புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 30, 2013

உதடு சுழித்து...


இரு கைகளையும்  
மார்போடு அணைத்தபடி  
உடல் குறுக்கி  
உறங்கும் உந்தன் 
பேரழகு, 
சமீபத்திய 
என் அதிகாலை உறக்கங்களை 
விழுங்கி கொண்டிருக்கிறது!
உன் தோழிகளுடன் 
உதடு சுழித்து, சுழித்து 
பேசிக்கொண்டிருக்கிறாய்,
என்னருகில் வந்து 
பழித்துக் கொண்டிருக்கிறது 
காதல்!


Post Comment

ஜூலை 26, 2013

சத்தியமா இது உணவகம் அறிமுகமில்லை....சென்னை வந்து சில, பல இடங்களை சுற்றிவிட்டு முடிவாக சாலிகிராமத்தில் மையம் கொண்டேன். சென்னை நோக்கிபடையெடுப்பவர்களின் முக்கிய பிரச்சினைகள், ஒன்று தங்க இடம், இன்னொன்று உண்ண உணவு! அடுத்துதான் வேலையெல்லாம்! போராட்டங்கள், அவமானங்கள் இப்படி சிலதுகளை கடந்து தான் சென்னையில் கால் ஊன்றினேன் என்று சொல்லும் பலரில் நானும் ஒருவன்!

நல்ல அறை கிடைத்தாயிற்று, அடுத்து நல்ல உணவகத்தை நோக்கி என் தேடும் படலம் தொடர்கையில் தான் அந்த சிறிய உணவகம் என் கண்ணில் பட்டது! நான்கே நான்கு மேசை கொண்ட உணவகம், ஊர்ப்புறங்களில் இருக்கும் உணவகங்கள் போல் இருந்தமையால் பார்த்த உடனே பிடித்துப் போனது, சாப்பிட்டு, பணம் கொடுத்ததும் இன்னும் பிடித்து போனது!

சில தினங்களில், மதுரைக்காரர் ஒருவர் பல வருடங்களாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார் என்றும் இன்னும் பிற சங்கதிகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது! 

என்னையும், என் பாக்கெட்டையும் பதம் பார்க்காமல் இருப்பதினால் கடந்த நான்கு வருடங்களாக இங்கு தான் பசியை போக்கி கொண்டிருக்கிறேன்! பல பெயர் போன (?!) உணவகங்களில் அடிக்கடி விலை ஏற்றப்படுவது போல் இங்கில்லை, கடந்த நான்கு வருடங்களில் மூன்றே முறை ஏற்றினாலும், பர்ஸை பதம் பார்த்ததில்லை!

கடையின் முதலாளி நல்ல மனிதர், என்ன ,முன் கோவக்காரர்! என் கோவத்தால் பலதுகளை இழக்க நேரிட்டிருக்கிறது என்று பலமுறை அவரே வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கிறார் என்னிடம்!

சொந்த கட்டிடம், கணவன் மனைவி இருவரும் காலையிலிருந்து இரவு வரை உழைக்கின்றார்கள்! இலாபம் சொல்லும்படி இருக்கிறது என்பார்! சப்ளை செய்ய ஒருத்தர், ஒரு மாஸ்டர்! இருவர்களில் ஒருவர் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள்! காரணம் முதலாளியின் கோபம்!    

ஒரு வருடமாக சிறுவனொருவன் சப்ளை செய்து கொண்டிருந்தான் எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வயதுக்கு மீறி விளைந்த கோளாறினால் பையன் கம்பி நீட்டி இரண்டு மாதம் ஆகிறது! இரண்டு மாதமாக கடை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு அடிக்கடி கடை மூடியே இருக்கும்! 

கடந்த இரண்டு வாரமாக கடை தொடர்ந்து இயங்கி வருவது என்போன்றோருக்கு பெரு மகிழ்வை தருகிறது! சென்னையின் பெரும்பான்மையான இடங்களில் நுழைந்த கொண்டிருக்கும் வட இந்திய காற்று இங்கும் நுழைந்திருக்கிறது! அதைப் பற்றிய ஒரு சிறு நிகழ்வை அடுத்த பதிவில் காண்போம்!

