தது தெரியாது அதுதான் உண்மை, அவ்வாறு தான் நான் பயிற்றுவிக்கப் பட்டேன். அதன் பிறகு ஊர்க்காரர் ஒருவர் உதவியுடன் செந்துறை அரசு கிளை நூலகத்தில் உறுப்பினர் ஆனேன் அத்தோடு சரி, காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும், நூலகர் தொல்லையும்! எதை வாசிக்க வேண்டும் என்ற முறையான  புரிதலில்லை என்பது கூடுதல் காரணம். 

ஊரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு ஊர்க்கார அண்ணன் சூர்யபிரகாஷ் என்பவர் வைத்திருந்த "காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்" என்ற தபு சங்கரின் கவிதைப் புத்தகம் தான் என்னோட வாசிப்புக்கு முதல் துவக்கம் என்று சொல்லலாம். அதன் பிறகு பச்சையப்பன் கல்லூரி எதிரே செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் போட்டிருந்த பிரம்மாண்ட புத்தக திருவிழாவில், சென்னையைப் பற்றி பெரிதான அறிமுகமின்றி தனியொருவனாய் சென்று சில புத்தகங்களை வாங்கி வந்தது தான் புத்தக சேமிப்புக்கான பிள்ளையார் சுழி! அதன் பிறகு வாங்குகிறேனோ இல்லையோ வருடா வருடம், புத்தகச் சந்தையை வேடிக்கைப் பார்க்கவாது செல்வதை வழக்கமாய் வைத்திருகிறேன். அந்த காலக் கட்டங்களில் வாங்கிய புத்தங்கள் பல தொலைக்கப்பட்டும், சிலதுகள் களவாடப்பட்டதும் போக எஞ்சியிருக்கும் நூல்களை இப்போது பார்த்தால் பயங்கர  சிரிப்பாக இருக்கிறது. அப்போதைய ரசனையிலிருந்து இப்போது முற்றிலும் மாறுபட்டிருக்கிறேன்.

இப்போதெல்லாம் அலுவலகம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பேன், எங்கு நேரம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் என்னோட வாசிப்புக்கு தீனி போட துவங்கி விடுவேன். எனக்கு வாசிப்பதற்கென்று ஒரு தனி இடம் தேவையாய் இருந்ததில்லை. நேரமும் அதற்கான மனநிலையும் வாய்த்தால் போதும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பேன். இனியும் அப்படித்தான் தொடர்வேன் என்று நம்புகிறேன். என்னுடைய வாசிப்புக்கு அரசனும் நானே, அரக்கனும் நானே!
    
என்னோடு புத்தகம் வாங்க வந்தீர்கள் என்றால், இவனை மாதிரி ஒரு பைத்தியத்தை பார்க்க முடியாது என்று தலைதெறிக்க ஓடுவீர்கள் அப்படியொரு நூல் தேடலிருக்கும். அதனாலே பெரும்பாலும் தனியாக சென்று வாங்குவது தான் வழக்கம். இப்போது தான் நம்பிக்கைக்கு உரிய சிலரின் பரிந்துரையில் நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

அதிக எண்ணிக்கையிலான நூல்கள் வாங்கியதும், வாங்கிய நூல்களை அதிகமாக வாசித்ததும் கடந்த வருடத்தில் தான். அது போல் இந்த வருடமும் நிறைய வாசிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன், அதுமட்டுமின்றி எங்கெங்கோ எப்படியெல்லாமோ ஓட வேண்டியவன், திசை மாறி, தடம் புரண்டு தமிழ் எழுத்துலகில் நுழைந்துவிட்டேன். கரம் பிடித்து வலையுலகில் உள் நுழைத்த காலத்திலிருந்து இன்றுவரை என்னை கரிசனத்துடனும், கவனத்துடனும் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் மாமா என்ற உறவையும் தாண்டி பேனாவின் மூலம் எங்கள் மண்ணை அறிமுகப்படுத்திய திரு. கருணாகரசு  அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கிக் கொண்டு, இன்னும் சில மாதங்களில்,  "சிறுகதைத் தொகுதி" ஒன்றை வெளியிடவும் முடிவு செய்து களமிறங்கி அதற்கான பணிகளில் இறங்கியுள்ளேன். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்று கூறுவார்கள், எனவே இதுவும் சாத்தியமாகும் என்றே கருதுகிறேன்! பார்க்கலாம்.... 
    


Post Comment