Post Comment

ஜூலை 19, 2013

செல்ல இராட்சசி பவிக்கு (திடங்கொண்டு போராடு காதல் கடிதம் போட்டி)


                                                                                                                                         29 மே 2007


செல்ல இராட்சசி பவிக்கு,                 

ஒரே ஊரில், அடுத்தடுத்த தெருவில் இருப்பதால் பல முறை பார்த்தும், சில முறை பேசியும் இருக்கிறோம்! அவை வெறும் சம்பிரதாய பேச்சுக்கள் மட்டுமே! பிறகொரு ஊர் திருமணத்தில் கலந்து கொண்டு ஒரே பேருந்தில் வீடு திரும்புகையில் முன் பக்கம் நீ, பின்பக்கம் நான்! எதேச்சையாய் பார்ப்பது போல் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்! இரண்டு நாள் கழித்து நடந்த ஊர்த்திருவிழாவில் எவரும் அறியாவண்ணம் என் கைக்குள் நீ வைத்தது போக மீதி விபூதியை,  என் கைக்குள் திணித்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றவள் தான் சரியாக இரண்டு மாதம் கழித்து தான் மீண்டும் உன்னை காண முடிந்தது! அறுபது நாட்களும் என் அரை ஆயுளை விழுங்கி விட்டன.  காதல் மெல்ல என்னுள் வேர் விட ஆரம்பித்ததும் அந்த இரண்டு மாதத்தில் தான்!

ஆறு மாதம் வெற்று பார்வைகளாகவே கழிந்தன, எப்போதா அதிசயமாய் சிரிப்பாய், பேச துணிந்து அருகில் நெருங்குகையில் உன் தோழி அரை கிறுக்கி கவிதா என்னை பார்வையால் மென்றே விடுவாள், தெரிந்தும் சிறு சிரிப்புடன் விலகி நடப்பாய், சில நேரங்களில் அதுவும் இருக்காது! அந்த நேரங்களில் நான் நானாகவே இருந்ததில்லை! சட்டென்று கொட்டிச்செல்லும் கோடைமழை போல் தான் நீயும் , உன் நினைவுகளும்.  அடைமழையாய் இருப்பாய் என்று நிறைய முறை ஏமாந்திருக்கிறேன்!  

இவளுக்கு நம்மை பிடிக்குமா? பிடிக்காதா? என்று அறிந்து கொள்ள எப்படி முயற்சித்தும் முடியாமல் தான் போனது. மழை பெய்யும் மாலை வேளையில், மழைக்கு ஒதுங்கியபடி நான் நின்றுகொண்டிருக்க, நீயும், உன் தோழியும் குடையுடன் சென்றவள், என்னைக்கண்டதும் தோழி குடைக்குள் புகுந்து கொண்டு, உன் குடையை என்னருகே வைத்து விட்டு நகர்ந்தாய் , நான் பொத்துக்கொண்டு நனைந்தேன்!

ஒரு வழியாக சமாளித்து, உன்னிடம் பேச துடித்து  , பின் உன்னைக் கண்டதும் வார்த்தைகளற்று தவிப்பது வாடிக்கையாகிப் போனதால், கடிதம் எழுத அமர்ந்து விட்டேன்! நான்குவரிகள் கூட கோர்வையாய் சேராமல், பொறுமையை நாடிபிடித்து பார்க்கின்றன. எங்கோ வெறித்து, எதையோ சிந்திக்க ஏதோ மனதில் உதிக்க, இப்படி சில நிலைகளை கடந்து தான்  உன் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது இக்கடிதம்! சிரிக்காதே பவி, இந்த தெத்துப் பல் தான் என் சமீபத்திய தூக்கங்களை தின்று கொண்டிருக்கின்றது!தெருவில் கடந்து செல்லும் ஒவ்வொரு இளம்பெண்களும், உன்னையே எனக்கு நினைவுப் படுத்தி செல்கின்றனர், சில நேரங்களில் எதிர்வீட்டு குழந்தைகளும். உன்னைப் பற்றிய சிந்தனைகள் சிறுக, சிறுக சேர்ந்து இன்று கரை நிரம்பிய ஏரி போல் உணர்கிறேன் பவி! எங்கேனும்,  யாரேனும்  உன் பெயரை உச்சரித்தால் நீயேதான் நிரம்பி வழிகிறாய் என்னுள்! சில நாட்களாக என்னுள் நிகழும் மாற்றங்கள் புதிராக இருந்தாலும் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது!

உன்னை அடிக்கடி பார்க்கவேண்டும், உன் கூட பேசவேண்டும் என்று மனம் உந்திக்கொண்டே இருக்கிறது! உன்னை, உன் செய்கைகளை கவனிப்பது போல் இவ்வளவு உன்னிப்பாய் வேறு எதையும் கவனித்ததில்லை. சின்ன சின்ன நிகழ்வுகளையும் மனதிற்குள் பத்திரப்படுத்திக்கொண்டு வருகிறேன்! பலமுறை சுற்றிய அதே பழைய  தெரு , இன்று என்னவோ அழகாய் காட்சியளிக்கிறது! 

இயல்பாய் நீ செய்யும் , ஒவ்வொரு செய்கையும் விநோதமாய் தான் இருக்கிறது எனக்கு! பெருங்கனவுகளோடு வலம் வருகிறேன்! நான் செல்லும் திசையெல்லாம் நீயாகவே வியாபித்து இருப்பதாய் உணர்கிறேன்! 
நல்லாத்தானடா இருந்தே! என்று நண்பர்கள் கேட்கையில் உன் திசையை நோக்கித்தான் சுட்டுகிறது என் ஆட்காட்டி விரல்! என் இயல்பை, இறுக்கத்தை சன்னமாய் உடைத்தெறிந்தது உன் இதழோர மென் புன்னகை!
அளவான இசை எழுத்துக்களாய் உன் பேச்சு, சலனமற்ற பார்வை இவையிரண்டும்  எத்தனை என் இரவுகளை தின்று செமித்திருக்கும்! என் தனிமைகளுக்கு அமுதம் ஊட்டிக்கொண்டிருக்கின்றன உன் அழகியல் காட்சிகள்!

வாய் திறந்து பேசுவதைவிட, விழி உருட்டி பேசும் வினோதா நீ, சில முறை புரிந்தும், பல முறை புரியாமல் விழித்திருக்கிறேன்!

புரிபடாத வசனங்கள், கவிதைகள் அனைத்தும் விரும்பி படிக்கிறேன்! மொழி புரியாத சினிமா காதலை விரும்பி பார்க்கிறேன்! காதலர்களை அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் என்றால் பாரேன்! 
என் செய்கைகளை கண்டு தங்கை சிரிக்கிறாள், அம்மா திட்டி தீர்க்கிறாள்!

முன்பு போல் இல்லை பவி, நீயும் சில நேரங்களில் எனக்காக நிற்கிறாய் என்னிடம் பேசுவதற்காகத்தான்! நான் தவிப்பதை கண்டு மெல்லமாய் நகர்ந்து விடுகிறாய்! இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்! 

இன்னும் இரண்டு நாளில் திருவிழா வருகிறது, அன்று இரவு சில நொடிகள் ஏதாவது பொய் சொல்லிவிட்டு வா,ஏரிக்கரையோர விழுது இறங்கிய ஆலமரத்தடியில் நின்று நட்சத்திரங்களை நலம் விசாரித்து, நிலவிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு வருவோம் !    


காத்திருப்புகளுடன்...

அரசன்

Post Comment

ஜூலை 18, 2013

சென்னையில் செப் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் திருவிழா

பதிவுலக நட்புகளே,

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கணிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கப்பட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 
கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.
 
விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.
 
இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் விழா ஏற்பாட்டு பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.
 
இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
 
செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்தமான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
 
முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.
 
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
  1. மதுமதி  kavimadhumathi@gmail.com
  2. பட்டிகாட்டான் ஜெய்  pattikattaan@gmail.com
  3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
  4. ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
  5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
  6. பாலகணேஷ் – bganesh55@gmail.com
  7. சசிகலா - sasikala2010eni@gmail.com
உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
 
வரவேற்புக்குழுவில் சென்னையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தல், வாகன ஏற்பாடு செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுதல் போன்ற பணிகளை ஆரூர் மூனா செந்தில், அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று செய்கின்றனர்.

சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.

மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.

 
 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post Comment

ஜூலை 10, 2013

காமம் நசுங்கி....


ன் கனவுகளில்
கல்லடி விழுந்த வலியை
அவளிடம் பகிர்ந்தேன்,
வாரி அணைத்து
மார்புச் சூட்டால்
ஒத்தடம் கொடுத்தாள்!
காமம் நசுங்கி
காதலாய் வழிந்தது!ட்டென்று செருப்பறுந்து போக,
என் செருப்பை மாட்டிக்கொண்டு,
நடைபயிலும் குழந்தைபோல் 
நடக்கும் உன்னை,
துள்ளியபடி பின்தொடர்கிறது 
காதல்!Post Comment